நேரம்

Friday, January 20, 2012

பித்தனின் கிறுக்கல்கள் – 47

துக்ளக் 42வது ஆண்டு விழா

‘சோ’ வின் துக்ளக் ஆண்டு விழாவைப் பற்றி ப்ரஸ்தாபிக்க மட்டும் இந்தப் பதிவில்லை. அவர் நடுநிலையாளரா இல்லையா என்பதுவும் எமது பலகோடி கவலைகளில் ஒன்றில்லை. அவர் ஜெயலலிதாவை அடுத்த ப்ரதமராக முன்னிருத்தியதுவும் பெரியதில்லை. இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட படி இவர் தான் ப்ரதமராக வேண்டும் என்ற வரைமுறையில்லாததால் யார் வேண்டுமானாலும் இந்தியாவின் ப்ரதமராகலாம். இத்தாலியிலிருந்து வந்தவருடைய பின்புலம் எத்துணை சந்தேகத்துக்குரியதாக இருந்தாலும் சரி அவர் ப்ரதமராக முயற்சிக்கலாம், அதை கேட்ட உடன் இந்தியாவின் ஸ்டாக் மார்கெட் தரைமட்டத்தை அடைந்த உடன், சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற நரிக்கதையைப் போல, உடனே ஒரு தலையாட்டி பொம்மையை ப்ரதமராக்கி விட்டு பின்னனியிலிருந்து ஆட்சி நடத்தலாம், கோடியாக கொள்ளையடிக்கலாம். அது எப்படி எல்லோருக்கும் ஏற்புடையதாகிறது என்பது எமக்கு விளங்காத ஒன்று.

எமது ஆச்சர்யம், ‘சோ’ நடுநிலையாளர் இல்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது, அவர் சமீபகாலமாக ஜெயலலிதாவை அதிகம் ஆதரிக்கிறார் அதனால் அவர் அங்கு பொட்டி வாங்கிவிட்டார் என்றும் சிலருடைய கருத்துக்கள் இருக்கிறது. ஆட்சியில் 5 வருடங்கள் இல்லாத அவரை ஆதரிக்க பொட்டி வாங்கினால், ஆட்சியில் இருந்த தாத்தாவை ஆதரித்தவர்கள் வாங்கியது என்ன என்று எமது கேள்வி அமைந்தால், அது கருணாநிதி துவேஷம் என்ற பகுத்தறிவு எமக்கு இன்னமும் வந்தபாடில்லை. இப்படி ஒரு நடுநிலைவாதி என்ற கபட வேடதாரியின் வருடாந்தர கூட்டத்திற்கு போஸ்டர் பார்த்துவிட்டு ஆயிரக்கணக்கில் வருகிற கூட்டம் எதற்கு என்று தெரியவில்லை. ஆள் எம்.ஜி.ஆர் கணக்காக அழகாக இருந்தாலாவது பரவாயில்லை, அதுவும் இல்லை, தாத்தா போல சுத்தத் தமிழில் பேசினாலாவது பரவாயில்லை, அதுவும் இல்லை, பாதி நேரம் தமிழ், மீதி நேரம் சமஸ்க்ருதம், ஆங்கிலம் என்று கலந்து கட்டி அடிக்கிறார். கேள்வி கேட்கும் வாசகர்களை ஒழுங்காகப் பேசவிடுவதும் இல்லை, எல்லோருக்கும் மூக்குடைப்பு, எதற்கும் சரியான பதிலில்லை, எல்லோருக்கும் அறிவுரை என்று இருக்கும் இவருக்கும், இவருடைய இந்த பத்திரிகையின் ஆண்டு விழாவிற்கும் எப்படி இவ்வளவு பேர் தவறாமல் வருகிறார்கள். ஓ ஒருவேளை இந்த வருடம் யார் யார் திட்டு வாங்கப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்போடு வருவார்களோ? இப்படி ஒரு விஷயத்தை எந்த பத்திரிகையும் செய்ய முயற்சித்ததாகக் கூடத் தெரியவில்லை. ஆனால் இவர் 42 வருடங்களாக தொடர்ந்து இதைச் செய்து வருகிறார். இப்படிப் பட்ட விழாக்கள் சிலதை சென்னையில் இருந்த போது நேரில் போய்ப் பார்த்து அனுபவிக்கும் ஆசை இருந்தும் சமயம் கைக்கூடாததால் பார்க்க முடியாமல் போய்விட்டது. எது எப்படியோ, ஹாட்ஸ் ஹாஃப் டு சோ.

உத்திரப் ப்ரதேச தேர்தல்

தமிழகத் தேர்தல்கள் நமது தமிழ் சங்கத் தேர்தல் போல சுலபமான ஒன்று என்று சொல்ல வைக்கக்கூடிய தேர்தல் உத்திரப் ப்ரதேசத் தேர்தல். மாயாவதிக்கும், முலயாம் சிங் மற்றும் காங்கிரஸுக்கும் இடையே நடக்கும் மும்முனைத் தேர்தல். பாஜக வுக்கு அதிகம் வாய்ப்பில்லாததால் இந்த தேர்தலை நான்கு முனைப் போட்டி என்று சொல்ல முடியவில்லை. மாயாவதி சிலையை துணி போட்டு மறை, அவர்கள் சின்னமான யானை சிலைகளையும் துணி போட்டு மறை என்று மறை கழன்றமாதிரி தேர்தல் கமிஷன் கட்டளையிட அந்தக் கூத்தும் நடந்துள்ளது. பணம் தண்ணீர் மாதிரி என்பதைத் தாண்டி காற்று மாதிரி சுழற்றி சுழற்றி அடித்து இந்தத் தேர்தல் நடைபெற இருக்கிறது. யார் ஜெயித்தாலும், வழக்கம் போல் தோற்கப் போவது பொதுஜனம் தான்.

சமீபத்தில் பார்த்த படங்கள்:

நண்பன்

த்ரீ இடியட்ஸ் ஹிந்திப் படத்தின் ஈ அடிச்சான் காப்பியாக இருந்தாலும், வசனங்கள் வரிக்கு வரி தெளிவாகப் புரிகிறது, அதனால் நன்கு ரசிக்க முடிகிறது. விஜய்க்கு பன்ச் டைலாக் இல்லை, அடிதடி இல்லை, சவால்விடும் காட்சிகள் இல்லை, ஸ்டைல் இல்லை. ஆனால் படத்தில் கலக்கியிருக்கிறார். ஜீவா வழக்கம் போல அறுமையாக நடித்திருக்கிறார், ஸ்ரீகாந்த் தனக்கு நடிக்கத் தெரியும் என்பதை முதல் முறையாக தெளிவாக செய்திருக்கிறார். இலியானா நடிக்க அதிகம் சந்தர்ப்பம் இல்லாத போதும் வந்து போயிருக்கிறார். ஸ்ரேயாவிற்குப் பிறகு நன்கு நடனமாடத் தெரிந்த ஒரு நடிகை தான் என்பதை நிருபித்திருக்கிறார். சத்யன் இதுவரை சத்யராஜ் மாதிரியே நடித்துக் கொண்டிருந்தவர் முதல் முறையாக பின்னி பெடலெடுத்திருக்கிறார். சத்யராஜ், இதுவரை பார்த்திராத ஒரு பரிமாணத்தில் வருகிறார், ஓவர் ஆக்டிங் போல இருந்தாலும், கலக்கியிருக்கிறார். கண்டிப்பாக பார்க்கக்கூடிய நல்ல படம்.

ஒஸ்தி

தபாங் இந்திப் படத்தின் அட்டக் காப்பி படம். இதில் வரும் ஒரே ஒரு நெருடல், இந்திப் படத்தில் சல்மான் கான் வழக்கம் போல நடிக்கத் தெரியாமல் சொதப்பியிருந்தும் படம் சூப்பர் டூப்பர் ஹிட், அதே படம் தமிழில் நடிக்கத் தெரிந்த சிம்பு நடிப்பதால் சூப்பர் டூப்பர் ஃப்ளாப் ஆகியிருக்கிறது. லாஜிக் பார்க்காமல், மசாலா படம் பார்க்க ஆசையிருந்தால், கண்டிப்பாகப் பார்க்கலாம். பொழுது போகும்.

வேலாயுதம்

மசாலா, மசாலா, மசாலா இதை தாண்டி எதுவும் இந்தப் படத்தில் இல்லை. ஆனால், அதை திருநெல்வேலி அல்வாவைப் போல சாப்பிட்டு கலக்கியிருக்கிறார் விஜய். மசாலா படங்களில் நடிப்பது இவருக்கு கை வந்த கலை. முடிவு கொஞ்சம் ஜவ்வு மிட்டாய் போல இழுக்கப் பட்டாலும், ஒரு முறை பார்க்கலாம்.

வித்தகன்

ஆங்கிலத்தில் வித் எ கன் ஆம், பார்த்திபன் ஒரு விதமான நடிகர், நடிப்பு அநாயசமாக வரக்கூடிய சிலரில் இவரும் ஒருவர். இயல்பான நகைச்சுவை உணர்வு உள்ளவர், சீரியஸ் ரோல்களிலும் கலக்கக் கூடியவர். இவரே எழுதி இயக்கி நடித்து இருக்கும் இந்தப் படத்தில் முதல் குறை, எடிடிங், அந்த மகானுபாவன் யார் என்று தெரிந்தால் போய் போட்டுத் தள்ள வேண்டும், படத்தை கொத்தி குதறி யாருக்கும் புரியாத மாதிரி செய்திருக்கிறார். மிக மிக நல்ல படங்கள் வரிசையில் சேர்ந்திருக்கக்கூடிய படத்தை கெடுத்த முதல் ஆள் எடிட்டர். அடுத்து திரைக்கதை அமைத்த பார்த்திபன், முடிக்கத் தெரியாமல் முடித்த இயக்குனர் பார்த்திபன். படம் முடியும் போது, சூப்பராக சுடச் சுட வேர்கடலை சாப்பிட ஆரம்பித்த நமக்கு பாக்கெட் முடியும் போது சொத்தைக் கடலை வாயில் மாட்டிய ஒரு உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.

Ides of March

ஜார்ஜ் க்ளூனி எழுதி, இயக்கி நடித்திருக்கும் படம். ஃப்ராக்சர் என்ற படத்தில் ஆண்டனி ஹாஃப்கின்ஸுடன் நடித்த ரையன் காஸ்லிங், தான் ஒரு திறமையான நடிகர் என்று மீண்டும் நிருபித்திருக்கும் படம். கதை அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட முனையும் ஜார்ஜ் க்ளூனியும் அவருக்கு அதற்கு பக்க பலமாக இருக்கும் ரையனுக்கும் நடக்கும் சில சம்பவங்களைக் கொண்ட படம். குழந்தைகளுடன் பார்க்ககூடிய படமில்லை. ஆனால் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கக்கூடிய படம் இது.

சிம்ஹா (தெலுங்கு)

பாலகிருஷ்ணா (என்.டி.ராமாராவின் மகன்) இரு வேடங்களில் நடித்து வந்த படம். குப்பை என்று சர்வசாதாரணமாக சொல்லி விடலாம், பாவம் 3 கதா நாயகிகள், 300 அடியாட்கள், ரெண்டு தலைமுறைக் கதைகள், 7-8 பாடல்கள், எண்ணிலடங்கா சண்டை காட்சிகள், கார்கள் எரிப்பு என்று ப்ரமாண்டமாக எடுக்கப் பட்ட படத்தை எப்படி குப்பை என்று சொல்வது என்று தெரியவில்லை.

டான் (தெலுங்கு)

நாகர்ஜுனா நடித்து, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள மஹா திராபைப் படம். பார்க்காவிட்டால் தப்பித்தீர்கள்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ......

piththanp@gmail.com

0 comments: