நேரம்

Monday, June 25, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 11

சிசேரியன் ஆப்ரேஷன் செய்த மாணவன், தப்பி ஓட்டம்.

திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த 15 வயது மாணவனை அவனது மருத்துவப் பெற்றோர், கின்னஸ் சாதனைக்காக சிசேரியன் ஆப்ரேஷன் செய்ய வைத்து அதை ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் பித்துக்குளித்தனத்திற்கு என்று எந்த வரைமுறையும் கிடையாது என்பதை தெளிவாக்கியிருக்கிறார்கள். 15 வயது மாணவன், முறையான மருத்துவப் படிப்பு படிக்காதவன் கடினமான சிசேரியன் அறுவை சிகிச்சை செய்திருக்கிறான். அதை அவனது தந்தை பெருமையாக ஒரு டாக்டர்கள் சங்க கூட்டத்தில் பேசி இன்று கைதாகி சிறையில் இருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் பாலமுரளி அம்பாட்டி தான் உலகின் குறைந்த வயது மருத்துவர் என்ற சாதனையை நிகழ்த்தியிருப்பவர். அதை முறியடிக்க பாவம் ஒரு அப்பாவி பெண்ணிற்கு ப்ரசவம் பார்த்திருக்க வேண்டாம், யாராவது ஒரு தமிழக அரசியல் வாதிக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்திருக்கலாம், அதுவம் இலவசம் என்று சொல்லியிருந்தால், அவர்களும், போட்டி போட்டுக் கொண்டு வந்திருப்பார்கள். ஒரு சமூக சேவையாகவாவது இருந்திருக்கும்.

துணை ராணுவம் குவிப்பு

தேர்தல் வாக்குச் சாவடிகள் அனைத்தும் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. தொகுதி எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 6 கம்பெனி துணை ராணுவப் படையினரும், 2500 போலீஸாரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப் பதிவு நடைபெறும். 216 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே பதட்டம் நிறைந்தவையாகவும், சில வாக்குச் சாவடிகள் மிகப் பதட்டமானவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே தொகுதி முழுவதும் மிக பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்த வாக்காளர்கள் சுமார் 1 லட்சத்து 56 ஆயிரம். கள்ள ஓட்டுப் போட வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துணை நிலை ராணுவப் படையினர் நிறுத்தப்படவுள்ளனர். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிக்குள்ளும், வாக்குப் பதிவு மையத்திற்குள்ளும் போலீஸார் நுழையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் மட்டுமே போலீஸார் செயல்படுவர். வாக்காளர்கள் வரிசையில் நிற்பதைக் கூட துணை ராணுவப் படையினர்தான் ஒழுங்குபடுத்துவார்கள். போலீஸார் அதில் தலையிட மாட்டார்கள். வாக்குப் பதிவு மையத்தின் அதிகாரி உத்தரவிட்டால் மட்டுமே மாநில போலீஸார் வாக்குச் சாவடிக்குள் நுழைய முடியும் என்றார். நகரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விடுதிகள், திருமண மண்டபங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதெல்லாம் பீகாரில் என்றால் நாமெல்லாம் அது வழக்கம்தானே என்று விட்டு விடுவோம், இது நடப்பது மதுரை மேற்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல், அதற்கு இவ்வளவு செலவு, அதைவிட கொடுமை, தமிழக முதல்வர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதாக அறிக்கைக்கு மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.

சிவாஜி
இந்தப் படத்தைப் பற்றி பலரும் பலவிதமாக பேசி எழுதி விட்டனர். சதங்காவும் ரொம்ப நொந்து போய் எழுதியிருந்தார். இந்தப் பெயரைச் சொன்னாலேயே அடித்து விடுவார்கள் போல இருக்கிறது. நமக்கு யாரிடம் என்ன பயம், என்ன தயக்கம், அதோடு யாராவது அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்றால் முதலில் அதைத்தான் செய்வோம், எனவே, சிவாஜி படத்தைப் பற்றிய என் கிறுக்கல்கள்.

56 வயது இளைஞர், சிவாஜி படத்திற்கு காண்ட்ராக்டில் கையெழுத்து போட்ட உடனே படத்தின் வினியோகஸ்தர்கள் படத்தை 50 கோடி விலை பேசி வாங்கி விட்டனர். மீதி இடங்களில் பலவற்றை நடிகரே விலை பேசி வெளியிட்டதாக செய்தி. படம் தமிழ் நாட்டில் மட்டும் 140 கோடிக்கு கடைசியாக விற்கப்பட்டிருக்கிறது.

கதை என்று ஒன்றும் ப்ரமாதமாக இல்லை, இந்தியாவில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை சாடி, அதிகார வர்கத்தின் அடக்குமுறையை சாடி, காதல், காமெடி, சண்டை, க்ராஃபிக்ஸ் என்று விளையாடி வழக்கம் போல சங்கர் தந்திருக்கும் மற்றோரு படம்தான் சிவாஜி.

படத்தில் பல நடிகர்கள் இருந்தாலும், அனைவரையும் தன் தோளில் சுமந்து படத்தை நகர்த்தியிருக்கிறார் ரஜனி. கதாநாயகி வரும் சாதா இடங்கள் பரவாயில்லை, பாடல் காட்சிகளில் அவரது உடை எப்போது மொத்தமாக அவிழ்ந்து விடுமோ என்று ரொம்ப பயமாகவே இருந்தது.

முத்துவிற்கு பிறகு விவேக், ரஜனியோடு நடிக்கும் படம் இது, அவருக்கு நிறைய முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. பன்ச் டைலாக் பேசுகிறார், படம் முழுக்க ரஜனியோடு ஒட்டியபடியே வருகிறார். ஆனால், அவருடைய நகைச்சுவைகூட ரஜனி அனுமதித்ததால் வருவது போன்ற உணர்வு தோன்றுகிறது. வேறு யாருக்கும் அப்படி தோன்றியதா என்று தெரியவில்லை. கடைசியாக இந்தப் படத்திற்கு வசனம் சுஜாதா என்று ஒரு பேச்சு அடிபடுகிறது.

இந்தப் படம் பற்றி இப்படி பேசப் படுவதற்கு என்ன காரணம், பால் குடம், ஆடு பலி, பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் எல்லாவற்றிற்கும், என்ன காரணம்? ரஜனி என்ற ஒரு தனி மனிதன் தான். அவர் சொல்கிற நாளில் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு, அன்றே தணிக்கை செய்யப்படுகிறது. அவர்கள் சொல்லும் மாற்றங்கள் செய்த பிறகு அவர் சொல்லும் நாளில் மீண்டும் தணிக்கைக்கு அனுப்பப் படுகிறது. அவர் சொல்லும் நாளில் அவர்கள் சான்றிதழ் தருகின்றனர், அவர் சொல்லும் நாளில் படம் திரையிடப் படுகிறது. எம்.ஜி.ஆர் -க்கு பிறகு தமிழ் திரைஉலகில் ஒருவர் சொல்லும் படி எல்லாம் நடக்கிறது என்றால் அது ரஜனிக்கு மட்டும்தான்.

அதே சமயம், இந்தப் படத்தை ஒரு பொழுது போக்குக்கு என்று பார்த்து விட்டு நமது அடுத்த வேலையை கவனிக்க போயிடனும், அதை விட்டுட்டு, அந்தப் படத்தை நோண்டி நொங்கெடுக்கனும்னு புறப்பட வேண்டியதே இல்லை. இந்தப் படத்தால், இளம் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா எல்லோருக்கும் கொஞ்சம் கதி கலங்கிதான் இருக்கிறது என்று நினைக்கிறேன். இவர்கள் ரஜனியிடமிருந்து பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். தன்னால் எது முடியும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது, எதை, எந்த விகிதத்தில் தர வேண்டும் என்பது தெரிகிறது. அவருடைய அந்த கணக்கு பிடிபடுவது கடினம்தான், ஆனால் அதை தெரிந்து கொண்டால் நிச்சயம் வெற்றிதான்.

-- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்