நேரம்

Thursday, October 26, 2006

பித்தனின் கிறுக்கல்கள் - ஒரு துவக்கம்.

பித்தனின் கிறுக்கல்கள் - ஒரு துவக்கம்.
வலையில் வந்த முதல் பதிப்பு.
http://richmondtamilsangam.blogspot.com/2006/10/blog-post_04.html
'பித்தனின் கிறுக்கல்கள்' என்ற தலைப்பில் பல காரசாரமான விவாதங்களுக்கு அடித்தளமிடக்கூடிய கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிவு செய்து இந்த பகுதியைத் துவக்குகிறேன். இதில் இந்திய அரசியல், சமூகம், விளையாட்டு, அறிவியல், இலக்கியம், புதுக் கவிதைகள் (மரபுக் கவிதை அதிகம் பரிச்சயமில்லை), கட்டுரைகள், புத்தகங்கள், நகைச்சுவை காட்சிகள், கதைகள், பத்திரிகைகளின் திரை விமர்சனம், தொலைக்காட்சி, திரைப்படம் பற்றிய பல விஷயங்களை (நாகு, மூர்த்தி, முரளி, பரதேசி, பட்டாம்பூச்சி, தருமி(எந்த ஊர்) - ஷ - வட மொழியாச்சே பரவாயில்லையா?) இங்கு அலச இருக்கிறேன்.
இந்த கருத்துக்கள் என் தனிப்பட்ட கருத்துக்கள், இதை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் உரிமை. இந்த எழுத்துக்கள் மூலம் என்னை எடை போட முயல்வது ஒரு காலவிரயம். எனக்கு இந்தப் பகுதியை துவக்கி எழுதலாம் என்கிற துணிவைத் தந்தது பலருடைய எழுத்துக்கள். 'சோ' -வின் - நினைத்தேன் எழுதுகிறேன், சுஜாதாவின் கணையாழியின் கடைசிப் பக்கங்கள் (கணையாழி இன்னும் வருதான்னு தெரியல), கண்ணதாசன் எழுதிய கடைசிப் பக்கங்கள், தி.ஜா வின் தெளிவான மற்றும் புதுமைப் பித்தனின் தைரியமான எழுத்துக்கள்.
பீடிகை போதும்னு நினைக்கிறேன். இனி......
தமிழ் நாட்டில் உள்ளாட்சி மற்றும் மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல்.
இதனால் என்ன பயன்? எல்லா சுவர்களும் மேலும் கறைபடியும், சாராய விற்பனை வானைத்தொடும், முட்டை, கோழி வறுவல் வியாபாரம் தூள் பறக்கும், எல்லா காய்கறிகளும் கிலோ ரூ.50 க்கு விற்கும். ரேஷனில் எல்லா நாட்களும் எல்லா பொருட்களும் எல்லோருக்கும் கிடைக்கும். எல்லா கட்சிகாரர்களையும் (முதல்வரை கூட) சுலபமாக பார்க்கலாம். சன் டிவியில் தமிழ் நாடு எப்படி சுபிட்சமாக இருக்கிறது என்று காட்டுவார்கள். பஞ்சம், பட்டினி எல்லாம் தமிழ்நாட்டில் இல்லை என சத்தியம் செய்வார்கள். ஜே டிவியில் தமிழ்நாடு எப்படி குட்டிசுவராக இருக்கிறது என்று பட்டிமன்றமே போடுவார்கள். சோ துக்ளக்கில் கருணாநிதி எப்படி 2 ஏக்கர் கொடுக்காமல் இழுத்தடிப்பார் என்ற தன் சந்தேகத்தை எழுதுவார். விகடன்/ஜூ.விகடன் கருணாநிதியின் ராஜதந்திரம் பற்றி இரண்டு வாரம் எழுதுவார்கள். சென்னை தெருக்களுக்கு உடனடி மேக்கப் நடக்கும். கார்ப்பரேஷன் தண்ணீர் சென்னையில் நல்லா கிடைக்கும். மழை அதிகமானால் நிவாரணம் உடனே கிடைக்கும். அரசு ஊழியர்கள் சின்னதாக ஒரு அடையாள ஸ்ட்ரைக் செய்வார்கள், முதல்வர், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிபந்தனையின்றி உடனே ஒப்புக் கொள்வார். ஸ்டாலினும் - அழகிரியும் சண்டை இல்லாமல் பத்திரிகைகளுக்கு சிரித்த படி போஸ் கொடுப்பார்கள். சுப்ரமணியஸ்வாமி பத்திரிகையாளர்களைக் கூட்டி கருணாநிதி, தயாநிதி மாறன், சோனியா மூவரும் சேர்ந்து செய்த ஊழலைப் பற்றிய ஒரு முக்கிய தடயம் தன்னிடம் இருக்கிறது, இன்னும் ஒரே வாரத்தில் இவர்கள் அனைவரையும் பதவியிறக்குவேன் என்று சவால் விடுவார். தமிழக காங்கிரஸில் எந்த சண்டையும் இல்லை என்று எல்லா தமிழக காங்கிரஸாரும் அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பார்கள். வைகோ தன் புலிப்பாசத்தை கொஞ்ச நாட்களுக்கு வெளிக் காட்டாமல் இருப்பார். தேர்தல் தினமும் மற்ற எல்லா தினங்களைப் போலவே சாதாரணமாக இருக்கும்.
சரி நமக்கு என்ன பயன்?
முகத்தை சோப்பு போட்டு அலம்பி நல்லா துடைத்து வைத்துக் கொண்டால் போதும், கழகங்கள், கட்சிகள் நல்லா, அழகா, பட்டையா ஒரு நாமத்தைப் போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க. ஜாக்கிரதை.
சமீபத்தில் பார்த்த படம்
'நாளை' - மிகச் சாதாரணமான கதை, நடிக-நடிகைகள் 4 அல்லது 5 பேர்தான் பழைய ஆட்கள் மற்ற அனைவரும் புதுசு. நிறைவான நடிப்பு, நல்ல காட்சி அமைப்பு எல்லாம் இருந்தும் வழக்கம் போல் கமர்ஷியலுக்காக 2 குத்து பாட்டு புகுத்தப்பட்டு, கடைசி காட்சியில் எல்லோரும் செத்து போய்விட 'அட போங்கடா'-ன்னு திட்டத்தான் தோணுது. S.V.சேகர் ஒரு நாடகத்தில் ஒரு drawing கொண்டு வந்து காட்டி அதில் "நான் ஒரு ரெயில்வே ஸ்டேஷனை வரைந்சு இருக்கேன், அதுல ரெயில் வந்து நிக்குது, ஜனங்க இறங்கி போறாங்க இதை எல்லாம் நான் தத்ரூபமா வரைந்சு இருக்கேன்", என்பார்.
அவர் friend "ரெயில் எங்கடா?"
சேகர்: "ஜனங்களை எறக்கி விட்டுட்டு ரெயில் போயிடுத்து"
friend: "ஜனங்க எங்கடா?"
சேகர்: "அவங்க என்ன ஸ்டேஷன்லேயேவா இருப்பாங்க, வீட்டுக்கு போயிட்டாங்க"
friend: "ஸ்டேஷன் எங்கடா?"
சேகர்: "அது சமீபத்தில புயல் அடிச்சுது இல்லை அப்ப அதுவும் அடிச்சுட்டு போயிடுத்து" என்பார். அதுதான் ஞாபகம் வந்தது.
-- கிறுக்கல்கள் தொடரும்.

0 comments: