நேரம்

Saturday, December 13, 2008

பித்தனின் கிறுக்கல்கள் – 32

இந்தியாவில் பாக் தீவிரவாதிகளின் தாக்குதல்
சமீபகாலத்தில் அதிகம் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம், இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல், இந்திய அரசு நிலை குலைந்தது, மும்பாய் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது, மராத்தியர்களைக் காப்போம் என்ற சிவசேனாத் தலைவர்கள் எங்கே, மும்பாய் போலீஸ் தாக்குதலைக் கண்டு தடுமாறியது இத்யாதி இத்யாதி என்று சொல்லி சொல்லி அனைவரும் ஒரு 10 நாட்களைக் கடத்தி விட்டனர். இந்தியப் பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் அத்வானி எல்லோரும் தீவிரவாதத்தை தடுப்போம், அதை இந்தியா அனுமதிக்காது என்று பேசிவிட்டு போய் விட்டனர். நம் எல்லோருக்கும் பொழுது போகவேண்டாமா இந்தத் தாக்குதல் தொடங்கியதும் குப்பன் சுப்பன், பித்தன், பொடலங்காய், சுண்டைக்காய், வெண்டைக்காய் என பலரும் கருத்து கநதசாமியாகி கருத்து மழையையெல்லாம் தாண்டி கருத்துச் சுனாமியாக வெடித்து விட்டார்கள். இந்த டமாஸ் சமாச்சாரத்தை கிஞ்சித்தும் ரசிக்கத் தெரியாத ‘சோ’ போன்ற பத்தாம் பசலிகள் என்னமோ எழுதியே இந்தியாவையும், இந்திய அரசியல் வாதிகளையும் மாற்றிவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வருவதற்கு சௌகர்யமாக இருக்கட்டும் என்று இரயில் மற்றும் பஸ் விட்டால் மட்டும் போதுமா, அது அவர்கள் சொந்த ஊரிலிருந்து வருவதற்கு சௌகரியமாக இருக்கிறதா, இரயில் பஸ் நிலையங்கள் அவர்கள் வீட்டிற்கு அருகாமையிலா என்றெல்லாம் யோசிக்காமல் இந்திய அரசாங்கம் எப்படி முடிவு எடுக்கலாம், சிலருக்கு கடல்தான் பக்கம், அதனால் கப்பல் போக்குவரத்து ஏற்பாடு செய்ய எப்படி சொல்வது, வெறும வாய்வார்த்தையாகச் சொன்னால் இந்திய அரசாங்கம் கேட்குமா, பார்த்தார்கள், இந்த முறை கடல் வழியாக வந்து தாக்கினால் ஒரு கப்பல் சேவையை அடுத்த மாதம் துவக்கி விட மாட்டார்களா? அப்படி ஏதாவது ஒன்றை இந்திய பித்துக்குளி அரசாங்கம் செய்தாலும் ஆச்சர்யப்ப் படக்கூடாது. எப்படி இப்படி ஒரு பைத்தியக்கார சேவையை துவக்கலாம் என்று யாராவது கேள்வி கேட்டால், கப்பல் சேவையை குஜராத் பக்கம் திருப்பி விட்டு விட்டால் வருகின்ற தீவிரவாதிகளின் தொல்லையை மொத்தமாக குஜராத்திற்கு அனுப்பி மோடி அரசாங்கத்திற்கு பைத்தியம் பிடிக்க வைக்கலாம், அவர் குஜராத்திற்கு இனி வேறு எந்த நல்லதும் செய்ய முடியாமல் போய் அவரது ஆட்சியும் கவிழ்ந்தால் இன்னமும் உத்தமம். அதையும் விட அந்தச் சேவைக்கு அண்ணல் அம்பேத்கார் பெயரை வைத்துவிட்டால் போதும் இந்தியாவே ஜன்னி வந்து ஆடும். இதில் இந்திய மக்கள் எக்கேடு கெட்டால் இவர்களுக்கு என்ன, இவர்கள் ஓட்டு வங்கி (அது என்ன எழவு வங்கியோ) பாதிக்கப் படக்கூடாது. அதுவல்லவோ முக்கியம். இந்தியாவில் மைனாரிடி முஸ்லீம்களின் ஓட்டு இல்லாமல் யாரும் ஜெயிக்க முடியாது என்று எந்த காலத்திலும் நிரூபிக்கப் படவில்லை. அப்படி இருக்க அவர்களுடைய ஓட்டுக்காக ஏன் இந்த அரசியல்வாதிகள் (மோடியைத் தவிர) இப்படி அடித்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

இந்தச் சம்பவத்தில் 6 அமெரிக்கர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் அநியாயமாக உயிரிழந்திருக்கிறார்கள். அது நம்மைப் போல சாதாரணர்களுக்கு தாங்க முடியாத சோகத்தையும் கையாலாகாத இந்திய அரசியல்வாதிகளின் செயலைக் கண்டு அதிர்ச்சியையும் தரும் அதே நேரத்தில் இந்திய அரசியல்வாதிகள் இன்னமும் என்ன செய்து மீதம் இருக்கிற 6 மாத ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று ரூம் போட்டு யோசித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்போதுதான் தீவிரவாதிகள் பயன் படுத்திய செல்போன் சிம் கார்ட் வாங்கிக் கொடுத்தவர், விற்றவர், என்று ரூபாய்க்கு தம்பிடி ப்ரயோசனமில்லாதவர்களைப் பிடித்து நடந்த சோகத்திற்கு முடிவு காணப்படுவது போல் ஒரு முயற்சி நடக்க ஆரம்பித்திருக்கிறது. அதை விடுத்து, உளவுத்துறையினர், அதன் தலைவர்கள், தீவிரவாதிகளில் பலருக்கு உதவிய அரசியல்வாதிகள், அவர்களுடைய உதவியாளர்கள், அரசாங்க அதிகாரிகள், காவல் துறையில் இருக்கும் எட்டப்பன்கள் இவர்களை களையெடுக்க எந்த முயற்சியும் செய்யாமல் இது என்ன நடவடிக்கை என்று தெரியவில்லை. நடந்திருப்பது எல்லை தாண்டிய பயங்கரவாதம், எல்லை மீறல் முயற்சி, நாட்டை தாக்கும் போர் முயற்சி, அதைப் போர்கால விதிகளைக் கொண்டு தீர்க்காமல் வெறும பேசித் தீர்ப்போம் என மீண்டும் இந்த அரசு முயலுமேயானால, அதைவிட ஒரு கேவலம் நமக்கு வேண்டியதில்லை. இப்படி பட்ட அரசாங்கங்கள் இருக்கும் வரை, இந்தியா 2020 ல் என்ன 20020 இல் கூட வல்லரசாக முடியாது.

இந்த தாக்குதலில் சில நன்மைகள் இருப்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. கடந்த முறை நடந்த கார்கில் ஆக்கிரமிப்பு, நாடாளுமன்ற தாக்குதல், மும்பாய் இரயில்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் இந்தியர்கள். இந்த முறை பல வெளிநாட்டினர் உயிரிழந்திருக்கிறார்கள். அமெரிக்கா, பாகிஸ்தான் மீது கொஞ்சம் கோபப்படுவது போல நடிக்கவாவது செய்கிறது, தீவிரவாத தாக்குதல்களை நம்மைப் போல அனுதினமும் அனுபவிக்கும் இஸ்ரேல் இந்தியாவிற்கு உதவ மீண்டும் ஒரு முறை நேசக் கரம் நீட்டியிருக்கிறது, ஓட்டு பொறுக்கிகளின் உதவியினால் அந்த நல்ல முயற்சி மீண்டும் ஒரு முறை தவற விடப்பட்டிருக்கிறது. வெளிநாட்டினர் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் இருந்திருந்தால், இந்தத் தாக்குதலும் இந்தியாவில் நடக்கும் மற்ற தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்பட்டு மறுதினமே மறக்கப் பட்டிருக்கும்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com

பித்தனின் கிறுக்கல்கள் - 31

நம்பியார்

உலகத் தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருந்த ‘வில்லன்களின் வில்லன்’ எம்.என்.நம்பியார் மறைந்து விட்டார். இவர் நடிக்காத 60, 70, 80 களில் வந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நடிகர் திலகமும், மக்கள் திலகமும் நடித்த படங்களில் அவர்களைத் தாண்டி ஒரு நடிகர் ப்ரசித்தி பெறுவது என்பது கிஞ்சித்தும் யோசிக்கக்கூட முடியாத விஷயம். அதை சர்வ சாதாரணமாக செய்து காட்டியவர் இவர். தனக்கென ஒரு தனி பாணி அமைத்து, படத்தில் பல வில்லன்கள் இருந்தாலும், அவர்களிலிருந்து தன்னைத் தனித்து வெளிப் படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்தவர். எம்.ஜி.ஆருடன் இவர் செய்யும் சண்டைக்காட்சிகள் என்னைப் போன்ற பல ரசிகர்களை புலகாங்கிதமடையச் செய்துள்ளது. உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆருடன் இவர் செய்த சீன முறை சுமோ சண்டை இனி மீண்டும் ஒருவர் செய்ய முடியாது என்பது என் கருத்து. என் சிறு வயதில் நான் பார்த்த படத்தில் இவர் சாட்டையால் அடித்ததில் எம்.ஜி.ஆருக்கு வலித்ததோ இல்லையோ எனக்கு வலித்து நான் அழுதது நினைவிருக்கிறது. அசாத்திய வில்லன் நடிப்பு இடையே திடீரென நல்லவனாகவும் நடித்து (ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பின்பகுதி, தூறல் நின்னு போச்சு) நம்மை ஆச்சர்யப் பட வைத்தவர். எம்.ஜி.ஆர் தேர்தலுக்கு ப்ரசாரம் செய்யப் போகும் போது மக்கள் அவரை வழி “மறித்து நல்லா இரு ராசா” என்று வாழ்த்திய அதே நேரம் “இந்த நம்பியார் கிட்ட கொஞ்சம் ஜாக்ரதையா இரு ராசா, கெட்ட பய உன்னைய ஏதும் செய்துரப் போறான்” என்று வாஞ்சையோடு சொன்னது இவருடைய நடிப்புக் கிடைத்த மிகப் பெரிய பரிசு.

ஒரு நல்ல கலைஞன் எப்போது மற்ற கலைஞர்கள் போல நல்ல கதாபாத்திரங்கள் தனக்கு கிடைக்க வில்லையே என்று ஏங்குகிறானோ அப்போதுதான் முழுமையடைகிறான் என்பது என் கருத்து. ரஜனியின் தளபதி படத்தில் அம்ரிஷ் பூரியின் ‘கலிவர்தன்’ கதாபாத்திரம் தனக்கு கிடைக்கவில்லையே என்று சொல்லி அவர் அதன் முத்தாய்ப்பாக எனக்கு தலையில் இப்போது முடியே இல்லை மொட்டை போடும் செலவு கூட இல்லை இருந்தாலும் மணிரத்தினம் என்னை தேர்வு செய்ய வில்லையே என்று வருத்தப் பட்டதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி என்ற இரு இமயங்களோடு நடித்தவருக்கு ரஜனி, மம்முட்டி இரு சிறு மடுக்களோடு நடிப்பதில் பெரிய சவால் இல்லை ஆயின் அந்த சிறிய பாத்திரம் இவரை பாதிக்கிறது என்று சொன்னால் இவருடைய கலையார்வத்தை கண்டு தலை வணங்கத்தான் வேண்டும்.

திரையில் இவர் ஒரு நயவஞ்சகன், பெண் பித்தன், திருடன், ஏமாற்றுப் பேர்வழி, கொள்ளைக்காரன், கொடுங்கோலன், ராஜத்துரோகி, பணத்தாசை பிடித்த பிசாசு, இரக்கமில்லாதவன். ஆனால் நிஜ வாழ்வில் இவர் ஒரு இனிமையான மனிதர், அல்லும் பகலும் ஐயப்பனின் நாமத்தை ஜெபித்த, 60-65 வருடங்களுக்கு மேலாக சபரிமலை (வருடத்திற்கு 4-5 முறை) சென்று வந்த பக்தர். புகை, மது, மாது என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லாத தூய்மையானவர். நடிப்பது, எனது தவம், வாழ்க்கை, எனக்கு ஆண்டவன் இட்ட பிச்சை என்று வாழ்ந்த உத்தமர்.

1991-ல் நான் முதன் முதலாக சபரிமலைக்குச் சென்றபோது 18 படியை தழுவி, ஐய்யனை தரிசித்து விட்டு எங்கள் குடிலுக்கு சென்று ஓரிரு மணி நேரத்திற்குப் பிறகு வெளியில் ஒரே பரபரப்பு, என்ன என்று கேட்டதற்கு, குருசாமி வந்துவிட்டார் என்றார்கள். எனக்கு ஒரே திகைப்பு, எங்கள் குழுவின் குருசாமி எங்களோடுதான் மலையில் நடந்து வந்தார், எனக்கு ஒரு 100-200 பேர்களுக்கு முன்புதான் 18 படி கடந்து வந்தார், அப்படி இருக்க இவர்கள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லையே என்று எங்கள் குருசாமியின் மகனிடம் கேட்டதற்கு அவர் சொன்னார், என் தந்தை நம் குழுவிற்கு குருசாமி, ஆனால் நம்பியார் சாமிதான் நம் எல்லா ஐய்யப்பன்மார்களுக்கும் குருசாமி என்றார். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடுமபத்திற்கும், மற்றவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

எம்.என். நம்பியாரைப் போலவே தமிழ் சினிமாவில் ப்ரபலமான மற்றொரு நம்பியார் ஆர்.என். நம்பியார் இவர் ப்ரபல சண்டை பயிற்சியாளர், எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு இவர்தான் சண்டைப் பயிற்சி தந்தவர். இவர்தான் அண்மைக் காலத்தில் மறைந்த ப்ரபல சினிமா சண்டைப் பயிற்சியாளர் ‘விகரம்’ தர்மாவின் தந்தை என்பது மற்றொரு சிறப்பு.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.