நேரம்

Thursday, October 26, 2006

பித்தனின் கிறுக்கல்கள் - 4

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ரிச்மண்ட் தமிழ்ச் சங்கம்:

புதிய தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர்களை முடிவு செய்திருப்பதாக கடிதம் வந்து இருக்கிறது. இந்தக் கடினமானப் பணி இவ்வளவு சீக்கிரம் முடிந்தது ஒரு சாதனையே. பொறுப்பேற்க வரும் புதிய உறுப்பினர்களை வருக வருக என வரவேற்கிறேன். பட்டிமன்றத் தலைப்பு வந்து விட்டது. நடுவர், பேச்சாளர்கள் பெயர் இன்னமும் ரகசியமாகவே இருக்கிறது. தலைப்பு நாம் கற்ற பழக்கவழக்கங்கள், வளர்ந்த வளர்ப்பு இவற்றை இங்கு வளரும் நம் குழந்தைகளிடம் எதிர்பார்ப்பது அவசியமா? அதை ஆங்கிலத்தில் As parents of our children who are growing up here, is it proper and necessary to bring them up the same way our parents did decades ago? Is it proper to expect and enforce the culture, habits, and customs on them that we were expected to follow? என மொழி பெயர்த்துள்ளனர். இந்த முரண்பாட்டை பேச்சாளர்கள் எப்படி எதிர் கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்தப் பட்டிமன்றத்திற்கு நல்ல ஒரு நடுவர் அவசியம், பேச்சாளர்கள் வரம்பு மீறாமல் பேசுவது மிக மிக அவசியம். இது சற்று கத்திமேல் நடக்கும் ஒரு முயற்சி. எப்படி கையாளுகின்றார்கள் என்பதைப் பொறுத்து இதன் வெற்றியும் அமையும். கூடுமானவரை நகைச்சுவையான தலைப்பு தந்து விட்டால், ஒருவரை ஒருவர் அதிகம் திட்டிக் கொள்ளாமல் இருப்பார்கள், இல்லை என்றால், நிகழ்ச்சி முடிந்து பல வாரங்களுக்கு 'சின்ன' பசங்க மாதிரி 'காய்' விட்டுக் கொள்வார்கள். பார்க்க சகிக்காது. இந்த நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக போக வேண்டும் என்று முயற்சி செய்யப் போவதாக முடிவு செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். (அப்பாடா வரலைனா அதான் ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்தானே, அப்பவே தெரியும் அவன் வரமாட்டான்னு நாகு எழுதிவிடுவார்).

இலக்கியப் போட்டிக்கு இந்த வாரச் சங்கு:
ஒரு நகைச் சுவை கதை, கட்டுரை (டுபுக்கு எழுதுவது போல - http://dubukku.blogspot.com/ அல்லது வெட்டிப் பயல் எழுதுவது போல - http://vettipaiyal.blogspot.com/2006/10/blog-post_19.html), நாடகம் என்று எதை வேண்டுமானாலும் எழுதித் தள்ளுங்கன்னு போட்டி வைத்து அதை இந்த ப்ளாக்கில் வெளியிடலாம், நாடகமென்றால் அதை மேடையேற்றலாம். Talent show போல ஒன்று ஏற்பாடு செய்து கொடுக்கப் படும் 5 நிமிடத்தில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என வரம்பில்லாமல் செய்துவிட்டால் நிச்சயம் களைகட்டும். American Idol போல ஒன்று கூட செய்யலாம்.

நாகுவின் கூட்டாங்கதை

கதை நான்கு அல்லது ஐந்து வரிகள் ஆனவுடன் அதை எப்படி எடுத்துச் செல்லலாம் என யோசிப்பதற்குள் அதை ஈழத்திற்கு
கடத்திக் கொண்டு போய் விட்டனர். எனக்கு ஈழத் தமிழ் சுத்தமா தெரியாது, (சாதாரணத் தமிழே தெரியாது) என்பது நினைவுக்கு
வந்தவுடன் படால் என நிறுத்தி விட்டு வுடு ஜூட் (அப்பாடி மீசையில மண் ஒட்டல).

நாகு: பூஜையில் காதில் விழுந்ததாக நீங்கள் எழுதி இருப்பது மிக அருமை. சுஜாதாவின் சாயல் அதிகம் தெரிகிறது. சொல்ல வந்த விஷயத்தை நகைச்சுவையுடன் சொல்லுவது ஒரு கலை அது உங்களிடம் இயல்பாக இருக்கிறது. நிறைய எழுதவும்.

பித்தனைப் பற்றி இத்தனை பேர் கேட்டு இருக்கிறார்கள் என்றால் கொஞ்சம் ஜாக்ரதையாதான் இருக்கனும். பித்தனைப் பற்றி விசாரித்தவர்கள் கத்தி விசாரிச்சங்களா? கத்தி வெச்சுண்டு விசாரிச்சாங்களா?

மதுரை மத்திய இடைத்தேர்தல்
இடைத்தேர்தல் முடிவு ஆளும் கட்சிக்கு சாதகமாகவே வந்திருக்கிறது. இது ஆட்சியாளர்களின் அராஜகத்தால் வந்தது என்று தோற்ற அனைத்துக் கட்சியினரும் சொல்லி தங்கள் காயங்களுக்கு மருந்து போட்டுக் கொண்டுள்ளனர். எல்லோரும் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்கள் அல்லது மறந்து விட்டதாக நடிக்கிறார்கள். இந்த இடைத் தேர்தல் புதிய அரசு அமைந்து 4 மாதங்களுக்குள் நடக்கும் ஒன்று, புதிய அரசின் மீது பெரிய மனக் கசப்பு மக்களிடம் இல்லை, கடந்த ஆட்சியில் 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் தோற்ற பிறகும் அவர்கள் பின்னர் வந்த சட்ட மன்ற இடைத் தேர்தலில் கணிசமான அளவில் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்கள், ஆக மக்களுக்கு இடைத்தேர்தலை பற்றி அவ்வளவுதான் அக்கறை. இதை விட்டுட்டு அந்த காரணம், இந்தக் காரணம்-நு பாயப் பிறாண்டறாங்க.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:

அடிதடி, கலாட்டா, தடியடி, கத்திச் சண்டை எல்லாம் போட்டு (Duet Song மட்டும் இல்லை) ஒரு மசாலாப் படம் ரேஞ்ஜில் ஒரு தமாஷ் நடந்து முடிந்துள்ளது. இவ்வளவு பேர் இத்தனை தூரம் அடிச்சுக்கராங்களே, அவ்வளவு காசா இந்த போஸ்ட்ல இருக்கு?

கேரளாவில் காங்கிரஸை எதிர்க்கும் கம்யூனிஸ்ட்கள் மத்தியில் அவர்களுடன் ஆட்சி அமைத்துள்ளது சரியான சந்தர்ப்பவாதம் என்று 'கரித்துக் கொட்டும்' சோ-வின் முகத்தில் கரியை பூசாமல் நல்லா ஒரு தார் டின்னையே கவுத்த மாதிரி ஆளும் கட்சியுடன் சென்னையைத் தவிர மற்ற இடங்களில் கூட்டு சேர்ந்து விட்டு, சென்னையில் அவர்களோடு 8 இடங்களில் போட்டி போட்டு CPI(M) ஒரு புதிய புரட்சியே நடத்தி இருக்கிறார்கள். இதன் க்ளைமாக்ஸ் காட்சியாக ஆளும் கட்சி MLA வை கைது செய்யச் சொல்லி ஒரு பேரணியும் நடத்துகின்றனர்.

சமீபத்தில் பார்த்த திரைப்படம்:

'Click' வீட்டில் கண்டிப்பாக குழந்தைகளோடு பார்க்கக் கூடிய படம் இல்லை. கதாநாயகன் மைக்கேல் ஆக Adam Sandler வழக்கம் போல் அசாதாரணமாக நடித்து இருக்கும் படம். கதை நம்மை (மன்னிக்கவும் என்னை) போன்ற ஒரு சராசரி குடும்பத் தலைவன், அவனுடைய மனைவி, இரண்டு குழந்தைகள், அவன் அவர்கள் எதிர்காலத்திற்காக ஓயாது உழைக்கும் ஒரு மிகச் சிறந்த வேலைக்கார அடிமை. ஆனால் வாய் ரொம்ப நீளம். ஒரு யுனிவர்சல் ரிமோட் வாங்க கடைக்குப் போய், யுனிவர்ஸையே கண்ட்ரோல் பண்ணக்கூடிய ஒரு ரிமோட்டுடன் வருகிறார். ஒரு கால கட்டத்திற்குப் பிறகு அவர் அதை இயக்க முடியாமல் அது இவரை இயக்குவதும், அதன் முடிவு என்ன என்பதை நிறைய காமெடியும் கொஞ்சம் செண்டிமெண்டும் கலந்து அழகாக சொல்லி இருக்கிறார்கள். சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் போல், வேலை, குடும்பம் இதில் எது சிறந்தது என்று பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள்.

- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.


பித்தனின் கிறுக்கல்கள் - 3

பித்தனின் கிறுக்கல்கள் - 3

http://richmondtamilsangam.blogspot.com/2006/10/3-2006.html

தமிழ் சங்கத்துக்கு ஒரு யோசனை:
சமீபத்தில் இலக்கியப் போட்டி 2006-க்கான அறிவிப்பு வந்து இருக்கிறது. மேலும் பரிசுன்னு சொல்லாம, எல்லா படைப்புகளையும் படைப்பாளர்களின் புகைப்படங்களோடு இந்த வளைத்தளத்தில் வெளியிடலாமே? இதனால, ஒன்னு - நிறைய பேர் கலந்து கொள்வார்கள், ரெண்டு - பொறாமை இருக்காது, ஒரு அறிஞன் சொன்னது We see things not as they are but as we are-னு இது இந்த போட்டிக்கு கண்டிப்பாகப் பொருந்தும் காரணம், இந்தப் போட்டியில தலைப்பு எதுவும் தராததினால யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் எழுத முயற்சி செய்யலாம், அது நடுவர் குழுவுக்குப் பிடிக்கலைன்னா நல்லா எழுதியிருந்தாலும் பரிசு கிடைக்காதே? ஊதர சங்கை ஊதிட்டேன், இனி சங்கத்தின் பொறுப்பு, பண்ருட்டியார் பொறுப்பு. 'நாராயண, நாராயண'.


தமிழ் சங்கத்தின் தற்போதைய செயற் குழுவின் பணிக்காலம் முடியப் போவதால், அடுத்த குழுவினர்களைத் தேர்ந்து எடுக்கும் பணியும், பொறுப்பும் அவர்களுக்கு வந்திருக்கிறது. அவர்களின் இந்த முயற்சி இனிது முடிய என் வாழ்த்துக்கள்.


போன வெளியீட்டில் ஒரு சில யோசனைகளைச் சொல்லியிருந்தேன், அது அந்த வெளியீட்டில் கடைசியில் இருந்ததால், பலர் பார்வையில் பட்டிருக்காது எனவே, மீண்டும் ஒரு முறை - சங்கு ஊதி விடுகிறேன்.


பட்டிமன்றம்
தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் வகையில் ஒரு பட்டிமன்றம் நடத்த இருக்கின்றோம் என்று ரிச்மண்ட் தமிழ் சங்கத்திலிருந்து அறிவிப்பு வந்து இருக்கிறது. செவிக்கு நல்ல விருந்தாக இருக்கும். அரட்டை அரங்கம் போல ஒன்றுகூட செய்யலாம் நல்லா பொழுது போக கத்தி பேசலாம். நிறைய குழந்தைகள், பாட்டு, பரத நாட்டியம் பயில்கிறார்கள் அவர்களுக்கு பாட்டு போட்டி வைத்து 'சப்தஸ்வரங்கள்' போல ஒன்றும் செய்யலாம். கலந்து கொள்ளும் எல்லா குழந்தைகளுக்கும் பரிசு என்று வைத்துவிட்டால், போட்டி நல்ல களை கட்டும்.

இந்த ப்ளாக் பற்றி
இந்த ப்ளாக்ல நிறைய இலக்கிய படைப்புகள் வெளியிட ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு சந்தோஷம் எனக்கு போட்டியா யாரும் இன்னும் அரசியல் விமர்சனம் எழுத ஆரம்பிக்கல, அது கொஞ்சம் ஆறுதலா இருக்கு.

55 வார்த்தைல கதை கேட்டு இருக்கார் முரளி:

சுஜாதா சொன்னது:

ஒரு ஊர்ல ஒரு நரியாம் அத்தோட கதை சரியாம்

சுவற்றில் ஆணி அடிக்கும் முன் வேலைக்காரப் பையன் கேட்ட கடைசி கேள்வி, ஏங்க வீட்டில concealed wiring-நு சொன்னீங்களே, மெயின் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டீங்களா?

நான் சமுதாய அவலங்களைச் சாடுவதாக முரளி எழுதியிருக்கார், உங்க எல்லோருக்கும் உள்ள கோபம் என்னிடத்தில் வார்த்தைகளாக வெடிக்கிறது நீங்கள் மனதுக்குள் பொருமுகிறீர்கள் அவ்வளவுதான்.

சமீபத்தில் வந்த சில அறிக்கைகள்:
மக்களுக்காக கக்கூஸ் (கழிப்பறை) கழுவவும், தெருவைக் கூட்டவும் கூட நான் தயார் என்று தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பேஷ் பேஷ், இதைவிட கீழே இறங்கி வேறு யாரும் ஓட்டு கேக்க முடியுமா?

************************************************************************
மதுரை மத்திய தொகுதியில் வாக்காளர்களைக் கவர கட்சிகள் கொடுத்த பணத்தில் கள்ள நோட்டுக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அப்படி போடு அறுவாள! ஓட்டும் கிடைக்கும், கள்ள நோட்டும் கையை விட்டு போயிடுச்சுன்னு கட்சிகள் சந்தோஷப் படும். வாங்கினவங்கதான் பாவம், திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி ஆயிடுச்சு.
************************************************************************
கருணை மனுக்களை பரிசீலிக்கும்போது அரசியல், சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் தண்டனையை ரத்து செய்வதோ, குறைப்பதோ கூடாது என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
சபாஷ், இது போன்ற தீர்ப்புகள்தான் நம் நாட்டில் நீதிமன்றத்தின் மீதுள்ள நம்பிக்கையை மேலும் வலுப் படுத்துகின்றன.
************************************************************************
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்கு செலவுக்குக் கூட அதிமுக பணம் தரவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
என்னங்க இப்படி சொல்றீங்க, அவங்க தயவால ரெண்டு MLA சீட் கிடைச்சு இருக்கு, அதை வெச்சு எவ்வளவு சம்பாதிக்க முடியும்!
************************************************************************
தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஒருபோதும் விரும்பியதில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைளை ஒழிக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அதிபர் கூறியுள்ளார்.
மெய்யாலுமா!!! ஐ, சும்மா டமாஸ் பண்ணாதீங்க.
************************************************************************
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி பல ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார், எனவே அவரை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் கோரியுள்ளார்.
அதோட விடுவானேன், அவங்களுக்கு ஒரு MLA சீட்டும் வாங்கி கொடுத்துடுங்க பாவம் பொழைக்கரதுக்கு ஒரு வழி கிடைச்சாமாதிரி இருக்கும்.
************************************************************************
ஏர் இந்தியா விமானத்தை பறவை தாக்கியதால் லண்டனிலிருந்து டெல்லி வர முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி பரிதவித்த விமான பயணிகள் ஒரு வழியாக 3 நாட்களுக்குப் பிறகு தலைநகர் வந்து சேர்ந்தனர்.
விமானத்துக்கு பறவைக் காய்ச்சல் வந்து இருக்குமோ?
************************************************************************
இந்தவாரம் அரசியல் விமர்சனம் இல்லை! உள்ளாட்சி தேர்தல் முடிவும், மதுரை மத்திய தொகுதிக்கு இடைத் தேர்தல் முடிவும் வந்ததும் நிறைய எழுதலாம்.

- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ...

பித்தனின் கிறுக்கல்கள் - 2

http://richmondtamilsangam.blogspot.com/2006/10/2-2001-talk-of-town.html
மரண தண்டனை ஒழிப்பு:
இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001-ல் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் முகமது அப்சலின் தூக்கு தண்டனை தீர்ப்பு இன்று இந்தியாவில் மாநகரத்தின் முக்கிய பேச்சாக (அதாங்க talk of the town) இருக்கிறது. நம்ம ஊர் அரசியல்வாதி திருமாவளவன் இந்த மரணதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து மன்னிப்பும் கருணையும் காட்ட வேண்டும் என்றும், உலகில் 129 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்று 'அறிவியல்பூர்வமான ஆய்வுகள்' வெளிக்காட்டியுள்ளன என்றும், மக்கள் விரோதச் சட்டம் என்று பெருவாரியான அரசியல் கட்சிகளால் வலியுறுத்தப்பட்டு பின்னர் கைவிடப் பட்ட பொடோசட்டத்தின் கீழ் இந்த தண்டனை விதிக்கப் பட்டுள்ளது இதனால் இதை ரத்து செய்து மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாடாக உலக அரங்கில் இந்தியா பெருமையுடன் விளங்க வேண்டும் என்று தன் 'திரு' வாய் மலர்ந்தருளியிருக்கிறார். என்ன ஒரு ஆய்வு, என்ன ஒரு கண்டு பிடிப்பு, என்ன ஒரு நாட்டுப் பற்று, என்ன ஒரு மனித நேயம் இவை எல்லாம் மெய் சிலிர்க வைக்கிறது. எப்படி இதுபோல சிந்திக்க கற்றுக்கொள்கிறார்கள் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படி யோசிப்பதற்கு படிப்பு என்ற ஒன்று அவசியமே இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கிறார்.

இந்த மரணதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து மன்னிப்பும் கருணையும் காட்ட வேண்டும் - மிக ஞாயமான கோரிக்கை, அவர் என்ன ஆங்கிலத்தில் தமிழ்த் திரைப்படத்துக்கு பெயர் வைத்தாரா? தங்கர் பச்சானை திட்டினாரா? விரப்பனை கொடுங்கோலன் என்று சொன்னாரா? பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று சொன்னாரா? இல்லையே சும்மா நமது மரியாதைக்குரிய பாரளுமன்றத்தை தாக்கி அவருடைய பல சகாக்களை அநியாயமாய் இழந்து, பல அப்பாவி மக்கள், தோட்டகாரர், பாதுகாப்புப் படையினர் என்று பலரையும் கொன்று, இன்று பிடிபட்டு, இந்திய நீதிமன்றம் அவரது வாதங்களை கேட்ட பிறகு இப்படி ஒரு தண்டனை பெற்று, அதற்காக கொஞ்சமும் வருத்தப்படாமல் இருப்பவருக்கு கண்டிப்பாக கருணை காட்டத்தான் வேண்டும்.

உலகில் 129 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்று 'அறிவியல்பூர்வமான ஆய்வுகள் வெளிக்காட்டியுள்ளன': என்ன ஒரு அபாரமான கண்டுபிடிப்பு. மரணதண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்று அறிவியல்பூர்வமான ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன என்றால், ஒரு நாட்டில் எதற்கு ராணுவம், எதற்கு போலீஸ், எதற்கு சட்டங்கள், எதற்கு தண்டனைகள் அட எதற்கு இவரைப் போல அரசியல்வாதிகள், எந்த சட்டத்தாலும், தண்டனையாலும் குற்றங்கள் குறையப் போவது இல்லையே, மக்களே அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டுமே. உலக அரங்கில் தீவிரவாதத்தை கட்டுப் படுத்த இன்று இருக்கின்ற சட்டங்கள், தண்டனைகள் போதவில்லை என்று எல்லா நாடுகளும் கவலைப் பட்டுக்கொண்டிருக்கும் போது, உலகில் தீவிரவாதத்தால் தினம்தோறும், அதிகம் பாதிக்கப்படும் இந்தியாவில் இவரைப் போன்றவர்கள் இப்படி பேசி வருவது நமக்கெல்லாம் ஒரு சாபம்.

மக்கள் விரோதச் சட்டம் என்று கைவிடப் பட்ட பொடோ சட்டம்
தீவிரவாதத்தை முழுவதும் ஒழிக்க முடியாவிட்டாலும், அதன் வளர்ச்சியை தடுக்க முயன்ற ஒரு சட்டமே பொடோ. அதையும் இவரைப் போன்ற கையாலாகாத அரசியல்வாதிகள் குழி தோண்டி புதைத்து விட்டனர். 1000 பொதுமக்கள் உயிர் இழக்கலாம், ஆனால், இவர்களுக்கு ஒரு தீவிரவாதி உயிர் இழக்கக் கூடாது, மனித உயிர்களை மதிக்க முடியாத தீவிரவாதிக்கு எப்படி மனித உரிமைக் கமிஷனும், இவரைப் போன்றவர்களும் வக்காலத்து வாங்குகின்றனரோ தெரியவில்லை.

ஒரு ஏழை பாடகன் முக்காலத்தையும் அறிந்து இந்திய விடுதலைக்கு முன்பே எழுதினான்:
நெஞ்சி லுரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ - கிளியே வாய்ச்சொல்லில் வீரரடீ.

கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே நாளில் மறப்பாரடீ.

சொந்த அரசும்புவிச் சுகங்களு மாண்புகளும்
அந்தகர்க் குண்டாகுமோ? - கிளியே அலிகளுக் கின்பமுண்டோ?

சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல்கண்டும்
சிந்தை யிரங்காரடீ - கிளியே செம்மை மறன்தாரடீ.

மேல் குறிப்பிட்ட அரசியல் வாதியை நம்பும் நம் நாட்டு மக்களைப் பற்றி இந்த மகா கவி பாடுகிறார்:

நெஞ்சு பொறுக்குதிலையே - இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே
கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்றே - நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே - இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே
பட்டிமன்றம்
தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் வகையில் ஒரு பட்டிமன்றம் நடத்த இருக்கின்றோம் என்று ரிச்மண்ட் தமிழ் சங்கத்திலிருந்து அறிவிப்பு வந்து இருக்கிறது. செவிக்கு நல்ல விருந்தாக இருக்கும். அரட்டை அரங்கம் போல ஒன்றுகூட செய்யலாம் நல்லா பொழுது போக கத்தி பேசலாம். நிறைய குழந்தைகள், பாட்டு, பரத நாட்டியம் பயில்கிறார்கள் அவர்களுக்கு பாட்டு போட்டி வைத்து 'சப்தஸ்வரங்கள்' போல ஒன்றும் செய்யலாம். கலந்து கொள்ளும் எல்லா குழந்தைகளுக்கும் பரிசு என்று வைத்துவிட்டால், போட்டி நல்ல களை கட்டும்.
-பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ...

பித்தனின் கிறுக்கல்கள் - ஒரு துவக்கம்.

பித்தனின் கிறுக்கல்கள் - ஒரு துவக்கம்.
வலையில் வந்த முதல் பதிப்பு.
http://richmondtamilsangam.blogspot.com/2006/10/blog-post_04.html
'பித்தனின் கிறுக்கல்கள்' என்ற தலைப்பில் பல காரசாரமான விவாதங்களுக்கு அடித்தளமிடக்கூடிய கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிவு செய்து இந்த பகுதியைத் துவக்குகிறேன். இதில் இந்திய அரசியல், சமூகம், விளையாட்டு, அறிவியல், இலக்கியம், புதுக் கவிதைகள் (மரபுக் கவிதை அதிகம் பரிச்சயமில்லை), கட்டுரைகள், புத்தகங்கள், நகைச்சுவை காட்சிகள், கதைகள், பத்திரிகைகளின் திரை விமர்சனம், தொலைக்காட்சி, திரைப்படம் பற்றிய பல விஷயங்களை (நாகு, மூர்த்தி, முரளி, பரதேசி, பட்டாம்பூச்சி, தருமி(எந்த ஊர்) - ஷ - வட மொழியாச்சே பரவாயில்லையா?) இங்கு அலச இருக்கிறேன்.
இந்த கருத்துக்கள் என் தனிப்பட்ட கருத்துக்கள், இதை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் உரிமை. இந்த எழுத்துக்கள் மூலம் என்னை எடை போட முயல்வது ஒரு காலவிரயம். எனக்கு இந்தப் பகுதியை துவக்கி எழுதலாம் என்கிற துணிவைத் தந்தது பலருடைய எழுத்துக்கள். 'சோ' -வின் - நினைத்தேன் எழுதுகிறேன், சுஜாதாவின் கணையாழியின் கடைசிப் பக்கங்கள் (கணையாழி இன்னும் வருதான்னு தெரியல), கண்ணதாசன் எழுதிய கடைசிப் பக்கங்கள், தி.ஜா வின் தெளிவான மற்றும் புதுமைப் பித்தனின் தைரியமான எழுத்துக்கள்.
பீடிகை போதும்னு நினைக்கிறேன். இனி......
தமிழ் நாட்டில் உள்ளாட்சி மற்றும் மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல்.
இதனால் என்ன பயன்? எல்லா சுவர்களும் மேலும் கறைபடியும், சாராய விற்பனை வானைத்தொடும், முட்டை, கோழி வறுவல் வியாபாரம் தூள் பறக்கும், எல்லா காய்கறிகளும் கிலோ ரூ.50 க்கு விற்கும். ரேஷனில் எல்லா நாட்களும் எல்லா பொருட்களும் எல்லோருக்கும் கிடைக்கும். எல்லா கட்சிகாரர்களையும் (முதல்வரை கூட) சுலபமாக பார்க்கலாம். சன் டிவியில் தமிழ் நாடு எப்படி சுபிட்சமாக இருக்கிறது என்று காட்டுவார்கள். பஞ்சம், பட்டினி எல்லாம் தமிழ்நாட்டில் இல்லை என சத்தியம் செய்வார்கள். ஜே டிவியில் தமிழ்நாடு எப்படி குட்டிசுவராக இருக்கிறது என்று பட்டிமன்றமே போடுவார்கள். சோ துக்ளக்கில் கருணாநிதி எப்படி 2 ஏக்கர் கொடுக்காமல் இழுத்தடிப்பார் என்ற தன் சந்தேகத்தை எழுதுவார். விகடன்/ஜூ.விகடன் கருணாநிதியின் ராஜதந்திரம் பற்றி இரண்டு வாரம் எழுதுவார்கள். சென்னை தெருக்களுக்கு உடனடி மேக்கப் நடக்கும். கார்ப்பரேஷன் தண்ணீர் சென்னையில் நல்லா கிடைக்கும். மழை அதிகமானால் நிவாரணம் உடனே கிடைக்கும். அரசு ஊழியர்கள் சின்னதாக ஒரு அடையாள ஸ்ட்ரைக் செய்வார்கள், முதல்வர், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிபந்தனையின்றி உடனே ஒப்புக் கொள்வார். ஸ்டாலினும் - அழகிரியும் சண்டை இல்லாமல் பத்திரிகைகளுக்கு சிரித்த படி போஸ் கொடுப்பார்கள். சுப்ரமணியஸ்வாமி பத்திரிகையாளர்களைக் கூட்டி கருணாநிதி, தயாநிதி மாறன், சோனியா மூவரும் சேர்ந்து செய்த ஊழலைப் பற்றிய ஒரு முக்கிய தடயம் தன்னிடம் இருக்கிறது, இன்னும் ஒரே வாரத்தில் இவர்கள் அனைவரையும் பதவியிறக்குவேன் என்று சவால் விடுவார். தமிழக காங்கிரஸில் எந்த சண்டையும் இல்லை என்று எல்லா தமிழக காங்கிரஸாரும் அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பார்கள். வைகோ தன் புலிப்பாசத்தை கொஞ்ச நாட்களுக்கு வெளிக் காட்டாமல் இருப்பார். தேர்தல் தினமும் மற்ற எல்லா தினங்களைப் போலவே சாதாரணமாக இருக்கும்.
சரி நமக்கு என்ன பயன்?
முகத்தை சோப்பு போட்டு அலம்பி நல்லா துடைத்து வைத்துக் கொண்டால் போதும், கழகங்கள், கட்சிகள் நல்லா, அழகா, பட்டையா ஒரு நாமத்தைப் போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க. ஜாக்கிரதை.
சமீபத்தில் பார்த்த படம்
'நாளை' - மிகச் சாதாரணமான கதை, நடிக-நடிகைகள் 4 அல்லது 5 பேர்தான் பழைய ஆட்கள் மற்ற அனைவரும் புதுசு. நிறைவான நடிப்பு, நல்ல காட்சி அமைப்பு எல்லாம் இருந்தும் வழக்கம் போல் கமர்ஷியலுக்காக 2 குத்து பாட்டு புகுத்தப்பட்டு, கடைசி காட்சியில் எல்லோரும் செத்து போய்விட 'அட போங்கடா'-ன்னு திட்டத்தான் தோணுது. S.V.சேகர் ஒரு நாடகத்தில் ஒரு drawing கொண்டு வந்து காட்டி அதில் "நான் ஒரு ரெயில்வே ஸ்டேஷனை வரைந்சு இருக்கேன், அதுல ரெயில் வந்து நிக்குது, ஜனங்க இறங்கி போறாங்க இதை எல்லாம் நான் தத்ரூபமா வரைந்சு இருக்கேன்", என்பார்.
அவர் friend "ரெயில் எங்கடா?"
சேகர்: "ஜனங்களை எறக்கி விட்டுட்டு ரெயில் போயிடுத்து"
friend: "ஜனங்க எங்கடா?"
சேகர்: "அவங்க என்ன ஸ்டேஷன்லேயேவா இருப்பாங்க, வீட்டுக்கு போயிட்டாங்க"
friend: "ஸ்டேஷன் எங்கடா?"
சேகர்: "அது சமீபத்தில புயல் அடிச்சுது இல்லை அப்ப அதுவும் அடிச்சுட்டு போயிடுத்து" என்பார். அதுதான் ஞாபகம் வந்தது.
-- கிறுக்கல்கள் தொடரும்.