நேரம்

Sunday, July 08, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 13

நிரபராதிகள்

இந்தியாவின் தாஜ் மஹால் சமீபத்திய 7 உலக அதிசயங்கள் கருத்து கணிப்பில் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

புதிய உலக அதிசயங்களை தேர்ந்தெடுக்க கடை பிடிக்கப் பட்ட வழிமுறைகளின் அபத்தங்களைப் பற்றி நான் விமர்சிக்கப் போவதில்லை, மாறாக சமீபத்தில் வெளிவந்த ஒரு சில செய்திகளைப் பற்றி சொல்லலாம் என நினைக்கிறேன்.

செய்தி 1:
உத்திரப் பிரதேச முதல்வர் மாயாவதி மீது பதிவாக இருந்த வழக்கு முதல் தகவல் அறிக்கையுடன் சேர்ந்து மாயமாக மறைந்து விட்டது. அதை மாயமாக மறைத்தவர் அம்மாநில ஆளுனர் திரு. ராஜேஸ்வர்.

யமுனை நதியின் போக்கைத் திருப்பி விட்டு, தாஜ்மஹாலுக்கு அருகில், கேளிக்கை, வர்த்தகம் நடைபெற ஒரு வணிக வளாகம் கட்டப்பட வேண்டும் என்று தனது முந்தைய ஆட்சியில் மாயாவதி முனைந்துள்ளார், இத்திட்டம் தாஜ்மஹாலுக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்ற ஆட்சேபம் எழுந்ததால் குற்றச்சாட்டு பதிவானது.

ஸி.பி.ஐ இதற்குப் போதிய ஆதாரம் இல்லை என்று தற்போதைய மத்திய அரசு வந்தவுடன் தெரிவித்தது. மத்திய விஜிலென்ஸ் கமிஷன் வழக்கு நடத்த போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று கூறியதும், உச்சநீதி மன்றம் இதை விசாரிக்க வேண்டும் என்று ஸி.பி.ஐ க்கு உத்தரவிட்டது. அதன்பிறகு ஸி.பி.ஐ விசாரணை நடத்தி அவர் மீது வழக்கு பதிவு செய்ய அம்மாநில ஆளுனரின் உத்தரவை நாடியது. அவர் அப்படி வழக்கு தொடுக்க எந்த ஆதாரமும் இல்லாததால் வழக்கிற்கு அனுமதி மறுக்கப் படுகிறது என்று சொல்லி முடித்துவிட்டார்.

செய்தி 2:
பீகார் மாநில முன்னாள் முதல்வர்கள் லாலு ப்ரசாத் யாதவ் மீதும் அவருடைய மனைவி ராப்ரி தேவி மீதும் அளவுக்கு மீறி சொத்து குவித்ததாக கருதப்பட்ட வழக்கில் இருவரும் நிரபராதிகள் என்று விடுவிக்கப் பட்டுள்ளனர்.

இந்தத் தீர்ப்பு மிக நியாயமான தீர்ப்பு என்று இருவரும் கருத்துத் தெரிவித்தனர்.

இவைகளை கேட்டவுடன் எனக்கு நினைவிற்கு வந்தது சுமார் ஒரு 20 வருடங்களுக்கு முன்பு ஆ.விகடனில் வந்த ஒரு ஜோக்:

ஜட்ஜ்: முனுசாமி, வாதியின் பண்ணைக்குள் இரவில் நுழைந்து ஆடுகளைத் திருடியதாக உன் மீது சாட்டப் பட்ட குற்றங்களுக்கு போதிய ஆதாரம் இல்லாததால், நீ நிரபராதி என்று தீர்ப்பளித்து உன்னை விடுதலை செய்கிறேன்.

முனுசாமி: ரொம்ப நன்றிங்க அய்யா, அப்ப அந்த ஆடுகளை நானே வெச்சுக்கலாமா?

இதற்கும் மேலே சொன்ன செய்திகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

திருவாளர் - திருமதி:
சனிக்கிழமை தோறும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் துர்பாக்யம் அடிக்கடி ஏற்படும். எப்போதும் இந்நிகழ்ச்சி முடியும் தருவாயில்தான் பார்க்க நேரிடும், இதைப் பற்றி எழுத வேண்டும் என்று பல முறை நினைத்திருந்தேன் கை கூடவில்லை.

அடிப்படையில் இம்மாதிரி நிகழ்ச்சிகளுக்கு எப்படி பங்கேற்க வருகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. பணமா, சமூகத்தில்/சமுதாயத்தில் இதனால் ஏதும் வித்தியாசமான அங்கீகாரம் கிடைக்கிறதா, அல்லது வேறு ஏதாவதா?

புதிதான மணமக்கள் சரி, மத்திய வயதைக் கடந்தவர்களும், முதியவர்களும் கூட இந்த நிகழ்ச்சியில் எப்படி பங்கு பெற வருகிறார்கள்? முதல் சுற்றில் திரைப்படப் பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள். சகிக்கவில்லை. எல்லோருக்கும் விளக்கெண்ணைய் குடித்தது போன்ற ஒரு முக பாவம், தாங்கவில்லை, வழியில் அசிங்கத்தை மிதித்து விட்டு ஒரு குழந்தை தடுமாறி நடப்பது போன்ற நடனம், கபடி ஆடுவது போல இருவரும் சுற்றி சுற்றி வந்து ஆடுகின்றனர். அடுத்த சுற்றில், கொடுக்கப் படும் ஒரு சந்தர்ப்பத்திற்குத் தேவையான வகையில் நடிக்க வேண்டும், கணவன் மனைவியாகவும், மனைவி கணவனாகவும் மாறி நடிக்க வேண்டும், கஷ்டம்டா சாமி.

2-3 வாரங்களுக்கு முன்பு ஒரு முதிய தம்பதியினர் கலந்து கொண்டு முதல் பரிசையும் வென்றார்கள். அவர்கள் சொன்ன ஒரு தகவல், எதற்கும் வயது ஒரு தடையில்லை. எதற்காகவும் கலங்கி நிற்காதீர்கள், எதற்காகவும் வருந்தாதீர்காள் என்பது. அதெல்லாம் சரிதான், ஆனால், 65 - 70 வயது தம்பதியினரை இப்படி நாட்டியம் ஆட வைத்து நமக்கு ஆலொசனை தரச் சொல்லுவதை விட அவர்களை வெறும பேட்டி கண்டு நமக்குத் தெரிவித்திருக்கலாம்.

தமிழ் விழா 2007
இந்த பதிவு உருவாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வட அமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை நடத்தும் தமிழ் விழா 2007 வட கரோலினா மாநிலத்தில் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த விழாவில் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை. நமது நகரத்திலிருந்து சிலர் சென்றிருப்பதாக தலைவர் நாகு தெரிவித்தார். அப்படி நேரில் சென்று பார்த்தவர்கள் அவர்களது அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ள முடிந்தால் நம் அனைவருக்கும் ஒரு விருந்தாக இருக்கும்.

இடைத்தேர்தல் முடிவுகள்
மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. காங்கிரஸ், ஆளும் கட்சியின் ஆதரவுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. விஜயகாந்தின் தேமுதிக 3-வது இடத்தில் வந்திருக்கிறது. அவரை தி.முகவும், அதிமுகவும் சற்று ஜாக்ரதையாக அணுகுவது நல்லது. அவரது வேட்பாளரால், 21000 வாக்குகள் பெற முடிந்திருக்கிறது. அது அதிமுக வை விட 9ஆயிரம்தான் குறைவு. இந்த வெற்றி அழகிரியின் வெற்றி என்று அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்த வெற்றிக்கு திமுக உதவியிருந்தாலும், வெற்றி பெற்றது காங்கிரஸ் தான் என்று சொல்லி விவாதத்தை சூடாக்கியிருக்கிறார். அதே சமயம் பாமாக தலைவர் ராமதாஸ் திமுகவுடனான உறவு தேர்தல் உறவுதான் அது முடிந்து விட்டது என்று நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டார். இது எங்கு போய் முடியுமோ, சொந்தத் தொலைக்காட்சி இன்னமும் வராத இந்த கால கட்டத்தில், குடும்ப தொலைக்காட்சியுடன் சண்டை ஓயாத நேரத்தில், ஆட்சி கவிழ்ந்தால், மத்தியில் செல்வாக்கு சரிந்தால், என்னன்ன நடக்குமோ. அடுத்த டமாஸ் காட்சி வரப்போகுதா?
தமிழ்த் திரைப்படம்
நான் அவன் இல்லை

ஜெமினி கணேசனின் நடிப்பில் ஒரு மைல் கல்லாக இருந்த இந்தப் படத்தை மறுபடி தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள்.

முதலில் ஒரு படம் வெளியாகும் கால கட்டத்தைப் பொறுத்தே அதை ரசிக்க முடியும். இன்றைய நவீன கால கட்டத்தில் ஒரு கூட்டமே ஏமாறுவதாக காட்டியிருப்பதும், அதையும் தாண்டி ஒரு தொழில் துறை வல்லுனராக வரும் நமீதா (இதை நம்ப வேண்டியிருப்பது நமது தலையெழுத்து) கதாநாயகன் ஜீவனிடம் ஏமாந்த பிறகும் ஜீவன் இவரை மனதார காதலித்தார் என்று நம்பி பித்துக்குளித்தனமாக இருப்பதும் பார்த்தால், தலையில் அடிச்சுக்க ரெண்டு கை பத்தாது.

ஜெமினியின் நடிப்பு, சற்றும் மிகையில்லாதது, அது ஒரு தெளிந்த ஒடையைப் போல இருக்கும், ஜீவன் பாவம் தலையை ஒரு பக்கம் சாய்த்த மாதிரி இருப்பதுதான் நடிப்பு என்று தெரிந்து வைத்திருக்கிறார். ஒரு பக்கத் தோள்பட்டையை தூக்கி மறு பக்கத்தை சாய்த்து நடப்பது அவருடைய ஸ்டைல் போல, படம் முழுவதும் அப்படியே வருகிறார். ஜெமினியின் அப்பாவித்தனம் அவருடைய மிக பெரிய வெற்றி, ஜீவனின் நடை, பாவனை, வசன உச்சரிப்பு, எல்லாம் அவர்தான் குற்றவாளி என்பதை படம் ஆரம்பித்த உடன் தெரிவித்து விடுகிறது.

ஒரு போலீஸ் அதிகாரி அவரை கைது செய்யும் சமயம், அவரிடம், நீ 5 பெண்களை ஏமாற்றியிருக்கிறாய் என்றதும், நாமாக இருந்தால், நான் அப்படி செய்யவில்லை என்று சொல்லியிருப்போம், ஜீவன், 'நான் அவன் இல்லை' என்று டைலாக் அடிக்கிறார். அப்படியே படம் முழுக்க பேசியபடி தப்பிக்க முயற்சி செய்கிறாராம். அட போங்கப்பா என்ற ஆயாசம்தான் வருகிறது. பாடல்களில் 'ஏன் எனக்கு மயக்கம்' மட்டும் சுமார் ரகம், மற்ற பாடல் காட்சிகள் யாருமே பார்க்க முடியாத அளவு ஆபாசம் கொட்டி கிடக்கிறது. இதை நிஜமாகவே தணிக்கை செய்துதான் வெளியிட்டார்களா என்ற கேள்வி கண்டிப்பாக தோன்றுகிறது. இந்தப் படத்தை பார்காமல் விட்டாலும் ஒன்றும் நஷ்டமில்லை.


-- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

Wednesday, July 04, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 12

இன்னொரு புதிய கட்சி
நாட்டு மக்களுக்கு ஒரு தண்ட செய்தி. நடிகர் சரத்குமார் சொந்த கட்சி ஆரம்பிக்கிறார். இந்த கட்சி சாதி மத பேதமின்றி இருக்கும் என்றும் நாளைய தமிழகம் வளம் பெறவும், இளைஞர் சமுதாயம் வளம் பெற என் உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று சொல்லி அவர் சார்ந்திருக்கும் சமூகத்தின் ஓட்டை நம்பி ஒரு கட்சியை ஆரம்பிக்கிறார். இவர் விஜயகாந்த் போல இல்லாமல், உயிரை கொடுப்பேன் என்று மிரட்டி கட்சியை ஆரம்பிக்கிறார். எந்த அரசியல்வாதியும் எந்த பொது நலத்திற்காக உயிரைக் கொடுத்ததாக சரித்திரம் இல்லை. தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை நிருபிப்பாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். ஆனால் இவருடைய வசனத்தைக் கேட்டு விட்டு எனக்கு 1960-65 களில் "இருப்பது ஒரு முறை சாவது ஒரு முறை, அது தமிழுக்காக செல்லட்டும்", "ரூபாய்க்கு மூனு படி அரிசி தருவோம், இல்லை எங்களை முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடியுங்கள்", "எங்கள் உடம்பில் கடைசி சொட்டு குருதியிருக்கும் வரையில் தனித் தமிழ்நாட்டிற்காக போராடுவோம்" என்ற பழைய வசனங்கள் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாடாதீர்கள்.

குடியரசுத் தலை(வி)வர்.
இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவர்/தலைவி தேர்தல் களை கட்டியிருக்கிறது. முதன் முறையாக ஒரு பெண்மணி தேர்ந்தெடுக்கப் படும் சந்தர்ப்பம் வந்திருக்கிறது. ப்ரதீபா பாடில் என்ற முன்னால் மஹாராஷ்டிர அமைச்சர், தனது தற்போதைய ராஜஸ்தானின் ஆளுனர் பதவியை ராஜினாமா செய்து விட்டு களம் இறங்கியிருக்கிறார். துக்ளக்கில் 'சோ' இது ஒரு தமாஷ் என்று சாடியிருக்கிறார். அதையும் தாண்டி இவரை பீஹாரின் முன்னால் முதல்வர் ராப்ரி தேவியோடு ஒப்பு நோக்கியிருக்கிறார். இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதால், இவர் போட்டியிலிருந்து தானே விலகிக் கொள்ள வேண்டும் என்று, தன் மீது நீதி மன்றத்தில் பல ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் செல்வி ஜெயலலிதா கேட்டிருக்கிறார். இவர் ஒருவர் இந்தியாவின் மிக உயர்ந்த பதவிக்கு வந்துவிட்டால், பெண் சுதந்திரம் பாதுகாக்கப் படும், பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டின் முதல் கல் நகர்த்தப்பட்டு விட்டதாகி விடும் என்று தமிழக முதல்வர் திருவாய் மலர்ந்திருக்கிறார். அவருடைய கூட்டணியில் இருக்கும் பா.மா.க தலைவர் இந்த பதவி வெறும் ரப்பர் ஸ்டாம்ப் பதவி இதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவையில்லை என்று சாடி இருக்கிறார். இதில்

பதவி மிக உயர்ந்த பதவி, அதன் வேட்பாளராக இவர் அறிவிக்கப் படுவதற்கு இவருடைய சாதனைகள் என்ன என்பது இதுவரை தெளிவாக்கப் படவில்லை. இவர் முன்னால் அமைச்சராக இருந்தவர் என்பதுதான் என்றால், இவரை விட மேம்பட்ட முன்னாள்/இன்னாள் அமைச்சர்கள் பலர் இந்தியாவில் உண்டு, இவரை விட தற்போதைய குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் பன்மடங்கு தகுதியானவர் என்பது என் எண்ணம். என்ன செய்வது அவருக்கு அரசியல் தெரியவில்லை. கேள்விகள் வேறு கேட்கிறார். ராமதாஸ் சொன்ன மாதிரி ஒரு ரப்பர் ஸ்டாம்பாக இருக்க முடியவில்லை. 'சோ' சொன்ன மாதிரி ஒரு டமாஸ் நாடகம் அரங்கேற்றம் ஆகப் போகிறது.



யார் இந்த பித்தன்

கொஞ்ச நாட்களாக வெளிகாட்டாமல் இருந்த இந்த கேள்வி மீண்டும் தலை தூக்கியிருப்பதாக தலைவர் நாகு போன வாரம் தெரிவித்தார். எனது முதல் கிறுக்கல் 10/2006-ல் வந்த போது பலரும் கேட்டதாக நாகு வலைதளத்தில்
நகைச்சுவையாக குறிப்பிட்டார். எனது முதல் பதிவில் எழுதியதைத்தான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். எனது எழுத்துக்கள் மூலம் என்னை எடை போட முயல்வது ஒரு கால விரயம். பாவம் நல்லா எழதரவங்களையெல்லாம் இவர்தான் பித்தன்-கர பேர்ல எழுதரார்னு சொல்லி அவங்க எழுதர ஆர்வத்தை உடைச்சிடாதீங்க.

எனக்கு நல்லா தெரிஞ்ச ஒன்னு வலையில வர்ர செய்திகளைப் படிச்சுட்டு விமர்சனம் பண்றது. விமர்சனம் பண்றதுக்கு எனக்கு எந்த பயமும் இல்லை, காரணம் நான் சொல்ற பலதும் உங்களுக்கும் ஏற்புடைய கருத்துக்கள்தான் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் சபை மரியாதை கருதி உங்கள் கோபங்களை வெளியில சொல்றது இல்லை, நான் சொல்றேன். தமிழ் சங்கத்தின் வலை தளத்தில் எழுதும் பலரும் எனது நல்ல நண்பர்கள். அவங்கள்ளாம் அடச் சீ போயும் போயும் இவன் மாதிரி நாம எழுதறோம்ன்னு சொல்லிட்டாங்களேன்னு அவங்கள கோபப்பட வெச்சுடாதீங்க.

நாகு என் பங்கிற்கு ஒரு கேள்வி: பரதேசி, சண், சதங்கா, அஜாதசத்ரு, பட்டாம்பூச்சி, நீர்வைமகள், தருமி, எதிரொலி என்ற பெயர்களில் எழுதுவது யார்?

தமிழ்த் திரைப்படங்கள்

உயிர்:
சமீபத்தில் இந்தத் திரைப்படத்தை பார்க்க வேண்டிய கஷ்டம் வந்தது. ஸ்ரீகாந்த் எனக்கு ரொம்ப பிடித்த நடிகர், இவரைப் போல இன்னொரு நடிகர் தமிழ்த் திரை உலகத்திற்கு வருவது ரொம்ப கஷ்டம். டைலாக் டெலிவரியாக் இருந்தாலும் சரி, நடனம், முக பாவங்கள் இவையெல்லாம் இவரிடம் இருப்பது போல யாரிடமும் இல்லை. இவருடைய முதல் படமான ரோஜாக்கூட்டத்தில் எப்படி கேணத்தனமாக 2002-ல் வந்தாரோ, அப்படியே 5 வருடங்கள் கடந்த பிறகும் இருக்கிறார். நடிப்பு என்றால் அது வெறும வந்து போவது என்று எந்த மகானுபாவன் இவருக்கு சொல்லி கொடுத்தாரோ தெரியவில்லை, அதை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு படத்துக்கு படம் வந்து போய் கொண்டிருக்கிறார். இவருடைய படங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு
"உங்களுக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் விழுந்திருக்கிறது, உங்களுக்கு புற்றுநோய் என்று கண்டுபிடுத்திருக்கிறோம், உங்கள் உறவினருக்கு சாலை விபத்தில் பலத்த காயம், உங்களை வேலையில் இருந்து நீக்குகிறோம், உங்களை வெளிநாட்டிற்கு வேலை நிமத்தமாக அனுப்புகிறோம் என்ற பல விஷங்களுக்கு ஒரே விதமான முகபாவத்தைக் காட்டக்கூடிய அதி அற்புதமான நடிகர்கள் தமிழ்நாட்டில் பெருகிவிட்டார்கள்" என்று அமரர் கல்கி சுமார் ஒரு 40 வருடங்களுக்கு முன் எழுதியது நினைவுக்கு வருகின்றன. அப்படி பட்ட நடிகர்களின் தலைவர் இந்த ஸ்ரீகாந்த்.

கதை தனது கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணி. அண்ணன் சாவிற்கு காரணமாக இருக்கிறார், தன் குழந்தை மீது கொதிக்கும் பாலை ஊற்றுகிறார், இதற்கெல்லாம் அவர் கொடுக்கும் காரணம், நான் இறந்து போயிருந்தால், என் தங்கையை உன் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்து இருப்பீர்களே, அது போலத்தான் இது என்று சட்டம் பேசுகிறார். இதை இயக்கிய சாமியை ரோட்டில் போட்டு மிதிக்க வேண்டும் என்று வைகைப் புயல் வடிவேலு தாக்கியிருந்தார். ஒரு ப்ரபலமான நடிகர் இப்படி பேசுகிறாரே என்று யோசித்தேன், அவர் சொன்னது தவறு என்று இப்போது தெரிந்து விட்டது. அந்த இயக்குனரை, இப்படி சில திராபை படங்களை எடுக்க விட்டால் தானே மார்கேட்டை இழந்து ரோட்டோர டீக்கடையில் வேலை செய்ய போய் விடுவார்.


சென்னை 600028
இந்தத் திரைப்படம் எஸ்.பி.பி யால் தயாரிக்கப் பட்டு, கங்கை அமரனின் மகன் வெங்கட் ப்ரபுவால் எழுதி, இயக்கப்பட்ட ஒரு லோ பட்ஜெட் படம். கதை இரு அணிகளிடையே நடக்கும், நடக்க இருக்கும் நள்ளிரவு ஒளி வெள்ள கிரிகெட் பந்தயங்கள் பற்றியது. அதில் ஒரு அணியினர் பெயர் ஷார்க்ஸ் (சுறா), இன்னொரு அணியினர் ராக்கர்ஸ். வெறும் பொழுது போக்கிற்காக வந்துள்ள படம், பாடல்களில் வாழ்கையை யோசிங்கடா மட்டும் தேறுகிறது மற்றவை மனதில் நிற்கவில்லை. ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.

ஆங்கிலத்திரைப் படங்கள்
Oceans 13

படத்தில் பலர் இருந்தாலும், மனதில் நிற்பது Brad Pitt, George Clooneyயும்தான், சிறந்த நடிகர் Al Pacinoவும் இந்தப் படத்தில் இருக்கிறார் என்ற அளவில் வந்து போகிறார். எது நடைமுறையில் சாத்தியம் இல்லையோ, அதை எல்லாம் செய்து Al Pacinoவின் சூதாட்டக் விடுதியை சூறையாடுகிறார்கள். அதைச் செய்ய அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அதன் விவரங்கள் என முன் பாதி வரை நேரம் செலவிடுகிறார்கள், பின் பாதியில் அதை முடித்து விடுகிறார்கள். திரையரங்கில் பார்க்கத் தவறினாலும், குறுந்தகட்டில் வரும்போது பார்த்தாலும் போதும்.

Live Free or Die Hard
எனக்கு மிகவும் பிடித்த, (நமது நடிகர் ஸ்ரீகாந்த் போல இல்லாமல், நிஜமாகவே) ஹாலிவுட் நடிகர்களில் ஒருவர் Bruce Willis மீண்டும் ஒரு முறை காவல்துறை துப்பறிவாளர் John Mclaine ஆக வந்து கலக்கியிருக்கும் படம். இப்படியெல்லாம் நடக்குமா, இவர்கள் சொல்வது போல நடந்து விட்டால் நம் கதி என்ன என்று யோசிக்காமல், லாஜிக் என்ற ஒன்றை தூக்கி வீட்டில் போட்டு விட்டு வெறும் சண்டை, அதிரடி, க்ராஃபிக்ஸ் என்று பார்க்க வேண்டிய படம் இது. தமிழ்த் திரைப் படங்களில் கதாநாயகன் 20-30 பேரை பறந்து பறந்து சண்டை போடுவது சுத்த பம்மாத்து என்று எகிறும் பலர், இந்த படத்தைப் பார்ப்பது முக்கியம். இதில் Bruce F-23 ரக நவீன சண்டை விமானத்தின் குண்டு மழையில் இருந்து தப்பி, பாலத்தின் மேலிருந்து விழுந்து சின்ன சிறாய்ப்புடன் எழுந்து வில்லனைப் பந்தாடுகிறார். அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் (அதாவது நாம் இருக்கும் இந்தப் பகுதியில்) உள்ள அனைத்து செல் போன்கள் மற்றும், சாதா போன்களின் இணைப்பைத் துண்டித்து விடுகிறார் வில்லன், அத்தோடு மின் இணைப்பும் கிடையாது, ஆனால் அவர் கணிணியைத் தட்டினால் ஒரே ஒரு அலுவலகத்தில் ஒரே ஒரு மின் தூக்கியில் மட்டும் மின் இணைப்பு கிடைக்கும், அவர் தெருவில் ஒரு வேனில் சென்றால் அவருக்கு மட்டும் இணைய தளம் வேலை செய்யும், அவர் யாரோடும் பேச முடியும், யாருக்கும் எந்த கட்டளையும் இட முடியும், அட போங்கப்பா, எனக்கு என் வீட்டிலிருந்து வெளியே 'டெக்'-குக்கு வந்தாலே போதும் இணைய தளம் 'ஹெ ஹெ' எனச் சிரித்து வழிகிறது.


-- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.