நேரம்

Wednesday, September 08, 2010

பித்தனின் கிறுக்கல்கள் - 38

பல மாதங்களுக்குப் பிறகு கிறுக்கத் துவங்குவதால் சமீபத்தில் நடந்த சில தமாஷ்களைப் பற்றி எழுதி இந்தப் பதிவை சற்று லைட்டாக வைக்கலாம் என்றிருக்கிறேன்.
டமாஸ் நெ.1:
உலகச் செம்மொழி மாநாடு:
இது ஒரு கால விரயம் என்றும், பண விரயம் என்றும் பலர் எழுதி குவித்துவிட்டார்கள். இந்த மாநாட்டினால் என்ன பயன் என்று எதற்காக இப்படி எல்லோரும் அடித்துக் கொள்கிறார்கள் என்று புரியவில்லை. இதில் அவரை கூப்பிடவில்லை, இவரைக் கூப்பிடவில்லை, அவருக்கு மரியாதை செய்யவில்லை, இவருக்கு மரியாதை செய்யவில்லை என்று புகார்கள் வேறு வந்து கொண்டேயிருக்கிறது. நடந்தது ஒரு அதிகார மமதையில் இருக்கும் ஒரு கழகத்தலைவரின் சுயதம்பட்டத்திற்காக நடத்தப் பட்ட கூத்து. பக்க வாத்தியமாக பல விதூஷகர்களை வைத்து நட்த்தப்பட்ட ஒரு டமாஸ், இதில் காரண காரியத்தை தேடுவதுதான் முதல் கால விரயம். இந்த டமாஸ்களையும் மீறி ஒரு சில நல்ல தமிழ் ஆய்வுகளும், சில கருத்தரங்கங்களும் நடந்தது என்றும் தெரியவருகிறது. இவைகள் இப்படி ஒரு டமாஸுக்காக காத்திருக்காமல் வருடந்தோரும் நடந்து வருகிறது என்பதும் சில வலைப் பதிவிலிருந்து தெரியவருகிறது

டமாஸ் நெ.2:
வேட்டைக்காரன், சுறா படங்களின் தோல்வியால் நஷ்டமடைந்த திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் நடிகர் விஜய் இவர்கள் அனைவருக்கும் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
விஜயின் படம் தோற்பது திடீரென நடந்த ஒரு சம்பவமில்லை. அவருடைய முந்தைய ஆறு படங்கள் தோல்வியைத் தழுவியிருக்கிறது. 6 முறை தோற்றபிறகும் அவர் அவருடைய படங்களின் கதையை, இயக்குனரை சரிவர தேற்வு செய்யவில்லை சரி, வினியோகஸ்தர்களுக்கு மூளை என்பது கிஞ்சித்தும் இல்லையா, படத்தை ரஷ் பார்த்து விட்டுத் தானே படத்தை வாங்கியிருப்பார்கள் அப்போது எதை வைத்து இந்தப் படம் ஓடும் என்று நினைத்தார்கள. கதாநாயகியின் கவர்ச்சியா, குத்துப் பாட்டுகளா, பஞ்ச் டைலாக்கா. இதைத் தான் வள்ளுவர் செய்தக்க அல்ல செயக்கெடும், செய்தக்க செய்யாமையானும் கெடும் என்றார். இவருடைய மற்ற டப்பா படங்களான திருப்பாச்சி, சிவகாசி, மதுர, பத்ரி, பகவதி படங்கள் ஓடியது என்பதால் இவருடைய எல்லா குப்பைப் படங்களும் ஓடும் என்று தப்பு கணக்கு போட்டு விட்டு இப்போது கூச்சல் போட்டு என்ன புண்ணியம். மேலும் இவருடைய படங்கள் ஓடிய போது காசு பார்த்தவர்கள் அந்த லாபத்தில் பங்கு கொடுத்தார்களா என்று தெரியவில்லை. அப்படி கொடுத்திருந்தால் ஒருவேளை இப்போதைய நஷ்டத்திற்கு ஈட்டுத் தொகை கேட்கலாம், இல்லை, ஒரு 100 கிராம் எள்ளு வாங்கி நீர் விட்டு இறைத்து விட்டு போகவேண்டியதுதான்.

சுறா மற்றும் வேட்டைக்காரன் படங்கள் பற்றிய எமது கருத்தை இந்தப் பதிவின் கடைசியில் பார்க்கலாம்.

டமாஸ்
நெ.3:
எங்கே பிராமணன் தொடர்:
இந்தத் தொடரின் முதல் பாகம் சூப்பராக இருந்தது என்பதால் 2ம் பாகம் எடுத்து வெளியிட்டார்கள் ஜெயா டிவி நிருவனத்தார். நான் முதல் பாகம் பார்க்கவில்லை. இரண்டாம் பாகம் எனது நண்பனின் தயவால் அவ்வபோது பார்க்க முடிந்தது. அதன் பிறகு முதல் பாகத்தில் சோ அங்கங்கே வந்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டதை யூ.டியூபில் கண்டேன். நான் இந்த கதை தொடராக துக்ளக்கில் வந்து பிறகு புத்தகமாகவும் வெளி வந்த போதே படித்து விட்டதால் முழுவதும் பார்க்காதது பெரிய குறையாக இல்லை. இரண்டாம் பாகம் முடிக்கப் பட்ட விதம் பலருக்கும் பிடிக்கவில்லை என்பது எனது நண்பனின் ஆதங்கத்திலிருந்து தெரிந்தது. 2ம் பாகத்தின் கடைசி நாள் ஒளிபரப்பை பார்த்த பிறகு எனக்கு ஒன்று தோன்றியது, இப்படி மெகாத் தொடர் பார்க்கும் நம் அனைவருக்கும் ஒரு கதை என்பது பல உபகதைகளைக் கொண்டிருந்தால் அந்த உபகதைகள் நிறைவாக முடிந்தால் மட்டுமே மூலக் கதை முடிவுக்கு வரவேண்டும் என்ற பிடிவாதம் இருக்கிறது இதனால் படக்கென்று மூலக் கதையை முடித்தால் ஒப்புக்கொள்ள கஷ்டமாக இருக்கிறது. எனக்கு இந்தத் தொடர் முடிந்ததில் எந்த அதிருப்தியும் இல்லை ஆனால், மூலக்கதையின் முடிவில் அஷோக்காக பூமிக்கு வந்த வசிஷ்டர் பட்டென்று மேல்லோகம் திரும்புவதும், அவரால் இங்கு வர்ணாசிரம தர்மத்தின் படி பிராமணனாக வாழ முடியாமல் போய் அவர் ஒரு பித்தன் (நான் இல்லை) என்று முத்திரை குத்தப் படுவதுமாக காட்டியிருப்பது சோவின் மன ஓட்டமே தவிர அப்படித்தான் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. இதை சோவின் இன்பக் கனா ஒன்று கண்டேன் என்ற மேடை நாடகத்தில் கடைசியில் சுமார் 30-35 வருடங்களுக்கு முன்பே எழுதியிருந்தார். மந்தவெளி மன்னாரு என்ற ஒரு சென்னை செந்தமிழ் பேசும் ஒருவன் அவனுடைய கனவில் ஒரு சிறிய தீவு, அதில் ஒரு 100 பேர் கரை ஒதுங்குகிறார்கள் அவர்களில் ஒரு டாக்டர், ஒருவர் இஞ்சினியர், ஒருவர் இந்த தொழில், ஒருவர் அந்தத் தொழில் என்று பல செயல்கள் செய்கிறார்கள் இருவருக்கும் மட்டும் எந்த சிறப்புத் தகுதியும் இல்லை, அவர்கள் அந்த தீவில் தேர்தலைக் கொண்டுவந்து பிறகு அவ்விருவராலும் அந்த தீவு படாத பாடு படுகிறது கடைசியில் யாருக்கும் ஒற்றுமை இல்லாமல் ஒரு மனித உயிர் பலியாவதில் கதை முடிகிறது. கதை முடிந்த பிறகு மன்னாராக வரும் சோ சொல்வார், ஒரு கனவில் கூட நல்லது நடக்காமல் போய்விட்டதே இதற்கு இந்த அரசியலும் அரசியல்வாதிகளும்தான் காரணம் என்பார். அதுபோலவே வசிஷ்டர் பூலோகத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிப் போவதற்கு நாடு காரணமாக இருந்தாலும், அதிகக் காரணம் சோ தான் என்பேன, காரணம் வசிஷ்டர் அப்படி வந்திருந்தாலும் ஓடியிருப்பார் என்பது ‘சோ’ கருத்துதானே நம்முடையது இல்லையே.

சரி

இதில் என்ன டமாஸா? வேறு என்ன, சோ எதைச் செய்தாலும், சொன்னாலும் அது ஒரு விவாதத்திற்குரிய ஒன்றாக மாறிவிடுகிறதே அதுதான். 2010 ஜனவரியில் துக்ளக்கின் ஆண்டுவிழாவில் தி.மு.க ஆட்சி போய், ஆ.இ.அ.தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார், தாத்தா ஸ்டாலின் எப்படா பெருங்கிழம் நகரும் என்று இன்னமும் இளைஞரணியின் தலைவராகவும், துணைய்ய்ய்ய்ய்ய்ய் முதல்வராகவுமே இருக்கிறார் இதற்குள் சோ வேறு இப்படி ஒரு சொற்பொழிவாற்றி அவர் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறார்.

டமாஸ் நெ. 4:
அமெரிக்க அதிபரின் மீது மக்களின் நம்பிக்கை குறைய ஆரம்பித்திருக்கிறது என்பதை இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒப்புக்கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். இவர் ஆட்சிக்கு வரும் வரை இவர் சொன்னதை செய்வார், மாற்றம் என்பது இவரால் மட்டும்தான் முடியும் இத்யாதி இத்யாதி என்று பட்டி தொட்டியில் இருக்கும் சாதா குடிமகன் முதல், ஸ்பெஷல், எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் குடிமகன் வரை, ஏன் நமது ரிச்மண்ட் நகரிலேயே பல புலம் பெயர்ந்த பல இந்தியர்கள் உட்பட எல்லோரும் ஜிங்க் ஜிங்க் என்று ஜல்லியடித்தார்கள். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அப்படி ஜல்லியடித்த ஒரு சிலரை சில கேள்விகள் கேட்ட போது, "ஓ அதுவா, அதெல்லாம், ஒன்னும் பண்ண முடியாது, இவருக்கு முன்னாடி இருந்த அதிபர் செஞ்ச கோமாளித்தனம், அவர் ஏன் அதையெல்லாம் சரி செய்யாம போனாரு, அதை கேக்காம, இவரை போட்டு இப்படி காய்ச்சரீங்க, இதெல்லாம் சரியில்லை ஆமாம் சொல்லிட்டேன்" ன்னு ஜகா வாங்கிட்டாங்க "என்ன அப்பு இப்படி பேசரீங்க, இவரு சொன்னது நடக்கும், தொட்டது துலங்கும் ன்னு சூடம் அடிச்சு சத்தியம் பண்ணீங்களே என்ன ஆச்சு! இப்படி மஞ்ச தண்ணீல நனைஞ்ச கோழி மாதிரி சிலு சிலுன்னு சிலுப்பரீங்க"ன்னு கேட்டதுக்கு இன்னிவரைக்கும் பதில் இல்லை. அதிபரும் பாவம் என்ன பண்ணுவாரு, நம்மூரு 'நித்தி' கதவைத் திற காற்று வரும்" ன்னு கதை விட்டுட்டு கதவை (ரொம்ப அதிகமாவே) திறந்து வெச்சுட்டு, காத்துக்கு பதிலா, காவல்துறையே வந்துட்ட மாதிரி, என்னை தேர்ந்தெடுங்க, கதவை திறந்தா பாலா வரும், பிட்சாவா வரும்ங்கர ரேஞ்சுல கதை விட்டார், ஆட்சிக்கு வந்து 2 வருடத்தில இன்னமும், இராக்கிலிருந்தும், ஆஃப்கானிஸ்தானிலிருந்தும், ராணுவத்தை திரும்ப கொண்டு வரமுடியலை, விலைவாசியை கட்டுப் படுத்த முடியலை, வேலை வாய்ப்பை அதிகரிக்க முடியலை, அவரோட தேர்தல் அறிக்கையிலேயே 10 லட்சம் வேலை வாய்ப்பு வருதுன்னு சொன்னார், அட அத விடுங்க அரசாங்க அலுவலகத்திலேயே ஆட்குறைப்பு அபரிமிதமா நடக்குது அதை தடுக்க முடியலை, பழைய அதிபர், அமெரிக்க வேலைகள் வெளிநாட்டுக்கு அதாவது இந்தியாவுக்கு போவதை தடுக்கனும்னா ஒழுங்கா படிங்கன்னார், அதை "கெக் கெக்" ன்னு கேலி பண்ணிட்டு, அமெரிக்க வேலை எங்கயும் போகாது, அதை விடமாட்டேன்னு உதார் விட்ட இவரை கொண்டு வந்தா, அதை செய்ய முடியலை. இன்னும் இந்தியா கம்பெனிகள் ஜாம் ஜாம்னு கொள்ளையடிக்கராங்க. "அது என்னமா நீ சொல்லலாம், நீ ஒரு பிறவி இந்தியன்ங்கரத எப்படி மறந்துட்டு ” ன்னு வெறும வாய்வார்த்தைக்கு பேசலாம், இங்க இருக்க நம்மளமாதிரி புலம் பெயர்ந்தவர்களும் அவங்க அவங்க வேலைகளை இந்திய கம்பெனிகள் கிட்ட தொலைச்சுட்டு, வெறும விரல் சூப்பிட்டு இருக்கோம். ஒரு டெவெலப்பர் வேலைக்கு ஒரு மணி நேரத்துக்கு இந்தியாவில் இருக்கும் ஒருவருக்கு $25.00 என்பது குறைந்த பட்ச ஊதியம், அது இந்திய மதிப்பீட்டில் 23.4 லட்சம் ரூபாய்கள் (ஒரு வருடத்திற்கு) ஆனால் அவருக்கு அங்கு அதிக பட்சமாகத் தரப்படும் ஊதியமோ, 7.2 லட்சம் ரூபாய்கள். 16.2 லட்சம் ரூபாய்கள் அவரை வேலைக்கு வைத்திருக்கும் அந்த இந்தியக் கம்பெனியின் ஒரு வருட சம்பாத்தியம். அவருடைய விடுமுறை மற்றும் ஏனைய சில செலவுகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஒரு ஊழியர் மூலம் ஒரு வருடம் அந்தக் கம்பெனி சம்பாதிக்கும் குறைந்த பட்ச வரவு 12-14 லட்சம் ரூபாய்கள். இதில் இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், காக்னிசென்ட்ஸ், விப்ரோ, சத்யம், சின்டெல் போன்ற கம்பெனிகளின் (அமெரிக்க கம்பெனிகளுக்காக மட்டும் உழைக்கும்) ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 15-20 லட்சம் பேர்கள். கணக்கு போட்டுப் பாருங்கள் பிறகு தெரியும் கொள்ளை நடக்கிறதா இல்லையா என்று.

இந்த கூத்துக்களெல்லாம் போதாது என்று இவரை எதிர்க்கும் குடியரசு கட்சியோ, 1983-84ல் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து எம்.ஜி.ஆர். கருப்பு சட்டை போராட்டம் நடத்தி, பள்ளி கல்லூரிகளுக்கு 2 வாரம் லீவ் விட்டது போல எந்த ஆக்க பூர்வமான திட்டங்களும் இன்றி, சும்மா தேநீர் கூட்டம் நடத்தி காமெடி செய்து கொண்டிருக்கிறது,.

திரை விமர்சனங்கள்
வேட்டைக்காரன்

விஜய் கருத்தரித்தப் பெண் போல இடுப்பில் கைவைத்த படி, வழக்கம் போல் சிறிது காமெடி, எக்கச் சக்கமாக அட்வைஸ், அதைவிட அதிகமாக பஞ்ச் டைலாக், டாய், ஏய் என்று கத்தி கத்தி வசனம் பேசி, பார்த்தாலே உடம்பு வலிக்கும் அளவுக்கு சண்டை போட்டு இருக்கும் படம் என்பதைத் தவிர சொல்வதற்கு ஏதும் இல்லாத படம். இதில் அனுஷ்கா நடிக்க எந்த வாய்ப்பும் இல்லாமல், கொஞ்ச்ச்ச்சூசூண்டு உடுத்திக் கொண்டு பாடல் காட்சிகளில் நடனம் ஆடவும் தெரியாமல் வெறும வந்து குயவனார் களிமண் மிதிப்பது போல் மிதிக்கிறார், இவர் எப்படி இவ்வளவு ப்ரபலமானார் என்பது தெரியவில்லை. இதில் சலீம் கெளஸ் என்கிற வடநாட்டு நடிகரை வில்லனாகப் போட்டு ‘சிவனும் நானும் ஒன்று’ என்று சொல்லி சொல்லி அவருடைய நல்ல நடிப்பை விரயம் செய்திருக்கிறார்கள். டெல்லி கணேஷ் அவருடைய மனைவியாக வருபவர் என்று ஒரு பட்டாளமே சும்மானாச்சி வந்து போகிறார்கள். இந்தப் படம் ஓடக்கூடிய சாத்தியக்கூறுகள் ரொம்ப குறைவு. பாடல்கள் குத்துப்பாட்டு இசைக்கு தலைவர் விஜய் ஆண்டனியின் இசையில் இருந்தாலும் க்ரிஷ் பாடியுள்ள ‘ஒரு சின்னத் தாமரை’ பாடல் அறுமை. பாடல்கள் குத்துப் பாட்டாக இருந்தாலும், அதற்கான செட், நடன அமைப்பு என்று விஜயின் படங்களில் சீ சென்டரை கவரும் வகையில் இருப்பது மாறுவதே இல்லை. இந்தப் படம் விஜயின் திருப்பாச்சியை நினைவு படுத்துவதும் இது ஒடாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

சுறா:
படம் ஆரம்பிக்கும் போது ஆரம்பிக்கும் காமெடி படம் முழுக்க நீடிக்கிறது. இது விஜய்யின் சண்டைப் படம் என்பது சொன்னாலும் நினைவுக்கு வருவதில்லை. முதல் காட்சியில் அவர் கடலில் ஒரு சுறா போல எம்பி எம்பி குதித்து நீச்சலடித்தபடி வருவதைப் பார்த்த பிறகு இது ஒரு சண்டைப் படம் என்று எப்படி ஒருவர் சீரியசாக இந்தப் படத்தை பார்க்க முடியும். வழக்கம் போல பாடல்கள் பலதும் குத்துப் பாட்டு ரகம்தான் என்றாலும், அதில் தஞ்சாவூர் ஜில்லாக்காரி பாடலை பாடியவர் கலக்கியிருக்கிறார், சிறகடிக்கும் நிலவு பாடலில் கார்த்திக் கலக்கியிருக்கிறார். இதில் தஞ்சாவூர் ஜில்லாக்காரி பாடலை சமீபத்தில் ரிச்மண்டில் ஒரு மெல்லிசை நிகழ்ச்சியில் நாரியின் மகன் பாடி அசத்தியிருந்தார். படத்தில் கதை என்ற ஒன்று கிஞ்சித்தும் இல்லை, லாஜிக் என்பது விஜய் பேசும் பன்ச் டைலாக்தான் என்று நம்பி விடுங்கள். தெலுங்கு நடிகர் வில்லனாக நடித்திருக்கிறார் (அல்லது காள் காள் என்று கத்தியிருக்கிறார்) இவருக்கு எடுப்பு ஸ்ரீமன் (பஞ்ச தந்திரம் படத்தில் கமலின் குறுந்தாடி நண்பராக வந்து தெலுங்கு பேசுபவர்), கதாநாயகி தமன்னா (எதுக்கு?), வடிவேலு பாவம் முடிந்தவரை படத்திற்கு உயிரூட்ட முயற்சி செய்கிறார் ஆனாலும் முடியவில்லை.

சிங்கம்:
வேட்டைக்காரன், சுறா படங்களின் நஷ்டத்தை ஈடு கட்ட சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படம் சிங்கம். சூர்யா உயிரைக்கொடுத்து நடித்திருக்கும் படம், சூர்யாவின் நடிப்பு, நல்ல மசாலா, நல்ல பாடல்கள், நல்ல சண்டை, டாய் டாய் என்று வசனங்கள் என்று படம் முழுவது விரவியிருக்கிறது. விஜய்க்கு துணையாக நடித்த நடிகை, சூர்யாவுக்கும் துணையாக நடிக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி என்று நினைக்கிறேன், அதனால் இந்தப் படத்தின் நாயகி அனுஷ்கா, இந்தப் படத்திலும் இவருக்கு நடிப்பத்ற்கு வாய்ப்பு இல்லாமல் வெறும வந்து போகிறார். சூர்யா அவருடைய வேல் படத்திற்கு பிறகு படத்திற்கு படம் பக்கம் பக்கமாக வசனம் பேசி பேசி கொல்கிறார். அதை இவர் உடனடியாக நிறுத்துவது நல்லது. அவருடைய நடிப்பிற்கு இது மிகப் பெரிய தடையாக இருக்கிறது. இது படத்தில் மட்டும் இல்லை, ஒரு விழாவிற்கு வந்தாலும் சரி, தொலைக்காட்சியில் ஒரு நேர்காணல் என்றாலும் சரி இவர் பேச ஆரம்பித்தால் நிறுத்துவதே இல்லை, இவரோடு இவர் தம்பியும் இருந்தால் போச்சு இவரது பேச்சு இரட்டிப்பாக மாறிவிடுகிறது. இந்தப் படத்தின் வில்லன் ப்ரகாஷ்ராஜ், இவர் இப்படி ஒரு சாதாரண வில்லானாக வந்து போவதை கண்டிப்பாக குறைத்துக் கொள்ள வேண்டும். இவர் முன்னாள் நடிகர்கள் எஸ்.வி. ரங்காராவ் போல பன்முக நடிகர் ஆனாலும் இவரிடமும் ஒரு மெனரிசம் ஒளிந்திருக்கிறது இதை இவருடைய எல்லா படத்திலும் பார்க்க முடிகிறது. படத்தில் சகிக்க முடியாத ஒன்று என்றால் அது விவேக்கின் நடிப்பு. இவர் செய்வது எல்லாம் காமெடி என்று இவராகவே ஒரு கணக்கிட்டு நடிக்கிறார், இதில் நிறைய வடிவேலுவை போல காப்பியடிக்க முயற்சி வேறு, சீக்கிரம் இவர் தனது பாணியை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், காலம்தள்ளுவது கடினம். ஒரு முறை பார்க்க்க்கூடிய ஜனரஞ்சகமான படம்.

ஜக்குபாய்:
முதலில் இந்தப் படம் ஃப்ரென்ச் படமான வசாபியை காப்பியடித்த்து என்று விக்கிபீடியாவில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் நிஜ இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் என்றால் இதுநாள் வரை இவரது படங்களை இயக்கியது கண்டிப்பாக வேறு யாரோ. இந்தப் படம் ஒரு குப்பை என்று சொல்லக்கூடாது, காரணம் சில சமயம் குப்பையிலிருந்தும் சில மாணிக்கங்கள் கிடைக்கலாம், இது அதையும் தாண்டி கீழானது. சரத்குமாருக்கு நடிக்க ஒரு ஸ்கோப்பும் இல்லை, ஷ்ரேயாவுக்கு நடிக்கத் தெரியவேயில்லை, சரத்தின் மனைவியாக வருபவருக்கு சரத், ஷ்ரேயா போல ஸ்டார் அந்தஸ்த்தும் இல்லை, நடிப்பும் இல்லை, அழகும் இல்லை, மொத்தத்தில் இவரைச் சுற்றியே இயங்கும் படத்தில் எப்படி இவருக்கு வாய்ப்பு தந்தார்கள் என்று தெரியவில்லை. விமானத்தில் சரத்தின் அருகில் அமர்ந்து வருபவர் முதல் படத்தின் அசகாய சூர வில்லன் வரை எவருமே பாத்திரத்திற்கு பொருத்தமாகவே இல்லை. தாங்க முடியாத மற்றோரு கொடுமை இந்தப் படத்தில் காமெடியன், சரத்தின் நண்பன், ஆஸ்ட்ரேலியாவில் தோள்பட்டை வரை முடிவளர்த்து போலீஸில் உயர் அதிகாரியாக (எப்படிங்க அது) வந்து நடிப்பு/காமெடி என்று கவுண்டமணி தாளிக்கிறார். ஓசியில் கிடைத்தாலும் பார்க்க முடியாத திராபை படம். இதில் இந்தப் படத்தை திருட்டு வீடியோவில் படம் வெளிவரும் முன்பே வந்து விட்டதாகச் சொல்லி தர்ணா செய்து, பொதுக்கூட்டம் கூட்டி, க்ளைமாக்ஸை மாற்றி, எல்லா குழப்படிகளையும் செய்தார்கள். எனக்கென்னவோ இந்தப் படம் ஓடாது என்பது தெரிந்த்தும் படக்குழுவினரே ப்ளான் செய்த ஸ்டண்ட் இது என நினைக்கிறேன்.

களவானி
திருட்டுப் பயல் என்பது இதன் அர்த்தம். பசங்க படத்தில் “இங்கிட்டு மீனாட்சி, அங்கிட்டு” “இந்த நல்லவன் பேர் மீனாட்சி” என்று சிரித்தபடி வரும் விமல் கதாநாயகனாக நடித்துள்ள படம், நாயகி ஓவியா இவருக்கு நடிப்பு சுமாராக வருகிறது. விமல் சர்வ சாதாரணமாக நடிக்கிறார். நடிக்கிறார் என்றுகூட சொல்ல முடியாது மிக மிக இயல்பாக இருக்கிறார். முன்னனி நடிகர்களே உஷார், இவரது பாடி லாங்க்வேஜ் கிராமத்தான் வேடத்திற்கு கச்சிதமாக இருக்கிறது அதைச் சற்று மாற்றி நகரத்தானாக மாறினால் உங்கள் கதி அதோகதிதான். குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அருமையான படம். தமிழ்த் திரையுலகத்தில் ஒரு புறம் 180+ கோடிகளில் எந்திரன் வரும் அதே நேரம் ஒரு சில லட்சங்களில் இப்படி பட்ட தரமான படங்களும் வருகிறது என்பது நம்பிக்கைத் தரும் விஷயம்.

ராஜ்நீதி
இந்திப் படம். அரசியல் என்ற தலைப்பில் வேறென்ன அரசியல்தான், கதைக்காக யாரும் மெனக்கெடவில்லை, மகாபாரதத்தையும், ஆங்கில நாவலான காட்ஃபாதரையும், ராஜீவ் காந்தி, சோனியா காந்தியின் கதை என்று இவை மூன்றையும் ஒரு சட்டியில் போட்டு கலக்கி கதை பண்ணியிருக்கிறார்கள். நடிப்பின் சிகரங்கள் நானா படேகர், நஸ்ருதீன் ஷா மற்றும் மனோஜ் பாஜ்பாய் போன்றவர்களை வீணடித்து எடுத்திருக்கும் படம். அஜய் தேவகன், ரன்பீர் கபூர்(ரிஷி கபூரின் மகன்), காத்தரீனா கய்ப் போன்றோர் வந்து போயிருக்கும் படம். இதில் ரன்பீர் கபூர் எதிர்கால இந்தித் திரைப்படங்களின் நடிப்பின் சிகரம் என்று ஒரு பேச்சு என்று எனது நண்பரின் மனைவி நொந்து கொண்டே தெரிவித்தார், இது உண்மை என்றால், இந்திப் படங்கள் நாசமாகப் போகிறது என்பதற்கு இது கண்டிப்பாக ஒரு அறிகுறிதான். இவரது படங்கள் ஓடாமல் இவரும் இவருடைய தந்தையைப் போலவே சீக்கிரம் திரை உலகை விட்டு விலகினால் இந்தி திரைஉலகிற்கு நல்லது.

From Paris with Love
எனக்கு பிடித்த நடிகர் ஜான் ட்ரவோல்டாவும், ஜானதன் ரைஸ் மெயர்ஸும் நடித்துள்ள வேக வேகமான ஒரு படம். ட்ரவோல்டா அநாயசமாக நடிக்கிறார், இவரது ஆளுமைத்தன்மை படத்தை வேகமாக நகர்த்திச் செல்கிறது. சற்று மிகை நடிப்பாகத் தெரிந்தாலும் அதிலும் ஒரு தீவிரம் தெரிகிறது. படத்தின் பல காட்சிகள் இந்தப் படத்தை குடும்பத்தோடு பார்க்க தகுதியில்லாத் ஒன்றாகச் செய்தாலும், வேகமான படத்தை விரும்பும் பலருக்கும் இது ஒரு விருந்து.

Inception
க்ரிஸ்ட்டோஃபர் நோலன் (மொமெண்டோ, டார்க் நைட்) இயக்கத்தில் வெளிவந்துள்ள படம். கதை ரொம்ப சிக்கலான ஒன்று. நாம் எல்லோரும் கனவு காண்போம் அல்லவா? அப்படி ஒரு கனவில் நாம் தூங்கி அங்கு ஒரு கனவு கண்டால்! இந்த விஷயத்தை சீரியசாக கையாண்டு நிஜ வாழ்க்கையில் ஒரு கனவு, அந்தக் கனவில் ஒரு கனவு, அந்தக் கனவில் ஒரு கனவு அந்தக் கனவில் ஒரு கனவு என்று தெளிவு படுத்தி (!!!) எடுத்திருக்கும் படம் இது. படம் முடியும் தருவாயில் நாம் இருப்பது கனவு லோகமா, அல்லது நிஜ லோகமா என்று நம்மை சற்று தள்ளாட வைத்திருக்கிறார் இயக்குனர். லியனார்டோ டி காப்ரியோ சர்வசாதாரணமாக நடித்திருக்கிறார். கண்டிப்பாக திரையரங்கில் பார்க்க வேண்டிய படம், முடியவில்லை என்றால், கண்டிப்பாக வீட்டிப் பார்க்க வேண்டிய ஒரு படம். படத்தின் முடிவு தெரிந்தால் சற்று எனக்கு பின்னூட்டமிடவும். மனித மனங்களோடு அதிகம் விளையாடும் கதையாகவே தனது கதைகளை அமைத்துக் கொள்வது இந்த இயக்குனரின் கை வந்த கலை.

Shutter Island
இயக்குனர் மார்ட்டீன் ஸ்க்கோர்ஸீஸ் (டிபார்ட்டட், காங்க்ஸ் ஆஃப் ந்யூ யார்க், காஸினோ, கேப் ஃபியர், குட் ஃபெல்லாஸ், டாக்ஸி ட்ரைவர்) இயக்கத்தில் வெளிவந்த படம். கதை - ஒரு சிறிய தீவு, அதில் ஒரு குற்றத்தை புலனாய்வு செய்ய வரும் கதாநாயகன் லியனார்டோ டி காப்ரியோ அவருடைய உதவியாளர் சகிதம் நடந்த குற்றத்தை கண்டுபிடிக்க முயல்வதும், அதில் அவர் சந்திக்கும் சவால்களும், வெளிக் கொணரும் மர்மங்களும் என்று நம்மை துடி துடிக்க வைக்கும் படம். இதன் விளம்பரத்தை பார்த்துவிட்டு இது ஒரு பேய்ப் படம் என்று பலரைப் போல நானும் திரையரங்கில் பார்க்காமல் குறுந்தகட்டில் வந்தவுடன் பார்த்தேன். அப்படி பார்த்த போதுதான் இந்தப் படம் மிகச் சிறந்த மர்மப் படம் என்பது புரிந்தது. கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு படம்.


பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்


0 comments: