நேரம்

Thursday, January 28, 2021

 

பித்தனின் கிறுக்கல்கள் - 52

அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

2019 மார்ச் 3ம் தேதிக்கு பிறகு 697 நாட்களுக்குப் பிறகு மீண்டும்  வலைப்பூவில் சந்திக்கின்றோம்.

சில சமீபத்திய சம்பவங்கள், அதன் தாக்கங்கள், இந்திய மற்றும் அமெரிக்க அரசியல் அநாகரீகங்கள், ஆஸ்த்ரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை, சமீபத்தில் நாம் ரசித்த  நிழற்படங்கள், நிகழ்வுகள் போன்ற எம்மை பாதித்த சில விஷயங்களைப் பற்றி வழக்கம் போல இங்கு கிறுக்கலாம் என இருக்கிறோம். வழக்கம் போல் நாம் எழுதியதை படித்தோ/படிக்காமலேயோ திட்டலாம் என இருப்பவர்கள் பின்னூட்டத்தில் தைரியமாகத் திட்டலாம்.  இல்லை, நீ கிறுக்கியதை முழுவதும் படிப்பேன் படித்த பிறகும் எங்களுக்கு என் மீது கொலைவெறி எதுவும் இருக்காது என்று இறுமாப்போடு இருப்பவர்களுக்கு அந்த எல்லாம் வல்ல இறைவன் நல்ல புத்தியையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கட்டும்.

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்:

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் டீம் போங்கடிப்பதில் முதன்மையாவர்கள்.  என் நண்பன் சென்னையில் கானரா வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு சமயம், சென்னையில்  இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் மாட்ச் துவங்க இருந்த சமயம், இவனது வங்கி பண பரிவர்தனை மையமாக இருந்ததால் அவர்களிடமிருந்த ஏதோ டாலரை இந்திய ரூபாயாக மாற்ற டேவிட் பூன் மற்றும் சிலர் வந்திருந்தனர்.  இவன் அவர்களுடன் அளவளாவிக்கொண்டிருந்த போது டேவிட் பூன், "It is really interesting to know that almost all of you were able to recognize us. So we are really famous and hope you all know we are better than your India Team". உடனே என் நண்பன் "Yeah, right your team always plays with 13 while the visiting team plays with 11, your team and the match umpires are part of your team, probably if you guys stop cheating, then you will know how good we are". என் நண்பன் அப்படி சொன்னதும் சுற்றியிருந்த பலரும் வாயடைத்துப் போக, ஆச்சர்யமான நிகழ்வு, டேவிட் பூன் உடனே, "oh come on, we are not that great in that, don't give us that credit we are always behind Pakistan on that.  If you are trying to tell us we have to work hard to become no 1 cheats in the cricket, yeah, I can assure you we will soon be".  இதுதான் அந்த அணி, இதுதான் அவர்களின் முறை.  இதனால் அவர்கள் விளையாட்டில் சோடை போனவர்கள் என்று அர்த்தம் இல்லை, அவர்களின் ஒரு பக்கம் இது.  எத்தனை போங்காக ஆடினாலும், பிடிபட்டு மானம மரியாதை எல்லாம் இழந்தாலும், கொஞ்சமும் வெக்கம் மானம் இல்லாமல் மீண்டும் அவர்கள் அணியில் இடம் பெற்று விளையாட வந்து மீண்டும் மீண்டும் அதே போல போங்காட்டம் ஆட அவர்களும் தயார், அவர்களை செர்த்துக்கொள்ள அந்த அணியும் தயார்.  ஸ்டீவ் ஸ்மித் நல்ல ஆட்டக்காரர்தான், ஆனால் அவர் செய்த செயல்களும் அவரும் அந்த அணியின் தலைவர் டிம் பெயின் மற்றும் பல பந்து வீச்சாளர்களும் பழகிய விதம், இவர்கள் இன்னமும் தங்கள் தொலின் நிறத்தைப் பிடித்துக் கொண்டு தங்களை உயர்ந்தவர்கள் என்று நினைப்பது போல இருக்கிறது.  வடிவேலு ஒரு திரைப்படத்தில் சொன்னது போல, "என்னது இது சின்னப் புள்ளத் தனமா இருக்கு!"

முதல் டெஸ்ட் மாட்ச்சில் நாம் 36 க்கு சுருண்டது எமக்கும் வருத்தம்தான், அப்போதே எம் சில நண்பர்களிடமும், உறவினர்களிடமும் சொன்னது, இதுவும் கடந்து போகும்.  இப்படி ஒரு தோல்வி நல்லது, நம்மைப் புரட்டிப் போடும்.  ஆனால் இதிலிருந்து பாடம் கற்கவில்லையென்றால்தான் தவறு.  அதேபோல பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இந்திய அணி செம்மையாக வென்று கோப்பையைத் தக்க வைப்பது மட்டுமில்லாமல், "சற்றே விலகியிரும் பிள்ளாய்" என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். 

இந்த வெற்றியைப் பற்றிப் பலரும் ஊடகங்களில் சொல்லியிருப்பது, இந்தியாவின் C-Team இந்த வெற்றியைக் கொண்டு வந்திருக்கிறது என்று. இது எமக்கு உகப்பில்லை.  இந்த 4 வது டெஸ்ட் மாட்ச்சில் ஆடிய அனைத்து இந்திய வீரர்களும் இதற்கு முன்பு ஏதாவது ஒரு முதல் நிலை (First Class) மாட்ச் விளையாடியிருக்கிறார்கள்.  5 நாள் விளையாட்டு என்பது மிக மிகக் கடினம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  ஆனால் இவர்கள் C-Team இல்லை என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு.  ஓரு வீரர் இந்திய அணிக்காக தேர்வு செய்யப் படும் போதே அவர் A-Teamதான்.  120 கோடிகளி ஒரு 15-20 பேர் தெரிவு செய்யப் படுவது வேடிக்கையில்லை.  அதன் பின் அவர்களின் திறமை, அதில் அவர்கள் கொண்ட நம்பிக்கை, அவர்களின் குடும்பத்தினரினின் த்யாகம், பங்களிப்பு, குடும்ப நிதி நிலையைத் தாண்டி இந்த உயரங்களை அவர்கள் எட்டியிருக்கிறார்கள்.  ஒரு அணியில் ஒன்றுக்கு மேற்பட்ட துவக்க ஆட்டக்காரர்கள் இருந்தால் அவர்களுக்கு உள்ளேயே ஒரு போட்டி எழுந்து விடும், இங்கு விக்கெட் கீப்பர் என்று 4 பேர் - ராஹுல், பண்ட், சாம்சன், சாஹா.  இங்கு ஒருவரை ஒருவர் மிஞ்சி ஆடி, ஏதோ ஒரு வகையில் பலரை திருப்திப் படுத்தி அணியில் இருக்க வேண்டும் என்பது சாதாரண காரியமில்லை.  ஒரு இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் எப்போது எந்த அழுத்தமும் இல்லாமல் தன்னிச்சையாக தனது ஆட்டத்தை ஆட முடிகிறதோ அன்றுதான் இந்திய அணி எந்த தயக்கமும், சந்தேகமும் இல்லாமல் விளையாடும் அனைத்து ஆட்டங்களையும் வெல்லும். 

அமெரிக்க தேர்தல்:

உலக அளவில் எதிர் பார்க்கப் பட்ட தேர்தல், பீஹார்/பெங்கால் தேர்தல் போல பலப் பல கேள்விகளோடு முடிந்திருக்கிறது.  டிரம்ப் வரக்கூடாது என்று பலரும் தவமிருந்த தேர்தல்.  ஏன் எனக் கேட்டால், காரணம் தெரியாது ஆனா வரக்கூடாது, என பலரும் ஜல்லியடித்த தேர்தல்.  இதில் பலப் பல குழப்படிகள் இருக்கிறது என்பதை துக்ளக் ஆண்டுவிழாவில் எஸ்.குருமூர்த்தி விளக்கியிருந்தார்.  நேரம் கிடைக்கும் போது அதை இந்த YouTube பார்க்கவும். அமெரிக்காவின் தேர்தலில் இத்தனை குளறுபடி இருப்பதற்கு இருக்கும் முதல் காரணம் முக்கிய காரணம், இங்கு வலிமையான தேர்தல் ஆணையம் இல்லாதது.  இதையும் குருமூர்த்தி விளக்கியிருக்கிறார்.  இதற்கு ப்ரதான இரண்டு கட்சிகளையும் சொல்லவேண்டும்.  அவர்களுக்கு அது மாறி மாறி சாதகமாக இருப்பதால் அதை அப்படியே துருப்பிடித்து துண்டாகும் வரையில் இருக்கட்டும் என்று விட்டிருக்கிறார்கள்.  மேலும், டிரம்ப், தான் தோற்கடிக்கப் படக்கூடியவர் என்று அவர் நம்பவில்லை அந்த அதீத நம்பிக்கை அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.  சமீபத்தில் ஜிம்மி கார்டரும்(1977-81), அவரைத்தொடர்ந்து ஜார்ஜ் புஷ்-1989-93 (அப்பா) இருவரும்தான் ஒரு தடவை ஆட்சிக்கு பிறகு தோற்றது.  இது சமீபத்தியக கணக்கு.  பழையதை புரட்டிப் பார்த்தால் பலரும் இருக்கிறார்கள்.  இப்போது இந்த வரிசையில் டிரம்ப் சேர்ந்திருக்கிறார்.  அடுத்த ஆட்சிக்கு வந்திருக்கும், ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் கூட்டனி ஒரு திமுக-பாமக அல்லது அதிமுக-பாமக கூட்டனி போலத்தான்.  இவர்கள் இருவருக்கும் எத்தனை நாள் அடிதடி இல்லாமல் செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.  ஹாரிஸ் இவர் இந்தியரும் இல்லை, கறுப்பரும் இல்லை.  இதைச் உரக்கச் சொன்னால் அசிங்க அசிங்கமாக திட்ட பலரும் தயாராக இருப்பது தெரிந்தும் நாம் சொல்வதற்குக் காரணம், இது எம் கருத்து, பிடிக்கவில்லையென்றால் அது உம் கருத்து.  அவ்வளவுதான். அடுத்து அனுமதியின்று குடியேறியவர்கள் சுமார் 1 கோடியே 10 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை தரும் சட்டத்தில் பைடன் கையெழுத்திடப் போவதாக செய்திகள் கசிந்திருக்கிறது.  அதாவது சரியான ஆதாரத்துடன், சரியான விசாவுடன் வந்து அமெரிக்காவில் குடியேறிவிடலாம் என்ற கனவோடு வந்து, இரவு பகல் பாராது உழைத்து, வரி கட்டி, கடந்த 10-15 வருடங்களாக நிரந்தர குடியுறிமைக்காக காத்திருக்கும், பல லட்சம் (கோடிகளிலும் இருக்கலாம்), அனைவரும் முட்டாள்கள்.  சுவர் ஏறி குதித்தவர்கள் அல்லது வேலி தாண்டி வந்தவர்கள், படகில் வந்தவர்கள், கண்டெயினர்களில் வந்தவர்கள், சுற்றிப் பார்க்க வந்தவர்கள் புத்திசாலிகள்.  இதை தடுக்க முயன்ற டிரம்ப் கெட்டவர், இவர்கள் தனது கட்சிக்கு வரும் ஓட்டுகள் என்று பார்க்கும் பைடன் நல்லவர்.  ரொம்ப சரி. 

இந்திய வேளான் விவசாயிகள் சட்டம்

ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி என்று ஒரு நாடகத்தில் எஸ்.வி.சேகர் சொல்லும் ஒரு வசனம், இலங்கை தமிழர்களைப் பற்றியது.  அவர் சொல்லுவார், "அங்க என்ன நடக்குதுன்னு யாருக்கு தெரியும், சொம்மா, வாய்ல உதார் வுட்டுகினே இருக்கனும் அதுவா ஒரு நாள் சரியா பூடும்" நு அதுதான் இப்போது இந்தியாவில் நடப்பது. இந்தியாவில் இருக்கும், 28 மாநிலங்கள் + 8 யூனியன் ப்ரதேசங்களில் - பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மட்டும் எப்படி இந்த புதிய வேளான் சட்டம் பயன் படாது, எப்படி அங்கிருக்கும் விவசாயிகள் மட்டும் பாதிக்கப் படுவார்கள்.  இதைக் கேட்க இந்தியாவில் மொத்தம் மூன்று ஊடகங்கள்தான் இருக்கிறது.  மற்ற அனைத்தும் கிருஸ்துவ மிஷனரி, திருட்டு திராவிடம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கையில் இருக்கிறது.  எப்படி நீட் தேர்வு தமிழ்நாட்டை மட்டும் பாதிப்பதாக புரளி கிளப்பப்படுகிறதோ அதே ரீதியில் இது.  ஒரு விவசாயி தான் பயிரிட்டு, விளைவிக்கும் பொருளை தான் விரும்பும் விலைக்கு, தான் விரும்பும் ஒருவருக்கு விற்க முடியும், அதுவும் அவர் வசிக்கும் இடத்திலிருந்து இந்தியாவின் எந்த மூலைக்கும் விற்க முடியும், அதுவும் எந்த இடைத்தரகரும் இல்லாமல். இவர் விளைவிக்கும் பொருள் அரசு நிர்ணயம் செய்யும் பட்டியலில் இல்லை எனில் அதை செர்க்கவும் முடியும், அதன் விலையை இவரால் நிர்ணயம் செய்யவும் முடியும்,  இதை இப்படி பார்க்கலாம்.  நாம் ஒரு கைப்பேசியில் உபயோகப் படுத்தக் கூடிய ஒரு செயலியை (App) தயார் செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதற்கான ஒரு விலையை நான் நிர்ணயம் செய்கிரேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு இடைத் தரகர் மூலம்தான் விற்க முடியும் என்று வந்தால், நான் ஏன் தேவையில்லாமல் அவருக்கு கப்பம் கட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்புவேனா இல்லையா? உழைப்பது நான், பலன் பெறுவது அந்த இடைத்தரகரா என்று நான் யோசிப்பேனா மாட்டேனா? இப்படி யோசிக்க அந்த விவசாயிகளை விடாமல் துரத்தி துரத்தி அடித்த, அடிக்கும், அடிக்கப் போகும் இடைத்தரகரகள் 90% யார் என்று பார்த்தால் இந்தியாவின் அரசியல்வாதிகள் என்பது புலப்படும். இவர்களைப் பின்புலத்திலிருந்து இயக்குவது யார் என்று பார்த்தால் கிருஸ்துவ மிஷனரிகள், கம்யூனிஸ்ட் கூட்டங்கள்.  இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், இந்த சட்டத்தை அமல் படுத்துவோம் என்று ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதியாகத் தந்தது வீணாக போன காங்கிரஸும் அதன் துணைக் கட்சிகளும்.  இப்போது இதை எதிர்ப்பதும் அவர்களே.  

திரைபடங்கள்:

The Intouchables

Netflix-ல்  பார்த்த 2011-ல் வெளியான ப்ரென்ச் படம் ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டது.  அது தமிழ்/தெலுங்கில் வந்து அமோகமாகக் கொண்டாடப் பட்ட 2016-ல் வெளிவந்த "தோழா" படம்.   தோழா ஒரு சரியான அட்டைகாப்பி என்று சொன்னால் யாரும் அசிங்கப் பட மாட்டார்கள்.  அவ்வளவு ஈஅடிச்சான் காப்பி.  ப்ரென்ச் படம் மிக மிக அனாயசமாக கையாளப் பட்டிருக்கிறது.  நடிப்பவர்களும், அவர்களை நகர்த்திச் செல்லும் கதையும், மிக மிக அருமை. 

One Day:

ஹிந்திப் படம், சற்று வழக்கத்துக்கு மாறான ஒரு கதை மற்றும் கட்டமைப்பு.  வழக்கம்போல் அனுபம் கெர் கலக்கியிருக்கும் படம்.  அவர் ஒருவர் போதும் என்று நினைத்து விட்டார்கள் போல, ஈஷா குப்தாவிற்கு பதில் வேறு ஒருவரை போட்டிருக்கலாம்.  கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

The Old Guard:

சாகாவரம் பெற்ற ஒரு குழுவிற்கும் அவர்களை தேடும், பரிசோதிக்க நினைக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளைக் கொண்ட படம்.  கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

Ala Vaikunthapurramulo:

அல்லு அர்ஜுன் நடிப்பில் வித்யாசமான கதைக் களத்தில் வந்திருக்கும் படம்.  முட்ட பொம்மா என்று பட்டி தொட்டியெல்லாம் கேட்கும் பாடல் இருக்கும் படம்.  சண்டை காட்சிகளுக்காவும், பாடல்களுக்காவும், ஒரு முறை பார்க்கலாம்.  இதில் சமுத்திரக்கனி வில்லனாக வந்திருக்கிறார். 

Raat Akeli Hai:

நவாஸுத்தின் ஸித்திக் (தலைவரின் பேட்ட படத்தில் சிங்காரமாக வந்தவர்) மற்றும் ராதிகா ஆப்தே இருவரின் அருமையான நடிப்பில், ஒரு செம்மையான திரில்லர் படம்.  திருமணமான இரவு கொடூரமான முறையில் வயதான மாப்பிள்ளை கொலை செய்யப் படுகிறார், அதை விசாரிக்கும் போலீசாக ஸித்திக்கும், அந்த கொலையுண்டவரின் மனைவியாக ராதிகா ஆப்தே.  கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

Badla:

தப்ஸி பன்னுவும், அமிதாப் இருவரும் கை கோர்த்துக் கலக்கும் ஒரு படம்.  உங்களை யோசிக்க விட்டு, யோசிக்க விட்டு ஆட்டம் காட்டியிருக்கிறார்கள்.  கதை, திரைக்கதை, நடிப்பு என்று எல்லா இடங்களிலும் சதமெடுக்கிறார்கள்.  இயக்குனர் சுஜாய் கோஷ் பின்னிப் பெடலெடுக்கிறார். 

Grand Master:

2012ல் வெளிவந்த மலையாளப் படம்.  மோகன்லால் மற்றும் ப்ரியாமணி நடிப்பில் வந்த ஒரு திரில்லர் படம்.  நடக்கும் தொடர் கொலைகளை தடுக்க முயலும் மோஹன்லால் எப்படி தடுக்கிறார் என்பதில் முழு படமும் நகர்கிறது.  எல்லா மலையாள திரில்லர் படம் போலவே கடைசி காட்சியில் ஹீரோ, எப்படி இந்த இடத்திற்கு வந்தோம் என்று ஒரு குட்டி லெக்சர் கொடுத்து முடித்து வைக்கிறார்கள்.  இது என்ன மலையாளப் பட டிரெண்டா என்று ஒரு கேரள நண்பரிடம் கேட்டதற்கு அவர் இன்னமும் பதில் சொல்லாமல் நழுவிக்கொண்டிருக்கிறார்.  

பித்தனின் கிறுக்கல்கள் தொடரலாம்……





Saturday, March 02, 2019

பித்தனின் கிறுக்கல்கள் - 51

பித்தனின் கிறுக்கல்கள் - 51


அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

ஏறக்குறைய 3 வருடங்களுக்குப் பிறகு வலைப்பூவில் மீண்டும் சந்திக்கின்றோம்.

சில சமீபத்திய சம்பவங்கள், அதன் தாக்கங்கள், இந்திய மற்றும் அமெரிக்க அரசியல் அநாகரீகங்கள், வேண்டும் மோடி - மீண்டும் மோடி ப்ரச்சாரம், சமீபத்தில் நாம் ரசித்த  நிழற்படங்கள், நிகழ்வுகள் போன்ற எம்மை பாதித்த சில விஷயங்களைப் பற்றி இங்கு கிறுக்கலாம் என இருக்கிறோம்.  வழக்கம் போல் நாம் எழுதியதை படிக்காமலேயே திட்டலாம் என இருப்பவர்கள் பின்னூட்டத்தில் தைரியமாகத் திட்டலாம்.  இல்லை, நீ கிறுக்கியதை முழுவதும் படிப்பேன் என்று இறுமாப்போடு இருப்பவர்களுக்கு அந்த எல்லாம் வல்ல இறைவன் நல்ல புத்தியையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கட்டும்.


வேண்டும் மோடி, மீண்டும் மோடி:
எதுகை மோனையுடன் சொல்லப்பட்ட வாசகம்.  ஒரு தலைவன் திறம்மிக்கவனாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் மோடி போன்ற ஒரு தலைவருக்கும் இப்படி ஒரு வாசகம் வைத்து வாக்கு கேட்கும்படி வைத்திருக்கும் இந்தியாவின் எதிர் கட்சியினரின் கூவத்தை ஒத்த நாற்றம் பிடித்த அரசியலையும், அதில் அடித்துச் செல்லக் காத்திருக்கும் மந்த புத்தி வாக்காளர்களையும் நினைத்தால் பாரதி சொன்னது போல், "நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்".

எது காங்கிரஸ் கட்சியின் 55+ வருட ஆட்சியில் சாத்தியமில்லையோ அதில் பலவற்றை தன்னுடைய முதல் நான்கரை வருடங்களில் சாதித்து காட்டியுள்ளதை எப்படி மக்கள் மறக்கிறார்கள் என்று தெரியவில்லை.  ஒரு அரசின் காண்ட்ராக்ட் என்பது அனைவருக்கும் பொது, அதில் தகுதியுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று மோடி யின் ஆட்சி வெளிப்படையான டெண்டர் சிஸ்டம் நடத்தினால் அது வியாபாரிகளையும், பணக்காரர்களையும் காக்கும் அரசு என்று பொய் ப்ரச்சாரம் செய்யப் படுகிறது அதற்கு ஆயிரக்கணக்கான பேர் கைதட்டல்கள்.  அதே சமயம் எது வெளிப்படையான ஆட்சி என்ற அடிப்படை கூடத் தெரியாமல் ராணுவ ரகசியங்கள் தங்களுக்குத் தெரியவில்லை என்று ஒரு பத்திரிகை எழுத்தாளர் (பராக்கா தத்) சொல்கிறார் அதற்கு படித்த பல இந்தியர்கள் கைதட்டுகிறார்கள்.  படிப்பு என்பது அறிவினை தூண்டும் என்று இனியொருவர் எம்மிடம் சொன்னால் இவர்களைப் போன்ற கருத்தழிந்தவர் கதையைத் தான் சொல்ல வேண்டிவரும்.

ஒரு தலைவர் நல்லவராக, வல்லவராக, பேர் உள்ளவராக, புகழுள்ளவராக இருப்பது என்பது மிக மிக முக்கியம். அதிலும் அவர் தூய்மையானவராக, தன்னலமில்லாதவராக இருப்பது அதைவிட முக்கியம்.  இப்படி எல்லா குணங்களையும் கொண்ட மோடி மீண்டும் இந்தியாவை ஆள வருவது இந்தியாவிற்கும் ஏன் எல்லா இந்தியர்களுக்கும் மிக மிக முக்கியம்.  அதே நேரம் எனக்கும் மோடி மீது சில குறைகள் உண்டு.  

மோடியின் குறைகள்:

  1. சோனியா குடும்பத்தை சுற்றி வளைத்து சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு  நான்கரை வருடங்கள் போதவில்லை எனில் எத்தனை வருடங்கள் தேவை என்பதை மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு தெளிவாக சொல்வது முக்கியம்
  2. பா சிதம்பரம் மற்றும் அவரது மகன், மனைவி அனைவருக்கும் வேண்டிய போது, வேண்டிய இடத்தில், வேண்டிய முன் ஜாமீன் எப்படி கிடைக்கிறது என்று தெரிந்து அந்த ஓட்டையை அடைக்க ஏன் இன்னும் தாமதம்?
  3. இந்தியாவில் இருந்து கொண்டு இந்தியாவின் பேச்சு சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டு பிரிவினை பேசும், சைமன், பாரதிராஜா, கமல், ஸ்டாலின், டேனியல், ராஹூல், மம்தா பானர்ஜி, அகிலேஷ், சந்திரபாபு, மாயாவதி, ஃபரூக் அப்துல்லா, மணிசங்கர், கபில் சிபல், குலாம் நபி ஆசாத், கேஜ்ரிவால், ராஜீவின் முன்னாள் கார் ட்ரைவர் மற்றும் இன்னாள் ம.பி. முதல்வர் கமல் நாத் மற்றும் பா.சிதம்பரம் போன்ற மற்றும் பலரின் பாதுகாப்புகளை உடனடியாக விலக்கி, ஏன் சிறையில் போடவில்லை அல்லது, அவர்கள் குடியுரிமையை ரத்து செய்து, இந்தியா மற்றும் வெளி நாடுகளில் அவர்களுக்கு இருக்கும் அசையும், அசையா சொத்துக்களை பறிமுதல் செய்து நமது இந்திய நாட்டை விட்டு தங்கள் குடும்பத்துடன் வெளியேற்றி விட ஏன் இவ்வளவு தாமதம்?
  4. பொய்க்கு மேல் பொய்யாக ஒவ்வொரு கூட்டத்திலும் உளரும் ராஹுல் மீது ஏன் மான நஷ்ட வழக்கு போட்டு அடக்காமல் இருக்கிறார்?
  5. செக்யூலர் என்பதற்கான அர்த்தம் கூடத் தெரியாமல், இந்து மதத்தை மட்டும் தாக்கும் ஏறக்குறைய எல்லா எதிர்கட்சி அரசியல் வாதிகளையும், ஏன் அடக்க முடியவில்லை?
  6. ஒரு வார்ட் கவுன்சிலர் கூட 10-15 கோடி சொத்து சேர்த்து இருக்கும் இன்னாளில், மூன்று  முறை குஜராத்தின் முதல்வர் பதவி, 5 வருடங்கள் இந்திய ப்ரதமர் பதவி வகித்து, மொத்த சொத்து மதிப்பு 3 கோடிக்கும் கீழ் இருக்கும் இவர் எப்படி ஒரு புத்திசாலி என்று நம்பி நாட்டை மீண்டும் ஒப்படைப்பது? 
இந்தியாவில் ஓட்டளிக்க வாய்பிருக்கும் அனைத்து மக்களும் சிந்தித்து பாஜாகவிற்கு வாக்கு அளித்து மோடியை மீண்டும் ப்ரதமராக அமர வைக்க வேண்டிய கடமை இருக்கிறது.  

இல்லை, நாங்கள் பிச்சை எடுப்பதுதான் எங்களுக்கு முக்கியம், அரசாங்க அலுவலகங்களில் ஜன்னலுக்கு ஜன்னல் கப்பம் கட்டி, தெரு நாயை விட கேவலமாக நடத்தப் படுவதுதான் முக்கியம், உலக அளவில் இந்தியா என்றால் ஒரு குப்பைத் தொட்டி ஊர் என்று கேவலமாக நடத்தப் படுவதுதான் முக்கியம், லஞ்சம் ஊழல் தலை விரித்தாடினால்தான் தங்களுக்கு முக்கியம் என்று இருந்தால் கேடு கெட்ட காங்கிரஸ் மற்றும் அதைச் சுற்றி நிற்கும் அனைத்து கொள்ளைக்கார, தரம் கெட்ட அரசியல்வாதிகளுக்கு தங்கள் பொன்னான வாக்குகளை அளித்து விடலாம் அல்லது சென்னை கூவம் அல்லது அவரவர் வீட்டின் அருகாமையிலோ தொலைவிலோ இருக்கும் ஒரு சாக்கடையில் விழுந்து உயிரை விடலாம் எல்லாம் ஒன்றுதான். 


புல்வாமா தாக்குதல்:
தகவல் தெரிந்த நாள், மிகப் பெரிய துக்க நாள்.  இதிலும் அரசியல் பார்க்கும் டேனியல், சைமன் போன்றவர்களை இன்னமும் ஏன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து, நல்ல முறையில் அவர்களுக்கு திஹாரிலோ அல்லது அந்தமானிலோ சிறையிட்டு ஒரு "நல்ல" பாடம் புகட்ட மத்திய/மாநில அரசுகள் முனையவில்லை என்று தெரியவில்லை.  ஒரு வேளை வர இருக்கும் மத்திய ஆட்சியின் தேர்தலா என்று தெரியவில்லை.  

இந்த செயலுக்கு காங்கிரஸ் மற்றும் காஷ்மீர் தீவிரவாதத்தினை அரவணைக்கும் கட்சிகள் சொல்வது, அந்தத் தற்கொலை தீவிரவாதி ஒரு முறை காஷ்மீரில் நமது ராணுவத்தால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப் பட்டதின் வெளிப்பாடுதான் இந்த தாக்குதல் என்று.  இப்படி கூறும் அனைவருடைய பாதுகாப்பையும் உடனடியாக நிறுத்திவிட வேண்டாமா?

ரிபப்ளிக் தொலைக்காட்சியில் அர்னாப் சொன்னது போல், சம்பவம் நடந்த உடன் இந்தியாவில் இருக்கும் இந்திய ஆட்சியின் எதிர்ப்பாளர்களின் அதே கருத்தை பாக்கிஸ்தானின் இம்ரான் கான் எப்படி வெளிப்படுத்துகிறார்.  ஒரே ஸ்க்ரிப்டா என்று அர்னாப் கேட்பது சரிதான் என்பது எமது கருத்தும்.

ப்ரதமர், இதற்கான பதிலை இந்திய ராணுவம் தரும் என்றும் அதை கட்டவிழ்த்து விட்டாகி விட்டது என்று சொன்னதும், இம்ரானின் நாராசமான அழுகையும் கெஞ்சலும்  நாடறிந்தது.

சில நாட்களுக்கும் முன்பு இந்தியன் ஏர் ஃபோர்ஸ் 10 விமானத்தில் எல்லை தாண்டி சென்று அவர்கள் நாட்டில் இருக்கும் தீவிரவாத முகாம்களை குண்டு வீசி அழித்த பிறகு அதை உலகில் எந்த ஒரு நாடும், ஏன் நம்மை என்றும் எதிர்க்கும் சீனா உட்பட எந்த நாடும் கண்டிக்கவில்லை, மாறாக சீனாவே பாக்கிஸ்தானை வாயை மூடிக்கொண்டிரும் என்று சொல்லி அடக்கி வைத்தது.    இப்படி, நம் நாட்டின் வெளியுறவு கொள்கைகளையும், மற்ற நாட்டோடு நமக்கு இருக்கும் நட்பையும் பலப்படுத்திய தன்னிகரில்லாத ஒரு தலைவனான மோடியால் மட்டுமே முடியும்.  இதெல்லாம் ஈனத்தனமான ஆட்சியைத் தந்த காங்கிரஸால் என்றும் சாத்தியமில்லை.  

எவ்வளவு சீக்கிரம் காங்கிரஸ் கட்சி மற்றும், மம்தா கட்சி, ஃபரூக் அப்துல்லா கட்சி, முஃப்டி முகமதுவின் கட்சி, திமுக, அகிலேஷ் மற்றும் முலயம் சிங்கின் கட்சி, லாலுவின் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, மாயாவதி கட்சி, கம்யூனிஸ்ட் (இடது வலது) அதோடு, நாம் தமிழர், மதிமுக, விசி, முஸ்லீம் லீக் போன்ற லெட்டர் பேட் கட்சிகள் ஒழிகிறதோ அன்றுதான் இந்தியா அடுத்த நிலைக்கு சென்று வல்லரசாக முடியும்.  

அபிநந்தன் :
சமீபத்தில் மிகப் பிரபலமான ஒருவர்.  இந்தியன் ஏர் ஃபோர்ஸில் விங் கமாண்டராக இருப்பவர்.  போனவார பாகிஸ்தானின் எஃப் 16 வகை ஜெட் இந்தியாவில் ஊடுருவ முயன்ற போது அதை தொடர்ந்து சென்று தாக்கி, நொறுக்கி, அதன் பின் இவர் சென்ற அரத பழைய மிக் விமானம் பழுதடைந்து பாரசூட் மூலம் குதித்து பாகிஸ்தானின் பிடியில் இருக்கும் இடத்தில் இறங்கி, அவர்களால் போர்க் கைதியாக கைது சாட்டப் பட்டு இந்த பதிவு வரும் இந்த நேரம், இந்தியா வந்து சேர்ந்திருக்கிறார்.  

இவர் பாகிஸ்தானில் தரை இறங்கிய பிறகு அங்குள்ள பலரால் கடுமையாக தாக்கப் பட்டிருக்கிறார்.  பிறகு அதிர்ஷ்டவசமாக அவர்களின் இராணுவத்தால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்.  பிறகு இந்தியா கொடுத்த அழுத்தத்தால், இம்ரான் கான் இவரை விடுதலை செய்திருக்கிறார்.  உடன் இந்தியாவில் இருக்கும், பிணம் தின்னி பத்திரிகைகளும், நடு நிலை பேசி நாசமாக போகும் பலரும், இம்ரான் கானிடமிருந்து மோடி கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இம்ரான் கான் உலக அமைதிக்காக பாடுபடும் ஒரு பெரியவர் போன்றும் பேசி அதையும் அந்த நாட்டு மக்குகள் நம்பி அவருக்கு சமாதானத்துக்கு நோபல் பரிசு கொடுக்கப் படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.  இந்த கூத்தில் பாகிஸ்தான்காரர்கள் அப்படித்தான் பேசுவார்கள், பேச வேண்டும் அதுதான் அவர்கள் நிலை.  இதில் இப்படி பேசும், இந்தியர்களை நடு ரோட்டில் வைத்து தமிழ்நாட்டில்  அண்ணா சொன்னது போல் முச்சந்தியில் வைத்து சவுக்கால் விலாசினால் என்ன?

ஜெனிவா உடன்படிக்கைக்காக அபிநந்தனை விடுதலை செய்து, புல்வாமாவில் செய்த கொடுஞ்செயலையும் அதைத் தொடர்ந்து இன்று வரை நடந்துள்ள 4 தாக்குதலில் ஏறக்குறைய 10 இந்திய இராணுவ வீரர்கள் மற்றும் சில பொது மக்கள் கொல்லப் பட்டதையும் , ஒரு பக்கம் பேச்சு வார்த்தை என்று சொல்லியபடி நேற்றும் ஒரு தாக்குதல் நடத்திய பாக்கிஸ்தானின் செயல்களை நம் நாட்டிலிருந்து செயல்படும் பத்திரிகைகள் மூலம் மறக்கடித்த இம்ரானின் செயலைக் கண்டிப்பதா, நம் நாட்டில் இருந்து கொன்டு,  கேடு கெட்ட பத்திரிகை தர்மம் என்ற பெயரில் இப்படி கேவலமாக செயல்படும் பத்திரிகைகளை சாடுவதா?

Spam Email:
ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் செயற்குழு மற்றும் அதன் நோக்கம் பற்றி சற்றும் தெரியாத அல்லது தெரிந்து கொள்ள விழையாத ஒருவரிடமிருந்து எனக்கு வந்த ஒரு ஈ-மெயில் அதை பொத்தாம் பொதுவாக ஸ்பாம் ஈ-மெயில் என்று சொல்லக்கூடாது.  அதையும் விட கீழ்த்தரமாகத் திட்ட வேண்டும்.  தமிழ் சங்கத்தின் சார்பாக எனது ஈ-மெயில் எப்படி இந்த கையாலாகத ஒருவனிடம் கிட்டியது என்பது தெரியவில்லை.  ரிச்மண்டில் இன்னமும் என்னுடன் தொடர்பில் இருக்கும் நண்பர்கள் பலரிடம் விசாரித்த போது, அவர்களுக்கு இந்த ஈ-மெயில் வரவில்லை என்பது எனக்கு பல சந்தேகங்களை எழுப்புகிறது.  என் மற்றொரு ரிச்மண்ட்  நண்பனிடம் இன்று காலை (2/3/19) உரையாடியபோது அவனுக்கும் இந்த ஈ-மெயில் வந்திருப்பதாகவும், என்ன செய்யலாம் என்று தற்போதைய தலைவரிடம் கேட்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்தான். ஆக, இது ஒரு உள்வேலையாகக் கூட இருக்கலாம், எப்படி இருந்தாலும், தமிழ் சங்கத்தின் தற்போதைய குழு இதற்கான இறுதி முடிவை எடுக்கட்டும் என்று சற்று பொறுமையாக இருப்போம் என்கிறான் என் நண்பன்.  

1. நாம் ரிச்மண்டை விட்டு வெளியேறிய பிறகு தமிழ் சங்கத்தின் உறுப்பினர் இல்லை
2. ஆனால் இன்னமும் சங்கத்தின் உறுப்பினராக இருப்பவர்களுக்கு வராத இந்த ஈ-மெயில் எமக்கு வந்தது எப்படி?
3. இந்த ஈ-மெயில்கள் எப்படி இந்த ஆள் கையில் கிட்டியது.

இந்த விடை தெரியா கேள்விகளை சில நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதிப்போம்.


திரைப்படங்கள்:
2.0:
சங்கர், ரஜனி, அக்‌ஷய் குமார், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஒரு வழியாக 2.0 வெளிவந்தே விட்டது.  அதுவும் 3D-யில்.  அக்‌ஷய் குமார் வில்லன் ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காக சமுதாயத்தில் புரையோடிப் போன சில விஷமிகளைக் களையெடுக்கும் ஒரு நல்ல வில்லன்.  அவரை எதிர்க்கும் நல்ல ரஜனி மற்றும் சிட்டி ரஜனி.  ரஜனி தன் நடிப்பு வித்தைகளையெல்லாம் இறக்கியிருக்கும் படம் இது.  சங்கர் என்ற ஒரு மெகா மெகா இயக்குனர் தன் திறமை ஹாலிவுட்டின் திறமைகளையெல்லாம் தாண்டியது என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கும் ஒரு படம்.  கண்டிப்பாக 3D-யில் பார்க்க வேண்டிய படம்.

பேட்ட:
இன்னமும் ரஜனிக்கு என்று ஒரு பழைய கூட்டம் உண்டு என்பதை மனதில் வைத்து எடுக்கப் பட்ட படம்.  ரஜனி படம் முழுக்க வருகிறார், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போல ஏறக்குறைய ஒவ்வொரு ஃப்ரேமிலும் வருகிறார்.  படத்தை தனி ஒருவனாக தன் தோள் மேல் சுமந்து எடுத்துச் செல்கிறார்.  கதை - வழக்கம் போல ஈரத்துணியில் முக்கியெடுத்ததுதான். கண்டிப்பாக ஒரு முறை ரஜனிக்காகப் பார்க்கலாம்.

சர்கார்:
வெளி நாட்டில் பணத்தில் கொழிக்கும் விஜய் சென்னையில் ஒரு தேர்தலில் வாக்களிக்க வர, அவரது ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டாக போட்டு விட்டு போய் விட, இவர் அந்த விஷயத்தை பெரிதாக்கி, அரசியல் கட்சிகளும் பெரிதாக்கி, பின்னர் இவரே தேர்தலில் போட்டியிட இப்படி இழுத்திருக்கிறார்கள்.  ஓட்டுப்போட இவர் வரும் அதே ஓட்டுச் சாவடியில் இவரை நன்றாகத் தெரிந்த இவரது குடும்பத்தில் ஒருவரான கதாநாயகி பூத் அசிஸ்டெண்டாக இருக்கிறார் அவருக்குத் தெரியாதா கள்ள ஓட்டு போட ஒருவன் வரும்போது அது தன்னுடைய குடும்பத்தினரின் ஓட்டு என்று, என்னமோ போங்கப்பா எப்படி ரீல் சுத்தினாலும் படம் பார்க்க என்னைப் போல பலர் இருக்கும் வரை இவர்கள் காட்டில் மழைதான்.

விஸ்வாசம்
பேட்ட படத்துடன் மோதி அதைவிட அதிக லாபம் சம்பாதித்ததாகச் சொல்லபடுகிறது. கதைக் கரு வித்யாசமாக இருப்பதாக நினைத்து எடுக்கப் பட்டிருக்கிறது.  அஜித் மற்றும் நயனதாரா வழக்கம் போல நன்கு நடித்து எடுக்கப் பட்டிருக்கிறது.  ஒரு முறை பார்க்கலாம்.

மாரி 2:
வழக்கம் போல் தனுஷ் அநாயாசமாக நடித்து ரோபோ சங்கர் மற்றும் 'இடிதாங்கி' கல்லூரி வினோத்துடன் நடித்திருக்கும் படம்.  கதையை தேர்வு செய்ததில் காட்டிய முனைப்பு கதாநாயகியின் தேர்வில் சொதப்பியிருக்கிறது.  சாய்பல்லவிக்கு நடிப்பு நன்கு வருகிறது ஆனால் அவருடைய பாடி லாங்வேஜ் அவருடைய கதாபாத்திரத்திற்கு சற்றும் ஒத்து வரவில்லை.  எப்போதும் சிரித்தபடி பேசுவது அவருடைய மேனரிசமா இல்லை கதைக்காக இப்படி நடிக்க வைக்கப் பட்டாரா என்பது தெரியவில்லை, சகிக்கவில்லை.  இந்த கதாபாத்திரத்தை ஐஸ்வர்யா ராஜேஷ், அமலா பால் போன்றவர்கள் அருமையாக செய்திருப்பார்கள்.  வில்லன் மலையாள இறக்குமதி நல்ல ஓர் எதிர்காலம் இவருக்கு இருக்கிறது.  கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரலாம்……
























Sunday, January 03, 2016

பித்தனின் கிறுக்கல்கள் - 50

அனைவருக்கும் 2016 புது வருட வாழ்த்துக்கள்.

ஒரு வழியாக 50 வது பதிவை பதிவிட காலம் துணை செய்திருக்கிறது.

புதுவருடத்தில் பலரும் பலப் பல உறுதிமொழி எடுக்கும் இத்தருணத்தில் நம்முடைய வளைப்பூ இருக்கிறதா என்று எட்டிப் பார்த்தால், ஆச்சர்யமாக சிலர் இன்னமும் இந்த வளைப்பூவில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற வரலாற்று உண்மை சற்று நெருடலாக இருக்கிறது.  அதிலும் Sheung Wan லிருந்து (இந்த இடம் ஹாங்காங்கிலிருப்பதாக தெரிய வருகிறது) ஒருவர் இந்த வளைப்பூவில் உலாவியிருக்கிறார்.  அவரது துரதிஷ்டத்திற்கும் ஒரு வணக்கத்தை போட்டு விட்டு, அடுத்த வேலைக்கு செல்லலாம்.

சென்னை மற்றும் கடலூரில் வெள்ளம்
கடந்த 100 வருடங்களில் இது வரை காணாத வெள்ளம், மழை, சேதம், பாதிப்பு என்று எல்லோரும் வருத்தப் படும் நேரத்தில் எதுவும் செய்ய இயலாத நேரத்தில் இயற்கை நம் எல்லோரையும் விட மிக மிகப் பெரியது என்ற உண்மை மீண்டும் ஒரு முறை உறுதிப் படுத்தப் பட்டிருக்கிறது.

சென்னையும், கடலூரும் கண்ட மழை மற்றும் அதைத் தொடர்ந்த வெள்ளம் அசாத்தியம், மிகப் பெரிய இயற்கை பேரிடர் ஆனால் இந்த நேரத்திலும் யாரும் ஏன் இப்படிப் பட்ட ஒரு வெள்ளத்தையும் மழையையும் ஒரு மெட்ரோபாலிடன் நகரம் எதிர் கொள்ள முடியாமல் தத்தளித்திருக்கிறது என்ற உண்மையை சரிவர எதிர் கொள்ள முயலவில்லை.  காரணம் நமது அரசின் மீது மக்களின் சகிப்புத்தன்மையா? ஏரி, குளம் ஆறு இவற்றை மூடிவிட்டு வீடுகள் கடைகள் நகரங்கள் என்று உருவாக்கிய நம்முடைய மக்களின் பேராசையா? இவற்றை மக்கள் செய்யும் போது வாளேயிருந்த அரசாங்க அதிகாரிகளா, அரசியல்வாதிகளா?  கேள்விகள் பலப் பல இருந்தாலும் பதில் நாம் அனைவரும் ஒரு விதத்தில் கறை படிந்திருப்பதால்தான் என்பது எம் எண்ணம்.  நம் எல்லோருடைய உறவினர்கள், நண்பர்கள், அறிந்தோர், அறியாதோர் என பலரும் சென்னையில் அவர்களது வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள், அரசாங்கத்தின் 5 அல்லது 10 ஆயிரம் ரூபாய்கள் நிவாரணம் அவர்களது இழப்பில் ஒரு விழுக்காடு கூட இருக்காது.  பலர் வீட்டில் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கிறது.  இது ஒரு சோக கட்டம் என்பதில் எள்ளலவும் ஐய்யமில்லை.  அனைத்து அரசியல் கட்சிகளும் உதவி செய்திருக்கின்றன என்று மு.கோ தனது பதிவில் பதிந்திருக்கிறார்.  அதோடு அவர் பல புள்ளி விவரங்களை விளக்கமாக தந்திருக்கிறார் எனவே அதை மீண்டும் ஒருமுறை தரவில்லை.  எனது நண்பர்களும், உறவினர்களும் அவர்களது குறைந்த பட்ச இழப்பு சுமார் 5-10 லட்சங்கள் என்று அதிர்ந்து நிற்கிறார்கள்.  காப்பீட்டு அலுவலகத்தில் வேலை செய்யும் எனது நண்பர் மழை நின்ற பிறகு தினமும் காலை 7:30 மணிமுதல் இரவு 3-4 மணிவரை தினமும் வெலை செய்கிறார்.  இவருக்கு சேதம் இவருடைய காரும், ஒரு ஹோண்டா ஸ்விஃப்ட், இவருடைய ஃப்ளாட் 4 வது மாடியியில் இருந்ததால் தப்பித்திருக்கிறார்.  காரும், ஸ்விஃப்டும் சரி செய்ய இவருக்கு குறைந்த பட்சம் 3 லட்சம் தேவைப் படுகிறதாம். இவருடைய காப்பீட்டு கழகம் இதில் 10-ல் ஒரு பங்கு கூட தராதாம்.  இவருக்கே இந்த கதி என்றால் மற்றவர்களுக்கு?

நீர்வழித்தடங்களை பாதுகாப்பது மட்டும் முக்கியம் இல்லாமல் அதை மறைத்தோ அல்லது மூடியோ யார் எடுக்கும் நடவடிக்கையும் மிகக் கடுமையான தண்டனைக்குள்ளாவது மட்டுமே இப்படிப் பட்ட எதிர்கால பேரிடர்களைக் களையக்கூடிய ஒரு சிறிய வழியாக இருக்கும் என்பது எமது கருத்து.

நாஞ்சில் சம்பத்தின் பேட்டி
நாஞ்சில் சம்பத் என்னவோ இது நாள் வரை ஒரு நிலைப் பட்ட கருத்துடன் பேசி வந்தவர் போலும், திடீரென்று தான் பேசுவது என்னவென்று தெரியாமல் பேசியது போலும் இணைய தளத்திலும் மற்ற ஊடகங்களிலும் இவரைப் பற்றி இவருடைய சமீபத்திய தந்தி தொலைக்காட்சி நேர்காணலுக்குப் பிறகு பலரும் எழுதி வருகின்றனர்.  இவர் மதிமுக வில் இருந்த போதும் சரி பிறகு அதிமுக விற்கு மாறிய பிறகும் சரி, இவருடைய பணி அடுத்த கட்சிக்காரர்களைத் தாக்குவது, இவருடைய பலம் இவருடைய பேச்சு, அது சரியா, தவறா என்பது வேறு விஷயம்.  இவரால் இதைத்தான் செய்ய முடியும்.  அதை செய்தார்.  அதிலும், இவர் கொள்கை பரப்புச் செயலாளராக இருப்பதால் இவருக்கு அதிமுகவின் கொள்கையையும் அதை ஒட்டியே நிகழ்வுகளை செய்யவும் இவருக்கு அதிகாரம் இருக்கும் என்று இவரே நம்ப மாட்டார்.  அந்தக் கட்சியில் எல்லாம் நடத்துவது ஒருவர் அவர் யார் என்பது யாவருக்கும் தெரியும். இவர் அந்த நேர்காணலில் பங்கேற்காமல் தவிர்த்திருக்கலாம்.  அதை விடுத்து "யாரால கெட்டேன் நூறால கெட்டேன்" ந்னு பழைய பஞ்சாங்கம் பேசுவது உதவாது.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரலாம்……

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்


Friday, April 17, 2015

பித்தனின் கிறுக்கல்கள் - 49

அனைவருக்கும் மன்மத வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.  சமீபத்துல தமிழ் புத்தாண்டு அன்று என்னோட ரிச்மண்ட் நண்பர்களிடம் (நாகு மற்றும் சிலர்) அளவளாவினேன்.  அப்போது சொந்த குசல விசாரிப்புக்கு பிறகு எங்கள் பேச்சு தமிழ் சங்கத்து வளைப்பூ பக்கம் திரும்பியது.  அப்போது என்னை அவர்கள் மீண்டும் தமிழ் சங்க வளைப்பூவில் எழுத சொல்ல, அதற்கு என்ன சொல்லாம் என்று யோசிப்பதற்குள், ஜார்ஜியாவில் இருக்கும் ஒரு ஜகஜ்ஜால சாமியாருக்கு 27 வருடம் 3 மாதங்கள் சிறை தண்டனை என்ற செய்தி வர அதை சாக்காக வைத்து எழுதுங்கள் என்று என் மற்றுமொரு ஆத்ம நண்பன் சொல்ல சரி என்று சொல்லி எச்சரிக்கை ஒன்றை வளைப்பூவில் பதிந்து விட்டேன்.  எச்சரிக்கை எதற்கென்றால், எமது கிறுக்கல்கள் ரிச்மண்ட் தமிழ் சங்கத்தில் யாருக்கேனும் பிடிக்கவில்லை என்றால் ஒன்று உடனடியாக சொல்லி விடலாம், இல்லை படிக்காமல் அடுத்தவருடைய பதிவிற்கு தாவி விடலாம்.  நாகு சொல்வது போல், என் கிறுக்கல்களை, நாகு, முரளி, மு.கோபாலகிருஷ்ணன், நான் என  நான்கு பேர்தான் படிப்போம் என்றால் ஒன்றும் ப்ரச்சனை இல்லை.  அதையும் மீறி யாரேனும் படித்து விட்டு திட்ட ஆரம்பித்தால், “அதான் அப்பவே எச்சரிக்கை போட்டு விட்டேனே” என்று ஜல்லியடித்து விடலாம் என்பதற்குத்தான் அந்த எச்சரிக்கை.

சொத்து குவிப்பு வழக்கு
இந்த வழக்கு என்ன ஆகப் போகிறது என்று எமக்குத் தெரியாது, ஏன் ஜெ வுக்கே தெரியாது என நினைக்கிறேன், ஒவ்வொரு நாளும் நீதிபதி குமாரசாமி இப்படி கேள்வி கேட்டார், அப்படி கேட்டார், ஜெ மற்றும் சசிகலாவின் வக்கீல்கள் மூச்சு முட்டி திணறி விட்டனர், இடையிடையே அரசு வக்கீல் பவானிசிங்கை கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டார், என்று பலப் பல செய்திகள் விகடனில் வந்த வண்ணம் இருக்கிறது, இதில் எது உண்மை, எது பொய் என்பது அந்த பித்தனுக்கே வெளிச்சம். 

துக்ளக் ஆண்டு விழாவில் (ஜனவரி, 2015) “சோ” சொன்னது போல், இந்த வழக்கின் முதல் தீர்ப்பில் (நீதிபதி குன்ஹா) பல ஓட்டைகள் இருக்கிறது அதுவும் சொத்து மதிப்பீட்டில் பல குளறுபடிகள் இருப்பதால் தானே ஒரு மதிப்பீட்டை அவர் செய்திருப்பது (அவருக்கு அந்த தகுதி உண்டா என்பது ஒரு சட்ட சிக்கல் வேறு), சொந்தக் கருத்துக்களை அங்கங்கு அள்ளித் தெளித்திருப்பது என்று பல இடங்கள் ஜெ விற்கு சாதகமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார். இதை ஜெ யின் வழக்கறிஞர் எப்படி தனது கட்சிக்கார்ர் சார்பாக மாற்றுவார் என்று தெரியவில்லை, அவரது வாதமோ சரியில்லை என்பது விகடனாரின் கருத்து.  ஆனால், இத்தனை நடக்கும் போதும், அ.தி.மு.கவின் ஓட்டு வேட்டையில் எந்த ஓட்டையையும் திமுகவினால் போடமுடியவில்லை.  இத்தனைக்கும் தமிழகத்தில் நடப்பது ஒரு நிழல் ஆட்சி என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தும், கலைஞர் மற்றும் ஸ்டாலினால் இதை சாதிக்க முடியவில்லை.  இதற்கு காரணம் அதிமுக மீது மக்களுக்கு இன்னமும் கோபம் வரவில்லை, அல்லது அவர்களுக்கு மாற்றாக திமுகவையோ, தேமுதிகவையோ அல்லது மற்றவர்களையோ மக்கள் ஏற்கவில்லையோ என்ற எண்ணம்தான் எமக்கு வருகிறது. 

இதற்கு இடையில், திமுக வின் அன்பழகன் பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமனம் செய்தது சரியில்லை என்று பதிந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் இரு நபர் பெஞ்சில் ஒரு நியமனம் சரி என்றும் ஒருவர் சரியில்லை என்றும் தீர்ப்பளிக்க, இப்போது அந்த வழக்கு மூவர் பெஞ்சிற்கு சென்றிருக்கிறது.  இதில் சரி என்று தீர்ப்பளித்தவர் ஒரு தமிழர் (பானுமதி) என்பதால் அவர் பெயர் மாடியிலிருந்து விழுந்த பித்தளை சொம்பு மாதிரி அடி வாங்கிக்கொண்டிருக்கிறது. தவறு என்ற நீதிபதி (மதன் லோகூர்) அதை சொல்லும் சாக்கில் தனது ஆதங்கங்களையும் சேர்த்து கொட்டி  ஒரு தீர்ப்பை சொல்லியிருக்கிறார்.  சரியில்லை என்றால் அதற்கான காரணத்தை சொல்லிவிட்டு விலக வேண்டிய இடத்தில் இருக்கும் ஒருவர் இப்படி சொந்த கருத்தை சொல்லி தீர்ப்பளிப்பது ஏன் என்று தெரியவில்லை.  இவருடைய தீர்ப்பில் இந்த கிரிமினல் வழக்கு 15 வருடங்களாக நடை பெறுவது ஒரு தவறான முன்னுதாரணம் என்று சொல்லியிருக்கிறார்.  இதற்கு முன்பு பீஹார் முன்னால் முதல்வர் லாலு ப்ரசாத் யாதவின் மாட்டுத் தீவன ஊழல் வழக்கு (950 கோடி) 1997ல் துவங்கி 2013ல் அவருக்கு 5 வருட சிறை தண்டனையும், 25 லட்சம் அபராதமும் கொடுக்கப்பட்டு சிறை சென்ற இரண்டரை மாதத்தில் வெளியே வந்து, முலாயம் சிங் யாதவ், நிதிஷ் குமார் என்று கூட்டத்தை கூட்டி அரசியல் செய்த படி இருக்கிறார்.  இது பாவம் நீதிபதி மதன் லோகூருக்கு தெரியவில்லை போலிருக்கிறது.  லாலுவை வெளியே விட்டதால் ஜெ வை வெளியே விடவேண்டும் என்று நான் சொல்வதாக நினைக்க வேண்டாம்.  சட்டம் என்பது யாவருக்கும் பொது என இருக்க வேண்டும், ஒரு மாயாவதி, மம்தா என வேண்டியவர்களுக்கு ஒரு வழியாகவும், வேண்டாதவர்களுக்கு வேறு மாதிரியாகவும் இருக்கக் கூடாது என்பது எம் வாதம்.


2016-ல் தமிழக் சட்டசபைத் தேர்தல்
சமீபத்தில் விகடனில், வரும் டிசம்பரில் தமிழக சட்டசபைக்கு தேர்தலை நடத்த ஜெ முடிவெடுத்திருப்பதாக  ஒரு செய்தி கசிந்திருக்கிறது.  அதற்கு பலப் பல காரணங்கள் தலை விரித்தாடினாலும், அந்த தேர்தலிலும் அதிமுக வெல்வதற்கான சாத்தியம் விரவியிருக்கிறது என்பது எம் கருத்து.  இதற்குள் ஜெ யின் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டில் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வருமாயின், எதிர் கட்சிகள் பாடு பெரும்பாடுதான்.  அதிலும், இந்த முறை அதிமுக பாஜக வோடு கூட்டணி வைத்தால் கண்டிப்பாக வெற்றி அதிமுக வுக்குத்தான் ஆனால், எதற்கு பாஜக வை தேவையில்லாமல் தமிழகத்தில் வளர்த்து விட வேண்டும் என்று ஜெ நினைக்கலாம்.  எது எப்படியோ, பா.ம.கவும் தே.மு.தி.க வும் பாஜக வுடன் கூட்டனி வைப்பது கடினம்தான்.  அவர்கள் திமுக பக்கம் போனால் அவர்களுக்கும் டெபாசிட் கிடைப்பது கடினம்தான்.  முதலமைச்சர் கனவில் இருக்கும் விஜயகாந்தும், முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கப் பட்டிருக்கும் அன்புமணியும் திமுக தலைமையையோ அல்லது ஸ்டாலினையோ முதலமைச்சராக ஏற்றுக் கொள்வது கடினம்தான்.  வாசனின் கட்சி (த ம க) திமுக பக்கம் சேரலாம், வாசனுக்கு திமுகவின் ஊழல் விஷயங்கள் நன்கு தெரியும் அப்படி இருக்கும் போது அவர்களோடு சேருவாரா என்பதும் கேள்விக் குறிதான்.  கலைஞருக்கு விடுதலை சிறுத்தைகள், தி.க, புதிய தமிழகம் (டாக்டர் கிருஷ்ணசாமி), மனித நேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் என சில துக்கடா கட்சிகள் இருக்கிறது அவர்களை கட்டி இழுத்து செல்வது போதாது என்று அவர்களோடு அனேகமாக காங்கிரஸையும் சேர்த்து இழுத்து செல்ல வேண்டியிருக்கலாம். 

திக வீரமணி – தந்தி டி.வி. பேட்டி
நாகு எனக்கு வீரமணி தந்தி டிவியில் கொடுத்த பேட்டியின் யூட்யூப் இணைப்பை அனுப்பியிருந்தார்.  10 நிமிடங்கள் கூட பார்க்க முடியாத அளவிற்கு அபத்தமாக இருந்தது வீரமணியின் பதில்களும் வாதங்களும். இதற்கு பிறகு திக அள்ளக் கைகள் இந்த பேட்டியில் பேட்டியாளர் பாண்டே வை, வீரமணி பிரித்து மேய்ந்து விட்டார், தண்ணி காட்டி விட்டார், என்றெல்லாம் செய்தி பரப்பியதாக எனது சென்னை உறவினர் மூலம் தெரிந்து கொண்டேன்.  வின்னர் படத்தில் அடிபட்டு உட்கார்ந்திருக்கும் வடிவேலுவை பார்க்கும் இரண்டு ஊர்காரர்கள் சொல்லும் ஒரு டைலாக்: “அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இவ்வளவு ரத்தம்னா, அடி வாங்கினவங்க கதி என்ன ஆச்சோ தெரியலையே”   அதுமாதிரி அடி கொடுத்த கைப்புள்ளை வீரமணி என்று வேண்டுமானால் அவரை இனி சொல்லலாம். 

திடீரென, தாலி அணிவது தவறு என்று தோன்றியிருக்கிறது இந்த கையாலாகாத கூட்டத்திற்கு, அவர்களது திருமணத்தின் போது அதை அணியும் போதும், இது நாள் வரை அதை அணிந்திருந்த போதும் அவர்களது பகுத்தறிவு எங்கே போனது, பன்றி மேய்க்கவா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. நல்ல மன நிலையில் இருக்கும் ஒரு மனிதன் திடீரென ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ அல்லது மதத்தை சேர்ந்தவர்களையோ பார்த்து கல் எறிந்தால், அந்த மனிதனை தவிர்த்து நகர்ந்து செல்லும் பகுத்தறிவு அந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு இருக்கும் வரை இவர்களுடைய இந்த அசிங்கங்கள் நடந்து கொண்டுதானிருக்கும்.  இப்படி செய்யப் பட்ட கேலிக் கூத்தில் வீரமணியின் குடும்பத்தினர் எவரும் தங்கள் தாலியை கழற்றியதாக செய்தியில்லை.  இதற்குப் பிறகும் இப்படிப் பட்ட பித்தலாட்ட கூட்டத்தை எப்படி நம்புகிறார்கள் என்பதும் தெரியவில்லை.
  
ஜார்ஜியா மாகாணத்தின் ஜகஜ்ஜால சாமியார்
ஜார்ஜியா மாகாணத்தின் போலி சாமியாருக்கு 27 வருடங்கள் சிறை தண்டனை அளித்திருக்கிறார்கள்.  இவரைப் பற்றி 2009லும் பின்னர் 2010லும் எமது கிறுக்கல்களில் எழுதியிருந்ததை என் ரிச்மண்ட் நண்பர் முகநூலில் குறிப்பிட்டு சொல்லி என்னை இதைப் பற்றி எழுதச் சொன்னார்.  இதில் எம் பங்கிற்கு எழுத எதுவும் பாக்கி இல்லாமல் பல ஊடகங்களிலும் இந்த செய்தி பரவியிருக்கிறது.  இவரது தண்டனைக் காலம் முடிந்து இவர் வெளியே வந்ததும் (வந்தால்) இந்தியாவிற்கு நாடு கடத்தப் படுவார் என்பதும் இவருடைய மனைவி  நாடு கடத்தப் பட்டு விட்டர் என்பதும் உபரி செய்தி.  இவரது தண்டனைக்கும் அப்பீல் உண்டு, அது என்னவாகப் போகிறதோ தெரியவில்லை.

2016-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்
ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி க்ளிண்டன் போட்டியிடப் போவதாக செய்தி வந்திருக்கிறது. அது வந்த நாள் முதல், ஊடகங்களில் பொது மக்களின் பின்னூட்டங்களில் அதிகம் வறுபடுபவராக இவர் இருக்கிறார்.  அதிலும் ஒரு சில பின்னூட்டங்கள் மிக மிக கடுமையான தாக்குதலுடன் இருக்கிறது.  தன் வீட்டையே ஒழுங்காக பாதுகாத்துக் கொள்ள முடியாத இவரால் நாட்டை எப்படி பாது காக்க முடியும் என்ற சுமார் தாக்குதலில் ஆரம்பித்து, இவருடைய நேர்மை, திறமை, குணம் என்று வகை வகையாக தாக்கப் படுகிறார்.  இப்போது எம்முடைய கவலை, இந்த தாக்குதல்கள் எல்லாம் இவருக்கு ஒரு வித அனுதாபத்தை சம்பாதித்து தந்து இவர் அதிபராக வந்து விட்டால், பாரதி சொன்னது போல் இவருக்கு வாக்களித்தவர்கள் எல்லாம் 

"கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் இவையென்னும்  அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்றே நிதம்
பறிதவித்தே உயிர் துடி துடித்து
துஞ்சி  மடிகின்றாரே இவர் துயர்களை தீர்க்கவோர் வழியிலையே " என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

       சினிமா
பேபி (ஹிந்தி)
சமீபத்தில் பார்த்த படங்களில் மிகச் சிறந்த படமாக பேபியை சொல்வேன்.  இயக்கம் நீரஜ் பாண்டே - A Wednesday, Special 26 போன்ற படங்களைத் தந்தவரின் அடுத்த படைப்பு.  இந்த படத்தை பார்த்ததும் விஸ்வரூபம் படத்துக்கு கமலை கடுப்பேற்றிய கும்பல் இந்த படத்தில் கமல் நடித்திருந்தால் அவரை கொளுத்தியே இருப்பார்கள் என்று தோன்றியது.  இந்த படத்தில் வருவதில் 5% தான் விஸ்வரூபத்தில் இருக்கிறது என்பது எம் கருத்து.

கதையை சொல்லப் போவதில்லை, காரணம், படம் பார்க்கும் உங்களுக்கு அது ஒரு தடையாக இருக்கும்.  கண்டிப்பாக பாருங்கள்.

சங்கரின் மற்றுமொரு ப்ரமாண்டமான படைப்பு 'ஐ'.  விக்ரம் வழக்கம் போல் அசத்தலாக நடித்து வெளிவந்த படம்.  படம் விக்ரம் என்ற மாபெரும் கலைஞனை நம்பியே நகர்கிறது.  நடு நடுவே ஏமி ஜாக்ஸனின் அழகும், குறைந்த ஆடைகளும் படத்தை நகர்துவது போல தோற்றமளித்தாலும், விக்ரம் இல்லாமல் இந்தப் படம் அரை இன்ச் கூட நகர்ந்திருக்காது.  
கதை வழக்கம் போல பழிவாங்கும் கதைதான் ஆனால் அதை சொல்லியிருக்கும் பாங்கு அதற்காக மெனக்கெட்ட விக்ரம் என்று நம்மை ப்ரமிக்க வைக்கிரது.  பாடல்கள் ஓரிரு முறை கேட்டால் கண்டிப்பாக முணுமுணுக்க வைக்கக்கூடியது.  படத்தின் நீளம் அதிகம், காட்சிகள் சடக் சடக்கென்று, நிகழ்காலம், ஃப்ளாஷ்பாக் என்று மாறுவது குழப்பமாக இருக்கிறது என்று ஜல்லியடிப்பவர்கள் பாவம் கரகாட்டக்காரன், ராஜகாளியம்மன் என்று எதாவது பார்க்கட்டும்.  கண்டிப்பாக ஓரிரு முறை பார்க்கக்கூடிய படம்.  குடும்பத்துடனா என்றால் சற்று சங்கடம்தான், தனியாகவோ அல்லது துணைவியோடோ கண்டிப்பாக பார்க்கலாம்.

லிங்கா
எனக்கு மிகவும் பிடித்திருந்தது தாத்தா ரஜனியின் புயல் வேகம்.  கண்டிப்பாக ஒருமுறை குடும்பத்துடன் பார்க்கலாம்.  நல்ல பிரிண்ட் ஆக இருந்தால் ரொம்ப முக்கியம். இந்தப் படம் வெளிநாடுகளில் நன்கு ஓடியதாக செய்தி வந்தது.   தமிழகத்தில் நன்கு ஓடியும் அழுது அடம் பிடித்து பிச்சை எடுப்பேன் என்று மிரட்டி ரஜனியிடம் இருந்து வினியோகஸ்தர்கள் பணம் வாங்கிக் கொண்டு வெக்கமே இல்லாமல் அதற்கு அடித்துக் கொண்ட கொடுமையும் நடந்தது.  

படத்தில் இந்தக் காட்சி அந்தப் படத்திலிருந்து திருடப்பட்டது, அந்தக் காட்சி சரியில்லை, இது போர், இது பரவாயில்லை என்று எம்மைப்   போல எல்லாம் தெரிந்தது போல் விமர்சனம் எழுதுபவர்களை ஒதுக்கி விட்டு படம் பாருங்கள்.

மீகாமன்
நல்ல கதை நல்ல நடிகர் இருந்தும் அப்படி சொதப்புவது என்று இந்த படத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.  குருத்திப் புனல் பாகம் 2 என்று சொல்லக்கூடிய கதை, ஆர்யாவின் நடிப்பு எல்லாம் இருந்தும் பல சொதப்பல் காட்சிகளால் படம் சூப்பர் என்ற இடத்திலிருந்து பரவாயில்லை ரகத்துக்கு போய் விட்டது.  கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.  சொல்ல மறந்து விட்டேன், இந்த படத்தில் ஹன்சிகாவும் இருக்கிறார்.

காக்கிசட்டை
சிவகார்த்திகேயனின் நடிப்பில் காமெடி அதிகம் கலந்து வந்திருக்கும் படம். கமலின் காக்கி சட்டை பெயர் இருந்தாலும், இது ஒரு முறை பார்க்கக் கூடிய படமாக இருக்கிறது.

ஆக்ஷ ன் சிவா விற்கு ஒத்து வரவில்லை, அதுவும் காமெடி போல இருக்கிறது,
திரைக் கதையில் சில ஓட்டை இருந்தாலும், குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்கலாம்.

என்னை அறிந்தால்
நல்ல, தைரியமான, ஆக்ரோஷமான, புத்திசாலியான மனைவியை இழந்த போலீஸ், அவரை துரத்தி அல்ல துரத்த வைத்து தாக்கும் புத்திசாலியான, கொடூரமான வில்லன், சொதப்பலான எடிட்டிங், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், முடிவு எல்லாம் இருந்தால் அது கெளதம் மேனனின் மற்றுமொரு படம்.  இந்த உலக மகா எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் மீண்டும் ஒருமுறை தந்து நம்மை தாக்கியிருக்கிறார்.  பாவம் அஜித் தெரியாமல் ஒப்புக் கொண்டு விட்டு இப்படிப் பட்ட த்ராபை படத்தில் நடித்து படத்தை தள்ளிக் கொண்டு போக முயற்சித்து தோற்றிருக்கிறார்.  

பூஜை /ஆம்பள
விஷால் நடித்ததாக சொல்லிக்கொண்டு வந்திருக்கும் படங்கள் இவை. 
பூஜை - இயக்கம் ஹரி, கதாநாயகி ஸ்ருதி ஹாசன், வில்லன் முகேஷ் திவாரி , காமெடி பரோட்டா சூரி இசை யுவன், ஸ்ருதி ஹாசனுக்கு குரல் அவரே தனது கர்ண கடூர குரலில் பேசியிருக்கிறார் சகிக்கவில்லை. 
ஆம்பள - இயக்கம் சுந்தர் சி. கதாநாயகி ஹன்சிகா, வில்லன் ப்ரதீப் ராவத், காமெடி சந்தானம் இசை ஹிப் ஹாப் தமிழா (ஆதித்யா அண்ட் ஜீவா),

இதைத் தவிர வேறு வித்தியாசம்  இருப்பதாக எமக்குத் தெரியவில்லை.  பொழுது போகவேண்டும் என்றால் மூளையை கழட்டி வைத்து விட்டு தெலுங்கு படம் பார்ப்பதைப் போல பார்க்கலாம்.



பித்தனின் கிறுக்கல்கள் தொடரலாம்?

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

Thursday, April 26, 2012

பித்தனின் கிறுக்கல்கள் - 48


உ.பி மற்றும் 4 மாநில தேர்தல்கள்
உ.பி. தேர்தல் பலப் பல கூத்துகளுக்குப் பிறகு முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு பெரும்பான்மையான வித்யாசத்தில் வெற்றியை அள்ளித் தந்து முடிந்திருக்கிறது.  இவரது மகன் அகிலேஷ் இந்தியாவில் குறைந்த வயதில் முதலமைச்சராகும் வாய்ப்பைப் பெற்று, சென்னையில் ஒரு கிழவர் இன்னமும் தனது தொண்டுகிழத் தந்தையார் பதவி விலகக் காத்துகொண்டு இளைஞர் அணித் தலைவர் என்ற பதவியைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார், அவருடைய வயிற்று எரிச்சலை கொட்டிக் கொண்டிருக்கிறார். 

முடிவுகள் பலரும் எதிர் பார்த்தது போலத் தான்.  முலாயம், அல்லது மாயாவதி இருவரில் ஒருவர் முதல் மற்றவர் இரண்டாம் இடம், மூன்றாவது நான்காவது இடத்திற்கான போட்டி பாஜக, காங்கிரஸ் இடையே என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான் இருந்தாலும் இப்படி ஒரு மெஜாரிடி முலாயமுக்கு கிடைக்கும் என்று அவரே எதிர் பார்த்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.

மிக வயதான முதலமைச்சரைப் பார்த்த இந்தியா இப்போது சிறுவயதுடைய ஒரு முதல்வரைப் பார்க்கிறது.  இதனால் உ.பி.யில் இருக்கும் நிர்வாகச் சீர்கேடு உடனடியாகத் தீரப் போவதில்லை.  மாயாவதி தனது வகுப்புவாதப் பேச்சை தீவிரப் படுத்தி, அகிலேஷை பாடாய் படுத்தி எடுக்கப் போகிறார்.  அவர் சாதாரணமாகவே “தூள்” பட சொர்ணக்காவுக்கே அக்கா மாதிரி இருப்பவர், இப்போ தேர்தல் தோல்வின்னு உபி மக்கள் சொறிஞ்சு விட்டிருக்காங்க என்ன கண்றாவியெல்லாம் நடக்கப் போகுதோ.  எப்படியும் செவிட்டு ப்ரதமர் எதுவும் செய்யப் போவதில்லை.  போதாத குறைக்கு ராகுல் தேர்தல் சமயத்துல உபி ஏழைங்க வீட்டுல இருந்த கஞ்சி டீ எல்லாம் குடிச்சு அவங்களை இன்னும் ஏழையாக்கிட்டு வந்திருக்கார்.  அதனால அவராலதான் தோத்தோம்ன்னு உபி காங்கிரஸ் கும்பல் நினைச்சு கிட்டு அவங்க பங்குக்கு கொஞ்சம் கூத்தடிக்கப் போராங்க.  எது எப்படியோ, அகிலேஷ்கு கொஞ்சம் கஷ்ட காலம்தான்.

தமிழகத்தின் மின்வெட்டு
வெளியில் நாத்திகம் பேசிக் கொண்டு வீட்டில் சாமிகும்பிடும் திராவிட கட்சிகள் கூட கடவுளை பற்றிப் பேச வைத்திருக்கிறது தமிழகத்தின் மின்வெட்டு.  சாமியும் கரண்டும் ஒன்றாம், இரண்டும் கண்ணுக்குத் தெரியாமலேயே இருக்கிறதாம்.  இவங்கதான் சாமியே இல்லைன்னு ஜல்லியடிக்ரவங்களாச்சே, இல்லாத ஒன்னை எதுக்கு கரெண்டோட கம்பேர் பண்றாங்கன்னு கேட்டா நாம தமிழின விரோதிகள்.  கூடங்குளம் அணு மின்நிலையம் திறந்தா 1000 மெகாவாட் மின்சாரம் கிடைக்குமாம் அதில் கணிசமான பகுதி தமிழகத்துக்கும் வரும்ன்னு ஜெ யும், கொஞ்சம்தான் தருவோம்னு மத்திய அரசும் ஆளுக்கு ஒரு பக்கம் பேசிகிட்டு இருக்காங்க, தமிழகத்தோட மின் வெட்டை முழுவதுமாக இல்லைன்னாலும், கொஞ்சமாவது இது குறைக்கும் என்பது பலரோட எதிர்பார்ப்பு.  இது கூடவே கூடாதுன்னு உதயகுமார்ன்னு ஒருத்தர் அடாவடி பண்ணிட்டு இருக்கார்.  அவரை தலைமேல தட்டி உக்கார வெச்சாத்தான் இது நடக்கும் போல இருக்கு.  அந்த பூர்வாங்க வேலை நடந்துகிட்டு இருக்கு என்பது ஒரு நல்ல விஷயம்.

தமிழக இடைத்தேர்தல்:
சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிவில் அ.இ.அ.தி.மு.க மற்ற கட்சிகளை அனைத்தையும் அடித்து நொறுக்கி டெபாசிட் இல்லாமல் செய்து பெற்றிருக்கிற வெற்றி பணம் கொடுத்து வந்ததா இல்லை ஜெ யின் ஆட்சியில் இருக்கும் நம்பிக்கையால் வந்ததா என்று ஒரு பட்டி மன்றம் போட்டு விவாதிக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது.  இந்த சூடு ஆறுவதற்குள் அடுத்த இடைத்தேர்தல் புதுக்கோட்டையில் நடக்க இருக்கிறது.  திமுக உட்பட பலரும் இதை தவிர்த்து விட பல ப்ரயத்தனங்களைச் செய்த வண்ணம் இருக்கிறார்கள்.  காரணம் மின்வெட்டு, மின்சார விலை உயர்வு, பஸ்கட்டண உயர்வு எல்லாம் இருந்தும் அதிமுகவின் சங்கரன் கோவில் அசுர வெற்றி அனைவரையும் தோல்வி பயத்தில் தள்ளியிருக்கிறது.  புதுக்கோட்டை தொகுதியில் இதற்கு முன்பு வெற்றி பெற்றது இ.கம்யூனிஸ்ட், இவர்களுடன் இப்பொழுது கூட்டனி இல்லாது இருந்தாலும், ஜெ இந்தத் தொகுதியை இ.கம்யூனிஸ்டுக்கே விட்டுக் கொடுத்திருக்கவேண்டும் என்பது எமது கருத்து.  அரசியலில் நாம் நினைப்பது நடப்பது என்பது எமது கனவிலும் நடக்காத ஒரு விஷயம் அதற்காக நமக்கு சரி என்று மனதில் பட்ட ஒன்றைப் பற்றிக் கிறுக்காமல் இருக்க எம்மால் முடியாது.

இலங்கை
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் ஐ.நாவில் இந்திய ஆதரவுடன் நிறைவேற்றப் பட்டது. இது செய்தி.  இதைப் பற்றி துக்ளக் இதழ்: 3/29/2012 ல் விவரமாக வந்திருக்கிறது.  இது பற்றி துக்ளக்கில் படிப்பதற்கு முன் ஐநாவின் வளைதளத்தில் சென்று பார்த்த போது பல விஷயங்கள் புலப்பட்டன அதன் பிறகு எதற்காக இந்த உதவாக்கரை தீர்மானத்தின் மீது பலரும் இத்தனைக் கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறார்கள் என்ற குழப்பமும் வந்தது.  அதன் பிறகு சோ வின் கட்டுரையைப் படித்தவுடன் நம் கருத்தை ஒத்த மற்றொருவரும் இருக்கிறார் என்பது ஒரு ஆறுதலான விஷயம்.  அதே நேரம், சமீபத்தில் வெளிவந்த சானல் 4ந் இலங்கையில் நடந்த படுகொலைகளை வெளிக் கொணர்ந்த ஒளிப்பதிவுகள் குறித்த அவரது கருத்துக்கள் எமக்கு ஏற்புடையதில்லை.  எமக்கு இலங்கையில் நடந்தது போர் இல்லை ஒரு தீவிரவாத கும்பலை ஒழிக்கும் நடவடிக்கை என்பது அவருடைய கருத்தோடு ஒத்த கருத்தாக இருந்தாலும், அவர்கள் அப்பாவி குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், சாமானிய குடிமகன்களுக்கும் செய்த கொடுமைகளை சோ அவர்கள் கண்டிக்க முடியாவிட்டாலும், அதை நியாயப் படுத்தாமல் இருந்திருக்கலாம்.

அமெரிக்க அதிபர் தேர்தல்
அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தற்போதைய அதிபர் தயாராகி வரும் இந்த நேரத்தில் அவரை எதிர்க்கக் கூடிய தகுதியிருப்பதாக குடியரசுக் கட்சியின் சார்பில் முன்னனியில் இருக்கும் மிட் ராம்னி அதிபருக்கு கொஞ்சம் ஆட்டம் காட்டுவார் என்று நம்பும் பலரில் நாமும் ஒருவர்.  கடந்த நான்கு வருடங்களில் அமெரிக்காவில் பாலும் தேனும் பெருகி ஓடும் என்று யாரும் நம்பவில்லை ஆனால், இப்படி கஞ்சிக்குக்கூட வழியில்லாமல் செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று சொன்னால் அது அவர்களது அறியாமை என்றுதான் எம்மால் சொல்ல முடியும். 
இன்றைய அதிபரின் சக்கரைத் தடவிய பேச்சைக் கேட்டுவிட்டு இவரது ஆட்சி தமிழகத்தின் 1967-ம் ஆண்டு துவங்கிய அண்ணாத்துரையின் ஆட்சியைப் போலத்தான் இருக்கப் போகிறது என்ற எமது கணிப்பு பொய்க்கவில்லை என்பது எமக்கு இனிப்பான செய்தியில்லை.

திரைப்பட விமர்சனங்கள்
HUGO
எமது ரிச்மண்ட் நண்பனின் வேண்டுகோளை வழக்கம் போல் நிராகரித்து விட்டு இந்தப் படத்தை பார்த்து நொந்தேன்.  அதிலும் 3-டி வேறு, புத்தகத்தில் அருமையாக இருந்தது, அதே போல திரையிலும் இருந்தது என்று எமது நண்பனின் மூத்த மகள் எமக்கு கொஞ்சம் வேப்பிலை அடிக்க உண்மை என்று நம்பி இந்தப் படத்தை திரையரங்கில் பார்த்தேன்.  பேசாமல் ரெட் பாக்ஸ்சில் வந்ததும் பார்த்திருக்கலாம்.  13$ மிச்சமாயிருக்கும். 

HUNGER GAMES
இந்த முறை எமது ரிச்மண்ட் நண்பனின் வேண்டுகோளை நிராகரிக்காமல் இந்தப் படத்தை திரையரங்கில் பார்த்தேன்.  புத்தகம் படித்திருந்தால் இந்தப் படத்தை நன்கு ரசிக்கலாம் என்ற எமது நண்பனின் மகளின் கருத்தை ஆதரிக்கிறேன்.  ஆனால் கதையைப் படிக்காமல் பார்த்தாலும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.  சில இடங்கள் மனதை வருத்துகிறது, சில இடங்களில் இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பது அபத்தமாகவும், அருவருப்பாகவும் இருக்கிறது.  திரைக்கதையில் சில ஓட்டைகள் இருக்கிறது, கதையில் பலப் பல ஓட்டைகள் இருக்கிறது. இது போன்ற கருத்துக்கள் கொண்ட பல திரைப்படங்களை ஏற்கனவே பார்த்துவிட்டதால், பல காட்சிகள் அதிர்ச்சியாக இல்லை.  ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.

WELCOME
ஹிந்திப் படம்.  நானா படேகர், அக்‌ஷய் குமார், காத்ரினா கய்ஃப், அனில் கபூர் மற்றும் பலர் வந்து போயிருக்கும் சப்பை படம்.  படம் வெளிவந்து 5 வருடங்கள் ஆகியிருக்கும்.  தாங்க முடியாத திரைக்கதை சொதப்பல், கமலின் மைக்கேல் மதன காமராஜன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை காப்பியடித்தும் சகிக்கவில்லை. 

வேட்டை
ஆர்யா, மாதவன்,  சமிரா ரெட்டி, அமலா பால் நடித்து வெளிவந்துள்ள லிங்குசாமியின் படம்.  லாஜிக் பார்க்காமல் மசாலாப் படம் பார்க்க ஆசையிருந்தால் கண்டிப்பாக பார்க்கலாம்.  கதை:  அண்ணன் மாதவன் பயந்த சுபாவம், தம்பி ஆர்யா அடிதடி ஆள், இருவருக்கும் பாசம்னா பாசம் அப்படி ஒரு பாசம், அதே போல் அக்கா சமீராவும் தங்கை அமலா பாலுக்கும் ஒரு பாசம், இதான் கதை.  காமெடிக்கு யாரும் தேவையில்லை என்று மாதவனும் ஆர்யாவும் பெடலெடுக்கிறார்கள்.  அனல் பறக்க சண்டை போடுகிறார்கள்.  அப்பப்போ குத்துப் பாட்டுக்கு ஆடுகிறார்கள், வேற என்ன வேண்டும்.

ஒரு கல் ஒரு கண்ணாடி.
உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு, நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்.  படத்தில் பெரிய கதையென்று இல்லை. ஒரு சாதாரண வாத்தியாரின் மகன் உதயநிதி டெபுடி கமிஷனர்(ஷாயாஜி ஷிண்டே) பெண்ணை (ஹன்சிகா மோட்வானி) காதலிக்கும் கதை.  திரைக்கதையும், காமெடி இல்லாத காட்சியும் தேடினாலும் கிடைக்காது.  சந்தானம் விஸ்வரூபமெடுத்து நடித்திருக்கிறார், ஹன்சிகாவுக்கு மொத்தமாக 4-5 முக பாவங்கள்தான் வருகிறது, பாடி லாங்க்வேஜ் சுத்தமாக இல்லை, இள வயது குஷ்பு போல இருக்கிறார் என்று எல்லோரும் சொல்லிச் சொல்லி (இந்தப் படத்திலேயே ஒரு 4-5 முறை பலரும் சொல்கிறார்கள்) இவரை உசுப்பேற்றி படங்களில் நடிக்க கொண்டு வந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.  இவர் முறையாக நடிக்க ஆரம்பிப்பதற்குள் 2025 பிறந்து விடும் என்பது உறுதி.  உதயநிதிக்கு நடிப்பு ரொம்ப சுமாராக வருகிறது, நடனம் காலடியில் யாரோ துப்பாக்கியால் சுட்டால் குதிப்பது போல இருக்கிறது.  வசன மாடுலேஷன் நன்றாக இருக்கிறது (டப்பிங் டைம் உபாயம்), இவரது குரல் நடிகர் ஜீவாவின் குரலை ஒத்திருக்கிறது.  க்ளைமேக்ஸ்சில் இவரும் சந்தானமும் சேர்ந்து மேடையில் சொல்லும் ஒரு பட்டாம் பூச்சி கதை சிரிப்பே வராதவர்களுக்கும் சிரிப்பை பீறிட்டு கொட்ட வைக்கும்.  உதயநிதிக்கு மட்டும் கொஞ்சம் நடிப்பும், நடனமும் வந்து விட்டால், அநேகமாக நடிகர் விஜய்க்கு ஆப்புதான்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ......
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்