தனம் திரைப்பட விமர்சனம்
நண்பி ஒருவர் இந்தப் படத்தைப் பற்றி விமர்சனம் செய்யச் சொன்னார். உடனே தலையில் கொம்பு முளைத்தது போல ஒரு உணர்வு தொற்றிக் கொண்டது. தெரிந்த கடைகளில் போன் போட்டு விசாரிக்க ஆரம்பித்தேன். வீட்டுல “ஏங்க ஒரு வாரமா சொல்லிகிட்டு இருக்கேன், புல் வெட்டனும்னு அதச் செய்ய துப்பில்லை, ஒரு தமிழ் படத்தை தேடிக்கிட்டு கடை கடையா அலையரீங்களே” ன்னு கடமைகளை “அன்புடன்” நினைவு படுத்த, அதையெல்லாம் கவனிக்கரவரங்களா நாம, கடமை முக்கியமில்லையா. எந்தக் கடைகளிலிலும் கிடைக்கவே இல்லைன்னு இருக்கும் போது நண்பர் ஒருவர் அந்தப் படமா, என்கிட்ட இருக்கு என்று சொல்ல ஓடிப் போய் வாங்கி வந்து இந்தப் படத்தை பார்த்தேன்.
முதலில் இந்தப் படம் வீட்டில் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய படமேயில்லை. கதையில் அங்கங்கே ஓட்டைகள் என்று எதுவும் சொல்ல முடியாது, ஓட்டைகளுக்கு நடுவே கதை என்று ஒன்று இருக்கிறதா என்று தேட வேண்டியிருக்கிறது.
படம் ஹைதராபாத்தில் போலீஸால் தனம் என்ற ஒரு தாசியைத் தேடுவதில் ஆரம்பிக்கிறது. தனம் ஒரு குற்றவாளி என்று போலீஸ் குற்றம் சாட்ட, அவர் குற்றவாளியில்லை என்று ஒரு கூட்டமே சொல்லி ப்ளாஷ்பாக்கில் படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். இதற்கு மேல் இந்தப் படத்தின் கதையை நாசுக்காக சொல்ல என்னால் ஆகாது. தமிழ் பட கதாநாயகன் ரவுடியாக இருந்து ஒரு கூட்டத்திற்கே சாப்பாடு போடுவான் அதையே என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. இந்தப் படத்தில் கதாநாயகி தாசியாக இருந்து ஒரு கூட்டத்தையே காப்பாற்றுகிறார் ஆனால் அது என்ன விதமான லாஜிக் என்று எனக்குத் தெரியவில்லை.
திரைப் பட விமர்சனங்கள் எழுதும் போது நானாக விருப்பப் பட்டு பார்க்கும் படங்களைத்தான் விமர்சனம் செய்து வந்தேன், அந்தப் படங்களை நான் பார்க்க யாரும் என்னைத் தூண்டவில்லை, ஆனால் இந்தப் படம் கண்டிப்பாக எனது பட்டியலில் இடம் பெற வாய்ப்பே இல்லாத ஒரு டப்பா படம்.
The Happening
மனோஜ் நைட் ஷ்யாமளனின் சமீபத்திய படம். நியூயார்க்கின் செண்ட்ரல் பார்க்கில் திடீரென எல்லோரும் தற்கொலை செய்து கொண்டு இறக்க, அதிலிருந்து தப்பிக்க பலர் ரெயில் ஏறி பிலடெல்பியா நோக்கி செல்ல வழியில் பலரும் இறக்க ஏன் அவர்கள் அப்படி செய்து கொள்கிறார்கள் என்று ஹீரோ கண்டு பிடிப்பதுதான் கதை. ஹீரோ மார்க் வாஹல்பெர்க். இவர் மிக மிக புத்திசாலி போல இந்தப் படத்தில் சித்தரிக்கப் படுகிறார். அது ஒரு மிகப் பெரிய டுபாகூர் தியரி. இவருக்கு மொத்தமே இரண்டு அல்லது மூன்று விதமான முகபாவங்கள்தான் வருகிறது. அதை மட்டுமே பார்ப்பது 10-15 நிமிடங்களுக்குப் பிறகு போர் அடித்து விடுகிறது. அது என்ன ஆக்டிங் எக்ஸ்ப்ரஷனா அல்லது கான்ஸ்டிபேஷனா என்று தெரியாத ஒரு அவஸ்தை நமக்கு. அடுத்து ஹீரோயினாக வருபவருக்கு இந்தப் படத்திற்கு பிறகு நடிக்க சந்தர்ப்பம் கிடைப்பது துர்லபம். தமிழ் சினிமாவில் கூட்டமாக வரும் 100 துணை நடிகைகளில் கட்டங்கடைசியாக இருப்பவர் கூட இவரை விட 1000 மடங்கு நன்றாக நடிப்பார். இது போல ஒரு சம்பவம் நடக்க சாத்தியமுண்டா, ஏன் இப்படி லாஜிக் இல்லாத திரைக்கதை என்று கேட்காமல் படத்தைப் பார்த்தால் படத்தை ரசிக்க முடியலாம்.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்..... piththanp@gmail.com
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்.
நேரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment