நேரம்

Thursday, April 26, 2012

பித்தனின் கிறுக்கல்கள் - 48


உ.பி மற்றும் 4 மாநில தேர்தல்கள்
உ.பி. தேர்தல் பலப் பல கூத்துகளுக்குப் பிறகு முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு பெரும்பான்மையான வித்யாசத்தில் வெற்றியை அள்ளித் தந்து முடிந்திருக்கிறது.  இவரது மகன் அகிலேஷ் இந்தியாவில் குறைந்த வயதில் முதலமைச்சராகும் வாய்ப்பைப் பெற்று, சென்னையில் ஒரு கிழவர் இன்னமும் தனது தொண்டுகிழத் தந்தையார் பதவி விலகக் காத்துகொண்டு இளைஞர் அணித் தலைவர் என்ற பதவியைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார், அவருடைய வயிற்று எரிச்சலை கொட்டிக் கொண்டிருக்கிறார். 

முடிவுகள் பலரும் எதிர் பார்த்தது போலத் தான்.  முலாயம், அல்லது மாயாவதி இருவரில் ஒருவர் முதல் மற்றவர் இரண்டாம் இடம், மூன்றாவது நான்காவது இடத்திற்கான போட்டி பாஜக, காங்கிரஸ் இடையே என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான் இருந்தாலும் இப்படி ஒரு மெஜாரிடி முலாயமுக்கு கிடைக்கும் என்று அவரே எதிர் பார்த்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.

மிக வயதான முதலமைச்சரைப் பார்த்த இந்தியா இப்போது சிறுவயதுடைய ஒரு முதல்வரைப் பார்க்கிறது.  இதனால் உ.பி.யில் இருக்கும் நிர்வாகச் சீர்கேடு உடனடியாகத் தீரப் போவதில்லை.  மாயாவதி தனது வகுப்புவாதப் பேச்சை தீவிரப் படுத்தி, அகிலேஷை பாடாய் படுத்தி எடுக்கப் போகிறார்.  அவர் சாதாரணமாகவே “தூள்” பட சொர்ணக்காவுக்கே அக்கா மாதிரி இருப்பவர், இப்போ தேர்தல் தோல்வின்னு உபி மக்கள் சொறிஞ்சு விட்டிருக்காங்க என்ன கண்றாவியெல்லாம் நடக்கப் போகுதோ.  எப்படியும் செவிட்டு ப்ரதமர் எதுவும் செய்யப் போவதில்லை.  போதாத குறைக்கு ராகுல் தேர்தல் சமயத்துல உபி ஏழைங்க வீட்டுல இருந்த கஞ்சி டீ எல்லாம் குடிச்சு அவங்களை இன்னும் ஏழையாக்கிட்டு வந்திருக்கார்.  அதனால அவராலதான் தோத்தோம்ன்னு உபி காங்கிரஸ் கும்பல் நினைச்சு கிட்டு அவங்க பங்குக்கு கொஞ்சம் கூத்தடிக்கப் போராங்க.  எது எப்படியோ, அகிலேஷ்கு கொஞ்சம் கஷ்ட காலம்தான்.

தமிழகத்தின் மின்வெட்டு
வெளியில் நாத்திகம் பேசிக் கொண்டு வீட்டில் சாமிகும்பிடும் திராவிட கட்சிகள் கூட கடவுளை பற்றிப் பேச வைத்திருக்கிறது தமிழகத்தின் மின்வெட்டு.  சாமியும் கரண்டும் ஒன்றாம், இரண்டும் கண்ணுக்குத் தெரியாமலேயே இருக்கிறதாம்.  இவங்கதான் சாமியே இல்லைன்னு ஜல்லியடிக்ரவங்களாச்சே, இல்லாத ஒன்னை எதுக்கு கரெண்டோட கம்பேர் பண்றாங்கன்னு கேட்டா நாம தமிழின விரோதிகள்.  கூடங்குளம் அணு மின்நிலையம் திறந்தா 1000 மெகாவாட் மின்சாரம் கிடைக்குமாம் அதில் கணிசமான பகுதி தமிழகத்துக்கும் வரும்ன்னு ஜெ யும், கொஞ்சம்தான் தருவோம்னு மத்திய அரசும் ஆளுக்கு ஒரு பக்கம் பேசிகிட்டு இருக்காங்க, தமிழகத்தோட மின் வெட்டை முழுவதுமாக இல்லைன்னாலும், கொஞ்சமாவது இது குறைக்கும் என்பது பலரோட எதிர்பார்ப்பு.  இது கூடவே கூடாதுன்னு உதயகுமார்ன்னு ஒருத்தர் அடாவடி பண்ணிட்டு இருக்கார்.  அவரை தலைமேல தட்டி உக்கார வெச்சாத்தான் இது நடக்கும் போல இருக்கு.  அந்த பூர்வாங்க வேலை நடந்துகிட்டு இருக்கு என்பது ஒரு நல்ல விஷயம்.

தமிழக இடைத்தேர்தல்:
சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிவில் அ.இ.அ.தி.மு.க மற்ற கட்சிகளை அனைத்தையும் அடித்து நொறுக்கி டெபாசிட் இல்லாமல் செய்து பெற்றிருக்கிற வெற்றி பணம் கொடுத்து வந்ததா இல்லை ஜெ யின் ஆட்சியில் இருக்கும் நம்பிக்கையால் வந்ததா என்று ஒரு பட்டி மன்றம் போட்டு விவாதிக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது.  இந்த சூடு ஆறுவதற்குள் அடுத்த இடைத்தேர்தல் புதுக்கோட்டையில் நடக்க இருக்கிறது.  திமுக உட்பட பலரும் இதை தவிர்த்து விட பல ப்ரயத்தனங்களைச் செய்த வண்ணம் இருக்கிறார்கள்.  காரணம் மின்வெட்டு, மின்சார விலை உயர்வு, பஸ்கட்டண உயர்வு எல்லாம் இருந்தும் அதிமுகவின் சங்கரன் கோவில் அசுர வெற்றி அனைவரையும் தோல்வி பயத்தில் தள்ளியிருக்கிறது.  புதுக்கோட்டை தொகுதியில் இதற்கு முன்பு வெற்றி பெற்றது இ.கம்யூனிஸ்ட், இவர்களுடன் இப்பொழுது கூட்டனி இல்லாது இருந்தாலும், ஜெ இந்தத் தொகுதியை இ.கம்யூனிஸ்டுக்கே விட்டுக் கொடுத்திருக்கவேண்டும் என்பது எமது கருத்து.  அரசியலில் நாம் நினைப்பது நடப்பது என்பது எமது கனவிலும் நடக்காத ஒரு விஷயம் அதற்காக நமக்கு சரி என்று மனதில் பட்ட ஒன்றைப் பற்றிக் கிறுக்காமல் இருக்க எம்மால் முடியாது.

இலங்கை
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் ஐ.நாவில் இந்திய ஆதரவுடன் நிறைவேற்றப் பட்டது. இது செய்தி.  இதைப் பற்றி துக்ளக் இதழ்: 3/29/2012 ல் விவரமாக வந்திருக்கிறது.  இது பற்றி துக்ளக்கில் படிப்பதற்கு முன் ஐநாவின் வளைதளத்தில் சென்று பார்த்த போது பல விஷயங்கள் புலப்பட்டன அதன் பிறகு எதற்காக இந்த உதவாக்கரை தீர்மானத்தின் மீது பலரும் இத்தனைக் கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறார்கள் என்ற குழப்பமும் வந்தது.  அதன் பிறகு சோ வின் கட்டுரையைப் படித்தவுடன் நம் கருத்தை ஒத்த மற்றொருவரும் இருக்கிறார் என்பது ஒரு ஆறுதலான விஷயம்.  அதே நேரம், சமீபத்தில் வெளிவந்த சானல் 4ந் இலங்கையில் நடந்த படுகொலைகளை வெளிக் கொணர்ந்த ஒளிப்பதிவுகள் குறித்த அவரது கருத்துக்கள் எமக்கு ஏற்புடையதில்லை.  எமக்கு இலங்கையில் நடந்தது போர் இல்லை ஒரு தீவிரவாத கும்பலை ஒழிக்கும் நடவடிக்கை என்பது அவருடைய கருத்தோடு ஒத்த கருத்தாக இருந்தாலும், அவர்கள் அப்பாவி குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், சாமானிய குடிமகன்களுக்கும் செய்த கொடுமைகளை சோ அவர்கள் கண்டிக்க முடியாவிட்டாலும், அதை நியாயப் படுத்தாமல் இருந்திருக்கலாம்.

அமெரிக்க அதிபர் தேர்தல்
அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தற்போதைய அதிபர் தயாராகி வரும் இந்த நேரத்தில் அவரை எதிர்க்கக் கூடிய தகுதியிருப்பதாக குடியரசுக் கட்சியின் சார்பில் முன்னனியில் இருக்கும் மிட் ராம்னி அதிபருக்கு கொஞ்சம் ஆட்டம் காட்டுவார் என்று நம்பும் பலரில் நாமும் ஒருவர்.  கடந்த நான்கு வருடங்களில் அமெரிக்காவில் பாலும் தேனும் பெருகி ஓடும் என்று யாரும் நம்பவில்லை ஆனால், இப்படி கஞ்சிக்குக்கூட வழியில்லாமல் செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று சொன்னால் அது அவர்களது அறியாமை என்றுதான் எம்மால் சொல்ல முடியும். 
இன்றைய அதிபரின் சக்கரைத் தடவிய பேச்சைக் கேட்டுவிட்டு இவரது ஆட்சி தமிழகத்தின் 1967-ம் ஆண்டு துவங்கிய அண்ணாத்துரையின் ஆட்சியைப் போலத்தான் இருக்கப் போகிறது என்ற எமது கணிப்பு பொய்க்கவில்லை என்பது எமக்கு இனிப்பான செய்தியில்லை.

திரைப்பட விமர்சனங்கள்
HUGO
எமது ரிச்மண்ட் நண்பனின் வேண்டுகோளை வழக்கம் போல் நிராகரித்து விட்டு இந்தப் படத்தை பார்த்து நொந்தேன்.  அதிலும் 3-டி வேறு, புத்தகத்தில் அருமையாக இருந்தது, அதே போல திரையிலும் இருந்தது என்று எமது நண்பனின் மூத்த மகள் எமக்கு கொஞ்சம் வேப்பிலை அடிக்க உண்மை என்று நம்பி இந்தப் படத்தை திரையரங்கில் பார்த்தேன்.  பேசாமல் ரெட் பாக்ஸ்சில் வந்ததும் பார்த்திருக்கலாம்.  13$ மிச்சமாயிருக்கும். 

HUNGER GAMES
இந்த முறை எமது ரிச்மண்ட் நண்பனின் வேண்டுகோளை நிராகரிக்காமல் இந்தப் படத்தை திரையரங்கில் பார்த்தேன்.  புத்தகம் படித்திருந்தால் இந்தப் படத்தை நன்கு ரசிக்கலாம் என்ற எமது நண்பனின் மகளின் கருத்தை ஆதரிக்கிறேன்.  ஆனால் கதையைப் படிக்காமல் பார்த்தாலும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.  சில இடங்கள் மனதை வருத்துகிறது, சில இடங்களில் இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பது அபத்தமாகவும், அருவருப்பாகவும் இருக்கிறது.  திரைக்கதையில் சில ஓட்டைகள் இருக்கிறது, கதையில் பலப் பல ஓட்டைகள் இருக்கிறது. இது போன்ற கருத்துக்கள் கொண்ட பல திரைப்படங்களை ஏற்கனவே பார்த்துவிட்டதால், பல காட்சிகள் அதிர்ச்சியாக இல்லை.  ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.

WELCOME
ஹிந்திப் படம்.  நானா படேகர், அக்‌ஷய் குமார், காத்ரினா கய்ஃப், அனில் கபூர் மற்றும் பலர் வந்து போயிருக்கும் சப்பை படம்.  படம் வெளிவந்து 5 வருடங்கள் ஆகியிருக்கும்.  தாங்க முடியாத திரைக்கதை சொதப்பல், கமலின் மைக்கேல் மதன காமராஜன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை காப்பியடித்தும் சகிக்கவில்லை. 

வேட்டை
ஆர்யா, மாதவன்,  சமிரா ரெட்டி, அமலா பால் நடித்து வெளிவந்துள்ள லிங்குசாமியின் படம்.  லாஜிக் பார்க்காமல் மசாலாப் படம் பார்க்க ஆசையிருந்தால் கண்டிப்பாக பார்க்கலாம்.  கதை:  அண்ணன் மாதவன் பயந்த சுபாவம், தம்பி ஆர்யா அடிதடி ஆள், இருவருக்கும் பாசம்னா பாசம் அப்படி ஒரு பாசம், அதே போல் அக்கா சமீராவும் தங்கை அமலா பாலுக்கும் ஒரு பாசம், இதான் கதை.  காமெடிக்கு யாரும் தேவையில்லை என்று மாதவனும் ஆர்யாவும் பெடலெடுக்கிறார்கள்.  அனல் பறக்க சண்டை போடுகிறார்கள்.  அப்பப்போ குத்துப் பாட்டுக்கு ஆடுகிறார்கள், வேற என்ன வேண்டும்.

ஒரு கல் ஒரு கண்ணாடி.
உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு, நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்.  படத்தில் பெரிய கதையென்று இல்லை. ஒரு சாதாரண வாத்தியாரின் மகன் உதயநிதி டெபுடி கமிஷனர்(ஷாயாஜி ஷிண்டே) பெண்ணை (ஹன்சிகா மோட்வானி) காதலிக்கும் கதை.  திரைக்கதையும், காமெடி இல்லாத காட்சியும் தேடினாலும் கிடைக்காது.  சந்தானம் விஸ்வரூபமெடுத்து நடித்திருக்கிறார், ஹன்சிகாவுக்கு மொத்தமாக 4-5 முக பாவங்கள்தான் வருகிறது, பாடி லாங்க்வேஜ் சுத்தமாக இல்லை, இள வயது குஷ்பு போல இருக்கிறார் என்று எல்லோரும் சொல்லிச் சொல்லி (இந்தப் படத்திலேயே ஒரு 4-5 முறை பலரும் சொல்கிறார்கள்) இவரை உசுப்பேற்றி படங்களில் நடிக்க கொண்டு வந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.  இவர் முறையாக நடிக்க ஆரம்பிப்பதற்குள் 2025 பிறந்து விடும் என்பது உறுதி.  உதயநிதிக்கு நடிப்பு ரொம்ப சுமாராக வருகிறது, நடனம் காலடியில் யாரோ துப்பாக்கியால் சுட்டால் குதிப்பது போல இருக்கிறது.  வசன மாடுலேஷன் நன்றாக இருக்கிறது (டப்பிங் டைம் உபாயம்), இவரது குரல் நடிகர் ஜீவாவின் குரலை ஒத்திருக்கிறது.  க்ளைமேக்ஸ்சில் இவரும் சந்தானமும் சேர்ந்து மேடையில் சொல்லும் ஒரு பட்டாம் பூச்சி கதை சிரிப்பே வராதவர்களுக்கும் சிரிப்பை பீறிட்டு கொட்ட வைக்கும்.  உதயநிதிக்கு மட்டும் கொஞ்சம் நடிப்பும், நடனமும் வந்து விட்டால், அநேகமாக நடிகர் விஜய்க்கு ஆப்புதான்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ......
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்