நேரம்

Thursday, January 28, 2021

 

பித்தனின் கிறுக்கல்கள் - 52

அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

2019 மார்ச் 3ம் தேதிக்கு பிறகு 697 நாட்களுக்குப் பிறகு மீண்டும்  வலைப்பூவில் சந்திக்கின்றோம்.

சில சமீபத்திய சம்பவங்கள், அதன் தாக்கங்கள், இந்திய மற்றும் அமெரிக்க அரசியல் அநாகரீகங்கள், ஆஸ்த்ரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை, சமீபத்தில் நாம் ரசித்த  நிழற்படங்கள், நிகழ்வுகள் போன்ற எம்மை பாதித்த சில விஷயங்களைப் பற்றி வழக்கம் போல இங்கு கிறுக்கலாம் என இருக்கிறோம். வழக்கம் போல் நாம் எழுதியதை படித்தோ/படிக்காமலேயோ திட்டலாம் என இருப்பவர்கள் பின்னூட்டத்தில் தைரியமாகத் திட்டலாம்.  இல்லை, நீ கிறுக்கியதை முழுவதும் படிப்பேன் படித்த பிறகும் எங்களுக்கு என் மீது கொலைவெறி எதுவும் இருக்காது என்று இறுமாப்போடு இருப்பவர்களுக்கு அந்த எல்லாம் வல்ல இறைவன் நல்ல புத்தியையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கட்டும்.

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்:

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் டீம் போங்கடிப்பதில் முதன்மையாவர்கள்.  என் நண்பன் சென்னையில் கானரா வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு சமயம், சென்னையில்  இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் மாட்ச் துவங்க இருந்த சமயம், இவனது வங்கி பண பரிவர்தனை மையமாக இருந்ததால் அவர்களிடமிருந்த ஏதோ டாலரை இந்திய ரூபாயாக மாற்ற டேவிட் பூன் மற்றும் சிலர் வந்திருந்தனர்.  இவன் அவர்களுடன் அளவளாவிக்கொண்டிருந்த போது டேவிட் பூன், "It is really interesting to know that almost all of you were able to recognize us. So we are really famous and hope you all know we are better than your India Team". உடனே என் நண்பன் "Yeah, right your team always plays with 13 while the visiting team plays with 11, your team and the match umpires are part of your team, probably if you guys stop cheating, then you will know how good we are". என் நண்பன் அப்படி சொன்னதும் சுற்றியிருந்த பலரும் வாயடைத்துப் போக, ஆச்சர்யமான நிகழ்வு, டேவிட் பூன் உடனே, "oh come on, we are not that great in that, don't give us that credit we are always behind Pakistan on that.  If you are trying to tell us we have to work hard to become no 1 cheats in the cricket, yeah, I can assure you we will soon be".  இதுதான் அந்த அணி, இதுதான் அவர்களின் முறை.  இதனால் அவர்கள் விளையாட்டில் சோடை போனவர்கள் என்று அர்த்தம் இல்லை, அவர்களின் ஒரு பக்கம் இது.  எத்தனை போங்காக ஆடினாலும், பிடிபட்டு மானம மரியாதை எல்லாம் இழந்தாலும், கொஞ்சமும் வெக்கம் மானம் இல்லாமல் மீண்டும் அவர்கள் அணியில் இடம் பெற்று விளையாட வந்து மீண்டும் மீண்டும் அதே போல போங்காட்டம் ஆட அவர்களும் தயார், அவர்களை செர்த்துக்கொள்ள அந்த அணியும் தயார்.  ஸ்டீவ் ஸ்மித் நல்ல ஆட்டக்காரர்தான், ஆனால் அவர் செய்த செயல்களும் அவரும் அந்த அணியின் தலைவர் டிம் பெயின் மற்றும் பல பந்து வீச்சாளர்களும் பழகிய விதம், இவர்கள் இன்னமும் தங்கள் தொலின் நிறத்தைப் பிடித்துக் கொண்டு தங்களை உயர்ந்தவர்கள் என்று நினைப்பது போல இருக்கிறது.  வடிவேலு ஒரு திரைப்படத்தில் சொன்னது போல, "என்னது இது சின்னப் புள்ளத் தனமா இருக்கு!"

முதல் டெஸ்ட் மாட்ச்சில் நாம் 36 க்கு சுருண்டது எமக்கும் வருத்தம்தான், அப்போதே எம் சில நண்பர்களிடமும், உறவினர்களிடமும் சொன்னது, இதுவும் கடந்து போகும்.  இப்படி ஒரு தோல்வி நல்லது, நம்மைப் புரட்டிப் போடும்.  ஆனால் இதிலிருந்து பாடம் கற்கவில்லையென்றால்தான் தவறு.  அதேபோல பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இந்திய அணி செம்மையாக வென்று கோப்பையைத் தக்க வைப்பது மட்டுமில்லாமல், "சற்றே விலகியிரும் பிள்ளாய்" என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். 

இந்த வெற்றியைப் பற்றிப் பலரும் ஊடகங்களில் சொல்லியிருப்பது, இந்தியாவின் C-Team இந்த வெற்றியைக் கொண்டு வந்திருக்கிறது என்று. இது எமக்கு உகப்பில்லை.  இந்த 4 வது டெஸ்ட் மாட்ச்சில் ஆடிய அனைத்து இந்திய வீரர்களும் இதற்கு முன்பு ஏதாவது ஒரு முதல் நிலை (First Class) மாட்ச் விளையாடியிருக்கிறார்கள்.  5 நாள் விளையாட்டு என்பது மிக மிகக் கடினம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  ஆனால் இவர்கள் C-Team இல்லை என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு.  ஓரு வீரர் இந்திய அணிக்காக தேர்வு செய்யப் படும் போதே அவர் A-Teamதான்.  120 கோடிகளி ஒரு 15-20 பேர் தெரிவு செய்யப் படுவது வேடிக்கையில்லை.  அதன் பின் அவர்களின் திறமை, அதில் அவர்கள் கொண்ட நம்பிக்கை, அவர்களின் குடும்பத்தினரினின் த்யாகம், பங்களிப்பு, குடும்ப நிதி நிலையைத் தாண்டி இந்த உயரங்களை அவர்கள் எட்டியிருக்கிறார்கள்.  ஒரு அணியில் ஒன்றுக்கு மேற்பட்ட துவக்க ஆட்டக்காரர்கள் இருந்தால் அவர்களுக்கு உள்ளேயே ஒரு போட்டி எழுந்து விடும், இங்கு விக்கெட் கீப்பர் என்று 4 பேர் - ராஹுல், பண்ட், சாம்சன், சாஹா.  இங்கு ஒருவரை ஒருவர் மிஞ்சி ஆடி, ஏதோ ஒரு வகையில் பலரை திருப்திப் படுத்தி அணியில் இருக்க வேண்டும் என்பது சாதாரண காரியமில்லை.  ஒரு இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் எப்போது எந்த அழுத்தமும் இல்லாமல் தன்னிச்சையாக தனது ஆட்டத்தை ஆட முடிகிறதோ அன்றுதான் இந்திய அணி எந்த தயக்கமும், சந்தேகமும் இல்லாமல் விளையாடும் அனைத்து ஆட்டங்களையும் வெல்லும். 

அமெரிக்க தேர்தல்:

உலக அளவில் எதிர் பார்க்கப் பட்ட தேர்தல், பீஹார்/பெங்கால் தேர்தல் போல பலப் பல கேள்விகளோடு முடிந்திருக்கிறது.  டிரம்ப் வரக்கூடாது என்று பலரும் தவமிருந்த தேர்தல்.  ஏன் எனக் கேட்டால், காரணம் தெரியாது ஆனா வரக்கூடாது, என பலரும் ஜல்லியடித்த தேர்தல்.  இதில் பலப் பல குழப்படிகள் இருக்கிறது என்பதை துக்ளக் ஆண்டுவிழாவில் எஸ்.குருமூர்த்தி விளக்கியிருந்தார்.  நேரம் கிடைக்கும் போது அதை இந்த YouTube பார்க்கவும். அமெரிக்காவின் தேர்தலில் இத்தனை குளறுபடி இருப்பதற்கு இருக்கும் முதல் காரணம் முக்கிய காரணம், இங்கு வலிமையான தேர்தல் ஆணையம் இல்லாதது.  இதையும் குருமூர்த்தி விளக்கியிருக்கிறார்.  இதற்கு ப்ரதான இரண்டு கட்சிகளையும் சொல்லவேண்டும்.  அவர்களுக்கு அது மாறி மாறி சாதகமாக இருப்பதால் அதை அப்படியே துருப்பிடித்து துண்டாகும் வரையில் இருக்கட்டும் என்று விட்டிருக்கிறார்கள்.  மேலும், டிரம்ப், தான் தோற்கடிக்கப் படக்கூடியவர் என்று அவர் நம்பவில்லை அந்த அதீத நம்பிக்கை அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.  சமீபத்தில் ஜிம்மி கார்டரும்(1977-81), அவரைத்தொடர்ந்து ஜார்ஜ் புஷ்-1989-93 (அப்பா) இருவரும்தான் ஒரு தடவை ஆட்சிக்கு பிறகு தோற்றது.  இது சமீபத்தியக கணக்கு.  பழையதை புரட்டிப் பார்த்தால் பலரும் இருக்கிறார்கள்.  இப்போது இந்த வரிசையில் டிரம்ப் சேர்ந்திருக்கிறார்.  அடுத்த ஆட்சிக்கு வந்திருக்கும், ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் கூட்டனி ஒரு திமுக-பாமக அல்லது அதிமுக-பாமக கூட்டனி போலத்தான்.  இவர்கள் இருவருக்கும் எத்தனை நாள் அடிதடி இல்லாமல் செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.  ஹாரிஸ் இவர் இந்தியரும் இல்லை, கறுப்பரும் இல்லை.  இதைச் உரக்கச் சொன்னால் அசிங்க அசிங்கமாக திட்ட பலரும் தயாராக இருப்பது தெரிந்தும் நாம் சொல்வதற்குக் காரணம், இது எம் கருத்து, பிடிக்கவில்லையென்றால் அது உம் கருத்து.  அவ்வளவுதான். அடுத்து அனுமதியின்று குடியேறியவர்கள் சுமார் 1 கோடியே 10 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை தரும் சட்டத்தில் பைடன் கையெழுத்திடப் போவதாக செய்திகள் கசிந்திருக்கிறது.  அதாவது சரியான ஆதாரத்துடன், சரியான விசாவுடன் வந்து அமெரிக்காவில் குடியேறிவிடலாம் என்ற கனவோடு வந்து, இரவு பகல் பாராது உழைத்து, வரி கட்டி, கடந்த 10-15 வருடங்களாக நிரந்தர குடியுறிமைக்காக காத்திருக்கும், பல லட்சம் (கோடிகளிலும் இருக்கலாம்), அனைவரும் முட்டாள்கள்.  சுவர் ஏறி குதித்தவர்கள் அல்லது வேலி தாண்டி வந்தவர்கள், படகில் வந்தவர்கள், கண்டெயினர்களில் வந்தவர்கள், சுற்றிப் பார்க்க வந்தவர்கள் புத்திசாலிகள்.  இதை தடுக்க முயன்ற டிரம்ப் கெட்டவர், இவர்கள் தனது கட்சிக்கு வரும் ஓட்டுகள் என்று பார்க்கும் பைடன் நல்லவர்.  ரொம்ப சரி. 

இந்திய வேளான் விவசாயிகள் சட்டம்

ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி என்று ஒரு நாடகத்தில் எஸ்.வி.சேகர் சொல்லும் ஒரு வசனம், இலங்கை தமிழர்களைப் பற்றியது.  அவர் சொல்லுவார், "அங்க என்ன நடக்குதுன்னு யாருக்கு தெரியும், சொம்மா, வாய்ல உதார் வுட்டுகினே இருக்கனும் அதுவா ஒரு நாள் சரியா பூடும்" நு அதுதான் இப்போது இந்தியாவில் நடப்பது. இந்தியாவில் இருக்கும், 28 மாநிலங்கள் + 8 யூனியன் ப்ரதேசங்களில் - பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மட்டும் எப்படி இந்த புதிய வேளான் சட்டம் பயன் படாது, எப்படி அங்கிருக்கும் விவசாயிகள் மட்டும் பாதிக்கப் படுவார்கள்.  இதைக் கேட்க இந்தியாவில் மொத்தம் மூன்று ஊடகங்கள்தான் இருக்கிறது.  மற்ற அனைத்தும் கிருஸ்துவ மிஷனரி, திருட்டு திராவிடம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கையில் இருக்கிறது.  எப்படி நீட் தேர்வு தமிழ்நாட்டை மட்டும் பாதிப்பதாக புரளி கிளப்பப்படுகிறதோ அதே ரீதியில் இது.  ஒரு விவசாயி தான் பயிரிட்டு, விளைவிக்கும் பொருளை தான் விரும்பும் விலைக்கு, தான் விரும்பும் ஒருவருக்கு விற்க முடியும், அதுவும் அவர் வசிக்கும் இடத்திலிருந்து இந்தியாவின் எந்த மூலைக்கும் விற்க முடியும், அதுவும் எந்த இடைத்தரகரும் இல்லாமல். இவர் விளைவிக்கும் பொருள் அரசு நிர்ணயம் செய்யும் பட்டியலில் இல்லை எனில் அதை செர்க்கவும் முடியும், அதன் விலையை இவரால் நிர்ணயம் செய்யவும் முடியும்,  இதை இப்படி பார்க்கலாம்.  நாம் ஒரு கைப்பேசியில் உபயோகப் படுத்தக் கூடிய ஒரு செயலியை (App) தயார் செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதற்கான ஒரு விலையை நான் நிர்ணயம் செய்கிரேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு இடைத் தரகர் மூலம்தான் விற்க முடியும் என்று வந்தால், நான் ஏன் தேவையில்லாமல் அவருக்கு கப்பம் கட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்புவேனா இல்லையா? உழைப்பது நான், பலன் பெறுவது அந்த இடைத்தரகரா என்று நான் யோசிப்பேனா மாட்டேனா? இப்படி யோசிக்க அந்த விவசாயிகளை விடாமல் துரத்தி துரத்தி அடித்த, அடிக்கும், அடிக்கப் போகும் இடைத்தரகரகள் 90% யார் என்று பார்த்தால் இந்தியாவின் அரசியல்வாதிகள் என்பது புலப்படும். இவர்களைப் பின்புலத்திலிருந்து இயக்குவது யார் என்று பார்த்தால் கிருஸ்துவ மிஷனரிகள், கம்யூனிஸ்ட் கூட்டங்கள்.  இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், இந்த சட்டத்தை அமல் படுத்துவோம் என்று ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதியாகத் தந்தது வீணாக போன காங்கிரஸும் அதன் துணைக் கட்சிகளும்.  இப்போது இதை எதிர்ப்பதும் அவர்களே.  

திரைபடங்கள்:

The Intouchables

Netflix-ல்  பார்த்த 2011-ல் வெளியான ப்ரென்ச் படம் ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டது.  அது தமிழ்/தெலுங்கில் வந்து அமோகமாகக் கொண்டாடப் பட்ட 2016-ல் வெளிவந்த "தோழா" படம்.   தோழா ஒரு சரியான அட்டைகாப்பி என்று சொன்னால் யாரும் அசிங்கப் பட மாட்டார்கள்.  அவ்வளவு ஈஅடிச்சான் காப்பி.  ப்ரென்ச் படம் மிக மிக அனாயசமாக கையாளப் பட்டிருக்கிறது.  நடிப்பவர்களும், அவர்களை நகர்த்திச் செல்லும் கதையும், மிக மிக அருமை. 

One Day:

ஹிந்திப் படம், சற்று வழக்கத்துக்கு மாறான ஒரு கதை மற்றும் கட்டமைப்பு.  வழக்கம்போல் அனுபம் கெர் கலக்கியிருக்கும் படம்.  அவர் ஒருவர் போதும் என்று நினைத்து விட்டார்கள் போல, ஈஷா குப்தாவிற்கு பதில் வேறு ஒருவரை போட்டிருக்கலாம்.  கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

The Old Guard:

சாகாவரம் பெற்ற ஒரு குழுவிற்கும் அவர்களை தேடும், பரிசோதிக்க நினைக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளைக் கொண்ட படம்.  கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

Ala Vaikunthapurramulo:

அல்லு அர்ஜுன் நடிப்பில் வித்யாசமான கதைக் களத்தில் வந்திருக்கும் படம்.  முட்ட பொம்மா என்று பட்டி தொட்டியெல்லாம் கேட்கும் பாடல் இருக்கும் படம்.  சண்டை காட்சிகளுக்காவும், பாடல்களுக்காவும், ஒரு முறை பார்க்கலாம்.  இதில் சமுத்திரக்கனி வில்லனாக வந்திருக்கிறார். 

Raat Akeli Hai:

நவாஸுத்தின் ஸித்திக் (தலைவரின் பேட்ட படத்தில் சிங்காரமாக வந்தவர்) மற்றும் ராதிகா ஆப்தே இருவரின் அருமையான நடிப்பில், ஒரு செம்மையான திரில்லர் படம்.  திருமணமான இரவு கொடூரமான முறையில் வயதான மாப்பிள்ளை கொலை செய்யப் படுகிறார், அதை விசாரிக்கும் போலீசாக ஸித்திக்கும், அந்த கொலையுண்டவரின் மனைவியாக ராதிகா ஆப்தே.  கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

Badla:

தப்ஸி பன்னுவும், அமிதாப் இருவரும் கை கோர்த்துக் கலக்கும் ஒரு படம்.  உங்களை யோசிக்க விட்டு, யோசிக்க விட்டு ஆட்டம் காட்டியிருக்கிறார்கள்.  கதை, திரைக்கதை, நடிப்பு என்று எல்லா இடங்களிலும் சதமெடுக்கிறார்கள்.  இயக்குனர் சுஜாய் கோஷ் பின்னிப் பெடலெடுக்கிறார். 

Grand Master:

2012ல் வெளிவந்த மலையாளப் படம்.  மோகன்லால் மற்றும் ப்ரியாமணி நடிப்பில் வந்த ஒரு திரில்லர் படம்.  நடக்கும் தொடர் கொலைகளை தடுக்க முயலும் மோஹன்லால் எப்படி தடுக்கிறார் என்பதில் முழு படமும் நகர்கிறது.  எல்லா மலையாள திரில்லர் படம் போலவே கடைசி காட்சியில் ஹீரோ, எப்படி இந்த இடத்திற்கு வந்தோம் என்று ஒரு குட்டி லெக்சர் கொடுத்து முடித்து வைக்கிறார்கள்.  இது என்ன மலையாளப் பட டிரெண்டா என்று ஒரு கேரள நண்பரிடம் கேட்டதற்கு அவர் இன்னமும் பதில் சொல்லாமல் நழுவிக்கொண்டிருக்கிறார்.  

பித்தனின் கிறுக்கல்கள் தொடரலாம்……

0 comments: