நேரம்

Saturday, March 02, 2019

பித்தனின் கிறுக்கல்கள் - 51

பித்தனின் கிறுக்கல்கள் - 51


அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

ஏறக்குறைய 3 வருடங்களுக்குப் பிறகு வலைப்பூவில் மீண்டும் சந்திக்கின்றோம்.

சில சமீபத்திய சம்பவங்கள், அதன் தாக்கங்கள், இந்திய மற்றும் அமெரிக்க அரசியல் அநாகரீகங்கள், வேண்டும் மோடி - மீண்டும் மோடி ப்ரச்சாரம், சமீபத்தில் நாம் ரசித்த  நிழற்படங்கள், நிகழ்வுகள் போன்ற எம்மை பாதித்த சில விஷயங்களைப் பற்றி இங்கு கிறுக்கலாம் என இருக்கிறோம்.  வழக்கம் போல் நாம் எழுதியதை படிக்காமலேயே திட்டலாம் என இருப்பவர்கள் பின்னூட்டத்தில் தைரியமாகத் திட்டலாம்.  இல்லை, நீ கிறுக்கியதை முழுவதும் படிப்பேன் என்று இறுமாப்போடு இருப்பவர்களுக்கு அந்த எல்லாம் வல்ல இறைவன் நல்ல புத்தியையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கட்டும்.


வேண்டும் மோடி, மீண்டும் மோடி:
எதுகை மோனையுடன் சொல்லப்பட்ட வாசகம்.  ஒரு தலைவன் திறம்மிக்கவனாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் மோடி போன்ற ஒரு தலைவருக்கும் இப்படி ஒரு வாசகம் வைத்து வாக்கு கேட்கும்படி வைத்திருக்கும் இந்தியாவின் எதிர் கட்சியினரின் கூவத்தை ஒத்த நாற்றம் பிடித்த அரசியலையும், அதில் அடித்துச் செல்லக் காத்திருக்கும் மந்த புத்தி வாக்காளர்களையும் நினைத்தால் பாரதி சொன்னது போல், "நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்".

எது காங்கிரஸ் கட்சியின் 55+ வருட ஆட்சியில் சாத்தியமில்லையோ அதில் பலவற்றை தன்னுடைய முதல் நான்கரை வருடங்களில் சாதித்து காட்டியுள்ளதை எப்படி மக்கள் மறக்கிறார்கள் என்று தெரியவில்லை.  ஒரு அரசின் காண்ட்ராக்ட் என்பது அனைவருக்கும் பொது, அதில் தகுதியுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று மோடி யின் ஆட்சி வெளிப்படையான டெண்டர் சிஸ்டம் நடத்தினால் அது வியாபாரிகளையும், பணக்காரர்களையும் காக்கும் அரசு என்று பொய் ப்ரச்சாரம் செய்யப் படுகிறது அதற்கு ஆயிரக்கணக்கான பேர் கைதட்டல்கள்.  அதே சமயம் எது வெளிப்படையான ஆட்சி என்ற அடிப்படை கூடத் தெரியாமல் ராணுவ ரகசியங்கள் தங்களுக்குத் தெரியவில்லை என்று ஒரு பத்திரிகை எழுத்தாளர் (பராக்கா தத்) சொல்கிறார் அதற்கு படித்த பல இந்தியர்கள் கைதட்டுகிறார்கள்.  படிப்பு என்பது அறிவினை தூண்டும் என்று இனியொருவர் எம்மிடம் சொன்னால் இவர்களைப் போன்ற கருத்தழிந்தவர் கதையைத் தான் சொல்ல வேண்டிவரும்.

ஒரு தலைவர் நல்லவராக, வல்லவராக, பேர் உள்ளவராக, புகழுள்ளவராக இருப்பது என்பது மிக மிக முக்கியம். அதிலும் அவர் தூய்மையானவராக, தன்னலமில்லாதவராக இருப்பது அதைவிட முக்கியம்.  இப்படி எல்லா குணங்களையும் கொண்ட மோடி மீண்டும் இந்தியாவை ஆள வருவது இந்தியாவிற்கும் ஏன் எல்லா இந்தியர்களுக்கும் மிக மிக முக்கியம்.  அதே நேரம் எனக்கும் மோடி மீது சில குறைகள் உண்டு.  

மோடியின் குறைகள்:

  1. சோனியா குடும்பத்தை சுற்றி வளைத்து சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு  நான்கரை வருடங்கள் போதவில்லை எனில் எத்தனை வருடங்கள் தேவை என்பதை மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு தெளிவாக சொல்வது முக்கியம்
  2. பா சிதம்பரம் மற்றும் அவரது மகன், மனைவி அனைவருக்கும் வேண்டிய போது, வேண்டிய இடத்தில், வேண்டிய முன் ஜாமீன் எப்படி கிடைக்கிறது என்று தெரிந்து அந்த ஓட்டையை அடைக்க ஏன் இன்னும் தாமதம்?
  3. இந்தியாவில் இருந்து கொண்டு இந்தியாவின் பேச்சு சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டு பிரிவினை பேசும், சைமன், பாரதிராஜா, கமல், ஸ்டாலின், டேனியல், ராஹூல், மம்தா பானர்ஜி, அகிலேஷ், சந்திரபாபு, மாயாவதி, ஃபரூக் அப்துல்லா, மணிசங்கர், கபில் சிபல், குலாம் நபி ஆசாத், கேஜ்ரிவால், ராஜீவின் முன்னாள் கார் ட்ரைவர் மற்றும் இன்னாள் ம.பி. முதல்வர் கமல் நாத் மற்றும் பா.சிதம்பரம் போன்ற மற்றும் பலரின் பாதுகாப்புகளை உடனடியாக விலக்கி, ஏன் சிறையில் போடவில்லை அல்லது, அவர்கள் குடியுரிமையை ரத்து செய்து, இந்தியா மற்றும் வெளி நாடுகளில் அவர்களுக்கு இருக்கும் அசையும், அசையா சொத்துக்களை பறிமுதல் செய்து நமது இந்திய நாட்டை விட்டு தங்கள் குடும்பத்துடன் வெளியேற்றி விட ஏன் இவ்வளவு தாமதம்?
  4. பொய்க்கு மேல் பொய்யாக ஒவ்வொரு கூட்டத்திலும் உளரும் ராஹுல் மீது ஏன் மான நஷ்ட வழக்கு போட்டு அடக்காமல் இருக்கிறார்?
  5. செக்யூலர் என்பதற்கான அர்த்தம் கூடத் தெரியாமல், இந்து மதத்தை மட்டும் தாக்கும் ஏறக்குறைய எல்லா எதிர்கட்சி அரசியல் வாதிகளையும், ஏன் அடக்க முடியவில்லை?
  6. ஒரு வார்ட் கவுன்சிலர் கூட 10-15 கோடி சொத்து சேர்த்து இருக்கும் இன்னாளில், மூன்று  முறை குஜராத்தின் முதல்வர் பதவி, 5 வருடங்கள் இந்திய ப்ரதமர் பதவி வகித்து, மொத்த சொத்து மதிப்பு 3 கோடிக்கும் கீழ் இருக்கும் இவர் எப்படி ஒரு புத்திசாலி என்று நம்பி நாட்டை மீண்டும் ஒப்படைப்பது? 
இந்தியாவில் ஓட்டளிக்க வாய்பிருக்கும் அனைத்து மக்களும் சிந்தித்து பாஜாகவிற்கு வாக்கு அளித்து மோடியை மீண்டும் ப்ரதமராக அமர வைக்க வேண்டிய கடமை இருக்கிறது.  

இல்லை, நாங்கள் பிச்சை எடுப்பதுதான் எங்களுக்கு முக்கியம், அரசாங்க அலுவலகங்களில் ஜன்னலுக்கு ஜன்னல் கப்பம் கட்டி, தெரு நாயை விட கேவலமாக நடத்தப் படுவதுதான் முக்கியம், உலக அளவில் இந்தியா என்றால் ஒரு குப்பைத் தொட்டி ஊர் என்று கேவலமாக நடத்தப் படுவதுதான் முக்கியம், லஞ்சம் ஊழல் தலை விரித்தாடினால்தான் தங்களுக்கு முக்கியம் என்று இருந்தால் கேடு கெட்ட காங்கிரஸ் மற்றும் அதைச் சுற்றி நிற்கும் அனைத்து கொள்ளைக்கார, தரம் கெட்ட அரசியல்வாதிகளுக்கு தங்கள் பொன்னான வாக்குகளை அளித்து விடலாம் அல்லது சென்னை கூவம் அல்லது அவரவர் வீட்டின் அருகாமையிலோ தொலைவிலோ இருக்கும் ஒரு சாக்கடையில் விழுந்து உயிரை விடலாம் எல்லாம் ஒன்றுதான். 


புல்வாமா தாக்குதல்:
தகவல் தெரிந்த நாள், மிகப் பெரிய துக்க நாள்.  இதிலும் அரசியல் பார்க்கும் டேனியல், சைமன் போன்றவர்களை இன்னமும் ஏன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து, நல்ல முறையில் அவர்களுக்கு திஹாரிலோ அல்லது அந்தமானிலோ சிறையிட்டு ஒரு "நல்ல" பாடம் புகட்ட மத்திய/மாநில அரசுகள் முனையவில்லை என்று தெரியவில்லை.  ஒரு வேளை வர இருக்கும் மத்திய ஆட்சியின் தேர்தலா என்று தெரியவில்லை.  

இந்த செயலுக்கு காங்கிரஸ் மற்றும் காஷ்மீர் தீவிரவாதத்தினை அரவணைக்கும் கட்சிகள் சொல்வது, அந்தத் தற்கொலை தீவிரவாதி ஒரு முறை காஷ்மீரில் நமது ராணுவத்தால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப் பட்டதின் வெளிப்பாடுதான் இந்த தாக்குதல் என்று.  இப்படி கூறும் அனைவருடைய பாதுகாப்பையும் உடனடியாக நிறுத்திவிட வேண்டாமா?

ரிபப்ளிக் தொலைக்காட்சியில் அர்னாப் சொன்னது போல், சம்பவம் நடந்த உடன் இந்தியாவில் இருக்கும் இந்திய ஆட்சியின் எதிர்ப்பாளர்களின் அதே கருத்தை பாக்கிஸ்தானின் இம்ரான் கான் எப்படி வெளிப்படுத்துகிறார்.  ஒரே ஸ்க்ரிப்டா என்று அர்னாப் கேட்பது சரிதான் என்பது எமது கருத்தும்.

ப்ரதமர், இதற்கான பதிலை இந்திய ராணுவம் தரும் என்றும் அதை கட்டவிழ்த்து விட்டாகி விட்டது என்று சொன்னதும், இம்ரானின் நாராசமான அழுகையும் கெஞ்சலும்  நாடறிந்தது.

சில நாட்களுக்கும் முன்பு இந்தியன் ஏர் ஃபோர்ஸ் 10 விமானத்தில் எல்லை தாண்டி சென்று அவர்கள் நாட்டில் இருக்கும் தீவிரவாத முகாம்களை குண்டு வீசி அழித்த பிறகு அதை உலகில் எந்த ஒரு நாடும், ஏன் நம்மை என்றும் எதிர்க்கும் சீனா உட்பட எந்த நாடும் கண்டிக்கவில்லை, மாறாக சீனாவே பாக்கிஸ்தானை வாயை மூடிக்கொண்டிரும் என்று சொல்லி அடக்கி வைத்தது.    இப்படி, நம் நாட்டின் வெளியுறவு கொள்கைகளையும், மற்ற நாட்டோடு நமக்கு இருக்கும் நட்பையும் பலப்படுத்திய தன்னிகரில்லாத ஒரு தலைவனான மோடியால் மட்டுமே முடியும்.  இதெல்லாம் ஈனத்தனமான ஆட்சியைத் தந்த காங்கிரஸால் என்றும் சாத்தியமில்லை.  

எவ்வளவு சீக்கிரம் காங்கிரஸ் கட்சி மற்றும், மம்தா கட்சி, ஃபரூக் அப்துல்லா கட்சி, முஃப்டி முகமதுவின் கட்சி, திமுக, அகிலேஷ் மற்றும் முலயம் சிங்கின் கட்சி, லாலுவின் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, மாயாவதி கட்சி, கம்யூனிஸ்ட் (இடது வலது) அதோடு, நாம் தமிழர், மதிமுக, விசி, முஸ்லீம் லீக் போன்ற லெட்டர் பேட் கட்சிகள் ஒழிகிறதோ அன்றுதான் இந்தியா அடுத்த நிலைக்கு சென்று வல்லரசாக முடியும்.  

அபிநந்தன் :
சமீபத்தில் மிகப் பிரபலமான ஒருவர்.  இந்தியன் ஏர் ஃபோர்ஸில் விங் கமாண்டராக இருப்பவர்.  போனவார பாகிஸ்தானின் எஃப் 16 வகை ஜெட் இந்தியாவில் ஊடுருவ முயன்ற போது அதை தொடர்ந்து சென்று தாக்கி, நொறுக்கி, அதன் பின் இவர் சென்ற அரத பழைய மிக் விமானம் பழுதடைந்து பாரசூட் மூலம் குதித்து பாகிஸ்தானின் பிடியில் இருக்கும் இடத்தில் இறங்கி, அவர்களால் போர்க் கைதியாக கைது சாட்டப் பட்டு இந்த பதிவு வரும் இந்த நேரம், இந்தியா வந்து சேர்ந்திருக்கிறார்.  

இவர் பாகிஸ்தானில் தரை இறங்கிய பிறகு அங்குள்ள பலரால் கடுமையாக தாக்கப் பட்டிருக்கிறார்.  பிறகு அதிர்ஷ்டவசமாக அவர்களின் இராணுவத்தால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்.  பிறகு இந்தியா கொடுத்த அழுத்தத்தால், இம்ரான் கான் இவரை விடுதலை செய்திருக்கிறார்.  உடன் இந்தியாவில் இருக்கும், பிணம் தின்னி பத்திரிகைகளும், நடு நிலை பேசி நாசமாக போகும் பலரும், இம்ரான் கானிடமிருந்து மோடி கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இம்ரான் கான் உலக அமைதிக்காக பாடுபடும் ஒரு பெரியவர் போன்றும் பேசி அதையும் அந்த நாட்டு மக்குகள் நம்பி அவருக்கு சமாதானத்துக்கு நோபல் பரிசு கொடுக்கப் படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.  இந்த கூத்தில் பாகிஸ்தான்காரர்கள் அப்படித்தான் பேசுவார்கள், பேச வேண்டும் அதுதான் அவர்கள் நிலை.  இதில் இப்படி பேசும், இந்தியர்களை நடு ரோட்டில் வைத்து தமிழ்நாட்டில்  அண்ணா சொன்னது போல் முச்சந்தியில் வைத்து சவுக்கால் விலாசினால் என்ன?

ஜெனிவா உடன்படிக்கைக்காக அபிநந்தனை விடுதலை செய்து, புல்வாமாவில் செய்த கொடுஞ்செயலையும் அதைத் தொடர்ந்து இன்று வரை நடந்துள்ள 4 தாக்குதலில் ஏறக்குறைய 10 இந்திய இராணுவ வீரர்கள் மற்றும் சில பொது மக்கள் கொல்லப் பட்டதையும் , ஒரு பக்கம் பேச்சு வார்த்தை என்று சொல்லியபடி நேற்றும் ஒரு தாக்குதல் நடத்திய பாக்கிஸ்தானின் செயல்களை நம் நாட்டிலிருந்து செயல்படும் பத்திரிகைகள் மூலம் மறக்கடித்த இம்ரானின் செயலைக் கண்டிப்பதா, நம் நாட்டில் இருந்து கொன்டு,  கேடு கெட்ட பத்திரிகை தர்மம் என்ற பெயரில் இப்படி கேவலமாக செயல்படும் பத்திரிகைகளை சாடுவதா?

Spam Email:
ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் செயற்குழு மற்றும் அதன் நோக்கம் பற்றி சற்றும் தெரியாத அல்லது தெரிந்து கொள்ள விழையாத ஒருவரிடமிருந்து எனக்கு வந்த ஒரு ஈ-மெயில் அதை பொத்தாம் பொதுவாக ஸ்பாம் ஈ-மெயில் என்று சொல்லக்கூடாது.  அதையும் விட கீழ்த்தரமாகத் திட்ட வேண்டும்.  தமிழ் சங்கத்தின் சார்பாக எனது ஈ-மெயில் எப்படி இந்த கையாலாகத ஒருவனிடம் கிட்டியது என்பது தெரியவில்லை.  ரிச்மண்டில் இன்னமும் என்னுடன் தொடர்பில் இருக்கும் நண்பர்கள் பலரிடம் விசாரித்த போது, அவர்களுக்கு இந்த ஈ-மெயில் வரவில்லை என்பது எனக்கு பல சந்தேகங்களை எழுப்புகிறது.  என் மற்றொரு ரிச்மண்ட்  நண்பனிடம் இன்று காலை (2/3/19) உரையாடியபோது அவனுக்கும் இந்த ஈ-மெயில் வந்திருப்பதாகவும், என்ன செய்யலாம் என்று தற்போதைய தலைவரிடம் கேட்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்தான். ஆக, இது ஒரு உள்வேலையாகக் கூட இருக்கலாம், எப்படி இருந்தாலும், தமிழ் சங்கத்தின் தற்போதைய குழு இதற்கான இறுதி முடிவை எடுக்கட்டும் என்று சற்று பொறுமையாக இருப்போம் என்கிறான் என் நண்பன்.  

1. நாம் ரிச்மண்டை விட்டு வெளியேறிய பிறகு தமிழ் சங்கத்தின் உறுப்பினர் இல்லை
2. ஆனால் இன்னமும் சங்கத்தின் உறுப்பினராக இருப்பவர்களுக்கு வராத இந்த ஈ-மெயில் எமக்கு வந்தது எப்படி?
3. இந்த ஈ-மெயில்கள் எப்படி இந்த ஆள் கையில் கிட்டியது.

இந்த விடை தெரியா கேள்விகளை சில நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதிப்போம்.


திரைப்படங்கள்:
2.0:
சங்கர், ரஜனி, அக்‌ஷய் குமார், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஒரு வழியாக 2.0 வெளிவந்தே விட்டது.  அதுவும் 3D-யில்.  அக்‌ஷய் குமார் வில்லன் ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காக சமுதாயத்தில் புரையோடிப் போன சில விஷமிகளைக் களையெடுக்கும் ஒரு நல்ல வில்லன்.  அவரை எதிர்க்கும் நல்ல ரஜனி மற்றும் சிட்டி ரஜனி.  ரஜனி தன் நடிப்பு வித்தைகளையெல்லாம் இறக்கியிருக்கும் படம் இது.  சங்கர் என்ற ஒரு மெகா மெகா இயக்குனர் தன் திறமை ஹாலிவுட்டின் திறமைகளையெல்லாம் தாண்டியது என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கும் ஒரு படம்.  கண்டிப்பாக 3D-யில் பார்க்க வேண்டிய படம்.

பேட்ட:
இன்னமும் ரஜனிக்கு என்று ஒரு பழைய கூட்டம் உண்டு என்பதை மனதில் வைத்து எடுக்கப் பட்ட படம்.  ரஜனி படம் முழுக்க வருகிறார், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போல ஏறக்குறைய ஒவ்வொரு ஃப்ரேமிலும் வருகிறார்.  படத்தை தனி ஒருவனாக தன் தோள் மேல் சுமந்து எடுத்துச் செல்கிறார்.  கதை - வழக்கம் போல ஈரத்துணியில் முக்கியெடுத்ததுதான். கண்டிப்பாக ஒரு முறை ரஜனிக்காகப் பார்க்கலாம்.

சர்கார்:
வெளி நாட்டில் பணத்தில் கொழிக்கும் விஜய் சென்னையில் ஒரு தேர்தலில் வாக்களிக்க வர, அவரது ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டாக போட்டு விட்டு போய் விட, இவர் அந்த விஷயத்தை பெரிதாக்கி, அரசியல் கட்சிகளும் பெரிதாக்கி, பின்னர் இவரே தேர்தலில் போட்டியிட இப்படி இழுத்திருக்கிறார்கள்.  ஓட்டுப்போட இவர் வரும் அதே ஓட்டுச் சாவடியில் இவரை நன்றாகத் தெரிந்த இவரது குடும்பத்தில் ஒருவரான கதாநாயகி பூத் அசிஸ்டெண்டாக இருக்கிறார் அவருக்குத் தெரியாதா கள்ள ஓட்டு போட ஒருவன் வரும்போது அது தன்னுடைய குடும்பத்தினரின் ஓட்டு என்று, என்னமோ போங்கப்பா எப்படி ரீல் சுத்தினாலும் படம் பார்க்க என்னைப் போல பலர் இருக்கும் வரை இவர்கள் காட்டில் மழைதான்.

விஸ்வாசம்
பேட்ட படத்துடன் மோதி அதைவிட அதிக லாபம் சம்பாதித்ததாகச் சொல்லபடுகிறது. கதைக் கரு வித்யாசமாக இருப்பதாக நினைத்து எடுக்கப் பட்டிருக்கிறது.  அஜித் மற்றும் நயனதாரா வழக்கம் போல நன்கு நடித்து எடுக்கப் பட்டிருக்கிறது.  ஒரு முறை பார்க்கலாம்.

மாரி 2:
வழக்கம் போல் தனுஷ் அநாயாசமாக நடித்து ரோபோ சங்கர் மற்றும் 'இடிதாங்கி' கல்லூரி வினோத்துடன் நடித்திருக்கும் படம்.  கதையை தேர்வு செய்ததில் காட்டிய முனைப்பு கதாநாயகியின் தேர்வில் சொதப்பியிருக்கிறது.  சாய்பல்லவிக்கு நடிப்பு நன்கு வருகிறது ஆனால் அவருடைய பாடி லாங்வேஜ் அவருடைய கதாபாத்திரத்திற்கு சற்றும் ஒத்து வரவில்லை.  எப்போதும் சிரித்தபடி பேசுவது அவருடைய மேனரிசமா இல்லை கதைக்காக இப்படி நடிக்க வைக்கப் பட்டாரா என்பது தெரியவில்லை, சகிக்கவில்லை.  இந்த கதாபாத்திரத்தை ஐஸ்வர்யா ராஜேஷ், அமலா பால் போன்றவர்கள் அருமையாக செய்திருப்பார்கள்.  வில்லன் மலையாள இறக்குமதி நல்ல ஓர் எதிர்காலம் இவருக்கு இருக்கிறது.  கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரலாம்……