நேரம்

Thursday, October 26, 2006

பித்தனின் கிறுக்கல்கள் - 4

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ரிச்மண்ட் தமிழ்ச் சங்கம்:

புதிய தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர்களை முடிவு செய்திருப்பதாக கடிதம் வந்து இருக்கிறது. இந்தக் கடினமானப் பணி இவ்வளவு சீக்கிரம் முடிந்தது ஒரு சாதனையே. பொறுப்பேற்க வரும் புதிய உறுப்பினர்களை வருக வருக என வரவேற்கிறேன். பட்டிமன்றத் தலைப்பு வந்து விட்டது. நடுவர், பேச்சாளர்கள் பெயர் இன்னமும் ரகசியமாகவே இருக்கிறது. தலைப்பு நாம் கற்ற பழக்கவழக்கங்கள், வளர்ந்த வளர்ப்பு இவற்றை இங்கு வளரும் நம் குழந்தைகளிடம் எதிர்பார்ப்பது அவசியமா? அதை ஆங்கிலத்தில் As parents of our children who are growing up here, is it proper and necessary to bring them up the same way our parents did decades ago? Is it proper to expect and enforce the culture, habits, and customs on them that we were expected to follow? என மொழி பெயர்த்துள்ளனர். இந்த முரண்பாட்டை பேச்சாளர்கள் எப்படி எதிர் கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்தப் பட்டிமன்றத்திற்கு நல்ல ஒரு நடுவர் அவசியம், பேச்சாளர்கள் வரம்பு மீறாமல் பேசுவது மிக மிக அவசியம். இது சற்று கத்திமேல் நடக்கும் ஒரு முயற்சி. எப்படி கையாளுகின்றார்கள் என்பதைப் பொறுத்து இதன் வெற்றியும் அமையும். கூடுமானவரை நகைச்சுவையான தலைப்பு தந்து விட்டால், ஒருவரை ஒருவர் அதிகம் திட்டிக் கொள்ளாமல் இருப்பார்கள், இல்லை என்றால், நிகழ்ச்சி முடிந்து பல வாரங்களுக்கு 'சின்ன' பசங்க மாதிரி 'காய்' விட்டுக் கொள்வார்கள். பார்க்க சகிக்காது. இந்த நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக போக வேண்டும் என்று முயற்சி செய்யப் போவதாக முடிவு செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். (அப்பாடா வரலைனா அதான் ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்தானே, அப்பவே தெரியும் அவன் வரமாட்டான்னு நாகு எழுதிவிடுவார்).

இலக்கியப் போட்டிக்கு இந்த வாரச் சங்கு:
ஒரு நகைச் சுவை கதை, கட்டுரை (டுபுக்கு எழுதுவது போல - http://dubukku.blogspot.com/ அல்லது வெட்டிப் பயல் எழுதுவது போல - http://vettipaiyal.blogspot.com/2006/10/blog-post_19.html), நாடகம் என்று எதை வேண்டுமானாலும் எழுதித் தள்ளுங்கன்னு போட்டி வைத்து அதை இந்த ப்ளாக்கில் வெளியிடலாம், நாடகமென்றால் அதை மேடையேற்றலாம். Talent show போல ஒன்று ஏற்பாடு செய்து கொடுக்கப் படும் 5 நிமிடத்தில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என வரம்பில்லாமல் செய்துவிட்டால் நிச்சயம் களைகட்டும். American Idol போல ஒன்று கூட செய்யலாம்.

நாகுவின் கூட்டாங்கதை

கதை நான்கு அல்லது ஐந்து வரிகள் ஆனவுடன் அதை எப்படி எடுத்துச் செல்லலாம் என யோசிப்பதற்குள் அதை ஈழத்திற்கு
கடத்திக் கொண்டு போய் விட்டனர். எனக்கு ஈழத் தமிழ் சுத்தமா தெரியாது, (சாதாரணத் தமிழே தெரியாது) என்பது நினைவுக்கு
வந்தவுடன் படால் என நிறுத்தி விட்டு வுடு ஜூட் (அப்பாடி மீசையில மண் ஒட்டல).

நாகு: பூஜையில் காதில் விழுந்ததாக நீங்கள் எழுதி இருப்பது மிக அருமை. சுஜாதாவின் சாயல் அதிகம் தெரிகிறது. சொல்ல வந்த விஷயத்தை நகைச்சுவையுடன் சொல்லுவது ஒரு கலை அது உங்களிடம் இயல்பாக இருக்கிறது. நிறைய எழுதவும்.

பித்தனைப் பற்றி இத்தனை பேர் கேட்டு இருக்கிறார்கள் என்றால் கொஞ்சம் ஜாக்ரதையாதான் இருக்கனும். பித்தனைப் பற்றி விசாரித்தவர்கள் கத்தி விசாரிச்சங்களா? கத்தி வெச்சுண்டு விசாரிச்சாங்களா?

மதுரை மத்திய இடைத்தேர்தல்
இடைத்தேர்தல் முடிவு ஆளும் கட்சிக்கு சாதகமாகவே வந்திருக்கிறது. இது ஆட்சியாளர்களின் அராஜகத்தால் வந்தது என்று தோற்ற அனைத்துக் கட்சியினரும் சொல்லி தங்கள் காயங்களுக்கு மருந்து போட்டுக் கொண்டுள்ளனர். எல்லோரும் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்கள் அல்லது மறந்து விட்டதாக நடிக்கிறார்கள். இந்த இடைத் தேர்தல் புதிய அரசு அமைந்து 4 மாதங்களுக்குள் நடக்கும் ஒன்று, புதிய அரசின் மீது பெரிய மனக் கசப்பு மக்களிடம் இல்லை, கடந்த ஆட்சியில் 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் தோற்ற பிறகும் அவர்கள் பின்னர் வந்த சட்ட மன்ற இடைத் தேர்தலில் கணிசமான அளவில் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்கள், ஆக மக்களுக்கு இடைத்தேர்தலை பற்றி அவ்வளவுதான் அக்கறை. இதை விட்டுட்டு அந்த காரணம், இந்தக் காரணம்-நு பாயப் பிறாண்டறாங்க.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:

அடிதடி, கலாட்டா, தடியடி, கத்திச் சண்டை எல்லாம் போட்டு (Duet Song மட்டும் இல்லை) ஒரு மசாலாப் படம் ரேஞ்ஜில் ஒரு தமாஷ் நடந்து முடிந்துள்ளது. இவ்வளவு பேர் இத்தனை தூரம் அடிச்சுக்கராங்களே, அவ்வளவு காசா இந்த போஸ்ட்ல இருக்கு?

கேரளாவில் காங்கிரஸை எதிர்க்கும் கம்யூனிஸ்ட்கள் மத்தியில் அவர்களுடன் ஆட்சி அமைத்துள்ளது சரியான சந்தர்ப்பவாதம் என்று 'கரித்துக் கொட்டும்' சோ-வின் முகத்தில் கரியை பூசாமல் நல்லா ஒரு தார் டின்னையே கவுத்த மாதிரி ஆளும் கட்சியுடன் சென்னையைத் தவிர மற்ற இடங்களில் கூட்டு சேர்ந்து விட்டு, சென்னையில் அவர்களோடு 8 இடங்களில் போட்டி போட்டு CPI(M) ஒரு புதிய புரட்சியே நடத்தி இருக்கிறார்கள். இதன் க்ளைமாக்ஸ் காட்சியாக ஆளும் கட்சி MLA வை கைது செய்யச் சொல்லி ஒரு பேரணியும் நடத்துகின்றனர்.

சமீபத்தில் பார்த்த திரைப்படம்:

'Click' வீட்டில் கண்டிப்பாக குழந்தைகளோடு பார்க்கக் கூடிய படம் இல்லை. கதாநாயகன் மைக்கேல் ஆக Adam Sandler வழக்கம் போல் அசாதாரணமாக நடித்து இருக்கும் படம். கதை நம்மை (மன்னிக்கவும் என்னை) போன்ற ஒரு சராசரி குடும்பத் தலைவன், அவனுடைய மனைவி, இரண்டு குழந்தைகள், அவன் அவர்கள் எதிர்காலத்திற்காக ஓயாது உழைக்கும் ஒரு மிகச் சிறந்த வேலைக்கார அடிமை. ஆனால் வாய் ரொம்ப நீளம். ஒரு யுனிவர்சல் ரிமோட் வாங்க கடைக்குப் போய், யுனிவர்ஸையே கண்ட்ரோல் பண்ணக்கூடிய ஒரு ரிமோட்டுடன் வருகிறார். ஒரு கால கட்டத்திற்குப் பிறகு அவர் அதை இயக்க முடியாமல் அது இவரை இயக்குவதும், அதன் முடிவு என்ன என்பதை நிறைய காமெடியும் கொஞ்சம் செண்டிமெண்டும் கலந்து அழகாக சொல்லி இருக்கிறார்கள். சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் போல், வேலை, குடும்பம் இதில் எது சிறந்தது என்று பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள்.

- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.


0 comments: