நேரம்

Wednesday, February 21, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 6

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். சந்திச்சு ரொம்ப நாள் ஆயிடுச்சு, சரி இனிமே இவன் தொல்லையில்லைன்னு நினைச்சிட்டு இருந்திருப்பீங்க. ஒரு 3 மாசமா எதுவுமே எழுதலைங்கரதால இன்னிக்கு நிறைய எழுதிட மாட்டேன். கவலைப் படாதீங்க.

மகான் சத்ய சாய் பாபா அவர்கள் நாத்திகவாதி முதல்வர் கருணாநிதி வீட்டிற்கே சென்று அவரை சந்தித்தது சரியா?


இதில் சர்ச்சைக்கு என்ன இடம் என்று எனக்குத் தெரியவில்லை. மகானின் மனதில் என்ன இருந்தது, என்ன இருக்கிரது என்பதை நம்மைப் போன்ற சாமானியர்களால் கண்டு பிடிக்க முடியும் என்று யோசிப்பதே சற்று வேடிக்கையாக இருக்கிறது. மகான் அங்கு சென்று விட்டு இத்தனை நாள் நாத்திகவாதம் பேசி வருபவர்களின் முகத்திரையைக் கிழித்து இருக்கிறார்.


1. ஆட்சியைக் தன் கைப்பிடியில் வைத்து இருக்கும் அவர்கள், மகானின் அடிபணியும் புகைப் படத்தை வெளியிடாமல் தடை செய்திருக்கலாம்.


2. அவர் கருணையோடு அளித்த மோதிரத்தை மத்திய அமைச்சர் பெற்றுக் கொண்ட உடன் அருகில் இருந்த மாநில அமைச்சர் தனக்கும் ஒன்று என்று கேட்டு பெற்றதிலிருந்து அவர்களும் இலவசம் என்றவுடன் கை நீட்டத் தயங்கவில்லை என்பதை காட்டியது. கேட்க கேட்க மகான் தருவதிலிருந்து இது ஒன்றும் கண்கட்டு வித்தையில்லை என்பதை தெளிவாக்கியது.


3. வில்லிபாரத்திலிருந்து ஒரு சிறிய செய்தியைச் சொல்லிவிட்டு அடுத்த வில்லங்கத்திற்குச் செல்கிறேன்.


கண்ணன், பாண்டவர்களுக்கு நாட்டை பெற்றுத்தருவதற்காக ஹஸ்தினாபுரம் வருகிறான். அது தெரிந்தவுடன் துரியோதனன் அவையோரைப் பார்த்து, கோகுலத்து இடையன் ஒருவன் நாடு நல்கி இவ்விடம் வருகிறான் அவன் வரும்போது அவனை அவமானப் படுத்த நான் திட்டமிட்டிருக்கிறேன்.ஆகவே அவன் வரும்போது அவனை யாரேனும் எழுந்து அவனுக்கு மரியாதை செலுத்தினால் அவர் ஆளும் ஊரை தீவலம் செய்விப்பேன் அதாவது தீயிட்டு கொளுத்துவேன் என்கிறான். கண்ணன் அவைக்குள் வருகிறார். கண்ணன் வாய் திறந்து ஏதும் சொல்லாமலே அவருடைய ஆளுமைத்தன்மை அனைவரையும் மயக்குகிறது. அவர் நடந்து வர வர, அனைவருக்கும் முன்னால் துரியோதனனே எழுந்து வணங்கி நிற்கிறான். பிறகு அவையோர் அனைவருக்கும் தான்தான் பரம்பொருள் என்பதை உணர்த்த விச்வரூப தரிசனம் தருகிறார்.

இது நான் கேட்டறிந்த கதை, இதற்கும் நான் மேற்கூரிய சம்பவத்திற்கும் ஏதும் தொடர்பு உண்டு என்று நீங்கள் நினைத்தால் அது என் தவறல்ல.


ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் இடிக்கத் தடையில்லை - சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு.


இந்த இடிப்பினால் ஒரே ஒரு பலன் விஜயகாந்தின் செல்வாக்கு 1% - 5% உயருவதற்கு உதவியிருக்கிறார்கள். அவருக்கு கிராமத்துப் பக்கம் இருந்த செல்வாக்கு சென்னையில் இருக்கவில்லை, அதை அவருக்கு ஆளும் கட்சி இந்த இடிப்பின் மூலம் தந்திருக்கிறது. அவர் இதற்காகவே அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். எத்தனை நாட்கள் அவர் இப்படி தனித்து போட்டியிடுவார் என்பது தெரியாது, சீக்கிரம் அவரும் மற்ற கட்சியினருடன் கூட்டு சேரலாம், அது காங்கிரஸாகக் கூட இருக்கலாம் அப்போது இந்த இடிப்பு முயற்சி தள்ளிப் போகலாம். அப்போது இவரை வளர்த்து விட்டதுதான் ஆளும் கட்சிக்கு மிஞ்சும்.


கேரளாவை எதிர்த்து கோவை, திருப்பூர், பல்லடம், மேட்டுப்பாளையம் ஒரு நாள் அடையாள கடையடைப்பு.


இதனால் என்ன பலன் என்று எனக்குத் தெரியவில்லை. கடையடைப்பதால் அதற்கு முதல் நாள் வியாபாரம் கொஞ்சம் களை கட்டியிருக்கும். ஆனாலும் அந்த ஒரு நாள் நஷ்டம் தமிழகத்திற்குத்தான் குறிப்பாக அந்த நகரங்களுக்குத்தான். கேரளாவிற்கில்லை. பஸ், ஆட்டோ, ரயில் போக்குவரத்து இல்லை இது தமிழகம் முழுக்க ப்ரச்சனை. ஆட்டோ ஓட்டிகளின் ஒரு நாள் வியாபாரம் போச்சு, தமிழகத்துக்கு இதனால் 500 கோடி இழப்பு என்று ஒரு கணெக்கெடுப்பு சொல்கிறது. ப்ரயாணிகள் அவஸ்தை ஒருபுறம், நோயாளிகள் ஹாஸ்பிட்டல் செல்ல முடியாத அவதி ஒருபுறம். இன்ன பிற விசேஷங்கள் வீடுகளில் ஏற்பாடு செய்தவர்கள் மனக்கஷ்டம், பணக்கஷ்டம் ஒரு புறம். இது எல்லாம் தெரிந்தும் எதற்காக பந்த் செய்கிறார்கள், யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

சற்று நேரம் முன்பு கேட்ட சில கடி ஜோக்ஸ்:
சன் டிவியில், முன்பு விஜய் டிவியில் ப்ரபலமாக இருந்த 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியை, 'அசத்தப் போவது யாரு' என்று அதே கலைஞர்களை வைத்து ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் இன்று கேட்ட சில கடி ஜோக்ஸ்:

நடுவர் சிட்டிபாபு அவர்களே, என்னதான் உங்கப் பேர் சிட்டி பாபுன்னு இருந்தாலும் அந்த சிட்டில ஒரு சின்ன பெட்டி கடைகூட வைக்க முடியாது.

மீன் புடிக்கரவனை மீனவன்னு சொல்ல முடியும், ஆனா மான் பிடிக்கரவனை மாணவன்னு சொல்ல முடியாது

புள்ளிமானுக்கு உடம்பெல்லாம் புள்ளியிருக்கும், ஆனா கன்னுக்குட்டிக்கு உடம்பெல்லாம் கண்ணு இருக்காது.

என்னதான் பெரிய டான்ஸ் மாஸ்டரா இருந்தாலும், அவருடைய சாவுக்கு அவரால டான்ஸ் ஆட முடியாது.

நீங்க ஆம்பிளையா இருந்தாலும் உங்க செல் நம்பர் (இந்தியாவில) '9' ல தான் ஆரம்பிக்கும்.


ஆயிரம் ரூபா கொடுத்து ஜீன்ஸ் வாங்கினாலும், அதுல இருக்கர 10 ரூபா ஜிப்புதான் உங்க மானத்தைக் காப்பாத்தும்.

தங்கச்சியோட ஃப்ரெண்ட, ஆசையா தங்கச்சின்னு சொல்ல முடியும், ஆனா நம்ம பொண்டாட்டியோட ஃப்ரெண்ட .....?

என்னதான் பெரிய கராத்தே மாஸ்டரா இருந்தாலும், வெறிநாய் தொரத்தினா ஓடித்தான் ஆகனும்.


- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

0 comments: