நேரம்

Saturday, March 31, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 9

அண்டப் புளுகர், ஆகாசப் புளுகர் வெட்டிப்பயல்

யாரை இப்படி சொல்றேன்னு நீங்கல்லாம் கொஞ்சம் யோசிப்பீங்க. யோசிக்கலேன்னா இப்படி நான் சொன்னதுக்காகவாவது யோசிங்கப்பா.

சமீபத்தில் வெட்டிப்பயல் என்கிற ஒரு ப்ளாக்கரை பற்றித் தெரிஞ்சுகிட்டேன். அவருடைய எல்லாப் பதிவுகளும் நல்லா இருக்கு. அவரோட ரசிகர் கும்பலை பார்த்தா மலைப்பா இருந்துச்சு, அவருக்கு மட்டும் எப்படி இவ்வளவு கூட்டம் வருது. நான் எழுதினா, 'ஆண்பாவம்' படத்தில ஜனகராஜ், ஒட்டல்ல ஈ ஓட்ர மாதிரி ஒரு பின்னூட்டம் கூட வரதே இல்லையேன்னு யோசிச்சேன். அதை தெரிஞ்சுகிட்டா நாம்பளும் பெரியாளாயிடலாமேன்னு, மொதல்ல அவருக்கு ஒரு 10 கிலோ ஐஸ் வெச்சு ஒரு மின்னஞ்சல் (அதாங்க e-mail) அனுப்பினேன். ரெண்டு நாள் கழிச்சு அவர்கிட்ட இருந்து 'நீங்க விரிச்ச வலையில நான் மாட்டிகிட்டேன்'-ங்கர மாதிரி, 'நான் கொஞ்சம் பிஸி, நாளைக்கு உங்களை கூப்பிடரேன்'-ன்னு மின்னஞ்சல் அனுப்பினாரு. சரிதான் மீனு புழுவை பிடிச்சிட்டுதுன்னு இருந்தேன். இதுக்கு நடுவுல அவரோட அடுத்த பதிவு 'கொல்ட்டி - சில திடுக்கிடும் உண்மைகள்' வந்துச்சு. உடனே இன்னும் ஒரு 10 கிலோ ஐஸ் சேத்து கனமா இன்னொரு மின்னஞ்சல் அனுப்பி அவரை கூப்பிட வெச்சு கொக்கியையே கடிக்க வெச்சேன்.

அவர் என்னைக் கூப்பிட்டு, "இவன் ரொம்ப படுத்தரான்" ஒரு 10 நிமிஷம் பேசிட்டு வெச்சிடலாம்னு இருந்திருப்பார், நாங்க ராங்க் கால் வந்தாலே அரை மணி அறுக்கரவங்கன்னு அவருக்கு தெரியலை. நான் 55 நிமிஷம் அறுத்ததும், தாங்க முடியாம, "ஆஸ்திரேலியா கிரிக்கேட் டீம் வேர்ல்ட் கப் வின் பண்ண என்ன பண்ணனும்னு என் கிட்ட கேக்கராங்க அதுக்கு ஒரு மீட்டிங் இன்னும் 5 நிமிஷத்தில இருக்கு"-ன்னு சொல்லிட்டு நழுவிட்டார்.

அவர்கிட்ட பேசின 55 நிமிஷ சிறு உரையாடலை முழுசா தந்தாதான் நான் ஏன் அவரை அண்டப் புளுகர்-ன்னு சொல்றேன்ங்கரது புரியும். ஆனா அதை நான் கொடுத்தா, சாதாரணமாவே என் பதிவுகளை, நுனிப்புல் மேயரமாதிரி படிகரவங்க கூட படிக்க மாட்டீங்க, அதனால அந்த உரையாடலின் ஒரு சிறு தொகுப்பு.

அவருடைய முதல் பொய்:
"நான் எழுத ஆரம்பிச்சு ஒரு 1 அல்லது 1 1/2 வருஷங்கள்தான் இருக்கும், எனக்கு கதையெல்லாம் எழுதத் தெரியாது "

அவருடைய கொல்ட்டி கதையைப் படிச்சுட்டு, இது இவரோட முதல் கதை, இதுக்கு முன்னால் இவருக்கு கதை எழுதும் பழக்கமே இல்லைன்னு சொன்னால் எப்படி நம்பரது. வடிவேலு பாணியில சொல்லனும்னா "நாங்க பார்த்தா ஜாதாரனமாத்தான் இருப்ப்ப்போம், ஆனா வெவ்வ்வரமான பார்ட்டி, ஏதோ நம்ம பயபுள்ள எழுதுதேன்னு படிக்க வந்தா, என்னா? சின்ன புள்ள தனமாயிருக்கு!"

அவருடைய ரெண்டாவது பொய்:
"கவுண்டரின் டெவில் ஷோ ஒரு 10-15 நிமிஷம் யோசிச்சுட்டு எழுதிடுவேன், நான் எழுதரது அந்த character பேசரமாதிரியே இருக்கா?"

"இவ்வளவு நேரம் நல்லாத்தானே போயிகிட்டிருக்கு, என்னத்துக்கு நடுப்பர இப்டி ஒரு பிட்ட போடர, நாங்கல்லாம், இப்டி படக்கு படக்குன்னு எழுதரது இல்லைங்கரத எதுக்கு வெளிய சொல்லி அசிங்க படுத்திக்கிட்டு, போய் சோலியப் பாப்பியா"

அவருடைய மூனாவது பொய்:
"எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை, அதனால நிறைய எழுதித் தள்ள முடியுது"

"என்ன சொல்ல வர்ரிங்க, நாங்களும் பேச்சிலரா இருந்தா நல்லா எழுதிடுவோமா? நாங்க ஏன் சரியா எழுதரது இல்லைன்னு கேட்டமா, இல்லைல, பொரவு எதுக்குப்பா இப்டி போட்டு வாங்கரே".
உங்க எல்லாருக்கும் கடைசியா ஒருதடவை சொல்றேன், வெட்டிப்பயல் தனக்கு ஒன்னும் தெரியாதுன்னு பொய் சொல்லி எல்லாரையும் ஏமாத்தரார். என்னடா இவன் இவ்வளவு சொல்றானேன்னு ஒரே ஒரு தடவை அவரோட பதிவ போய் பாப்போம்ன்னு போயிடாதீங்க, அப்பரம், தெனமும் காலைல சுப்ரபாதம் படிக்கர மாதிரி அவரோட பதிவு வந்திருக்கான்னு மனசு அலைபாய அராம்பிச்சிடும். பிறகு என்னைத் திட்டாதீங்க.

உலகக் கோப்பை - கிரிக்கெட்
இந்திய அணி நம்ப எல்லாருக்கும் ஒரு பெரிய ஆப்பு வெச்சிட்டு, ஊருக்கு போய் செட்டில் ஆயிட்டாங்க. இன்னும் ஒரு 2-3 மாசம் அவங்களை திட்டிகிட்டு இருப்போம், அப்பரம், எல்லாத்தையும் மறந்துட்டு வழக்கம் போல அவங்களுக்காக, பால் காவடி, பன்னீர் காவடி எடுத்துகிட்டு இருப்போம். வர வர இந்திய கிரிக்கெட் அணியும், நம்ம அரசியல் வாதிங்க மாதிரி ஆயிட்டாங்க. நம்ப மறதி அவங்களுக்கு ஒரு பெரிய பலம். நாம திருந்தர வழியாவும் இல்லை, அவங்க மாற்றதாவும் இல்லை. இல்லைன்னா ரூபாய்க்கு 3 படி அரிசி போடறேன்னு சொல்லி ஆட்சிக்கு வந்தாங்க அது என்ன ஆச்சுன்னு இன்னமும் நம்பளும் கேக்கல, அவங்களும் கொடுக்கல. நிலமில்லாத ஏழை விவசாயிக்கு 2 ஏக்கர் நிலம்ன்னு சொன்னாங்க, அது இப்ப கையளவு நிலமாவது தருவோம்ங்கரதுல வந்து நிக்குது. அவங்க எல்லாம் விவரமாத்தான் இருக்காங்க நமக்குதான் அது புரியல. சமீபத்தில பார்த்த புரட்சித் தலைவரோட எங்க வீட்டுப் பிள்ளைல ஒரு பாட்டு பாடரார். 'நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், இங்கு ஏழைகல் வேதனைப் படமாட்டார்.....' அவர் என்ன சொல்ல வரார், மொதல்ல நான் ஆனையிட மாட்டேன், அப்படியும் என்னை மீறி ஆனையிட்டால், அது நடக்காது, அதையும் மீறி அது நடந்து விட்டால், இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார். இது நமக்குத்தான் புரியல.
உலககோப்பை ஆரம்பிக்கரதுக்கு முன்னாடியே ஒருத்தர் இன்வெஸ்ட் மெண்ட் பத்தி சொல்றார், ஒருத்தர் க்ரெடிட் கார்ட் யூஸ் பண்ணுங்க உங்களுக்கு பென்ஸ் கார் கிடைக்கலாம்-ன்னு சொல்லிட்டு, தலைக்கு பூசர க்ரீம் பத்தி விளம்பரம் பண்ணினார், ஒருத்தர் அதே க்ரீமோட இன்னோரு விளம்பரத்துல வந்துட்டு, ஒரு சோப் விக்கரார். ஒரு பெரும் பேர் ஆள், எனக்கு ஃபோன் பண்ணுங்க நான் உங்களுக்கு ஸ்கோர் சொல்றேன்றார். அவங்க யாராவது ஒரு தடவையாவது நாங்க உலக கோப்பையை வெல்லுவோம்னோ, அல்லது அறையிருதிக்கு போவோம்னோ சொன்னாங்களா.
பட விமர்சனங்கள்
சமீபத்தில் பார்த்த படங்கள் ஒன்னு - Shooter ஆங்கிலப் படம், அடுத்தது - போக்கிரி தமிழ்ப் படம், அதற்கு அடுத்தது ஈ தமிழ்த் திரைப்படம்.
முதலில் Shooter
நல்ல மசாலாப் படம். லாஜிக்கை மூட்டை கட்டி வீட்டிலேயே போட்டுவிட்டு பார்க்க வேண்டிய படம். அடிதடி, வெட்டு குத்து எல்லாம் உண்டு, யார் எவ்வளவு சுட்டாலும், ஹீரோ மேல் படாது. பக்கத்தில் இருந்து ஒரு முறை ஒரு போலீஸ் சுட்டும் அவர் சின்ன குண்டு காயங்களோடு தப்பி விடுகிறார். ஹேலிகாப்டரில் இருந்து மிஷின் கன் மூலம் சுட்டாலும் இதே நிலைமைதான். அமெரிக்காவில் அனைவராலும் தேடப் படும் ஒரு குற்றவாளியாக, கவலை இல்லாமல் அவர் பாட்டுக்கு காரில் கண்ட இடங்களுக்குப் போய் வருகிறார், ஆனால் போலீஸ், FBI எல்லோரும் பிடிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். கடைசியில் அவர் என்ன ஆகிறார் என்பதுதான் கதை.
போக்கிரி - தமிழ்த் திரைப்படம்
பரதேசி இந்தத் திரைப்படத்தை ரொம்ப சிலாகித்து எழுதியிருக்கிறார் அதனால் அவரை அப்பரம் தனியா விசாரிச்சுக்கறேன். விஜய் படத்தில் லாஜிக் எதிர்பார்த்தால் தப்புதான், ஆனால், அதுக்காக இப்படி மக்களை நோகடிக்க வேண்டாம். அது எப்படியா எல்லா ஹீரோயின்களும் அடிதடி பண்ற, வெத்து ஹீரோவை லவ் பண்றாங்க. கடைசி சீன்ல அவர் போலீஸ் ஆஃபீசர்-ன்னு சொன்னா எல்லாரும் நம்பராங்க. ஒரு போலீஸ் ஆஃபீசர் ரொம்ப மோசமாம், ஆனால் அவரை கடைசீ காட்சி வரை ஒன்னும் செய்யாம விட்டுடுவாராம். அட போங்கப்பா இதுக்கு ஆங்கிலப் படம் Departed எவ்வளவோ மேல்.
ஈ தமிழ்த் திரைப்படம்


இதற்கும் Extreme Mesures(EM) ஆங்கிலப் படத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
1. ஈ-தமிழ்ப் படம் - EM ஆங்கிலப் படம்
2. ஈ-யின் ஹீரோ ஒரு ப்ளாட்பாரம் கேஸ் - EM - ஹீரோ ஒரு டாக்டர்
3. ஈ-யின் ஹீரோயின் க்ளப் டான்ஸர் - EM - ஹீரோயின் ஒரு நர்ஸ்.
4. ஈ-யில் பாட்டு உண்டு - EM -ல் அது கிடையாது.
5. ஈ-யில் காமெடி உண்டு - EM -ல் அது கிடையாது.
6. ஈ-யில் எல்லோரும் கத்தி பேசுகிறார்கள் - EM-ல் அது கிடையாது.
தமிழ் படத்தில் ஒரே ஒரு ஆறுதல் - இயக்குனர் இது ஆங்கிலப் படத்தின் ஈயடிச்சான் காப்பி என்பதைக் காட்ட 'ஈ'ன்னே பேர் வெச்சுட்டார்.
-பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

Saturday, March 17, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 8

நான் மிகவும் ரசித்த ரிச்மண்ட் தமிழ்ச் சங்கத்து பொங்கல் நிகழ்ச்சிகள்.
இந்த முறை சற்று வித்தியாசமாக 3:00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சிகள், 3:00 மணிக்கே ஆரம்பித்து சாதனை படைத்திருக்கிறார்கள். சங்கத்தலைவர் நாகு, சங்கத்து காரியதரிசிகள், இந்த முயற்சியை ஆதரித்த உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். எனக்குத் தெரிந்த பலர் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்து "என்ன விளையாடராங்களா, யாரை கேட்டு 3:00 மணிக்கே program-ஐ ஆரம்பிச்சாங்க?" என்று கோபப் பட்டாங்க, இதையும் தமிழ்ச் சங்கம் கொஞ்சம் பரிசீலிக்கவும். இதை கேட்ட போது, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, மாநில அரசு ஊழியர்களுக்கு 6 நாட்களும் வேலை என உத்தரவு பிறப்பித்த போது, 'சோ' தனது கேள்வி-பதில் பகுதியில், அது மிகவும் தவறான முடிவு, முதலில் அவர் வாரத்துக்கு ஒரு நாள் வேலை என்று உத்தரவிட்டு பிறகு படிப்படியாக உயர்த்தி வாரத்துக்கு 6 நாட்கள் வேலை என உத்தரவிட வேண்டும் என சொல்லியிருந்தார். அதுபோல முதலில் 3:00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சிகள் 3:30க்கு ஆரம்பித்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முன்னால் வந்து 3:00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும். பரவாயில்லை இந்த முறை மன்னித்து விடுவோம்.
ஒலி, ஒளி அமைப்பு:
இதில் சற்று கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியம். எந்த ஒரு நிகழ்ச்சியும் பார்வையாளர்களை கவர மிக மிக முக்கியம் ஒலி மற்றும் ஒளி.
தொகுப்பாளர்கள்:
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது மட்டும் இவர்களது பணி இல்லை. - கூட்டத்தை கட்டுப் படுத்துவது
- நிகழ்ச்சியைப் பற்றி ஒரு சில வார்த்தைகள், சுவாரசியமாக சொல்வது.
- நிகழ்ச்சி சரியான நேரத்தில் ஆரம்பித்து முடிக்கப் படுகிறதா என்று கண்காணிப்பது, இல்லையெனில் அவர்களைத் துரிதப் படுத்துவது
- அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் பங்கேற்பாளர்களைப் பாராட்டுவது
- இடையிடையே, சங்கத்து நடவடிக்கைகளை புகழ்ந்து சொல்லி, புதிய உறுப்பினர்களாகச் சொல்லி வேண்டுவது
- அடுத்து வர இருக்கும் சங்கத்து நடவடிக்கைகளை சொல்லி சங்க நிர்வாகிகளை உற்சாகப் படுத்துவது.
- இடையிடையே சங்கத்து நிர்வாகிகளின் நல்ல யோசனைகளை பாராட்டி அதை எப்படி இந்த நிகழ்ச்சியில் பின்பற்றுகின்றோம் என்று சொல்லி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
- நல்ல வெளிச்சமான இடத்தில் நின்று கொண்டோ அல்லது நடந்தபடியோ, சகஜமாக பேசுவது அவசியம்
- பேப்பர் வைத்துக் கொண்டு பேசும் போது, இவர்கள் எந்த விஷயத்தையும் உணர்ந்து பேசாதது போல இருக்கிறது. பங்கேற்பவர்கள் பெயரை சொல்ல மட்டும் எழுதி வைத்து படித்தால் பரவாயில்லை.
- தெளிவாகப் பேசுவது மிக மிக முக்கியம். குரல் கணீரென இருத்தல் அவசியம் இல்லையெனில் அதை ஒலி பெருக்கியின் மூலம் சரி செய்து கொள்ள முடியும்.
- சமயோசித அறிவு தேவையான ஒன்று.
துருவன்
துருவன் குறும்படம் பற்றி அதிகம் சொல்லப் போவது இல்லை. அதைப் பற்றி பல பின்னூட்டங்கள் வந்து விட்டது.
நாட்டியம்:
கவிதா மலைச்சாமியின் தலைமையில் மிக அருமையான நடன நிகழ்ச்சியைத் தந்தார்கள். நல்ல பயிற்சி என்பது தெரிந்தது.
லக்ஷ்மி வடிவழகு வழங்கிய குழந்தைகளின் நாட்டியம் Super. அதில் நாட்டுப்புறப் பாடலுக்கு நடுவே, 'ராக்' டைப் டைலாமோ டைலாமோ பாட்டின் இடைச் செறுகலும் நல்லா இருந்தது.
அண்ணன் சித்தார்த்தின் இசைக்கு தங்கை மேகனாவின் அபிநயம் ஒரு புதிய முயற்சி, ரொம்ப நல்லா செய்தாங்க.
நாடகம்:
சொல்வதற்கு அதிகம் இல்லாமல் இருந்தது.
சுடர்
நாகு சுடரில் ஐக்கியமாகச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார். அது பற்றி தனியே எழுதுகிறேன். பெரியோர்களே, தாய்மார்களே இதுக்கு காரணம் நான் இல்லை, நாகுதான். அவரை வேணும்னா 'தனியா' விசாரிச்சுக்கங்க.
சமீபத்திய அபத்தம்:
சன் டிவியில் இந்தியா உலகக் கோப்பை கிரிக்கேட் போட்டியில் வேற்றி பெற எங்கே யார், என்ன செய்கிறார்கள் என்று காட்டினார்கள்:
மூன்றாவது இடம் பிடிக்கும் அபத்தம்:
சென்னையில் ஒரு வாலிபர் கண்களைக் கட்டிக்கொண்டு ஒரு கைனடிக் ஹோண்டா (குழந்தைகள் ஓட்டும் குட்டி சைக்கிள் போல ஒரு பாலன்சிங் வீல்களுடன்) 25 கி.மீ ஓட்டி சென்று வேண்டிக் கொண்டுள்ளார். இதற்கு போலீஸ் பாதுகாப்பு வேறு.
இரண்டாவது இடம் பிடிக்கும் அபத்தம்:
இடம் நினைவில் இல்லை, விஷயம் இதுதான். நடு ரோட்டில் பலர் அங்கப் ப்ரதக்ஷணம் செய்து வேண்டிக் கொண்டுள்ளனர்.
முதல் இடம் பிடிக்கும் அபத்தம்:
மஹாராஷ்ட்ராவில் ஒரு அசுவமேத யாகம் செய்திருக்கிறார்கள்.
கேணத்தனமாக இதையெல்லாம் செய்வதற்கு பதில் தோற்றுவிட்டு ஊர் திரும்பினால், உங்களை யாரும் மதிக்கப் போவதில்லை, நீங்கள் விளம்பரப்படுத்தும் பொருள்களை நாங்கள் வாங்கப் போவதில்லை, என்று முடிவு எடுத்து அதன் படி நடந்தால் போதும். இந்திய அணி ஒரு மேட்ச் ஜெயித்தவுடன் அவர்களைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும் வேண்டாம், அவர்கள் தோற்றவுடன் அவர்கள் வீட்டை கல்வீசி தாக்குவதும் வேண்டாம். அவர்களை நம்மைப் போலவே சாதாரணமானவர்கள் என நினைத்து அவர்களை உதாசீனப் படுத்தினாலே போதும் அவர்கள் தானாகவே சரியாகி விடுவார்கள். இதை எழுதும் இதே நேரத்தில் இந்தியா, பங்ளாதேஷிடம் பேய் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. இதுக்கு என்ன பரிகாரமோ?
-பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

Sunday, March 11, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 7

சமகால அபத்தங்கள் என்று சிலவற்றை சுஜாதாவின் 'நிதர்சனம்' சிறுகதையில் முன்பு எப்பவோ படித்தது சமீபத்தில் அவருடைய ஒரு கருத்தை விகடனில் 'கற்றதும் பெற்றதும்' தொடரில் படித்ததும் நினைவுக்கு வந்தது.

முதலில் சன் டிவியில் சமீபத்தில் பார்த்த சில அபத்த விளம்பரங்கள், அதன் பிறகு சுஜாதாவின் எந்த கருத்து அபத்தம் என்பதைப் பார்ப்போம்:

1. ஒரு பெண் சிரித்தபடி கூட்டத்தோடு படிகளில் இறங்கி வருகிறாள், கீழே அவளுடைய நண்பர்களைப் பார்த்து, வலக்கையைத் தூக்கி பக்கவாட்டில் தமிழி 'ப' போல (அ) ஆங்கில 'C' போல காட்டி என்ன என்று கேட்கிறாள், அவர்கள் தெரியாமல் விழிக்க, மறுபடி வலக்கையைத் தூக்கி அதேபோல செய்ய, அவர்களும் ஏதோ புரிந்தது போல அவளைப் போலவே செய்ய, அனைவரும் சிரிக்கின்றனர். பிறகு பின்னனியில் 'சொல்லாமல் சொல்லுமே, பேசாமல் பேசுமே' என்று பாடல் ஒலிக்கிறது இது அமுல் காஃபிக்கான விளம்பரம். என்ன சொல்ல வருகிறார்கள், கையை அப்படி காட்டினால் அது அந்த காஃபி வாங்க வேண்டும் என்றா, அது இருக்கிறதா என்று கேட்கிறார்களா, அது எங்கே என்று கேட்கிறார்களா, அதுவும் படி இறங்கி வரும்போது எப்படி ஞாபகம் வருகிறது? இது முதல் அபத்தம்.

2. ஒரு விளம்பரம் - தமிழில் நம்பர் 1 நாளிதழ் - தினகரன் என்று . இதை யார், எதை வைத்து தீர்மானிகிறார்கள்? கடைசியில் அந்த விளம்பரத்தில் பேப்பர் படிக்கும் ஒருவர் 'நான் படிக்கரது நம்பர் 1 நாளிதழ், அப்ப நீங்க?' என்ற கேள்வியுடன் முடிக்கிறார். இது எப்படி இருக்குன்னா, எங்க தாத்தா மாடு மேய்ச்சாரு, எங்க அப்பா ஆடு மேய்ச்சாரு, மேய்கரது எங்க பரம்பரைத் தொழிலு அதனால நானும் ' அந்தப் பெருமைக்கு இப்ப பன்னி மேய்க்கிறேன்னு சொல்ற மாதிரி இருக்கு. படிக்கர ந்யூஸ் சரியா இருக்கான்னு பாருங்கப்பா, பேப்பர் நம்பர் ஒன்னா, ரெண்டான்னு பார்த்துகிட்டு இருந்தா விடிஞ்சுடும். இது ரெண்டாவது அபத்தம்

3. மேலே சொன்ன நாளிதழ் மாதிரி, 'இந்தியாவின் நம்பர் 1 டீலர் வசந்த் அண்டு கோ' என்று விளம்பரம் செய்கிறார்கள், எந்தப் பொருளுக்கு என்று சொல்வதில்லை, ஒருவேளை சொன்னால் ப்ரச்சனை வரும் என்று சொல்ல பயமோ? இது மூன்றாவது அபத்தம்.

4. பாம்பே ஞானம் அவர்கள் வெயிலில் மிளகாய் காய வைத்து கொண்டு இருக்கிறார். தேவயானி அவரிடம் அதைப் பற்றிக் கேட்க அவர், இப்படி செய்து, நல்லா அரைச்சாதான் நல்ல மிளகாய்ப் பொடி கிடைக்கும் என்று சொல்ல, அதற்கு தேவயானி, 'ஆச்சி மிளகாய்த் தூள்' அழகா பாக்கெட்ல கிடைக்குதேன்னு சொல்லி, அவரை ஆச்சர்யப் பட வைக்கிறார். வீட்டில மிளகாய் காய வைத்து அவர்களே அரைத்து வைத்தால், 1 கிலோ மிளகாய்த்தூள் 80- 100 ரூபாய் ஆகும், அதுவே பாக்கெட் தூள் வாங்கினா 50 கிராம் 25ரூபாய் ஆகும். நாடு விட்டு நாடு வந்திருக்கும் நம்மை போன்றவர்களுக்கு வேற வழியில்லாம தூள் பாக்கெட் வாங்கரோம். அங்க இருக்கரவங்களுக்கு இது தெரியாம இருக்குமா! இது நாலாவது அபத்தம்.

5. இனி சுஜாதாவின் எழுத்தில் கண்ட அபத்தம். இது அவர் எழுதிய படியே
"காஷ்மீர் பற்றி நான் சில வாரங்களுக்கு முன் எழுதியதற்குக் கண்டனம் தெரிவித்து, சில கடிதங்கள் எனக்கு வந்தன. நான் ‘political will’ தேவை
என்று சொன்னது சிலருக்குப் புரியவில்லை. ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட்டில் ‘stop loss’ என்று ஒரு நிலைமை வரும். ஏற்கெனவே தாமதமாகிவிட்ட ஒரு காரியத்தை மேலும் தொடர்ந்து முடிப்பதால் நஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும். அந்த மாதிரி சமயங்களில் அந்தக் காரியத்தைக் கைவிடுவதுதான் உத்தமம் என்று தீர்மானிக்க வேண்டி வரும். காஷ்மீரில் அந்த நிலைமைக்குத்தான் வந்திருக்கிறோம். தீர்வு ஏதும் தென்படவில்லை. இதில் நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம் என்பதுகூடத் தெளிவாக இல்லை. தமிழ்நாட்டிலிருந்தும் மற்ற மாநிலங்களிலிருந்தும் செல்லும் சி.ஆர்.பி.எஃப். ஜவான்களான கந்தசாமியும், வடிவேலுவும், கரம்சந்தும், பரஸ்நாத்தும், ஹீராவும், தினம் ஸ்ரீநகர் தெருக்களில் ரத்தம் சிந்துகிறார்கள். காஷ்மீரில் ராணுவத்தையும் போலீஸையும் வைத்து தேசபக்தியைப் புகட்ட முடியாது என்பது நம் தலைவர்களுக்குத் தெரியவில்லை. காஷ்மீரில் ஒரு நாளைக்கு ராணுவத்துக்கும் போலீஸுக்கும் ஐந்து கோடி ரூபாய் செலவாகிறது. காஷ்மீரிகள் இருபது பேருக்கு ஒரு ஜவான் என்ற ரீதியில் மூன்று லட்சம் வீரர்கள் அங்கே நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறார்கள். அமெரிக்கா... வியட்நாமிலும் இராக்கிலும், ரஷ்யா... ஆப்கானிஸ்தானிலும் மாட்டிக்கொண்டது போன்ற ஒரு நிலைமைதான் இது என்பதை நம்ப மறுக்கிறோம். ‘A debilitating war costing millions of dollars and thousands of innocent lives with no coherent policy to control it, and little chance of victory’ என மில்லியன்கள் கணக்கில் டாலர் செலவுசெய்து, ஆயிரக்கணக்கில் அப்பாவி உயிர்களை இழந்து, கோவையான அரசியல் அணுகுமுறை இல்லாமல் வெற்றி வாய்ப்பு இல்லாது பலவீனப்படுத்தும் போர் இது என்று மூரும், ஆண்டரசனும் 1993-ல் சொன்னது இன்றும் மாறவில்லை. இது ‘stop loss’ நிலையா... நீங்களே தீர்மானியுங்கள்! "

இந்த பேச்சை ஒரு அரசியல்வாதி சொல்லியிருந்தால் அதை பற்றி அதிகம் சொல்ல ஏதுமில்லை. நன்கு படித்த ஒரு எழுத்தாளர் அடிக்கடி இப்படி அபத்தமாக பேசி வருவது வியப்பாக இருக்கிறது.

தாமதமாகிவிட்ட ஒரு காரியத்தை மேலும் தொடர்ந்து முடிப்பதால் நஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும்

இது ஒரு கம்பெனிக்கு வேண்டுமானால் ஒத்து வரக்கூடும். இது ஒரு மாநிலம் சார்ந்த விஷயம். மாநிலம் மட்டும் இல்லாமல் இரு நாடுகள் சார்ந்த விஷயம். இதில் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவும் எடுக்க முடியாது. தாமதமாகி விட்டது என்பதற்காக ஒரு விஷயத்தை முடிக்காமல் விட்டால் அதன் விளைவுகள் இன்னமும் பயங்கரமாக இருக்கும். திருவள்ளுவர் சொன்னது போல் :

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

எனவே தொடங்கியது முடிக்கப் படவேண்டியதுதான். கால தாமததுக்கு முதல் காரணம், முக்கிய காரணம் நமது அரசியல்வாதிகள், அவர்களை அடையாளம் காட்டாமல் இப்படி அபத்தமாக எழுதியிருக்கிறார்.

-பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.