நேரம்

Monday, June 13, 2011

பித்தனின் கிறுக்கல்கள் – 43

தமிழக ஆட்சி மாற்றம்.

எனது முந்தைய கிறுக்களுக்கு வரலாறு காணாத கூட்டமாக 100 பேர் அலைமோதி படித்ததற்கும் பின்னூட்டமிட்ட இருவருக்கும் மிக்க நன்றி. பின்னூட்டமிட்ட சண்டியர் ஜெயலலிதாவின் ஜெகதளப் ப்ராதபங்களைப் பற்றியும் அவருடைய சமீபத்திய இலவசங்களைப் பற்றியும் எழுதச் சொன்னார். எனவே எமது சில கருத்துக்கள்.

சோ அவர்கள் தேர்தலின் போது சொன்னது போல ஜெயின் இலவசங்கள் கருணநிதியின் இலவசங்களை மழுங்கடித்து மிக மிக உண்மை. பொதுவாகவே தேர்தல் நேர இலவசங்கள் எமக்கு உடன்பாடில்லை. ஒரு பொருளை வாங்கும் போது அதனுடன் தரப்படும் இலவசத்தை வைத்து வாங்கப்படும் பொருளின் தரக்குறைவு நமக்குத் தெரிவது போல தரப்படுகின்ற இலவசங்களை வைத்துப் பார்க்கும் போது அரசியல் கட்சிகளின் தரம் தெரிகிறது. ஆனால் ஒரு கட்சி மக்கள் வெறும் இலவசப் பைத்தியங்கள் என்ற ரேஞ்ஜில் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டவுடன் அதை முறியடிக்க ஜெயலலிதாவின் இலவசங்களை அள்ளித் தெளித்த தேர்தல் அறிக்கை பயன்பட்டது என்பதை மறுக்க முடியாது.

ஆட்சிக்கு வந்ததும் இவர் உடனடியாக ஒரு அமைச்சரை இந்தத் தேர்தல் இலவசங்களுக்காக ஒதுக்கியிருப்பது இந்த இலவசங்களில் கூடுமானவரை குழப்படியும், ஊழலும் தலைகாட்டாமல் இருக்க வேண்டும் என்ற இவரது முனைப்பைப் காட்டுகிறது. தாலிக்குத் தங்கம், அனைவருக்கும் 20 கிலோ 1 ரூபாய் அரிசி, படித்த ஏழைப் பெண்களுக்கு உதவித் தொகை என்பது சாமனியமாகத் தெரிந்தாலும், இவைகள் ஒரு சாமனியரைச் சென்றடைந்தால் இவைகள் மிகப் பெரிய சமூக மாற்றத்தைக் கண்டிப்பாகக் கொண்டுவரும் என்பது எமது கருத்து. இதை எப்படி ஒப்புக் கொள்வது? எப்படி ஒரு தாழ்த்தப் பட்ட பழங்குடி மக்களுக்கு கடந்த 60 வருடங்களாக அளிக்கப் படும் சலுகைகள் சரியோ, அதே போல பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள படித்த பெண்களுக்கு (இதில் பல கோவில் அர்ச்சகர்களின் பெண்களும் அடங்குவர், என்பது உபரிச் செய்தி) தரப்படும் தாலிக்குத் தங்கம் மற்றும் உதவித் தொகையும் சரி.

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மிக்ஸி, க்ரைண்டர் மற்றும் ஒரு மின் விசிறி இலவசம், எல்லா வீட்டிற்கும் இலவச கேபிள் டிவி இணைப்பு, வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர் அனைவருக்கும் 20 லிட்டர் மினரல் வாட்டர் இலவசம், இதெல்லாம் மிக மிக அநாவசிய வாக்குறுதிகள். இதில் 20 லிட்டர் மினரல் வாட்டர் பிச்சைக்காரர்களுக்கும் உண்டா? உண்டென்றால், அதில் பலர் நம்மையெல்லாம் விட மிக மிக பெரிய பணக்காரர்கள். குடிசையில் இருப்பவர்கள் ஏழைகள் அவர்களுக்கு இவற்றைத் தருகிறோம் என்றால், குடிசையில் இருக்கும் பலர் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள், காரணம் அவர்கள் ஒன்று அரசியலில் ஏதோ ஒரு கட்சிக்கு அடியாளாகவோ அல்லது கட்டைப் பஞ்சாயத்து செய்யும் ஆளாகவோ இருக்கிறார்கள். மேலும் குடிசைகளில் நிஜமாகவே கஷ்டப்படுகின்றவர்கள் ஒன்றிலிருந்து ஐந்து சதவிகிதம்தான் என்றாலும் இந்த மினரல் வாட்டர் விஷயம் கொஞ்ச கொஞ்சமாக மறக்கப் பட்டு மறுக்கப் படும் என்று நம்பலாம். இப்படி மினரல் வாட்டர் தரப் படும் என்பதற்கு மாற்றாக, தினமும் 20 குடம் நல்ல குடிநீர் தினமும் எல்லா குடும்பங்களுக்கும் தரப் படும் என்றாவது செய்யலாம். சென்னை போன்ற மாநகரங்களில் கடும் போக்குவரத்தால் சுவாசிக்க நல்ல காற்று இல்லை, குடிக்க நல்ல குடிநீரும் இல்லை, நடக்க நல்ல சாலை வசதிகள் இல்லை, இப்படி அத்தியாவசியமான பல ‘இல்லை’களைக் களைய ஜெயலலிதா சீக்கிரம் முயலுவார் என்று நம்புகிறேன்.

வீட்டிற்கு வீடு மிக்ஸி, க்ரைண்டர், மின் விசிறி இலவசம் என்றால் இது சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களுக்குமா? ஆமென்றால், கனிமொழி, ராஜா, தயாநிதி, கலாநிதி போன்ற 300-400 கோடி வைத்திருக்கும் பணக்காரர்களுக்குமா, என்னய்யா விளையாடுகிறீர்களா?

எல்லாருக்கும் கேபிள் டி.வி. இணைப்பு இலவசமென்றால், என்ன பைத்தியக் காரத்தனமாக இருக்கிறது. டி.வி என்பது எந்தக் காலத்திலும் அத்தியாவசியமான பொருள் அல்ல. அது ஒரு ஆடம்பரம், அதனால் குழந்தைகளுக்கு பயன் உண்டு என்று அவ்வை சண்முகியில் கமலின் மனைவியாக வரும் மீனா போல ஜல்லியடிக்கலாம், ஆனால் அதில் கிஞ்சித்தும் உண்மை இல்லை. இதற்கு பதில் தேர்தல் அறிவிப்பில் அரசு கேபிள் டி.வி வினியோகத்தை ஏற்று நடத்தும் என்று சொன்னதை உடனடியாக செயல்படுத்தி குறைந்த விலையில் கேபிள் டிவி. கனெக்ஷனை மக்களுக்குத் தந்தால், அது அரசுக்கு ஒரு தெளிவான வருமானமாக இருக்கும்.

இவருடைய முந்தைய ஆட்சியில் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை வெகுவாக குறைக்கப் பட்டது காரணம் இவருடைய மழைநீர் சேமிப்புத் திட்டம். இந்தத் திட்டத்தை செயல் படுத்தாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்ற இவருடைய கண்டிப்பு இத்திட்டத்தை இவரால் சரியாக நிறைவேற்ற முடிந்தது. இதோடு நிற்காமல், இவர் மீண்டும் வீராணம் திட்டத்தை தூசி தட்டிய எடுத்த போது, இத்திட்டத்தால் தான் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் டாக்டர் பட்டம் பெற்றவன் என்ற பெரும் மதிப்புகுள்ளான தாத்தாதான் எமது நினைவுக்கு வந்து சங்கடப் படுத்தினார். பலரும் பல வகைகளில் இவரை இது குறித்து குறைசொல்ல அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் இத்திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தி தண்ணீர் சென்னைக்கு வரச் செய்தார்.

சென்னையிலும் அதன் சுற்றுப் புறங்களிலும், தமிழகத்தின் பல பெரு நகரங்களிலும் தினம் ஒரு சில மணிநேரங்கள் மட்டும் கிடைக்கும் மின்சார வசதியை நாள் முழுவதும் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து சமீபத்தில் தனது பதவியேற்புக்கு வந்த குஜராத் முதல்வர் மோடியுடன் பேசி அவர்கள் மாநிலத்தில் உபரியாக இருக்கும் மின்சாரத்தை தமிழகத்துக்கு ஒதுக்கச் செய்திருக்கிறார் ஜெயலலிதா. இப்படி ஒரு விஷயத்தை கடந்த 5 வருடங்களாக ஏன் செய்யவில்லை என்று கேள்வி கேட்பது காலவிரயம், பாவம் கருணாநிதியும் அவருடைய அமைச்சர்களும் கிடைத்த லஞ்சப் பணத்தை எண்ணுவார்களா, இப்படி உபரி மின்சாரம் என்று மற்ற மாநிலத்திடம் கையேந்துவார்களா?

பொருளாதார ரீதியில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு மாடு, ஆடு தரப் போவதாக தேர்தல் அறிவிப்பில் இருக்கிறது. இது எப்படி சாத்தியம், அத்தனை ஆடு மற்றும் மாடுகளுக்கு அரசாங்கம் எங்கே போகும் என்று தெரியவில்லை.

ஏழைகளுக்கு வீடு கட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரம் உதவித் தொகை தரப்படும், குழந்தைகளுக்கு வருடத்திற்கு 4 சீறுடை, செருப்பு என்ற அறிவிப்பு செய்யக் கூடியதுதான் என்று தோன்றுகிறது.

இந்த இலவசங்களினால், ஒரு அரசாங்கத்துக்கு கிடைக்கும் வரிப் பணம் பாழாகாதா என்று கேட்டால், ஆமாம் பாழ்தான், தமிழகத்தில் ஒரே ஒரு குடும்பத்துக்கு 214 கோடி ரூபாய் ஒரே ஒரு அரசாங்க ஆணையால் 2ஜி ஊழல் மூலமாகக் கிடைக்கிறது, இத்திட்டங்களினால் பல ஏழைக் குடும்பம் வீடு கட்டி (மாளிகை இல்லை சுமாரான ஒரு கருங்கல் அல்லது செங்கல் சுவர் எழுப்பப்பட்ட வீடு) வாழ முடியும். மேலும் இவைகளினால் சமுதாயத்துக்கும் பல நன்மைகளும் இருக்கின்றன, பல ஏழைகள் குடிசை வீட்டிலிருந்து கல் வீட்டுக்கு மாற 1.80 லட்சம் ஒரு ஊக்கியாக இருக்கும், பல ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு சித்தாள், கொத்தனார் போன்ற கட்டிட வேலை வாய்ப்பு நிச்சயம், பள்ளிச்சீறுடை/செறுப்புத் திட்டத்தை செயல் படுத்தினால், பல ஆயிரக்கணக்கான தொழிளாலர்களுக்கு துணி நெய்யும், செருப்பு தைக்கும் வேலையின் மூலமாக வருமானம் பெருகும், அரசாங்கத்தால் வாங்கப் படும் துணிகளுக்கு தரத்தை உறுதிப் படுத்தினால், பலப் பல தையல் தொழிளாலர்களுக்கு வருமானம் கிடைப்பதோடு, ஏழைக் குடும்பத்து துணிச் செலவு கணிசமாகக் குறையும்.

இவற்றோடு மேலும் பல நல்ல அறிவிப்புகள் இருக்கின்றன அவைகள் நிறைவேற்றப் பட்டால் நிச்சயம் சமுதாயத்திற்கு நன்மைகள் பல. முதலாவதாக, முன்னால் ராணுவ வீரர்களைக் கொண்டு மின் திருட்டை தடுக்க முயற்சி, அவர்களுக்கு வரும் ஓய்வூதியம் அவ்வளவு சிலாக்கியமானதில்லை. எனது நண்பனின் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரர், அவர்கள் குடும்பத்தில் அனைவரும் நல்ல நிலமையில் இருப்பதால் அவர்களின் தந்தைக்கு வரும் ஓய்வூதியத்தை நம்பி யாரும் இல்லை, மாறாக அவர்கள் குடும்பம் சற்று சுமாரான நிலையில் இருந்தாலும் சரி, ஓய்வூதியத்தை வைத்துக் கொண்டு 10-15 நாட்கள் காலம் தள்ளுவதே சிரமம்தான். இந்த புதிய நடவடிக்கையினால் அவர்களுக்கு கொஞ்சம் ஊதியம் கிடைக்க வழி பிறக்கும். அவர்கள் மின் திருட்டை கண்டுகொள்ளாமல் விட்டால் அதிகம் ‘கை’யில் கிடைக்கிறது என்று இருக்காமல் இருந்தால் சரி.

கிராமப்புரங்களில் சூரிய மின்சாரம் பயன்படுத்தி வீட்டிற்கு மற்றும் தெரு விளக்குகளை எரிய விட முயற்சி, +1, +2 படிக்கும் மாணவ மாணவியருக்கு லாப்டாப் என்பது சற்று பணக்காரத்தனமாக இருந்தாலும், இது வரும்காலச் சந்ததியினருக்கு மிகுந்த பயனளிக்கக்கூடிய ஒன்றாகத்தான் எமக்குத் தோன்றுகிறது.

தாத்தா இலவசமாக டிவி பொட்டியைக் கொடுத்துவிட்டு கோடி கோடியாக சுருட்டிய போது அதைப் பற்றி யாரும் பேசவில்லை, தனது சமீபத்திய தேர்தல் அறிக்கை ஒரு கதாநாயகி என்று விளம்பரமாக சொன்னபோதும் யாரும் அவரை கேள்வி கேட்கவில்லை. அதை முறியடிக்கும் விதமாக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டதும் அனைவரும் அதைக் கேள்வி கேட்கிறோம். காரணம் இவர் சொன்னால் செய்து விடுவார், தாத்தா சொன்னால் ‘வரும்ம்ம்ம்ம்ம், ஆனானானா, வராராராராது’ ன்னு நம் எல்லோருக்கும் தெரியும்.

தி.மு.கவின் சமீபத்திய முடிவு

தி.மு.க. தனது உயர் நிலை செயல் திட்டக் குழுவை சமீபத்தில் கூட்டி அதில் சில தீர்மானங்களை வெளியிட்டிருக்கிறது. அதில் எல்லாமே வெட்டியாக இருக்க, இப்படி இவர்கள் செய்யும் கேலிக்கூத்தை இத்தனை வருடங்கள் இவர்களது கட்சித் தொண்டர்கள் எப்படி சகித்துக் கொள்கிறார்கள் என்பது எமக்கு ஒரு புரியாத புதிர்.


- திமுகவினர் மீது சிபிஐ தொடர்ந்துள்ள பொய் வழக்குகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது.

சி.பி.ஐ. வழக்கு தொடராத வரையில் 214 கோடி விஷயம் வெளியில் வரவே இல்லையே, 214 கோடி + வட்டி போச்சே என்ற எரிச்சலுக்கெல்லாம் கேஸ் போட்டா உள்ளதும் போச்சு நொள்ளகண்ணாங்கர கதைதான். ஜாக்கிரதை.


-
திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் மாற்றப்பட்டதற்கு கண்டனம்.

அதுதான் இவர்களது அடிப்பொடிகள் பொதுநல வழக்குன்னு ஒன்னு பதிவு பண்ணி, அதுக்கு அம்மையார் சரியான பதிலைச் சொல்லி அவர்கள் வாயை அடைத்து விட்டு, கூடவே அதில் நடந்துள்ள முறைக்கேடுகளை ஆராயச் சொல்லி ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப் படும் என்று கவர்னர் உரையிலேயே சொல்லிவிட்டார். அடுத்து, ஸ்டாலினுக்கு கண்டம் ஆரம்பிச்சாச்சு.


-
தமிழகத்தில் சட்டமேலவை ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம்.

அதுக்கு மேல ஒன்னும் பண்ண முடியாது. இந்த மேல்சபை என்பது பொதுமக்களில் பலருக்கும் சட்டசபைக்கு செல்ல ஒரு குறுக்கு வழி நாடாளுமன்றத்தில் ராஜ்ய சபா உறுப்பினர் போன்ற ஒரு பதவி. இது யாருக்கு உதவியதோ தெரியாது, தமிழகத்தில் ம.போ.சி என்ற ஒருவருக்கு மிக மிக உதவியாக இருந்தது. இதை எம்.ஜி.ஆர். நீக்கும் வரை அவர் மேல் சபையின் உறுப்பினராக இருந்தவர். இதனால் ஆளும் கட்சியின் வட்டம் மாவட்டம் ன்னு இருக்கர மக்களுக்கு ஒரு உதவியாக இருக்கும் அவ்வளவுதான். இது இல்லாமல் இருப்பது தமிழக அரசுக்கு கொஞ்சம் பணம் செலவில்லாமல் இருக்கும். ஆனால் இது வேண்டாம் என்பதற்கு ஜெயலலிதா சமீபத்தில் சட்டசபையில் சொன்ன உதாரணம் சிறுபிள்ளைத் தனமாக இருந்தது.


சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்புக்கு வரவேற்பு. இந்தத் தீர்ப்பை ஏற்று நடப்பு ஆண்டே சமச்சீர் கல்வியைத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.

இந்த சம்ச்சீர் கல்வியைப் பற்றி எமக்கு அவ்வளவாகத் தெரியாததால், அது பற்றி சற்று வலைத்தளத்தில் தேடி படித்தவுடன் எழுதுகிறேன்.

இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க்க கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வரவேற்பு.

இது ஜெயலலிதாவின் ஒரு சின்ன ஸ்டண்ட் அவ்வளவுதான். நான் பலமுறை சொன்னது போல் இலங்கை ப்ரச்சனை என்ன என்பதை பலரும் (நான் உட்பட) முழுவதும் புரியாமலேயே தங்களது கருத்தை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறோம். முதலில் அங்கு நடந்தது ஒரு தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை. அதில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப் பட்டார்கள் என்பது கண்டிப்பாக கண்டிக்கப் படவேண்டிய ஒன்று ஆனால் அப்படி அந்த அப்பாவி மக்கள் தாக்குதலுக்கு முன்பும், தாக்குதலுக்கு நடுவிலும் தப்பி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாமல் இத்தனை ஆண்டுகாலங்களும் அவர்களை பணயக் கைதிகளாக வைத்திருந்தது விடுதலைப் புலிகள் என்ற குற்றச்சாட்டுக்கு இதுவரை தமிழ்நாட்டைச் சார்ந்த இலங்கைத் தமிழரின் பாதுகாவலர் என்று பறைசாற்றுவோர் எவரும் பதில் தரவில்லை. அது ஏன்? முன்பு எம்.ஜி.ஆர், இலங்கைத் தமிழரைக் காக்க தினமும் கருப்பு சட்டை போட்டு போராட்டம் நடத்தினார், அதற்கும் ஜெயலலிதாவின் இன்றைய ஸ்டண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எஸ்.வி.சேகரின் ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி என்ற நாடகத்தில் ஒரு காட்சி.

பேட்டியாளர்: இலங்கைத் தமிழர் ப்ரச்சனைக்கு என்ன தீர்வு

சேகர்: ஆ, அதுவா, அதுக்கு நாங்க மிகப் பெரிய திட்டம் வெச்சு இருக்கோம்.

பே: என்ன திட்டம் சொல்லுங்க:

சே: தமிழன் தூங்கும் புலி, அவனை சும்மா சீண்டாதீங்க

பே: என்ன செய்யப் போறீங்க சொல்லுங்க:

சே: தமிழன் இதையெல்லாம் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டான்.

பே: என்ன நடக்க போவுது சொல்லுங்க:

சே: தமிழன் கொதிச்சு எழுந்தா இலங்கை தாங்காது.

பே: என்னதான் பண்ணப் போறீங்க, கொஞ்சம் சொல்லுங்க சார்.

சே: யோவ் அங்க இன்னா நடக்குதுன்னு யாருக்குய்யா தெரியும், சும்மா இப்படி உதார் உட்டுகினே இருந்தா அதுவா ஒரு நாள் தானா சரியா பூடும்.

பே: (சலிப்பாக) அது சரி.

சே: ஆனா ஒரு விஷயம் செய்தா இலங்கை அப்புடியே நடு நடுங்கி பூடும்.

பே: அது என்ன சார்

சே: எல்லா எல்கேஜி க்ளாஸுக்கும் ஒரு வாரம் லீவ் விட்டா இலங்கை அப்படியே நடுங்கி பூடும் எப்டி நம்ம ஐடியா?

இப்படித்தான் தமிழக அரசியல்வாதிகள் இலங்கை தமிழர்களின் வாழ்வில் தினம் தினம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஸ்டண்டுக்கு நடுவில் ஜெயலலிதா ஒரு நல்ல கோரிக்கையை எழுப்பியுள்ளார் அது தமிழ் மக்களை நல்ல முறையில் குடியேற்றம் செய்து அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்வை அமைத்துக் கொடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதை உடனடியாகச் செய்யவேண்டும் அது நடவாத பட்சத்தில் இந்தப் பொருளாதார தடையை உடனடியாக செய்ய வேண்டும். இதை இப்போது யாரும் செய்வதாகத் தெரியவில்லை, இவரது டெல்லி விஜயத்தில் இதைப் பற்றி காது கேளாத, கண் தெரியாத, வாய் பேசாத ப்ரதமரிடம் எப்படி சொல்வாரோ என்னவோ, அப்படிச் சொல்லியும் அந்த கறை படியா கையர் காங்கிரஸ் தலைமையை மீறி என்ன சாதிக்க முடியுமோ தெரியவில்லை. . ஆனால், கடையடைப்பு, பள்ளிகளுக்கு விடுமுறை, ராமேஸ்வரத்தில் கூட்டம், நாகப்பட்டிணத்தில் கூட்டம், சென்னையில் கூட்டம், காலை இட்லி காபி சாப்பிட்டு விட்டு மதியம் வரை உண்ணாவிரதம் என்று கழகங்கள் தமாஷ் செய்து கொண்டிருப்பதாலும் என்ன பயன் என்று தெரியவில்லை.

மு.க. டமாஸ்

தாத்தா, ஏகத்துக்கும் கடுப்பில் இருக்கிறார் என்பது அவரது சமீபத்திய பத்திரிகை பேட்டியில் தெரிகிறது. அந்தக் கண்றாவியை நான் வேறு எழுதுவானேன். அதை இட்லி வடையில் விலாவரியாக போட்டிருக்கிறார்கள். எங்க ஊரில் ஒரு வஜனம் சொல்வார்கள், நாயை யாராவது அடித்தால் அதற்கு எங்கு அடிபட்டாலும் அது முதலில் காலைத்தான் நொண்டும் என்று, அது தாத்தாவின் விஷயத்தில் சரியாக பொருந்தும். தமிழகத்தில் 2 %க்கும் குறைவான ஒரு கூட்டம் பார்ப்பனர்கள் இவர்கள் தாத்தாவை ஆட்சியிலிருந்து இறக்கி விட்டார்களாம். இவங்க செஞ்ச ஊழல் கொஞ்சம் நஞ்சமில்லை, அடித்த கோடிகள் இமயமலையை விட பெரிசா இருக்கு இதுல 2% மக்கள் சேர்ந்து இவரை கவுத்துட்டாங்களாம்.

இந்து மதச் சின்னங்கள்

இதைப் பற்றி சமீபத்தில் நமது வலைப்பூவில் வேதாந்தி எழுதியிருக்கிறார். இவரிடம் ஒருவித தேடல் இருக்கிறது ஆனால், எழுத்தில் கோர்வையில்லாததால் (நான் கிறுக்குவது கோர்வை என்று சொல்ல வரவில்லை, கோர்வையாக இருந்தால் நான் ஏன் கிறுக்குகிறேன்) சொல்ல வந்த விஷயம் வில்லங்கத்தில் முடிந்துவிடுகிறது என்பது எமது கருத்து. சமீபத்தில் பூணூல் பற்றிப் பேச முடிவு செய்து, கேள்வி ஞானம் என்று குழப்பி., நாம் ஒரு கேள்வி கேட்டவுடன், அரசியல், மதச் சாயம் என்று ஜல்லியடிக்கத் துவங்கிவிட்டார்.

இந்து மதம், ஹிந்துத்வா என்று தைரியமாக முழங்கும் பாஜக வில் தலைவர்களாக முஸ்லீம்கள் இருக்கிறார்கள். ஆனால் முஸ்லீம் லீக் கட்சியிலோ, மனித நேய மக்கள் கட்சியிலோ ஒரு இந்து தலைவராக இருக்கிறாரா? பெருவாரியான முஸ்லீம்கள் இருக்கும் பகுதியில் கூட குஜராத்தில் பாஜக வினால் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற முடிகிறதே இது எப்படி? பாஜகவை எதையாவது சொல்லவேண்டும் என்றால், உடனே மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டனி என்று ஜல்லியடித்து ஊழல்வாதிகள் அனைவரும் சேர்ந்து கொள்கிறார்கள், அதைக் கேட்டால், நாம் மத வெறிப் பிடித்தவர்கள். மைனாரிடிகளுக்கு எதிரானவர்கள். அடப் போங்கப்பா.

வேதாந்தி தனது பதிவினைத் தொடர்ந்து எழுதப் போவதாக இருந்தால், அவர் தெளிவு1, 2, என்றே வைத்துக் கொண்டு இப்படி பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம், எமது கிறுக்கல்களைப் போல, அதை விடுத்து, இந்து மதச் சின்னத்தை மையமாக தலைப்பாக வைத்துவிட்டு, அதைப் பற்றி கேள்வி கேட்டால், மதத்தையும் அரசியலையும் இழுக்காதீர்கள் என்று சொல்லி அதை அவரே இழுத்திருகிறார்.

நடுத்தெரு அநாகரிகம்

திரு. மு. கோபாலகிருஷ்ணனின் நடுத்தெரு அநாகரிகம் என்ற பதிவினைப் படித்தவுடன் பொது இடத்தில் மனைவியை ஒருவன் காட்டுமிராண்டி போல அடித்துவிட்டு எப்படி எதுவும் நடவாதது போல இயல்பாக இருக்கமுடிகிறது. என்ன வளர்ப்பு இவர்களது வளர்ப்பு என்று எமக்குத் தோன்றியது. இந்த அநாகரிகத்தை பார்த்து விட்டு அதைப் பற்றி எப்படி நண்பர் மு.கோ. வினால் எழுத முடிந்தது என்ற ஆச்சர்யமும் எமக்கு விலகவில்லை.

இன்று இந்தப் பதிவைப் பற்றி எழுதுவதற்குக் காரணம், இந்தப் பதிவிற்கு இன்று மதியம் இடப்பட்ட ஒரு பின்னூட்டம். பின்னூட்டமிட்டவர் ஆங்கிலத்தில் எழுதியதை வரிக்கு வரி விமர்சனம் செய்யவும் விவாதிக்கவும் ஏதுவானது இருந்தாலும், இப்படிக் கூட தரம்தாழ்ந்து ஒருவர் சிந்திக்க முடியும் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. இந்தப் பதிவில் வரும் கணவர்களில் ஒருவராவது இப்படி ஒரு செயலை அமெரிக்காவில் செய்திருந்தால், அடுத்த 20 நிமிடங்களில் அவர் கைது செய்யப்பட்டு, இப்படி கேவலமாக நடந்துகொண்டதற்கு தகுந்த தண்டனை பெற்றிருப்பார்.

இவரது பார்வை ஏன் இப்படி ஒரு கோணல் பார்வையாக இருக்கிறது என்று தெரியவில்லை. 10-15 வயது சிறுவன் பக்கத்தில் அமரும் 40 வயது பெண்மணியின் கற்பைப் பாதுகாக்கவே அவருடைய கணவர் அவரைப் பொது இடத்தில் தரக்குறைவாகப் பேசி அடிக்கிறார். அது சரி என்பது பின்னூட்டமிட்ட இவருடைய வாதம். குழந்தைக்காக இன்னொரு கணவன், மனைவியை பொது இடத்தில் அடிக்கிறான், ஆனால் அந்தக் குழந்தை கீழே விழும் வரை என்ன செய்து கொண்டிருந்தான். இதுவும் சரி என்று வாதிடுகிறார் இவர். இதோடு நிற்காமல், தனது இஷ்டத்திற்கு ராமாயணத்தை மேற்கோள் காட்டி வாதிட்டிருக்கிறார். இவருக்கு சீதைக்கு ராமன் சித்தப்பா என்ற அளவில்தான் ராமாயணம் தெரியும் என்பது இவரது மேற்கோளில் இருந்து தெரிகிறது. ராமர் சீதையை அக்னிப் ப்ரவேசம் செய் என்று சொல்லும் போது எல்லோரும் கண்டிக்கிறார்கள். மாண்ட அவருடைய தகப்பனார் தசரதன் வந்து சொல்கிறார் இது தவறு என்று, தேவர்கள் வந்து கண்டிக்கிறார்கள். வால்மீகி கண்டிக்கிறார், கண்டிப்பதோடு அவரிடத்தில் சொல்கிறார் நீ யார் என்பது தெரியாதா, சீதை யார் என்பது தெரியாதா, ஏன் இப்படி செய்கிறாய் என்று அவரை கடிந்து கொள்கிறார். அதற்கு ராமன் கூறும் பதில் நான் தசரத குமாரன் ராமன். நான் கடவுள் இல்லை என்கிறார். மேலும் அப்படி அக்னிப் ப்ரவேசம் செய்யும் போது சீதை ஒரு தாய் இல்லை.

அடுத்து, கணவனை இழந்த இளம் பெண்கள் தங்கள் தலையை மழித்து இரண்டாம் தர வாழ்க்கை வாழ்கிறார்களே, அவர்கள் தங்கள் சுகங்களையெல்லாம் இழந்து விட்டார்களே என்று ஆதங்கப் பட்டிருக்கிறார். இப்படி கணவன் என்ற காட்டுமிராண்டியிடம் பொது இடத்தில் கேவலமான பேச்சும், அடியும் உதையும் வாங்கிக் கொண்டு வாழ்வது மேல் என்று சொல்லும் இவர் ஆணாதிக்க தன்மை கொண்டவர் இல்லை, இப்படி இருக்கும் ஆண்களை நமக்கு வெளிப்படுத்தும் மு.கோ, மற்றும் நாம் ஆணாதிக்க வெறியர்கள். வெரி குட்.

இவரது பின்னூட்டத்தின் முக்கிய செய்தி, வெகு சிலரே, நமது கலாச்சார வட்டத்திற்கு அப்பால் யோசித்து, ஒரு புது கலாச்சாரத்தை கைக்கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டியவர்கள். அப்படிப் பட்டவர்கள் செய்யும் சில செய்கைகள் நம்மில் சிலருக்கு அருவருப்பை உண்டு பண்ணக்கூடியதாக இருந்தாலும், அவைகள் வைத்து மட்டும் அவர்கள் காட்டுமிராண்டிகள் என்று கருதமுடியாது. முத்தாய்ப்பாக மு.கோவின் பதிவில் நமக்கு அறிமுகம் செய்யப் பட்ட காட்டுமிராண்டிகளை நாம் நமது குறைப் பட்ட பார்வையில் பார்ப்பதாகவும், அவர்கள் வேறு பல வகைகளில் ஒரு நல்ல கணவனாகவும், நல்ல தகப்பனாகவும் இருக்கக்கூடிய ஒரு சாத்தியக்கூற்றை நாம் காணாமலும், அறியாமலும் இருக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று பின்னூட்டமிட்டவர் முடித்திருக்கிறார். இப்படிப் தரம் தாழ்ந்து சிந்திக்கும் மக்கள் இருக்கும் வரையில் சமுதாயத்தில் எந்தப் பெண்ணிற்கும் எந்த நல்லதும் நடவாது. வாழ்க இவரது எண்ண ஓட்டம். வளர்க இவரது முற்போக்கு சிந்தனை.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்