நேரம்

Sunday, July 08, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 13

நிரபராதிகள்

இந்தியாவின் தாஜ் மஹால் சமீபத்திய 7 உலக அதிசயங்கள் கருத்து கணிப்பில் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

புதிய உலக அதிசயங்களை தேர்ந்தெடுக்க கடை பிடிக்கப் பட்ட வழிமுறைகளின் அபத்தங்களைப் பற்றி நான் விமர்சிக்கப் போவதில்லை, மாறாக சமீபத்தில் வெளிவந்த ஒரு சில செய்திகளைப் பற்றி சொல்லலாம் என நினைக்கிறேன்.

செய்தி 1:
உத்திரப் பிரதேச முதல்வர் மாயாவதி மீது பதிவாக இருந்த வழக்கு முதல் தகவல் அறிக்கையுடன் சேர்ந்து மாயமாக மறைந்து விட்டது. அதை மாயமாக மறைத்தவர் அம்மாநில ஆளுனர் திரு. ராஜேஸ்வர்.

யமுனை நதியின் போக்கைத் திருப்பி விட்டு, தாஜ்மஹாலுக்கு அருகில், கேளிக்கை, வர்த்தகம் நடைபெற ஒரு வணிக வளாகம் கட்டப்பட வேண்டும் என்று தனது முந்தைய ஆட்சியில் மாயாவதி முனைந்துள்ளார், இத்திட்டம் தாஜ்மஹாலுக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்ற ஆட்சேபம் எழுந்ததால் குற்றச்சாட்டு பதிவானது.

ஸி.பி.ஐ இதற்குப் போதிய ஆதாரம் இல்லை என்று தற்போதைய மத்திய அரசு வந்தவுடன் தெரிவித்தது. மத்திய விஜிலென்ஸ் கமிஷன் வழக்கு நடத்த போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று கூறியதும், உச்சநீதி மன்றம் இதை விசாரிக்க வேண்டும் என்று ஸி.பி.ஐ க்கு உத்தரவிட்டது. அதன்பிறகு ஸி.பி.ஐ விசாரணை நடத்தி அவர் மீது வழக்கு பதிவு செய்ய அம்மாநில ஆளுனரின் உத்தரவை நாடியது. அவர் அப்படி வழக்கு தொடுக்க எந்த ஆதாரமும் இல்லாததால் வழக்கிற்கு அனுமதி மறுக்கப் படுகிறது என்று சொல்லி முடித்துவிட்டார்.

செய்தி 2:
பீகார் மாநில முன்னாள் முதல்வர்கள் லாலு ப்ரசாத் யாதவ் மீதும் அவருடைய மனைவி ராப்ரி தேவி மீதும் அளவுக்கு மீறி சொத்து குவித்ததாக கருதப்பட்ட வழக்கில் இருவரும் நிரபராதிகள் என்று விடுவிக்கப் பட்டுள்ளனர்.

இந்தத் தீர்ப்பு மிக நியாயமான தீர்ப்பு என்று இருவரும் கருத்துத் தெரிவித்தனர்.

இவைகளை கேட்டவுடன் எனக்கு நினைவிற்கு வந்தது சுமார் ஒரு 20 வருடங்களுக்கு முன்பு ஆ.விகடனில் வந்த ஒரு ஜோக்:

ஜட்ஜ்: முனுசாமி, வாதியின் பண்ணைக்குள் இரவில் நுழைந்து ஆடுகளைத் திருடியதாக உன் மீது சாட்டப் பட்ட குற்றங்களுக்கு போதிய ஆதாரம் இல்லாததால், நீ நிரபராதி என்று தீர்ப்பளித்து உன்னை விடுதலை செய்கிறேன்.

முனுசாமி: ரொம்ப நன்றிங்க அய்யா, அப்ப அந்த ஆடுகளை நானே வெச்சுக்கலாமா?

இதற்கும் மேலே சொன்ன செய்திகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

திருவாளர் - திருமதி:
சனிக்கிழமை தோறும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் துர்பாக்யம் அடிக்கடி ஏற்படும். எப்போதும் இந்நிகழ்ச்சி முடியும் தருவாயில்தான் பார்க்க நேரிடும், இதைப் பற்றி எழுத வேண்டும் என்று பல முறை நினைத்திருந்தேன் கை கூடவில்லை.

அடிப்படையில் இம்மாதிரி நிகழ்ச்சிகளுக்கு எப்படி பங்கேற்க வருகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. பணமா, சமூகத்தில்/சமுதாயத்தில் இதனால் ஏதும் வித்தியாசமான அங்கீகாரம் கிடைக்கிறதா, அல்லது வேறு ஏதாவதா?

புதிதான மணமக்கள் சரி, மத்திய வயதைக் கடந்தவர்களும், முதியவர்களும் கூட இந்த நிகழ்ச்சியில் எப்படி பங்கு பெற வருகிறார்கள்? முதல் சுற்றில் திரைப்படப் பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள். சகிக்கவில்லை. எல்லோருக்கும் விளக்கெண்ணைய் குடித்தது போன்ற ஒரு முக பாவம், தாங்கவில்லை, வழியில் அசிங்கத்தை மிதித்து விட்டு ஒரு குழந்தை தடுமாறி நடப்பது போன்ற நடனம், கபடி ஆடுவது போல இருவரும் சுற்றி சுற்றி வந்து ஆடுகின்றனர். அடுத்த சுற்றில், கொடுக்கப் படும் ஒரு சந்தர்ப்பத்திற்குத் தேவையான வகையில் நடிக்க வேண்டும், கணவன் மனைவியாகவும், மனைவி கணவனாகவும் மாறி நடிக்க வேண்டும், கஷ்டம்டா சாமி.

2-3 வாரங்களுக்கு முன்பு ஒரு முதிய தம்பதியினர் கலந்து கொண்டு முதல் பரிசையும் வென்றார்கள். அவர்கள் சொன்ன ஒரு தகவல், எதற்கும் வயது ஒரு தடையில்லை. எதற்காகவும் கலங்கி நிற்காதீர்கள், எதற்காகவும் வருந்தாதீர்காள் என்பது. அதெல்லாம் சரிதான், ஆனால், 65 - 70 வயது தம்பதியினரை இப்படி நாட்டியம் ஆட வைத்து நமக்கு ஆலொசனை தரச் சொல்லுவதை விட அவர்களை வெறும பேட்டி கண்டு நமக்குத் தெரிவித்திருக்கலாம்.

தமிழ் விழா 2007
இந்த பதிவு உருவாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வட அமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை நடத்தும் தமிழ் விழா 2007 வட கரோலினா மாநிலத்தில் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த விழாவில் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை. நமது நகரத்திலிருந்து சிலர் சென்றிருப்பதாக தலைவர் நாகு தெரிவித்தார். அப்படி நேரில் சென்று பார்த்தவர்கள் அவர்களது அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ள முடிந்தால் நம் அனைவருக்கும் ஒரு விருந்தாக இருக்கும்.

இடைத்தேர்தல் முடிவுகள்
மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. காங்கிரஸ், ஆளும் கட்சியின் ஆதரவுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. விஜயகாந்தின் தேமுதிக 3-வது இடத்தில் வந்திருக்கிறது. அவரை தி.முகவும், அதிமுகவும் சற்று ஜாக்ரதையாக அணுகுவது நல்லது. அவரது வேட்பாளரால், 21000 வாக்குகள் பெற முடிந்திருக்கிறது. அது அதிமுக வை விட 9ஆயிரம்தான் குறைவு. இந்த வெற்றி அழகிரியின் வெற்றி என்று அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்த வெற்றிக்கு திமுக உதவியிருந்தாலும், வெற்றி பெற்றது காங்கிரஸ் தான் என்று சொல்லி விவாதத்தை சூடாக்கியிருக்கிறார். அதே சமயம் பாமாக தலைவர் ராமதாஸ் திமுகவுடனான உறவு தேர்தல் உறவுதான் அது முடிந்து விட்டது என்று நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டார். இது எங்கு போய் முடியுமோ, சொந்தத் தொலைக்காட்சி இன்னமும் வராத இந்த கால கட்டத்தில், குடும்ப தொலைக்காட்சியுடன் சண்டை ஓயாத நேரத்தில், ஆட்சி கவிழ்ந்தால், மத்தியில் செல்வாக்கு சரிந்தால், என்னன்ன நடக்குமோ. அடுத்த டமாஸ் காட்சி வரப்போகுதா?
தமிழ்த் திரைப்படம்
நான் அவன் இல்லை

ஜெமினி கணேசனின் நடிப்பில் ஒரு மைல் கல்லாக இருந்த இந்தப் படத்தை மறுபடி தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள்.

முதலில் ஒரு படம் வெளியாகும் கால கட்டத்தைப் பொறுத்தே அதை ரசிக்க முடியும். இன்றைய நவீன கால கட்டத்தில் ஒரு கூட்டமே ஏமாறுவதாக காட்டியிருப்பதும், அதையும் தாண்டி ஒரு தொழில் துறை வல்லுனராக வரும் நமீதா (இதை நம்ப வேண்டியிருப்பது நமது தலையெழுத்து) கதாநாயகன் ஜீவனிடம் ஏமாந்த பிறகும் ஜீவன் இவரை மனதார காதலித்தார் என்று நம்பி பித்துக்குளித்தனமாக இருப்பதும் பார்த்தால், தலையில் அடிச்சுக்க ரெண்டு கை பத்தாது.

ஜெமினியின் நடிப்பு, சற்றும் மிகையில்லாதது, அது ஒரு தெளிந்த ஒடையைப் போல இருக்கும், ஜீவன் பாவம் தலையை ஒரு பக்கம் சாய்த்த மாதிரி இருப்பதுதான் நடிப்பு என்று தெரிந்து வைத்திருக்கிறார். ஒரு பக்கத் தோள்பட்டையை தூக்கி மறு பக்கத்தை சாய்த்து நடப்பது அவருடைய ஸ்டைல் போல, படம் முழுவதும் அப்படியே வருகிறார். ஜெமினியின் அப்பாவித்தனம் அவருடைய மிக பெரிய வெற்றி, ஜீவனின் நடை, பாவனை, வசன உச்சரிப்பு, எல்லாம் அவர்தான் குற்றவாளி என்பதை படம் ஆரம்பித்த உடன் தெரிவித்து விடுகிறது.

ஒரு போலீஸ் அதிகாரி அவரை கைது செய்யும் சமயம், அவரிடம், நீ 5 பெண்களை ஏமாற்றியிருக்கிறாய் என்றதும், நாமாக இருந்தால், நான் அப்படி செய்யவில்லை என்று சொல்லியிருப்போம், ஜீவன், 'நான் அவன் இல்லை' என்று டைலாக் அடிக்கிறார். அப்படியே படம் முழுக்க பேசியபடி தப்பிக்க முயற்சி செய்கிறாராம். அட போங்கப்பா என்ற ஆயாசம்தான் வருகிறது. பாடல்களில் 'ஏன் எனக்கு மயக்கம்' மட்டும் சுமார் ரகம், மற்ற பாடல் காட்சிகள் யாருமே பார்க்க முடியாத அளவு ஆபாசம் கொட்டி கிடக்கிறது. இதை நிஜமாகவே தணிக்கை செய்துதான் வெளியிட்டார்களா என்ற கேள்வி கண்டிப்பாக தோன்றுகிறது. இந்தப் படத்தை பார்காமல் விட்டாலும் ஒன்றும் நஷ்டமில்லை.


-- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

0 comments: