நேரம்

Thursday, August 30, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 14

இந்தியாவின் 60 வது சுதந்திர தினம்

60 வருடங்கள் ஓடி விட்டது இந்தியா சுதந்திரம் அடைந்து. இந்த நாளை பலர் குறிப்பிட்டு எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வாழ்த்தியிருந்தார்கள். இப்படி வாழ்த்துக்கள் வருவது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் இதைக் கொண்டாடும் அளவிற்கு சாதித்து இருக்கிறோமா என்ற கேள்வி என் மனதை பல வருடங்களாக குடைந்து கொண்டே இருந்தது அதை இன்று வெளிப்படுத்தி விடலாம் என்று இருக்கிறேன். உங்களுக்காவது விடை தெரிந்தால் சொல்லுங்கள்.


சுதந்திரம் கிடைத்து 60 வருடங்களில்
- குடி தண்ணீருக்கு காத்திருக்கும் வரிசை குறையவில்லை
- நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை குறையவில்லை.
- அரசியல்வாதிகள் செய்யும் அட்டகாசங்கள் குறையவில்லை
- அரசியல் குற்றங்கள் குறையவில்லை
- ஜாதிக் கலவரங்கள் குறையவில்லை
- அடுத்த மாநிலத்திடம் குடிதண்ணீருக்கு கையேந்தும் நிலை மாறவில்லை
- தமிழ்நாட்டில் தைரியமாக தேசிய மொழி பயில முடியவில்லை.
- மற்ற மாநிலத்தில் தமிழர்கள் கூலி வேலையும், அதுவும் கிடைக்காதவர்கள் சிக்னலுக்கு சிக்னல் பிச்சையெடுக்கும் நிலையும் மாறவில்லை.
- போலிச் சாமியார்களை நம்பி சொத்தை இழக்கும் படித்த முட்டாள்களின் எண்ணிக்கை குறையவில்லை
- தேர்தலுக்குத் தேர்தல் தரங்கெட்டவர்களை தேர்ந்தெடுத்து விட்டு அதைப் பற்றி விரக்தியாக பேசும் பொது மக்களின் மன நிலை மாறவில்லை.
- குற்றப் பின்னனி இருப்பவர்கள் அரசியலில் ஈடுபடுவது கடினம் என்ற நிலை 60 வருடங்களில் மாறி, இன்று இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவியையும் பெறும் நிலை வந்திருக்கிறது.
- அண்டை நாடுகள் இந்தியாவில் தீவிரவாதிகளை அனுப்பி வைக்கும் நிலையைத் தாராளமயமாக்கிய கேடுகெட்ட அரசியல்வாதிகளை தண்டிக்கும் வழி இன்னும் தெரியவில்லை.
- கடவுள் நம்பிக்கை பற்றி கேவலமாக பேசிவிட்டு தலைவர்கள் சிலைகளுக்கு மாலை போட்டு வழிபாடு செய்யும் பகுத்தறிவுவாதிகளின் கூட்டங்கள் குறையவில்லை.
- பகுத்தறிவு என்பது இந்து மத எதிர்ப்பு, ப்ராமண துவேஷம் என்பதில் இருந்து மாறுவதாக தெரியவில்லை.
- 95% மார்க் எடுக்கும் முற்பட்ட வகுப்பைச் செர்ந்தவர்கள் பொறியியல் (அ) மருத்துவப் படிப்பு, ஏன் சாதாரண கணிதம் படிக்கக்கூட வழியில்லாமல் இட ஒதுக்கீட்டினால் படும் அவதி மாறவில்லை.
- அண்டை மாநிலத்துடனான ப்ரச்சனைகளை பேசிதீர்த்துக் கொள்ளாமல் நினைத்த போதெல்லாம் கடையடைப்பு, இரயில் நிறுத்தப் போராட்டம் செய்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கும் அராஜகம் அழியவில்லை.

ஆனால் இவையெல்லாவற்றையும் மீறி இன்னமும் நாம் சுதந்திரம் அடைந்த தினத்தை நினைத்து ஆனந்தப்படும் நம் மக்களின் இந்த செயல் மட்டுமே என்னை சந்தோஷப் படுத்துகிறது.


புத்தகம்:
ஆங்கிலப் புத்தகம் Dark Justice by Jack Higgins சமீபத்தில் படித்தேன். இவருடைய முந்தய புத்தகம் The Eagle Has Landed பலப் பல வருடங்களுக்கு முன்பு படித்தது. அதில் ஈர்க்கப்பட்டு, இவர் இப்பொழுது எப்படி எழுதுகிறார் என்பது தெரியாமல் இந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டேன். கதை அருமையான கருவுடன் இருந்தது. அமெரிக்க அதிபரை கொலை செய்ய ஒரு முயற்சி நடக்கிறது அதன் மூலம் என்ன என்பதை துப்பறிவதுதான் கதை.

ஒரு 15-18 வருடங்களுக்கு முன்பு ஒரு ரூபாய்க்கு ஒரு நாவல் என்று பாக்கெட் நாவல் பதிப்புகள் வந்தது. அதை வெளியிட்ட அசோகன் என்ற அந்நாள் இளைஞர் ஒருவர் அதன் மூலம் மிகப் ப்ரபலமானார், அதில் எழுதியே அதிகம் முக்கியத்துவம் பெற்ற ஒருவர் ராஜேஷ் குமார் என்ற எழுத்தாளர். அவர் ஒரு பேட்டியில் நான் ஒரு மணி நேரம் யோசித்தால் ஒரு பாக்கெட் நாவல் எழுதிவிடுவேன் என்று பெருமையாக சொல்லியிருந்தார். இது எனக்கு இந்த புத்தகத்தைப் படித்ததும் நினைவுக்கு வந்தது. Jack Higgings-ன் நிலைக்கு இந்தப் புத்தகத்தை எழுத, ஒரு அரை மணி நேரம்தான் யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன். என்ன நிர்பந்தமோ, இப்படி ஒரு த்ராபையாக எழுத வேண்டும் என்று என்பது தெரியவில்லை. இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு பதில் சன் டிவியில் வரும் ஆனந்தம் வில்லி அபிராமி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்றும், கோலங்கள் தேவயாணி என்ன ஆகப் போகிறார் என்றும், அரசியில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்றும் மண்டை உடைத்து கொண்டால் தப்பே இல்லை.


உள்ளூர் விவரம்:
நமது தமிழ் சங்க வலைதளத்தில் சமீபகாலமாக அதிகம் எழுதப் படவில்லை என்று நாகு குறிப்பிட்டிருந்தார். கோடை விடுமுறையை அனுபவிப்பதை விட கோடையில் குழந்தைகளை பேணிப் பாதுகாப்பது மிகப் பெரிய வேலையாக இருப்பதும் ஒரு காரணம். எனது தனிக்கட்சி பற்றி என்னிடம் நேரிடையாகவே சில முறை கேட்டிருந்தார், எனது வலைதளம் ஒரு சைளகரியத்தை உத்தேசித்தே துவங்கப் பட்டது. என்னால் அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரம் யோசித்து விட்டு ஒரு பதிவை எழுத முடிவதில்லை. (ஹூம் அவ்வளவு திறமை இருந்தால் Jack Higgins போல பாக்கேட் நாவலே எழுதுவேனே.) என்ன சொல்ல வந்தேன்? ஒரு பதிவை எழுத ஆரம்பித்தால் முடிக்க ஏறக்குறைய 5-10 நாட்கள் ஆகிவிடுகிறது, RTS ப்ளாகில் நிறுத்தி நிறுத்தி எழுதி முடித்து வெளியிடும் போது, அது நாலாவது அல்லது ஐந்தாவது பக்கத்தில் வெளியாகிறது, பதிவு வந்திருப்பது வழக்கம் போல நாகுவையும் என்னையும் தவிர யாருக்கும் தெரிவதில்லை. மேலும் தப்பித் தவறி யாராவது எனது பதிவுகளை படித்து விட்டு எனது முந்தைய பதிவுகளை படித்து விட்டு பிறகு இவனைத் திட்டலாம் என நினைத்தால் அதை RTS ப்ளாகில் தேட மெனக்கெட வேண்டாம், சட்டென எனது ப்ளாக்கில் கிடைத்து விடும்.

-- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.