நேரம்

Wednesday, September 05, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 15

எனது முந்தய பதிவை படித்த 2 பேர்களில் (ஒருவர் நாகு, மற்றவர் எனது துணைவியார்) நாகு இந்தியா 60 வருடங்களில் பெற்றிருக்கின்ற பல முன்னேற்றங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லியிருந்தார். அவைகளை கீழே தந்திருக்கிறேன்.


1. கல்வியில் மேன்மை - கேரளா முழுவதும், தமிழகத்தில் சில/பல மாவட்டங்கள் எனக்குத் தெரிந்து 100% லிட்டரசி அடைந்திருக்கின்றன.
2. அறிவியல், தொழில்நுட்ப சாதனைகள். நாமே விண்வெளிக்கலன் செலுத்தும் அளவு வந்திருக்கிறோம். ரிமோட் ஸென்ஸிங்கில் நாம் டாப்கிளாஸ்
3. ஜனநாயகம்: நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் ஜனநாயகம் தடவிக்கொண்டு இருந்தாலும், உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று பெயர் வாங்கியிருக்கிறோம்.
4. தகவல் தொடர்புத்துறையில் மிக வேக வளர்ச்சி.

5. பெண் கல்வி, பெண் உரிமை: இதில் நல்ல வளர்ச்சி. உலகத்தின் சிறந்த ஜனநாயகத்திலேயே இதுவரை பெண் அதிபர் இருந்தது கிடையாது. நாம் அனைவரையும் நடுங்க வைக்கும் பிரதமரில் இருந்து, முதல்வரில் இருந்து ஜனாதிபதி வரை பார்த்துவிட்டோம். 6. மருத்துவத்துறையிலும், விவசாயத் துறையிலும் பல சாதனைகள்.

இவை எதையும் நான் மறுக்கவில்லை. இவைகள் மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சி என்று என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. உலகின் பணக்கார நாடு என்று சொல்லிக்கொள்ளும் இங்கும் வால்மார்ட் அருகிலும், ரிச்மண்ட் நகரத்துக்குள் சென்றால் சிக்னலுக்கு சிக்னல் வீடில்லாத ஏழைகள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் குறிப்புகளில் 1, 3, 5 விவாதத்திற்குரியது.

1. 100% படிப்பறிவு என்பது ஒரு கேள்விக்குறிதான். இது பற்றி எனது மலையாள நண்பர்களோடு ஒருமுறை விவாதித்த போது அவர்கள் சொன்னது, 100% படிப்பறிவு என்பது அந்த ஊரில் இருப்பவர்கள் கையெழுத்து போடவும், எழுத்துக் கூட்டி அவர்களது பெயரை எழுதவும் தெரிந்திருந்தால் அவர்கள் படித்தவர்கள் பட்டியலில் இடம் பெற்று விடுவார்கள் என்று.

எனவே இது எனக்கு ஒரு பொருட்டில்லை.

3. ஜனநாயகம் - ஜனநாயக இந்தியாவில்தான் ராப்ரி தேவி/மாயாவதி போன்றோர் முதல்வர் ஆக முடியும், ஆனால் மொரார்ஜி போன்ற நல்ல தலைவர்கள் சரண்சிங் போன்றவர்களால் ஆட்சி இழந்து இந்தியா பாழடைய முடியும். இந்திரா போன்றோர் மீண்டும் மீண்டும் ஆட்சி செய்ய முடியும்,

5. ஒரு பெண், அதிபராக வருவது அவ்வளவு முக்கியமா? அது மட்டுமே ஒரு நாட்டை முன்னேற்றமடைந்த நாடாக்கி விடுமா? இது என்ன லாஜிக் என்று எனக்குப் புரியவில்லை.

உங்கள் குறிப்புகள் 2, 4 மற்றும் 6 சொல்வது, அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவத் துறை சாதனைகள். இவைகளை நான் மறுக்கவில்லை. இதனால், நான் சொன்ன எதுவும் மாறவில்லையே என்பதுதான் எனது ஆதங்கம்.

முதல்வன் என்ற திரைப்படத்தில் நிருபராக வரும் அர்ஜூன், முதல்வராக நடிக்கும் ரகுவரனை பேட்டி காணும் காட்சியில் ஒரு கேள்விக்கு ரகுவரன், இப்ப நாட்டுல அவன் அவன் செல்போன், பிட்ஸான்னு அலையரான் இப்ப போய் ஏழை அது இதுன்னு சொல்றியே என்பார் அதுக்கு அர்ஜூன் "ஐயா வயத்து பசிக்கு ஒரு வேளை சோறில்லாதவங்க செல்போனையோ, பிட்ஸாவையோ யோசிக்கரது கூட இல்லைங்க என்பார்" அதுதான் எனது கருத்தும்.

ஒரு சராசரி மனிதனின் தேவை, நல்ல தண்ணீர், இருக்க ஒரு இடம், சகாய விலையில் உணவுப் பொருள்கள், நல்ல மருத்துவ வசதி, குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான கல்வி. இவைகளை தந்தாலே போதுமே, இந்தியா உலகில் தன்னிறைவு பெற்று விடுமே, அதைத் தர எந்த அரசியல்வாதியும் தயாரில்லை, அதைத் தா என்று கேட்க எந்த பொது ஜனத்திற்கும் துணிவில்லை.

கடைசியாக, பல வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு விவாதம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. வாய்ப்புக்கு நன்றி நாகு.

சற்றுமுன் பார்த்த செய்தி. தமிழக காவல் துறையில் என்கவுண்டர் செய்யும் காவல்துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்படமாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு மனித உரிமை கமிஷன் பரிந்துரைகளின் படி என்று தெரிய வந்துள்ளது.

நான் முன்பே சொன்னது போல், ஒரு மனிதனின் உயிரை எடுக்கவும் தயங்காத பயங்கர குற்றவாளிகளை காவல் துறை பிடித்தாலும் அவர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கால் வெளியே வந்து மீண்டும் மீண்டும் பொது மக்களுக்கு தொல்லை தருவது நின்றபாடில்லை. ஆனால் அவர்களுக்கு பரிந்து பேச அவர்கள் தரப்பில் ஒரு வக்கீல் இருக்கிறாரோ இல்லையோ, கண்டிப்பாக மனித உரிமை கமிஷன் இருக்கிறது.

இதைத்தான் பேய் அரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று மூதோர் சொல்லி வைத்தார்கள்.

திரைப்பட விமர்சனம்
ஆங்கிலத் திரைப்படம் - Bridge to Terabithia
சமீபத்தில் இந்தப் படத்தை குடும்பத்தோடு பார்த்தேன். சிறுவயதில் நாம் அனைவரும் விளையாடும் விளையாட்டை சற்று மிகைப் படுத்தி படமாக்கி விட்டனர்.

எனது சிறுவயதில் எங்கள் வீட்டிலிருக்கும் கொய்யா மரம்தான் எங்களது ராஜ்ஜியம், அதில் அனைவருக்கும் சொந்தமான கிளைகள் உண்டு, மாற்றி உட்கார்ந்து விட்டால் அவ்வளவுதான் சண்டை ஊரை கிழித்து விடும். எல்லோரும் ராஜா, ராணி, மந்திரி என பல வேடங்கள் போட்டுக் கொண்டு வாயில் வந்த வசனத்தை பேசிக் கொண்டு பசிக்கும் வரை விளையாடுவோம்.

இதேதான் இந்தப் படத்தின் கதையும், ஆனால் அதை மிக மிக நேர்த்தியாக சொல்லி, நம் அனைவரையும் கண்களையும், காதுகளையும் கூர்மையாக வைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். வில்லன் என்று ஒருவர் தனியாக இல்லாமல் இயக்குனரே வில்லனாகியிருப்பது சற்று அதிர்ச்சியாக இருக்கிறது. குழந்தைகளுடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

The Contract
மார்கன் ப்ரீமேன், ஜான் குசாக்கின் நடிப்பில் வந்திருக்கும் இந்தப் படம், நல்ல பொழுது போக்குப் படம். மார்கன் ப்ரீமேன் நடிப்பு எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று. அவருடைய வசன உச்சரிப்பில் ஒரு கிண்டல் எப்போதும் துளிர்த்து விழுவது அருமை. அது அவருடைய பாணி, அது இந்தப் படத்தில் பளிச்சென பதிந்திருக்கிறது. ஹாலிவுட் இயக்குனர்களுக்கு யாராவது சொல்ல வேண்டும், மனைவியில்லாமல், மகனையோ அல்லது மகளையோ வளர்க்கும் கணவர்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களை தடை செய்யச் சொல்லி, தாங்க முடியாத அந்த கதை இந்தப் படத்திலும் இருக்கிறது அது ஜான் குசாக் என்று சொல்லி ஜல்லியடிக்கிறார்கள். படத்தில் விருவிருப்பிற்கு குறையில்லை. ஒரு முறை பார்க்கலாம், ஆனால் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளோடு இதைப் பார்க்க வேண்டாம்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....

4 comments:

said...

1. 100% படிப்பறிவு கேள்விக்குரியது என்பது சரிதான். அதை எப்படி கணிக்கிறார்கள் என்பதில் கேள்வி இருக்கலாம். ஆனால் நான் பார்த்த கேரளத்தில் படிப்பறிவு அதிகம். கொச்சியில் படகு ஓட்டுபவர், திருவனந்தபுரத்தில் ஆட்டோ ஓட்டுபவர் என்னை ஆங்கிலத்தில் பேசி அசத்தினார்கள். ஆனால் ஒருவன் படிப்பறிவில்லாதவனை எப்படி அழைப்பீர்கள்? கைநாட்டு கேஸ். ஆக பெயரை எழுதத் தெரிவதுதான் படிப்பறிவின் முதல் அடையாளம் :-)

இவை மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சியல்ல. ஆனால் கல்வி, ஜனநாயகம், பெண்ணுரிமை ஒரு நாட்டின் வளர்ச்சியின் முக்கிய பாகங்கள்.

1. கல்வி பற்றி நான் சொல்லவேண்டியதில்லை. உங்கள் ஆட்சேபம் அதை எப்படி அளக்கிறார்கள் என்பதுதான். ஆனால் அதனால் மக்களின் விழிப்புணர்வு எப்படி தெரியுமா? மக்கள் தொகை கட்டுப்பாட்டில் கல்வி முக்கியமானது. தமிழகத்தில் பிறப்பு,இறப்பு விகிதம் சரிசமம் என்று எங்கோ கேட்ட ஞாபகம். அது மொத்த மக்களின் கல்வியறிவு உயர்ந்ததால்தானே.

3. நம் நாட்டின் ஜனநாயகத்தை ஒரு சிலர்(சரி பலர் என்றே வைத்துக் கொள்ளுங்கள்) கேலிக்கூத்தாக்கலாம். ஆனால் ஜனநாயகம் இல்லாவிட்டால் ஒரு தெஹல்காவோ, துக்ளக்கோ வெளியே வரமுடியுமா. ஜனநாயகம் சரியில்லாத எந்த ஒரு நாடாவது வளர்ச்சியடைந்திருக்கிறதா? சோவியத்திலிருந்து பாகிஸ்தான், கியூபா வரை? என்னதான் இடதுசாரிகள் அடித்துக் கொண்டாலும் அவர்கள் ஆளும் ஒரு நாடாவது மக்கள் வாழ்க்கைத்தரத்தை முன்னேறிய நாடுகளின் வாழ்க்கைத்தரத்துக்கு உயர்த்தியிருக்கிறதா?

5, ஒரு பெண் அதிபராக வருவது முக்கியமில்லை. அனால் பெண்களுக்கு எவ்வளவு சமத்துவம் அந்தந்த நாட்டில் இருக்கிறது என்பதற்கு ஒரு அடையாளம். அதுதான் தாலிபான் ஆண்ட ஆஃப்கானிஸ்தானுக்கும் மற்ற நாடுகளுக்கும் வித்தியாசம். பெண்களின் வளர்ச்சி முன்னேற்றத்தில் ஒரு முக்கிய பங்கு.

நான் சொல்லவந்ததெல்லாம் அறுபது வருஷங்களில் சாதித்தவையும் இருக்கின்றன. அடிப்படை வசதிகள் போதவில்லைதான். நீங்கள் சொல்பதுபோல் அரசியல் உருப்படாமல் போகிறது. அது எல்லா நாட்டிலும்தான். சுதந்திர அமெரிக்காவில் தற்போதைய ஆட்சிதான் ஒரு சர்வாதிகாரத்திற்கு மிக அருகில் வந்திருக்கிறதாம். இங்கே மதம் காரணமாக அறிவியல் ஆராய்ச்சிக்கு தடை, டார்வின் தத்துவத்துக்கு எதிர்ப்பு என்று தாலிபான் ரேஞ்சுக்கு போகிறது.

//தமிழக காவல் துறையில் என்கவுண்டர் செய்யும் காவல்துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்படமாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.//
ஆளுங்கட்சியினருக்கு பாதுகாப்போ? உருப்பட்ட மாதிரிதான். கொல்லவரும் கொடியவர்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள முடியாமல் இது கொஞ்சம் டூ மச்.

குற்றவாளிகளை விசாரிக்காமல் தண்டித்தால் நமக்கும் தாலிபானுக்கும் வித்தியாசமில்லை. குற்றவாளிகள் தப்பிக்குமாறு இருக்கும் சட்ட ஓட்டைகளை அடைக்கவேண்டும். அந்த ஓட்டைகள் எல்லா நாட்டிலும் இருக்கின்றன. என சக ஊழியர் காரை ஒருவன் குடிவெறியில் ஓட்டி மோதி சின்னாபின்னமாக்கிவிட்டான். அவர் உயிருடன் வந்ததே ஆச்சரியம். அப்படிப்பட்ட கேஸை வக்கீல்கள் ஏதோ ஒரு டெக்னிக்காலிட்டியில் குடிபோதை ஆதாரத்தையே செல்லாமல் ஆக்கிவிட்டார்கள். நீதிபதிக்கு கோபம் வந்து அவர் வேறு ஒரு டெக்னிக்காலிட்டியில் உள்ளே தள்ளிவிட்டார்.

நீதிபதி என்றதும் ஞாபகம் வருகிறது. சமீபத்தில் சஞ்சய் தத்துக்கு காவல் தண்டனை வழங்கிவிட்டு அவரை தனியாக ரூமுக்கு கூப்பிட்டு கவலைப்படாதே என்று நீதிபதி தைரியம் சொன்னாராம். தண்டனை வாங்கிய மற்றவர்களுக்கு இப்படி தைரியம் சொன்னாரோ?

மார்கன் ஃப்ரீமன் எனக்கும் பிடிக்கும். டெரபிதா புத்தகம் இருக்கிறது. படித்துவிட்டு படத்தைப் பார்க்கிறேன்.

said...

நாகு,

முதலிலேயே சொல்லிடறேன். உங்க கூட விவாதம் பண்றதுக்கு ரொம்ப நல்லா இருக்கு.

படிப்பறிவு எதைத் தரவேண்டும் என்பதில் எனக்கு பலரோடு (உங்களையும் சேர்த்து) கருத்து வேறு பாடு உண்டு.

நான் 4 வருடங்கள் ஒரு சர்வாதிகாரி ஆண்ட அபுதாபி என்ற நகரத்தில் வசித்தவன். சொன்னால்தான் தெரியும் அது ஒரு முகமதியர்கள் ஆளும் நாடு, அங்கு சட்டங்கள் மிகக் கடுமை என்று. இத்தனைக்கும் அவருக்கு எழுத படிக்க (அராபிய மொழி உட்பட) எந்த மொழியும் தெரியாது. அவருடைய 45வது வயதில் பட்டம் ஏறியவர் அருகில் உள்ள, துபாய், ஷார்ஜா, ரஸ் அல் கைமா, போன்ற 6 சிறிய நகரங்களை (நாடு என்றும் சொல்லலாம்), இணைத்து United Arab Emirates (UAE) என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி 35-40 வருடங்களில் வரலாறு காணாத முன்னேற்றத்தை தந்திருக்கிறார். இதற்கு ஒரு தொலை நோக்குப் பார்வை ரொம்ப அவசியம். அது அவரிடம் இருந்தது. நம் நாட்டில் இருக்கும் அதிகம் படித்த பொருளாதார மேதைகளான மன்மோகன் சிங், சிதம்பரம், அஹுலுவாலியா போன்றவர்களிடம் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

துக்ளக் வரும் இதே இந்தியாவில், பீகாரில் எந்த இடத்திலும் எந்த பத்திரிகையும் அரசைப் பகைத்து எழுத முடியாது. தமிழ் நாட்டில் துக்ளக் தவிர வேறு எந்தப் பத்திரிகையும் அப்படி எழுத அனுமதிக்கப் படுவதாகவும் தெரியவில்லை.(இல்லை அவர்களே ஜால்ரா அடிக்கிறார்களா?)

தெஹல்கா விவகாரம் முதலில் பிடித்து இருந்தாலும், போகப் போக அவர்கள் பரபரப்பு வேண்டி பல காரியங்கள் செய்வதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. அதில் தேச சேவை இருப்பதாகத் தெரியவில்லை.


அன்புடன்,

பித்தன்.

said...

படிப்பறிவு வேறு தொலைநோக்கு வேறு. ஆளும் குடும்பத்தில் பிறந்தவர் நாட்டைப் பெரிது/வல்லது/சிறந்தது ஆக்குவது வேறு விஷயம். மெத்தப் படிக்காத கர்மவீரர் கல்வித்துறையில் சாதித்ததை வேறு எவரும் சாதிக்கவில்லை. அதனால் கல்வியே தேவையில்லை என்பதும் அது முன்னேற்றத்துக்கு உதவாது என்பதும் சரியாகாது. நீங்களும் நானும் சொல்லும் உதாரணங்களேல்லாம் அசாதாரண மனிதர்கள். லட்சத்தில் ஒருவர்கள். ஒரு பாமரனின் வாழ்வில் படிக்கத் தெரிவது ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கொடுக்கும்.

மேலும் படிப்பறிவு தொலைநோக்குக்கு உதவாது. அது எல்லாம் சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் விஷயம். படிப்பறிவு எதையும் தராது. படிப்பை எப்படி உபயோகித்துக் கொள்வது என்பது அவரவர் கையில்தான் உள்ளது. மூளையில் சரக்கிருந்தால் ஸ்விஸ் நாட்டு பேடண்ட் குமாஸ்தா கூட ரிலேடிவிடி விஷயத்தில் அசத்தலாம் . ஆனால் ரிலேடிவிடியில் வேலை செய்ய ஸ்விஸ் நாட்டு பேடண்ட் குமாஸ்தா ஆகவேண்டியதில்லை.

பீகாரில் எழுதுகிறார்களா என்று எனக்குத் தெரியாது. ஜனநாயகம் இல்லாவிட்டால் தமிழகத்தில் கூட எழுத முடியாது. அதுதான் வித்தியாசம். மேலும் அரசுக்கு எதிராக எழுத துணிச்சல், அதனால் வரும் பிரச்னைகளை எதிர்கொள்ள மனபலம், பொருள்பலம் மற்ற பல பலங்கள் வேண்டும். இது சோ'விற்கு இருக்கிறது. எனக்கு தெரிந்தவரை அவருக்கு யாருடைய 'அனுமதி'யும் கிடையாது. மற்ற ஜனரஞ்சக பத்திரிக்கைகள் அந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை அவ்வளவுதான். அவற்றின் குறிக்கோள்கள்(அப்படி ஒன்று குமுத/விகட/குங்குமங்களுக்கு இருந்தால்) வேறு. அவர்களின் டார்கெட் ஆடியன்ஸ் வேறு.

said...

நாகு,

உங்களுக்கு மறைந்த ஷேக் ஷாயத் பற்றி தெரியாது என்பது எனக்குத் தெரியாது. ஆகவே அந்த விஷயத்தை இத்துடன் விட்டு விடுகிறேன்.

க்வாண்டம் தியரியோ, ரிலேடிவிடி தியரியோ, ஏன், நாளை எய்ட்ஸ்க்கும், புற்று நோய்க்கும் கூட மருந்தை இந்தியாதான் முதன் முதலில் கண்டு பிடித்ததாக இருக்கட்டுமே, அதனால் அன்றாட வாழ்வில் ஒரு சராசரி மனிதனுக்கு அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத அரசை வைத்துக் கொண்டு என்ன பயன்?

இப்படி வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் பெற்றோர், சகோதரர்கள் அனைவருக்கும் இனி சமையல் காஸ் கிடையாது, அதுதான் உங்கள் மகன்/சகோதரன் அமெரிக்காவில் நல்ல முறையில் இருக்கிறாரே அது போதாதா உங்களுக்கு, என்று ஒரு அரசாங்கம் சொன்னால் அது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம், ஒரு பெண் அதிபராக வந்து விட்டாரே, 100% படிப்பறிவுதான் இருக்கிறதே, அதனால், தண்ணீருக்கு மைல் நீள வரிசையில் இருங்கள் என்பதும், ஒன்றாவது படிக்கக் கூட ரூ.10,000 டொனேஷன் கொடுங்கள் இல்லை உங்கள் குழந்தைகள் மாடு மேய்க்கட்டும் என்று சொல்வது.

ஒரு சிறிய உதாரணத்துடன் இந்த விவாதத்தை முடித்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

வருடா வருடம் முருகனுக்கு விரதம் இருந்து பால் காவடி தூக்கி பக்தர்கள் விழா எடுப்பது எப்போதோ பிளக்கப் பட்ட சூர பத்மனுக்காகவா? வருடா வருடம் நாம் அனைவரும் தீபாவளி கொண்டாடுவது என்றோ இறந்ததாகச் சொல்லப்படும் நரகாசுரனுக்காகவா? அப்படி நாம் நினைத்து கொண்டாடுவதால்தான் அந்த விழாக்கள் ஒரு வட்டத்துக்குள் நின்று விட்டது. நம் மனதில் இருக்கும் சூர பத்மன்களும், நம் உள்ளே இருக்கும் நரகாசுரன்களும் அழிய வேண்டும் என்பதற்காக எடுக்கப் படுகின்ற விழாக்கள் அவை என்று சற்று அனைவரும் சிந்தித்தால், நிலைமை என்றோ மாறியிருக்கும். அதைப் போல என்றோ நாம் ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை வருடம் ஒரே ஒரு நாள் நினைத்து விட்டு மறப்பதை விட, அதைப் பெறுவதற்கு இந்தியா இழந்த இழப்புகள், தொலைத்த முகங்கள், மறைந்த தலைவர்கள் என சற்று யோசித்தால் எவ்வளவு நன்மை என்று யோசிப்போம்.

- பித்தன்.