நேரம்

Saturday, November 05, 2011

பித்தனின் கிறுக்கல்கள் - 45

இந்திய அரசியல்

சிதம்பரத்தின் ஞாபகசக்தி

சமீபத்தில் தனது துறையின் சார்பாக இவர் பங்கேற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பல கேள்விகளுக்கு காமெடியாகப் பேசுவதாக உளறித்தள்ளியிருக்கிறார். முதலில், தான் ராஜீனாமா செய்தேனா இல்லையா என்பது இவருக்கு மறந்து விட்டதாம். எத்தனை முறை ராஜீனாமா செய்தீர்கள் என்று கேட்ட போது தனக்கு கணிதம் தெரியாது என்றார். ஒரு முறையாவது ராஜீனாமா செய்தீர்களா என்ற போது, இப்போதுதான் கணிதம் பயிலுவதாகவும் அதனால் தெரியாது என்றும் சொல்லி தனது மேதாவித்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இது “என்னை உங்களால ஒன்னும் செய்ய முடியாது”ங்கர திமிர், இல்லை “நான் எது பண்ணினாலும் எனக்கு பின்னாடி முதுகெலும்பில்லாத ப்ரதமர் மற்றும் கட்சித் தலைமை இருக்கு, உங்களால முடிஞ்சத பண்ணிக்கங்க”ங்கர தைர்யம். வழக்கம் போல நாம கிறுக்குவோம், இல்லை, கத்துவோம் அதை ஒரு பத்து பதினஞ்சு பேர் படிக்க/கேக்கப் போறாங்க, இதால ஒரு புண்ணாக்கும் ப்ரயோஜனம் இல்லைங்கரது இவர மாதிரி ஆளுங்களுக்கு நல்லா தெரியும் அப்புறம் என்ன.

‘ரமணா’ன்னு ஒரு படம் சில வருஷங்களுக்கு முன்னாடி வந்தது அதுல ஒரு காட்சி, ஹீரோ விஜயகாந்தோட குடும்பம் வீடு இடிஞ்சு விழுந்து செத்துப் போயிடுவாங்க அதை விசாரிக்க ஒரு கலெக்டரை வெச்சு விசாரணை பண்ணும் போது ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவங்களும் அடுத்த துறையை குற்றம் சொல்வார்கள் அதைப் போல சிஏஜி ராஜாவையும், ராஜா தயாநிதியையும், தயாநிதி அருண் ஷோரியையும், பிறகு ராஜா ப்ரதமரையும், பி. சிதம்பரம் ராஜாவையும், ப்ரணாப் முகர்ஜி பி. சிதம்பரத்தையும் காட்டிக் கொடுக்க பெரிய தமாஷ் அரங்கேறியிருக்கிறது. இதனால் என்ன நடக்கும்-ன்னு யாரும் ரொம்ப எதிர் பார்க்க வேண்டாம். ஒரு மண்ணும் நடக்காது, இந்தக் கொள்ளையில ஈடு பட்ட ஒருத்தருக்கும் தண்டனை கிடைக்காது. சிஏஜி/சிபிஐ ல இருக்கர சில பேருக்கு வேலைல ப்ரச்சனை இருக்கும், பல பேருக்கு ப்ரமோஷன் கிடைக்கும். நாம வழக்கம் போல நெத்திய துடைச்சி வெச்சா ஒரு நாமத்தை நம்பளையே போட்டுக்க சொல்லிட்டு போய்கிட்டே இருப்பாங்க. ஏதாவது கேட்டா தமிழன் மத்திய அமைச்சர இருக்கரதைப் பாத்து பொறாமை படரீங்க. தலித் மத்திய அமைச்சரா இருந்தது உங்களுக்கு பிடிக்கலை. ஆரிய சூழ்ச்சி, பார்பனர்களின் ஏமாத்து வேலைன்னு ஜல்லியடிக்க கூட்டம் கூட்டமா தமிழநாட்டுல மக்கள் இருக்காங்க.

கனிமொழி ஜாமீன் மறுப்பு

நீதிபதி ஓபி ஷைனி கனிமொழி மற்றும் அவரோடு ஜாமீன் மனு செய்திருந்த அனைவருக்கும் ஜாமீன் மறுத்து தீர்ப்பளித்திருக்கிறார். கனிமொழி மற்றும் 4-5 பேருக்கு சி.பி.ஐ ஜாமின் தருவதை எதிர்க்காத போதும் இந்தத் தீர்ப்பை தந்திருக்கிறார். எமக்குத் தெரிந்த சட்டத்தின் படி, அந்த நீதிபதி ஜாமீன் மறுப்பு என்று தெரிவித்திருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். இதுவரை இவர்கள் யாரும் குற்றம் செய்தவர்கள் என்று தீர்ப்பு வரவில்லை, குற்றம் செய்திருக்கிறார்கள் என்று கருதப்படுபவர்கள்தான். தீர்ப்பு வரும் முன்பே நீதிபதி இவர்கள் மீது வார்த்தைக் கடினம் காட்டியதைத் தவிர்த்திருக்கக் கூடியது. மேலும், கனிமொழி இப்போது உச்ச நீதிமன்றத்தை அனுகி இந்த நீதிபதி பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதைத் தவிர, 2ஜி ஊழல் செய்து அதிலிருந்து கையூட்டு பெற்ற போது தான் ஒரு பெண் என்று இவருக்குத் தெரியவில்லை, மாட்டிக் கொள்வோம் என்று பல ஊடகங்களும் சொன்னபோது இவருக்கு தான் ஒரு பெண் என்று தெரியவில்லை, ராஜா மாட்டிக் கொண்டவுடன் அவசர அவசரமாக அதைத் திருப்பித் தந்தது போல ஜோடிக்கும் போதும் அது தெரியவில்லை, மாட்டிக் கொண்டவுடன் தான் ஒரு பெண், ஒரு எம்.பி. ஒரு தாய், ஒரு மனைவி அது இது லொட்டு லொசுக்கு என்று ஆயிரம் சொல்ல முடிகிறது. இதற்கு ஜீ.வி. போன்ற அடிவருடிகளின் ஜால்ரா சப்தம் வேறு காதைத் துளைக்கிறது.

இதுவரை இந்தியாவில் எந்த ஊழல் பேர்வழியும் தண்டிக்கப் பட்டதாகச் சரித்திரம் இல்லை. இந்த தைரியத்தில்தான் ராஜா இதுவரை ஜாமீன் கூட கேட்காமல் திஹாரில் ஜாலியாக இருக்கிறார். எப்படியும் வெளியே வந்து விடுவோம், வந்த பிறகு எப்படியும் தியாகி, செம்மல் என்று ஏதாவது பட்டம் வாங்கிக் கொண்டு மறுபடி தேர்தலில் அடித்துப் பிடித்து ஜெயித்து ஆட்டம் போடப் போகிறோம் இதுக்கு எதுக்கு ஒரு வக்கீலுக்கு பணம் கொடுத்து ஜாமீன் கேட்பானேன் அது மறுக்கப் பட்டு பேப்பரில் செய்தியாக வருவானேன். காசுக்குக் காசு மிச்சம், பட்டமும் பதவியும் பின்னாளில் நிச்சயம். நல்ல கணக்குதான்.

அண்ணா நூலக இடமாற்றம்.

கருணாநிதி கட்டிய அண்ணா நூலகத்தை இடம் மாற்றி அதை ஓர் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருப்பது பெறும் எதிர்ப்பைக் கண்டிருக்கிறது. முதலில் இந்தக் கட்டிடம் 170 கோடியில் முடிவுறும் என்று தீர்மானிக்கப்பட்டு கடைசியில் இது 230 கோடியில் முடிந்திருக்கிறது. இதைப் பற்றிய ஒரு அலசல் இட்லி-வடையில் விரிவாக வந்திருக்கிறது. இதைப் பற்றி அதிகம் எமக்குத் தெரியவில்லை. இட்லி வடையில் சொல்லியிருப்பது உண்மையாக இருப்பின் ஜெயலலிதா, இதைத் தீவிரமாக விசாரித்து துரைமுருகன் (இவர்தான் முன்பு பொதுப் பணித்தறை அமைச்சராக இருந்தவர்), ஏன் கருணாநிதியையே (இவர்தான் துரைமுருகனைத் தூக்கிவிட்டு அந்தத் துறையையும் சேர்த்துப் பார்த்துக் கொண்டவர்) கூட கை காட்டி அடித்து உள்ளே போட்டிருக்கலாம். ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை. இது தவிர இதை இவர் தவிர்த்திருக்கலாம் என்றுதான் நாமும் நினைத்தோம். சமீபத்தில் தமிழ்நாடு எழுத்தாளர்கள் சங்கம் இது அண்ணாவுக்கு செய்யும் அவமதிப்பு என்று சொல்லியிருப்பதாக ஒரு செய்தியைப் படித்தவுடன் எமது கருத்து மாறிவிட்டது. இப்படிப் பட்ட செயல்கள் அண்ணா, கருணாநிதி, பெரியார் என்று யாருக்காவது அவமதிப்பு என்றால் அதைத் தயங்காமல் செய்யவேண்டும். அவர்கள் அடித்த கூத்தினால்தான் தமிழகம் இன்னமும் இப்படி கேடு கெட்டு போய்க் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி மற்றும் திருச்சி இடைத் தேர்தல்

சமீபத்தில் நடந்த தேர்தல்களில் அதிமுக அடித்து நொறுக்கி வெற்றி பெற்றிருக்கிறது. திருச்சி இடைத் தேர்தலில் கே.என். நேரு 15000 வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார். இவர் காலைக் கட்டிவிட்டு ஓட்டப் பந்தயம் விட்டதால் தோற்றிருக்கிறார் என்று கருணாநிதி வழக்கம் போல் உளறியிருக்கிறார். இடைத்தேர்தலில் நேருவின் பெயரை திமுக அறிவித்த போது அவர் செய்த நில ஆக்ரமிப்பு வழக்குகளுக்காக சிறையிலிருந்தார். சிறையிலிருப்பதால் இவருக்கு அனுதாப ஓட்டு விழும் என்று கணக்கிட்டு அவரை நிறுத்தியது கருணாநிதியின் முட்டாள்த்தனம். இப்போது தோற்ற பிறகு இதற்கு மற்றவரை குறை சொல்வது பச்சை அயோக்கியத்தனம். திருட்டு ரெயிலில் சென்னைக்கு பஞ்சம் பிழைக்க வந்தவரிடம், ரெயிலே ஓடாத தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து ரயில் மறியல் செய்தவரிடம், கொள்ளையடித்த பிறகு தலித் என்று சொல்லி தப்பிக்க முயலுபவரிடம், தெருவுக்கு ஒரு குடும்பம் என்று வாழ்ந்து கொண்டு ராமன் என்ற வரலாற்று நாயகன், தந்தை சொல் மறவாதவன், ஏக பத்தினி விரதன், இந்துமதத்தை சார்ந்த பலருக்கு இறைவனான ஒருவரை, ஒரு குடிகாரன் என்று உளறுபவரிடம் அயோக்கியத்தனத்தை விட வேறு என்ன எதிர் பார்க்க முடியும்.

உள்ளாட்சி தேர்தல் கூட்டணி சரியாக அமையாததால் எல்லா கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு, அதிமுக தான் எல்லா கட்சிகளையும் விட அதிக ஓட்டு வங்கி உள்ள கட்சி என்று மீண்டும் நிரூபித்திருக்கிறது. இதனால் ஊழல் குறைந்து விடப் போவதில்லை. ஊழல் குறைந்துவிடும் என்று நம்புபவர்களின் வரிசையில் நாம் இல்லை.

ஜனலோக்பால் குழுமத்தின் கூத்துகள்

அன்னா ஹசாரேவின் ஜனலோக்பால் குழுமத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கிரண்பேடியின் சில தகிடுதத்தங்கள் வெளிவந்திருக்கிறது. இவருக்கு அரசாங்கம் 25% கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்ய சலுகை தந்திருக்கிறது. இவர் தான் பங்கேற்கும் தொண்டு நிருவனத்தின் நிகழ்ச்சிகளுக்கும் தனியார் நிருவனங்களின் நிகழ்ச்சிகளுக்கும் போக்குவரத்து செலவாக பிஸினஸ் க்ளாஸ் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு, தனக்குத் தரப்பட்டுள்ள 25% விலையில் சாதாரண க்ளாஸில் பயணத்தி மிகுதியாக வசூலித்த பணத்தை தான் தலைவராக இருக்கும் இந்தியா விஷந் பவுண்டேஷன் பெயரில் சேமித்திருக்கிறார். இதைப் பற்றி பேச்சு வந்ததும், அது அந்த நிருவனங்களுக்குத் தெரிந்துதான் செய்தேன் என்று பல்டி அடித்தார். அதில் சிலர் இது தங்களுக்குத் தெரியாது என்று சொன்னதும், அப்படி அதிகமாக பெற்றப் பணத்தை திரும்பத் தந்து விடுவதாக சொல்ல ஆரம்பித்தார், பின்னர் தான் அந்தப் பணத்தை சேமித்தேன் அதாவது ஒருவர் பணத்தை சேமித்தால் அது தவறா என்று சகட்டு மேனிக்கு உளற ஆரம்பித்திருக்கிறார்.

இவர் இப்படி என்றால் கேஜ்ரிவால் என்ற மற்றொருவர் இதுவரை ஜனலோக்பாலுக்கு வந்த நன்கொடைகளை தான் நிர்வகிக்கும் ஒரு அறக்கட்டளையில் போட்டிருக்கிறார். இது எப்படி நியாயம் என்று யாரும் கேட்கக் கூடாது. காரணம் அன்னா ஹசாரே இந்தியாவில் 13 நாள் உண்ணாவிரதம் இருந்து ஊழல் என்ற ஒன்றை ஒரே அடியாக அடித்து விரட்டி, அடுத்த மஹாத்மா என்று பெயர் பெற்றிருக்கிறார். இந்தியாவில் ஊழலே இல்லை அப்படி இருக்க அவருடைய ஜனலோக்பாலில் எங்கிருந்து ஊழல் இருக்க முடியும்.



பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ......

piththanp@gmail.com

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்