நேரம்

Saturday, March 17, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 8

நான் மிகவும் ரசித்த ரிச்மண்ட் தமிழ்ச் சங்கத்து பொங்கல் நிகழ்ச்சிகள்.
இந்த முறை சற்று வித்தியாசமாக 3:00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சிகள், 3:00 மணிக்கே ஆரம்பித்து சாதனை படைத்திருக்கிறார்கள். சங்கத்தலைவர் நாகு, சங்கத்து காரியதரிசிகள், இந்த முயற்சியை ஆதரித்த உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். எனக்குத் தெரிந்த பலர் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்து "என்ன விளையாடராங்களா, யாரை கேட்டு 3:00 மணிக்கே program-ஐ ஆரம்பிச்சாங்க?" என்று கோபப் பட்டாங்க, இதையும் தமிழ்ச் சங்கம் கொஞ்சம் பரிசீலிக்கவும். இதை கேட்ட போது, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, மாநில அரசு ஊழியர்களுக்கு 6 நாட்களும் வேலை என உத்தரவு பிறப்பித்த போது, 'சோ' தனது கேள்வி-பதில் பகுதியில், அது மிகவும் தவறான முடிவு, முதலில் அவர் வாரத்துக்கு ஒரு நாள் வேலை என்று உத்தரவிட்டு பிறகு படிப்படியாக உயர்த்தி வாரத்துக்கு 6 நாட்கள் வேலை என உத்தரவிட வேண்டும் என சொல்லியிருந்தார். அதுபோல முதலில் 3:00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சிகள் 3:30க்கு ஆரம்பித்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முன்னால் வந்து 3:00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும். பரவாயில்லை இந்த முறை மன்னித்து விடுவோம்.
ஒலி, ஒளி அமைப்பு:
இதில் சற்று கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியம். எந்த ஒரு நிகழ்ச்சியும் பார்வையாளர்களை கவர மிக மிக முக்கியம் ஒலி மற்றும் ஒளி.
தொகுப்பாளர்கள்:
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது மட்டும் இவர்களது பணி இல்லை. - கூட்டத்தை கட்டுப் படுத்துவது
- நிகழ்ச்சியைப் பற்றி ஒரு சில வார்த்தைகள், சுவாரசியமாக சொல்வது.
- நிகழ்ச்சி சரியான நேரத்தில் ஆரம்பித்து முடிக்கப் படுகிறதா என்று கண்காணிப்பது, இல்லையெனில் அவர்களைத் துரிதப் படுத்துவது
- அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் பங்கேற்பாளர்களைப் பாராட்டுவது
- இடையிடையே, சங்கத்து நடவடிக்கைகளை புகழ்ந்து சொல்லி, புதிய உறுப்பினர்களாகச் சொல்லி வேண்டுவது
- அடுத்து வர இருக்கும் சங்கத்து நடவடிக்கைகளை சொல்லி சங்க நிர்வாகிகளை உற்சாகப் படுத்துவது.
- இடையிடையே சங்கத்து நிர்வாகிகளின் நல்ல யோசனைகளை பாராட்டி அதை எப்படி இந்த நிகழ்ச்சியில் பின்பற்றுகின்றோம் என்று சொல்லி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
- நல்ல வெளிச்சமான இடத்தில் நின்று கொண்டோ அல்லது நடந்தபடியோ, சகஜமாக பேசுவது அவசியம்
- பேப்பர் வைத்துக் கொண்டு பேசும் போது, இவர்கள் எந்த விஷயத்தையும் உணர்ந்து பேசாதது போல இருக்கிறது. பங்கேற்பவர்கள் பெயரை சொல்ல மட்டும் எழுதி வைத்து படித்தால் பரவாயில்லை.
- தெளிவாகப் பேசுவது மிக மிக முக்கியம். குரல் கணீரென இருத்தல் அவசியம் இல்லையெனில் அதை ஒலி பெருக்கியின் மூலம் சரி செய்து கொள்ள முடியும்.
- சமயோசித அறிவு தேவையான ஒன்று.
துருவன்
துருவன் குறும்படம் பற்றி அதிகம் சொல்லப் போவது இல்லை. அதைப் பற்றி பல பின்னூட்டங்கள் வந்து விட்டது.
நாட்டியம்:
கவிதா மலைச்சாமியின் தலைமையில் மிக அருமையான நடன நிகழ்ச்சியைத் தந்தார்கள். நல்ல பயிற்சி என்பது தெரிந்தது.
லக்ஷ்மி வடிவழகு வழங்கிய குழந்தைகளின் நாட்டியம் Super. அதில் நாட்டுப்புறப் பாடலுக்கு நடுவே, 'ராக்' டைப் டைலாமோ டைலாமோ பாட்டின் இடைச் செறுகலும் நல்லா இருந்தது.
அண்ணன் சித்தார்த்தின் இசைக்கு தங்கை மேகனாவின் அபிநயம் ஒரு புதிய முயற்சி, ரொம்ப நல்லா செய்தாங்க.
நாடகம்:
சொல்வதற்கு அதிகம் இல்லாமல் இருந்தது.
சுடர்
நாகு சுடரில் ஐக்கியமாகச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார். அது பற்றி தனியே எழுதுகிறேன். பெரியோர்களே, தாய்மார்களே இதுக்கு காரணம் நான் இல்லை, நாகுதான். அவரை வேணும்னா 'தனியா' விசாரிச்சுக்கங்க.
சமீபத்திய அபத்தம்:
சன் டிவியில் இந்தியா உலகக் கோப்பை கிரிக்கேட் போட்டியில் வேற்றி பெற எங்கே யார், என்ன செய்கிறார்கள் என்று காட்டினார்கள்:
மூன்றாவது இடம் பிடிக்கும் அபத்தம்:
சென்னையில் ஒரு வாலிபர் கண்களைக் கட்டிக்கொண்டு ஒரு கைனடிக் ஹோண்டா (குழந்தைகள் ஓட்டும் குட்டி சைக்கிள் போல ஒரு பாலன்சிங் வீல்களுடன்) 25 கி.மீ ஓட்டி சென்று வேண்டிக் கொண்டுள்ளார். இதற்கு போலீஸ் பாதுகாப்பு வேறு.
இரண்டாவது இடம் பிடிக்கும் அபத்தம்:
இடம் நினைவில் இல்லை, விஷயம் இதுதான். நடு ரோட்டில் பலர் அங்கப் ப்ரதக்ஷணம் செய்து வேண்டிக் கொண்டுள்ளனர்.
முதல் இடம் பிடிக்கும் அபத்தம்:
மஹாராஷ்ட்ராவில் ஒரு அசுவமேத யாகம் செய்திருக்கிறார்கள்.
கேணத்தனமாக இதையெல்லாம் செய்வதற்கு பதில் தோற்றுவிட்டு ஊர் திரும்பினால், உங்களை யாரும் மதிக்கப் போவதில்லை, நீங்கள் விளம்பரப்படுத்தும் பொருள்களை நாங்கள் வாங்கப் போவதில்லை, என்று முடிவு எடுத்து அதன் படி நடந்தால் போதும். இந்திய அணி ஒரு மேட்ச் ஜெயித்தவுடன் அவர்களைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும் வேண்டாம், அவர்கள் தோற்றவுடன் அவர்கள் வீட்டை கல்வீசி தாக்குவதும் வேண்டாம். அவர்களை நம்மைப் போலவே சாதாரணமானவர்கள் என நினைத்து அவர்களை உதாசீனப் படுத்தினாலே போதும் அவர்கள் தானாகவே சரியாகி விடுவார்கள். இதை எழுதும் இதே நேரத்தில் இந்தியா, பங்ளாதேஷிடம் பேய் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. இதுக்கு என்ன பரிகாரமோ?
-பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

0 comments: