நேரம்

Saturday, December 03, 2011

பித்தனின் கிறுக்கல்கள் 46

கனிமொழி ஜாமீன்.

குற்றம் சாட்டப் பட்டது சாட்டப் பட்டதுதான் அதில் எந்த மாற்றமும் இல்லை. நிரபராதி என்று தீர்ப்பு வரவில்லை, ஆறு மாதம் கோர்ட் கோர்ட்டாக ஏறி இறங்கி போன மாதம் சோனியாவின் காலில் விழுந்து, குட்டிக்கரணம் போட்டு, அழுது, ஒப்பாரி வைத்து ஒரு சப்பை ஜாமீன் வாங்கி விட்டு அதுவும் ‘சோ’ சொன்னது போல் பல குழப்படி செயல்களுக்குப் பிறகு கிடைத்திருக்கிறது. இதற்கு ஒரு பெரிய பில்டப் கிழவனாரால் கொடுக்கப் பட்டு, இதற்கு தியாகம் என்ற பெயர் சூட்டப் பட்டு அள்ளக் கைகள் பேனர் ஒட்டி, கூப்பாடு போட்டு இவைகளுக்கு நடுவில் சென்னை வந்திருக்கிறார்.

கலைஞர் இந்த சந்தர்ப்பத்தில் வழக்கம் போல மீண்டும் “ராஜா என்னோடு பேசி வேண்டிக்கொண்டால் அவருக்கும் ஜாமீன் விஷயத்தில் உதவ முடியும்” என்று உளறியிருக்கிறார். இணைக் குற்றவாளியான தனது முறைதவறிப் பிறந்த (illegitimate) மகளுக்கே ஜாமீன் எடுக்க 6 மாதம் முந்தைய பாராவில் சொன்னது போல தகிடுதனங்கள் செய்து போனவாரம் ஜாமீன் மனு விசாரிக்கும் போது எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருந்த இந்த கொள்ளை கும்பல், இப்போது நிபந்தனை ஜாமீன் கிடைத்தவுடன் இவர் முதல் குற்றவாளியும் முக்கியக் குற்றவாளியுமான ராஜாவுக்கு ஜாமீன் வாங்கித் தருவாராம். இந்தாளுக்கு இருப்பது வாயா வண்ணான் ஜாடியா என்பது தெரியவில்லை. ராஜா கில்லாடி, தான் நிரபராதி என்று தீர்ப்பான பிறகுதான் தான் வெளியே வருவேன் என்று ஒரு டைலாக் ஒரு முறை, கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தால் தனது ஜாமீன் பற்றி முடிவெடுப்பேன் என்று ஒரு டைலாக் ஒரு முறை. ஒரு வளைதளத்தில் சமீபத்தில் படித்தது. ராஜா திஹார் ஜெயிலில் இருந்தால் அவருக்கு நல்லது(உயிரோடு இருக்கலாம்), வெளியில் இருந்தால் கருணாநிதிக்கு நல்லது (போட்டுத் தள்ளிவிடலாம்).

இந்த ஜாமீன் கிடைத்ததில் திமுக அடிப்பொடியில் துவங்கி தலை வரை சொல்வது கனிமொழி நிரபராதியாம், இவர் குற்றம் செய்யாதவராம், இவங்களை சொல்லி குற்றமில்லை இவங்களை இன்னமும் பேச விட்டு, எது நடந்தாலும் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இருக்கும் திருதராஷ்ட்டிர மன்மோகன் சிங்கும், தனது வானளாவிய அதிகாரத்தை பயன்படுத்தும் துரியோதனி சோனியா போன்றோர் ஆட்சியில் இருக்கும் வரை என்ன பேசி, என்ன கிறுக்கி, என்ன நடக்கப் போகிறது.

இவர்களுக்கு மாற்று என மக்கள் நினைத்தாலும், தான் நினைக்காத பாஜக தலைவர்கள் ஒரு புறம், ஊழல் ஊழல் என்று அதை ஒரு ஜனலோக்பால் சட்டத்தின் மூல சரி செய்ய முடியும் என காமெடி செய்யும் அன்னா ஹசாரே மற்றும் இவரது குழப்படி கும்பல் ஒரு புறம். வெறுமே புலம்பி, கிறுக்கியபடி இருக்கும் புலம் பெயர்ந்த எம்மைப் போன்ற அடிமைகள் ஒரு புறம், ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்றிருக்கும், இந்தியப் பொதுஜனம் ஒரு புறம் என்று இருக்கும் இந்நிலையில் எதைச் சொல்லி என்ன புண்ணியம் என்று தெரியவில்லை.

அன்னா ஹசாரேவின் அடுத்த உண்ணாவிரதம்

நாடாளுமன்ற குளிர் காலத் தொடரில் அன்னா ஹசாரே அவரும் அவரது குழுவினரும் சொன்ன லோக்பால் மசோதாவை அவர்கள் சொன்ன படி மத்திய அரசு நிறைவேற்றாததால், அதை அவர்கள் சொன்ன படி அரசு நிறைவேற்றும் வரை மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப் போகிறாராம். நல்லது, போன முறை செய்தது போல இந்த முறையும் அங்கே வருகின்ற எல்லோருக்கும் அன்னதானம் நடை பெறுமா என்று தெரியவில்லை. அது நடக்கும் வரை இவருடன் கிரண் பேடி இவருடைய குழுவில் இருந்தால் இங்கும் ஒரு டான்ஸ் போடுவாரா என்று தெரியவில்லை. அடுத்த முறை ஆடும் போது, வேலாயுதம் அல்லது ரா ஒன் படத்தின் பாட்டு ஒன்றுக்கு ஆடச் சொல்லலாம். அதிலும் வேலாயுதம் படத்தில் வரும் ‘ரத்தத்தின் ரத்தமே, என் இனிய உடன்பிறப்பே” பாட்டுக் ஆடச்சொல்லலாம். அப்போது இளைய தளபதியையும் வரச் சொன்னால் போச்சு. என்ன, இப்படி கிறுக்க நல்லாயிருக்கலாம், பார்க்கத்தான் கண்றாவியாக இருக்கும்.

போன முறை ப்ரணாப் முகர்ஜி சூப்பராக அல்வா கொடுத்து விட்டார் இந்த முறை அதே மாதிரி செய்தால் என்ன செய்வது என்று இப்போதே அன்னாவின் கும்பல் கவலைப் பட ஆரம்பித்து விட்டது. அதன் வெளிப்பாடு, “நான் இறந்தால் அதற்கு இந்த அரசு தான் காரணம், நான் இறந்தால் மக்களுக்காக போராடிய ஒரு பைத்தியக்காரன் இறந்தான் என்று உலகம் பேசும். லோக்பால் மசோதாவில் நாங்கள் சொன்னதை நிறைவேற்றாததற்கு ராகுல் காந்தியே காரணம்” என்று சகட்டு மேனிக்கு உளறியிருக்கிறார். இவர் உளறுவது ஒன்றும் புதிதில்லை. இது நம்மை போன்ற தமிழக மக்களுக்கு ஒன்றும் பெரிய விஷயமில்லை. “இருப்பது ஒரு உயிர் அது போவது ஒரு முறை, அதுவும் தமிழுக்காக போவது பெருமை”, “உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு”, “அடைந்தால் தனிதமிழ்நாடு இல்லையேல் சுடுகாடு”, “ரூபாய்க்கு மூனு படி அரிசி இலவசம், இல்லையேல் முச்சந்தியில் வைத்து சவுக்கால் அடியுங்கள்”, “ரூபாய்க்கு மூனு படி லட்சியம், ஒரு படி நிச்சயம்”, “எரிப்போம் எரிப்போம், இந்திய அரசியல் சட்டத்தை எரிப்போம்”, “அரசியல் சட்டைத்தையா எரித்தோம், வெறும் காகிதத்தை அல்லவா எரித்தோம்” என்ற வசனங்களை தினம் தினம் கேட்டு வளர்ந்தவர்கள் நாம். இதையெல்லாம் மிஞ்சும் வசனம் இதுவரை நாம் பார்த்ததில்லை. கொஞ்சம் பக்கத்தில் வரும் வசனம், இந்திராகாந்தியின் “கரீபி ஹடாவ்” அதாவது “ஏழ்மையை நீக்குவோம்”, அதை சொல்லி விட்டு அதனுடைய நிஜ அர்த்தம், அவருடைய மகன் சஞ்சய் காந்தி டெல்லியில் இருந்த பெரிய கீழ்த்தட்டு மக்களின் குடியிருப்பை புல்டோசர் விட்டு இடித்துத் தள்ளி விட்டு அங்கு இருந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏழை மக்களை டெல்லியை விட்டு வெளியேற்றிய பிறகு மக்களுக்கு புரிந்தது.

இந்த காந்தியவாதியின் கூட இருக்கும் மக்களின் நிஜம் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் கொஞ்சம் புரிய ஆரம்பித்திருக்கிறது. கேஜ்ரிவால் இவர்கள் குழுவிற்கு வந்த நன்கொடையை தனது கட்டுப் பாட்டில் இருக்கும் ஒரு தொண்டு நிறுவனத்தில் போட்டிருக்கிறார். கிரண் பேடி பல தன்னார்வ நிறுவனங்களிடம் அதிகமாக பயணத் தொகை வசூலித்து, அவர்களையும், அரசாங்கத்தையும் முட்டாளாக்கியிருக்கிறார். இவர்களைத் தூக்கி சாப்பிடும், அன்னாவோ, இவரது கிராமத்தில் குடிப்பவர்களை மரத்தில் கட்டி வைத்து இவரே பிரம்பால் அடிப்பாராம். சமீபத்தில் சரத் பவாரை ஒரு இளைஞர் அடித்து விட்டாரே என்று அன்னாவிடம் கேட்டதற்கு “ஒரே ஒரு அடிதான் அடித்தானா?” என்று கேட்டு தனது மனநிலையை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரை யாரும் எதுவும் சொல்லக் கூடாது, சொன்னால் பல தரப்பட்ட மக்களுக்கும் கோபம் வரும். இவருக்கோ எரிச்சலே வரும். சமீபத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்(அந்தக் கட்சியில் நிஜத் தலைவர் யார் என்று அவர்களுக்கே தெரியாததால்) அத்வானி ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை போனதை இவர் தன்னைப் பார்த்து அத்வானி செய்யும் ஒரு அரசியல் ஸ்டண்ட் என்று விமர்சித்திருக்கிறார். இது தமிழினக் காவலர் பட்டம் கருணாநிதிக்கு என்று தமிழ் பேசும் பல தமிழக ஜால்ராக்கள் சேர்ந்து கொடுத்ததைப் போல இருக்கிறது.

தமிழ்ப் படங்கள்

7ம் அறிவு

முதல் 10 நிமிடங்கள் பார்க்கலாம், கடைசி 20 நிமிடங்களில் ஒரு 10 நிமிடம் பார்த்து விட்டு சூர்யா பேட்டி கொடுக்க ஆரம்பித்ததும் ஓடி விடலாம். பாடல்களில் கார்த்திக் பாடியிருக்கும் “முன் அந்திச் சாரல்” பாடல் மட்டும் சற்று நேரம் விட்டும் முணு முணுக்க வைக்கிறது.

கமலின் மகள் ஸ்ருதி தெலுங்கில் 2-3 படங்கள் வந்த போன பிறகு, (நடித்த பிறகு என்று பொய் சொல்லக் கூடாது), தமிழில் அறிமுகம் என்று கார்ட் போடப் பட்டு வந்திருக்கும் படம். குரல் ஒரு மைனஸ், நடனம் பெரிய மைனஸ், முக பாவங்கள் மைனஸ் மைனஸ் மைனஸ், குரல் ஏற்ற இறக்கம் (மாடுலேஷன்), 4 மைனஸ். இவர் பேசாமல், பாடாமல், மாடலிங் செய்ய போகலாம். ஜவுளிக் கடையில் இருக்கும் ஒரு பொம்மை அழகாக இருந்தால் போதும் அது பாட, ஆட, பேச, பழக வேண்டும் என்று யாரும் விரும்பப் போவதில்லை.

இனி கதை:

பல்லவ மன்னனின் மகன் போதி தர்மன் சீனாவுக்கு பவுத்த மதம் பரப்பச் சென்று அங்கிருப்பவர்களுக்கு மருத்துவம், குங்ஃபூ கற்றுத் தர அவர்கள் இவர் அவர்களோடு இருந்தால் நல்லது என்று அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்து இவரது உடல் அவர்கள் மண்ணில் இருந்தால் நல்லது என்று புதைத்து விடுகிறார்கள்.

இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து இவரது மரபணுவை இவரது வாரிசுகளில் யார் இவரது மரபணுவுக்கு அருகில் வருகிறாரோ அவருக்கு அதைச் செலுத்த அந்த போதி தர்மனின் அனைத்து கலைகளையும் கைக் கொண்டு மீண்டும் ஒரு போதி தர்மன் உருவாக முடியும் என்று ஆராய்ச்சி மாணவி ஸ்ருதி ஹாசன் மூலம் சொல்லி ஜல்லியடித்திருக்கிறார்கள்.

இதை 10-15 வருடங்களுக்கு முன்பு சுஜாதா ஒரு மர்மத் தொடரில் கையாண்டிருந்தார். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் கற்கும் பல விஷயங்கள் அவனுடைய காலத்திற்குப் பிறகு என்ன ஆகும் என்று சிந்திருப்பார். அதை ஒரு கம்ப்யூட்டர் ஹார்ட் டிரைவ்வில் பாடல்களையும், செய்திகளையும் பதிப்பது போல பதிந்து அதை மற்ற ஒருவருக்குள் செலுத்தி இறந்த மனிதனின் திறமைகளை மீண்டும் பயன் படுத்த முடியுமா என்று சிலர் ஆய்வது போல எழுதியிருப்பார். என்ன அந்த மாதிரி வேறு ஒருவரின் திறமைகளை ஏற்றுக் கொள்பவர்கள் முதல் ஆளின் மரபணுவோடு ஒத்திருக்க வேண்டும், மேலும் அவர்களுக்கு இடக்கை கொஞ்சம் குட்டையாகி விடும் அபாயமும் உண்டு. நானும் சூர்யா போதி தர்மனாக ஆன பிறகு அவருடைய கை குட்டியாக இருக்கிறதா என்று பார்த்தேன், 6 பேக்கிற்காக வலு ஏற்றி ஏற்றி, நன்கு கரளை கரளையாக இருந்ததே தவிர குட்டையாக இருந்த மாதிரி தெரியவில்லை.

இதற்கிடையே, சீனா, போதி தர்மன் அவர்களோடிருந்த காலத்தில் குணப்படுத்திய கொடிய நோயை இந்தியாவில் பரப்பி அவர்கள் கேட்கும் அனைத்தையும் இந்தியா செய்ய வைக்கும் எண்ணத்தில் ஒரு சீன உளவாளியை அனுப்பி அதற்கு பல நூறு கோடி ரூபாய்களை செலவழிப்பதாக காட்டி காமெடிக்கு காமெடியை சேர்த்திருக்கிறார்கள். படத்தில் காமெடி இல்லாததால், இந்தக் காமெடி உதவும் என்று நினைத்திருக்கலாம்.

இப்படி பல பைத்தியக்கார செயல்களைச் செய்வதை விட, ஸ்விஸ் பாங்கில் ஒரு அக்கவுண்டில் ஒரு சில நூறு கோடிகளைப் போட்டால் போச்சு, சத்தமே இல்லாமல் எதை வேண்டுமானாலும் சாதித்துக் கொள்ள முடியும் என்பது அந்த சீனக்காரர்களுக்கு தெரியாததால் ஊழல் செய்யத் தெரியாமல் மாட்டிக் கொண்ட சுக்ராம் போல கடைசி காட்சியில் சூர்யாவிடம் பேயடி வாங்கி அந்த சீனக் காரன் இறக்க சூர்யா, ஊழலுக்கு எங்கள் ஆட்சியில் என்றும் அனுமதியில்லை என்று சமீபத்தில் சோனியா உளறியது போல என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் இயக்குனர் சொன்னது போல உளறி படத்தை முடித்திருக்கிறார்கள்.

பிதாமகன் படத்தில் சூர்யா தனது டிரெண்டாக ஆரம்பித்தது பேசிக் கொண்டே இருப்பது. இது, கொஞ்சம் கொஞ்சமாக, பேரரழகன், ஆறு, வேல், சமீபத்தில் சிங்கம் வரை கடைபிடித்து, இதில் கொஞ்சம் சுமாராக பேசாமல் வந்தார், அதுவும் கொஞ்ச நேரம் கூட தாங்கவில்லை, ஸ்ருதி ஹாசன் அதைப் பிடித்துக் கொண்டு கழுத்தறுக்கிறார்.

பார்க்கவில்லை என்றால் உத்தமம். பார்த்தால், வளை தளத்தில் இந்தப் படத்தைப் பற்றி தேடாதீர்கள். ஒரு பக்கம் இது தமிழிணத்தின் அடையாளம் என்று சிலர் ஜல்லியடிக்க, சிலர், படத்தையும், 5ம் நூற்றாண்டில் என்ன நடந்தது, அதை எப்படி தப்பாக படமெடுத்திருக்கிறார்கள், நம் தமிழை இந்தப் படத்தில் ஒரு இடத்தில் குரங்கோடு ஒப்பிட்டிருக்கிறார்கள் இதை எப்படி அனுமதிக்கல்லாம், இது பார்பனீயத்தை உயர்த்தும் படம், இது திராவிடர்களுக்கு எதிரான ஒன்று, ப்ளாஹ் ப்ளாஹ் என்று மற்றும் சிலர் ஜல்லியடிக்க, எம்மைப் போல சிலர் வடிவேலு சொல்வது போல “பார்க்கலாம், ஆனா, வேணாம், அழுதுடுவீங்க” என்று அட்ண கால் போட்டுக் கொண்டு எல்லாம் தெரிந்தது போல கிறுக்குவோம். பொதுவாக இது ஒரு பொழுது போக்குத் தமிழ்ப் படம், பாட்டு நல்லா இருக்கா, பைட் நல்லா இருக்கா, காமெடி இருக்கா, கதை கொஞ்சமாவது இருக்கா, பன்ச் டைலாக் இருக்கான்னு பாத்துட்டு போயிட்டே இருக்கனும். இந்த அறிவு 7ம் அறிவு படம் பாக்கும் போது இருந்தது இந்தப் பதிவுல ரெவ்யூ எழுதும் போது இல்லை. ஆறாம் அறிவுன்னு நைட் ஷ்யாமளன் படம் எடுத்தார், முருகதாஸ் 7ம் அறிவுன்னு எடுத்திருக்கார். எந்திரன் படத்தில எஸ்.பி.பி பாடர பாட்டுல வைரமுத்துவும் 7ம் அறிவு பத்தி ஒரு இடத்தில சொல்றார். ஆமாம், 7ம் அறிவுன்னா நிஜமாவே என்ன?

Hugo

இந்தப் படம் ஒரு சூப்பர் டூப்பர் படம்ன்னு அதுவும் 3டி ல பார்த்தாத்தான் நல்லா இருக்கும்னு என் ஆத்ம நண்பன் சொன்னதை வெச்சு நானும் போய் பார்த்தேன். கதை நம்மூர் எடை பாக்கர மிஷின்ல வெளியில வர குட்டி டிக்கெட் பின்னாடி எழுதிடலாம். பென் கிங்ஸ்லி 5 டாலர் படத்துக்கு 5 லட்ச டாலருக்கு நடிச்சிருக்கார். யாருக்காவது தூக்க ப்ரச்சனை இருந்தா உத்திரவாதமா படம் ஆரம்பிச்ச பத்தாவது நிமிஷம் தூக்கம் க்யாரண்டி. அந்த ஆத்ம நண்பன் அவ்வளவு தூரம் இந்தப் படத்தை பத்தி ஏத்தி விட என்ன இருக்குன்னு இன்னி வரைக்கும் தெரியலை.

The next 3 Days

இதுவும் சின்ன கதைதான். கொலை செய்ததாக தண்டனை கிடைத்து ஜெயிலில் இருக்கும் தனது மனைவியை காப்பாற்ற முயற்சி செய்து தோற்று, அவரை சிறையிலிருந்து தடாலடியாக தப்பிக்க வைக்க முயற்சிக்கும் ஒரு அருமையான வேடத்தில் ரஸ்ஸல் க்ரோ நடித்து, காட்சிக்கு காட்சி விருவிருப் போடு படத்தை நகர்த்திச் செல்லும் படம். கண்டிப்பாக பார்க்கவேண்டிய அருமையான படம்.

Unknown

மனைவியுடன் ஜெர்மன் செல்லும் ஒரு டாக்டர் ஒரு கார் விபத்தில் 4 நாட்கள் கோமாவில் இருந்து மீண்டு, மறுபடி மனைவியை சந்திக்கும் போது அவர் இவரை அடையாளம் தெரிந்து கொள்ளாமல், இவர் பெயரில் இன்னொருவரை இவர்தான் தனது கணவர், இவர்தான் டாக்டர் என்று இவரிடமே அறிமுகப் படுத்தும் படம். பிறகு தான் யார், ஏன் தன் மனைவி இப்படி நடக்கிறார், அந்த இரண்டாம் கணவன் யார் என்று தேடிக் கண்டுபிடிக்கும் பாத்திரத்தில் கலக்கும் லியாம் நீசன், கடைசியில் உண்மையைக் கண்டு பிடிக்கும் போது திரைக் கதை ‘வாவ்’ சொல்ல வைக்கிறது.

The Hit List

Cuba Gooding Jr. ஒரு வாடகைக் கொலையாளியாக நடித்து இருக்கும் படம். பலப் பல ஓட்டைகள், இரவு 10:30 க்கு கடைசி சீன் முடிந்த பிறகு அடிபட்ட கதா நாயகனின் மனைவியை ஆம்புலன்ஸில் ஏற்றுவது நன்கு வெயிலடிக்கும் நேரத்தில். அதுவரை குண்டடி பட்ட அந்தப் பெண் எப்படி சமாளித்தார், ஏன் ஆம்புலன்ஸ் வர இவ்வளவு நேரம் என்று கேள்வி கேட்காவிட்டால் படம் பார்க்கலாம். ரகசியப் போலீஸ் 115 ல் யார் சுட்டாலும் எம்.ஜி.ஆர் க்கு ஒரு குண்டடிகூட படாது அது போல இவரை யார் தாக்கினாலும் இவருக்கும் ஒன்னும் ஆகாது.

IP Man 1 & 2:

இது தற்செயலாக நான் நெட் ஃப்ளிக்ஸில் பார்த்தப் படங்கள். கதை சீனாவில் இரண்டாம் உலகப் போருக்கு முன் நடப்பதாக ஆரம்பித்து, உலகப் போர் சமயத்தில் ஹாங்காங்கில் முடிவதாகக் காட்டப் பட்டிருக்கும் படம். மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையான விங் சுன்(Wing Chun) நன்கு தெரிந்த சற்றும் தலைக் கனம் இல்லாத நிஜக் கதாப்பாத்திரமான இப் மான். இவர் ப்ரூஸ் லீயின் ஆசிரியர் என்பது மற்றும் ஒரு சிறப்பு. இந்தக் கதாபாத்திரத்தில் டானி என் (Donnie Yen) என்பவர் இப் மானாக நடித்திருக்கிறார். சண்டைப் படம் அதிலும் சற்று வலுவான கதையம்சம் கொண்ட படம் பார்க்க ஆர்வமிருந்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ......

piththanp@gmail.com

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

0 comments: