நேரம்

Sunday, January 03, 2016

பித்தனின் கிறுக்கல்கள் - 50

அனைவருக்கும் 2016 புது வருட வாழ்த்துக்கள்.

ஒரு வழியாக 50 வது பதிவை பதிவிட காலம் துணை செய்திருக்கிறது.

புதுவருடத்தில் பலரும் பலப் பல உறுதிமொழி எடுக்கும் இத்தருணத்தில் நம்முடைய வளைப்பூ இருக்கிறதா என்று எட்டிப் பார்த்தால், ஆச்சர்யமாக சிலர் இன்னமும் இந்த வளைப்பூவில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற வரலாற்று உண்மை சற்று நெருடலாக இருக்கிறது.  அதிலும் Sheung Wan லிருந்து (இந்த இடம் ஹாங்காங்கிலிருப்பதாக தெரிய வருகிறது) ஒருவர் இந்த வளைப்பூவில் உலாவியிருக்கிறார்.  அவரது துரதிஷ்டத்திற்கும் ஒரு வணக்கத்தை போட்டு விட்டு, அடுத்த வேலைக்கு செல்லலாம்.

சென்னை மற்றும் கடலூரில் வெள்ளம்
கடந்த 100 வருடங்களில் இது வரை காணாத வெள்ளம், மழை, சேதம், பாதிப்பு என்று எல்லோரும் வருத்தப் படும் நேரத்தில் எதுவும் செய்ய இயலாத நேரத்தில் இயற்கை நம் எல்லோரையும் விட மிக மிகப் பெரியது என்ற உண்மை மீண்டும் ஒரு முறை உறுதிப் படுத்தப் பட்டிருக்கிறது.

சென்னையும், கடலூரும் கண்ட மழை மற்றும் அதைத் தொடர்ந்த வெள்ளம் அசாத்தியம், மிகப் பெரிய இயற்கை பேரிடர் ஆனால் இந்த நேரத்திலும் யாரும் ஏன் இப்படிப் பட்ட ஒரு வெள்ளத்தையும் மழையையும் ஒரு மெட்ரோபாலிடன் நகரம் எதிர் கொள்ள முடியாமல் தத்தளித்திருக்கிறது என்ற உண்மையை சரிவர எதிர் கொள்ள முயலவில்லை.  காரணம் நமது அரசின் மீது மக்களின் சகிப்புத்தன்மையா? ஏரி, குளம் ஆறு இவற்றை மூடிவிட்டு வீடுகள் கடைகள் நகரங்கள் என்று உருவாக்கிய நம்முடைய மக்களின் பேராசையா? இவற்றை மக்கள் செய்யும் போது வாளேயிருந்த அரசாங்க அதிகாரிகளா, அரசியல்வாதிகளா?  கேள்விகள் பலப் பல இருந்தாலும் பதில் நாம் அனைவரும் ஒரு விதத்தில் கறை படிந்திருப்பதால்தான் என்பது எம் எண்ணம்.  நம் எல்லோருடைய உறவினர்கள், நண்பர்கள், அறிந்தோர், அறியாதோர் என பலரும் சென்னையில் அவர்களது வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள், அரசாங்கத்தின் 5 அல்லது 10 ஆயிரம் ரூபாய்கள் நிவாரணம் அவர்களது இழப்பில் ஒரு விழுக்காடு கூட இருக்காது.  பலர் வீட்டில் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கிறது.  இது ஒரு சோக கட்டம் என்பதில் எள்ளலவும் ஐய்யமில்லை.  அனைத்து அரசியல் கட்சிகளும் உதவி செய்திருக்கின்றன என்று மு.கோ தனது பதிவில் பதிந்திருக்கிறார்.  அதோடு அவர் பல புள்ளி விவரங்களை விளக்கமாக தந்திருக்கிறார் எனவே அதை மீண்டும் ஒருமுறை தரவில்லை.  எனது நண்பர்களும், உறவினர்களும் அவர்களது குறைந்த பட்ச இழப்பு சுமார் 5-10 லட்சங்கள் என்று அதிர்ந்து நிற்கிறார்கள்.  காப்பீட்டு அலுவலகத்தில் வேலை செய்யும் எனது நண்பர் மழை நின்ற பிறகு தினமும் காலை 7:30 மணிமுதல் இரவு 3-4 மணிவரை தினமும் வெலை செய்கிறார்.  இவருக்கு சேதம் இவருடைய காரும், ஒரு ஹோண்டா ஸ்விஃப்ட், இவருடைய ஃப்ளாட் 4 வது மாடியியில் இருந்ததால் தப்பித்திருக்கிறார்.  காரும், ஸ்விஃப்டும் சரி செய்ய இவருக்கு குறைந்த பட்சம் 3 லட்சம் தேவைப் படுகிறதாம். இவருடைய காப்பீட்டு கழகம் இதில் 10-ல் ஒரு பங்கு கூட தராதாம்.  இவருக்கே இந்த கதி என்றால் மற்றவர்களுக்கு?

நீர்வழித்தடங்களை பாதுகாப்பது மட்டும் முக்கியம் இல்லாமல் அதை மறைத்தோ அல்லது மூடியோ யார் எடுக்கும் நடவடிக்கையும் மிகக் கடுமையான தண்டனைக்குள்ளாவது மட்டுமே இப்படிப் பட்ட எதிர்கால பேரிடர்களைக் களையக்கூடிய ஒரு சிறிய வழியாக இருக்கும் என்பது எமது கருத்து.

நாஞ்சில் சம்பத்தின் பேட்டி
நாஞ்சில் சம்பத் என்னவோ இது நாள் வரை ஒரு நிலைப் பட்ட கருத்துடன் பேசி வந்தவர் போலும், திடீரென்று தான் பேசுவது என்னவென்று தெரியாமல் பேசியது போலும் இணைய தளத்திலும் மற்ற ஊடகங்களிலும் இவரைப் பற்றி இவருடைய சமீபத்திய தந்தி தொலைக்காட்சி நேர்காணலுக்குப் பிறகு பலரும் எழுதி வருகின்றனர்.  இவர் மதிமுக வில் இருந்த போதும் சரி பிறகு அதிமுக விற்கு மாறிய பிறகும் சரி, இவருடைய பணி அடுத்த கட்சிக்காரர்களைத் தாக்குவது, இவருடைய பலம் இவருடைய பேச்சு, அது சரியா, தவறா என்பது வேறு விஷயம்.  இவரால் இதைத்தான் செய்ய முடியும்.  அதை செய்தார்.  அதிலும், இவர் கொள்கை பரப்புச் செயலாளராக இருப்பதால் இவருக்கு அதிமுகவின் கொள்கையையும் அதை ஒட்டியே நிகழ்வுகளை செய்யவும் இவருக்கு அதிகாரம் இருக்கும் என்று இவரே நம்ப மாட்டார்.  அந்தக் கட்சியில் எல்லாம் நடத்துவது ஒருவர் அவர் யார் என்பது யாவருக்கும் தெரியும். இவர் அந்த நேர்காணலில் பங்கேற்காமல் தவிர்த்திருக்கலாம்.  அதை விடுத்து "யாரால கெட்டேன் நூறால கெட்டேன்" ந்னு பழைய பஞ்சாங்கம் பேசுவது உதவாது.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரலாம்……

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்


0 comments: