நேரம்

Monday, January 07, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 16

அனைவருக்கும் எனது அன்பான கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

என்ன கொஞ்ச நாட்கள் என் தொந்திரவு இல்லாமல் சந்தோஷமாக இருந்திருப்பீர்கள். எல்லா சந்தோஷங்களும் தாற்காலிகமானது என்பது இப்போது தெரிந்திருக்கும்.

இந்த முறை அரசியல் பற்றி பேசாமல் சமீபத்தில் நான் பார்த்த சில திரைப் படங்களைப் பற்றியும், படித்த சில புத்தகங்களைப் பற்றியும் கிறுக்கலாம் என நினைக்கிறேன்.


திரைப் பட விமர்சனம்
நான் சமீபத்தில் பார்த்த 10 படங்கள்

10. பசுபதி மே/பா. ராசக்காபாளையம்
படத்தின் நாடி விவேக்கின் நகைச்சுவை. ஒரு சப் இன்ஸ்பெக்டர் கூட இல்லாத போலீஸ் ஸ்டேஷன் தமிழகத்தில் இருக்கிறதா என்பது கேள்விகுறிதான். அதில் ஏட்டாக பணிபுரியும் அவருக்கு பசுபதி (ரஞ்சித்) மூலம் பதவி உயர்வு கிடைத்தும், எப்போதும் ஒரு சிரிப்பு போலீஸாகவே வந்து படத்தை நிற்க வைக்க முயற்சி செய்கிறார். ரஞ்சித்தும் மற்றும் பலரும் இந்த படத்தில் இருக்கிறார்கள் என்ற அளவில் இந்தப் படம் இருக்கிறது. கஞ்சா கருப்பு, பிதாமகனில் எப்படி இருந்தாரோ அதைவிட ரெண்டு சைசில், நடிப்பில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறார். இவருக்கு ஒரு பாட்டு வேற போட்டிருக்கிறார்கள். கஷ்டம்டா சாமி. லாஜிக் இல்லாமல் ஒரு அபத்தம் படம் முழுவது விரவியிருக்கிறது. தாயின் இருதய ஆப்ரேஷனுக்கு பணம் தருகிறேன் என்று ஒரு தீவிரவாத இயக்கம் சொன்னதும் அதற்கு ஒப்புக் கொள்கிறார் ரஞ்சித். இவர் போலீஸிடம் சரணடைந்ததும், அவருக்குப் பணத்தை தந்தே தீர வேண்டும் என்று அந்த தீவிரவாத இயக்கம் துரத்தி துரத்தி வருகிறது என்று கதையடிக்கிறார்கள். இந்தப் படத்தை பார்க்க நேரிட்டால், உங்கள் தலைவிதியை நொந்து கொள்வதை விட வேறு வழியில்லை.

9. மலைக்கோட்டை
எப்படியெல்லாம் படம் எடுக்கக் கூடாதோ அப்படி எல்லாம் இந்தப் படத்தை எடுத்து அதையும் வெற்றிகரமாக ஓட்டிவருகிறார்கள். கதை: அடிதடியில் இறங்கி, கோர்ட்டால் தினமும் திருச்சி மலைக்கோட்டை காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப் படும் கதாநாயகன். இப்படியெல்லாம் சுலபமாக விடுவார்கள் என்றால் தமிழ்நாட்டில் குற்றம் செய்யும் எல்லோரும் ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு அனுப்பும் படி கேட்கலாமே?

திருச்சியில் ப்ரியாமணியை தூரத்தில் இருந்து பார்த்து விட்டு ஜொள் விட்டு, காதலிக்க முயலும்போது, ப்ரியா தனது காதலன் என்று வில்லனை அறிமுகம் செய்ய அதன் பிறகு ப்ரியாமணிக்கு ஆரம்பிக்கிறது கெட்ட காலம். அதையெல்லாம் முறியடித்து, வில்லனையும் அவன் கூட்டத்தையும் காலி பண்ணி ப்ரியாவின் கையை இவர் பிடிக்கிறாரா அல்லது போலீஸ் இவரை பிடிக்கிறதா என்ற பெரிய விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள் இந்த திராபை படத்தில்.


8. மருதமலை
அர்ஜுன் சட்டம் படித்துவிட்டு போலீஸில் கான்ஸ்டபிளாக சேர்ந்து தனது அடிதடி திறமையால் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று, வில்லன்களைப் பந்தாடி, நடு நடுவே கதாநாயகியுடன் காதல் பாட்டு பாடி, நிறைய தடவை ஸ்லோமோஷனில் நடந்து படத்தை முடித்து வைக்கிறார். படத்தை ரசிக்கும் படி செய்வதே வடிவேலுவின் நகைச்சுவைதான். ஒரு உணவு விடுதியின் முன் ப்ளாஸ்டிக் நாற்காலியில் மாமுலுக்கு பதிலாக ஒரு தட்டு வைத்துக் கொண்டு பசியில் சாப்பாடு போடுவானா என்று அவர் பரிதாபமாக இருக்கும் காட்சியிலும், அவரை அடித்தால் தானும் பெரியாளாக வருவேன் என்று சொல்லும் ஒரு ரவுடியை அர்ஜுன் பந்தாடி விட்டு அவன் மீது கேஸ் போடுவதற்காக வடிவேலுவை அடித்தவுடன், "இதைத் தானே அவனும் சொன்னான் அதுக்கு யூ டர்ன்லாம் போட்டு என்னையும் சேர்த்து அடிச்சிட்டியே" என்று அவர் புலம்புவதும் சூப்பர்.

7. வேல்
சூர்யா முதல் முறையாக ரெட்டை வேடத்தில் நடிக்கும் படம். ரெண்டு பாத்திரங்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம், ஒருவர் 2 நாள் தாடியுடன் கொஞ்ச நேரம் வருகிறார். மற்றவர் ஒரு முறுக்கிய மீசையுடன் வருகிறார். பிறகு இருவரும் அதே முறுக்கு மீசையுடன் படம் முழுவதும் வருகிறார்கள். ஒரு பாடி கதை - இருவரும் பிறந்த சில நாட்களில் பிரிந்து பிறகு காலத்தின் கட்டாயத்தால் சேர்ந்து பொது எதிரியை பந்தாடி கடைசியில் ஈ என சிரிப்பது.

சென்னையில் இருப்பவர் வாசு. சென்னையில் இருக்கும் வரை குறைவாகப் பேசுகிறார். அண்ணன் வேலு இருக்கும் ஊருக்கு வந்தவுடன், அவரைப் போல பக்கம் பக்கமாக பேசிக் கொல்கிறார். அடிக்கடி நமக்கே சந்தேகம் வந்து விடுகிறது இது விஜயகாந்த் படமா அல்லது சூர்யாவின் படமா என்று. இவர் இப்படி இன்னும் ரெண்டு படம் பண்ணினால் போதும், சன் டீவியில் மத்தியான சீரியலில் நடிக்க வந்து விடலாம்.

6. பொல்லாதவன்
தனுஷ் நிஜமாகவே நடித்து வெளிவந்திருக்கும் படம். அதிகம் மெனக்கெட்டு நடித்திருக்கிறார். படத்தில் வெட்டு குத்து சர்வ சாதாரணமாக இருக்கிறது. கதை - ஆசைப் பட்டு தனுஷ் வாங்கும் ஒரு பைக் காணாமல் போக அதனால் அவர் படும் அவஸ்தைகளும், அதனோடு வரும் சண்டைகள், இடையிடையே தனுஷுக்கும் ரம்யாவுக்கும் (குத்து ரம்யா என்று யாராவது சொன்னால் அவர்களை நிஜமாகவே குத்தப் போகிறேன் என்று அவர் ஒரு பேட்டியில் சொன்னதால், நீங்கள் யாரும் அவரை குத்து ரம்யா, குத்து ரம்யா என்று சொல்லி குத்து வாங்கிக் கொள்ளாதீர்கள்) நடக்கும் காதல் (இந்தக் கண்ராவியைக் காதல் என்று சொன்னால், மன்மதனே ஐயோ ஐயோன்னு அடிச்சுப்பார்), பாடல்களில் S.P.B. மீண்டும் ஒரு முறை "எங்கேயும் எப்போதும் சங்கீதம், சந்தோஷம்" பாடலை ரீ.மிக்ஸில் பாடி பொளந்து கட்டி விட்டார். மற்றப் பாடல்களில் தனுஷ் கலர் கலராக வந்து கலக்க, ரம்யா (அதாங்க குத்து ரம்யா), பாவம் தயாரிப்பாளருக்கு ஏன் செலவு என்று கால் அங்குலத்தில் சண்ணமாக துணி என்ற ஒன்றை உடுத்தியும் உடுத்தாமலும் வந்து ஆடுகிறார். இப்படி இவை எல்லாம் கலந்து கட்டிய மசாலா சாதம் இந்தப் படம்.

ஒரு தடவை (தேவைன்னா) பார்த்து விட்டு ஜோரா கைதட்டி விட்டு போகவேண்டிய படம்.

5. சத்தம் போடாதே
முதலில் இந்தப் படம் குழந்தைகளுக்கான படமில்லை. அவர்களை வைத்துக்கொண்டு இதைப் பார்க்க முயலவேண்டாம்.

கதை: திருமணத்திற்குப் பிறகு தனது கணவருக்கு முன்பு இருந்த குடிப்பழக்கத்தினால் தங்களுக்கு குழந்தை பிறக்காது என்பது தெரிந்ததும், குழந்தைகள் மீது இருக்கும் ஆசையால் விவாகரத்து செய்து விட்டு தனியாக இருக்கும் பத்மப்ரியாவின் மனதில் நுழைந்து சந்தோஷமாக வாழத்துவங்குகிறார் பிருத்விராஜ். இதைத் தெரிந்து கொண்டு அவர்கள் வாழ்கையில் குறுக்கிட்டு அவர்களுக்கு வில்லனாகிறார் முதல் கணவர் நித்தின் சத்யா. கரணம் தப்பினால் மரணம் என்ற கதைக் களத்தில் தனது திறமை மூலம் படத்தை நிறுத்துபவர்கள் இவர்கள் மட்டும் இல்லை, இயக்குனர் வசந்தும். இப்படிப் பட்ட கதைகளை படமாக எடுக்க வேண்டும் என்று எந்த மகானுபாவன் சொன்னானோ அவனை செமத்தியாக கவனிக்க வேண்டும். ஒரு முறை பார்க்கலாம்.
4. எவனோ ஒருவன்

மாதவன் நடித்து, தயாரித்து ஏன் வசனமும் எழுதி வெளியிட்டுள்ள படம் இது. இதன் கதை/இயக்கம் நிஷிகாந்த் காமத் என்று சொல்கிறார்கள்.

கதை - ஒரு வங்கியில் பணிபுரியும் சமுதாய அக்ரமங்களால் அதிகம் காயம் படும் ஒரு சராசரி நடுத்தர வர்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் வாசுதேவன் (மாதவன்). அவர், தன் மன உளைச்சளினால் விளிம்பைத்தாண்டி பல செயல்களை செய்ய ஆரம்பிக்க அதனால் ஏற்படும் பாதிப்புகளை சொல்லி அதன் மூலம் சமுதாயத்தின் ஓட்டைகளை விளக்கியிருக்கிறார்கள். இது Falling Down என்ற Hollywood படத்தின் காப்பி என்றால், என் நண்பர் அதை மறுக்கிறார். அவர் சொல்லும் காரணங்கள் - ஆங்கிலப் படத்தில் கதாநாயகன் மைக்கல் டக்ளஸ், மாதவனைப் போல வங்கியில் பணி புரியவில்லை, தினமும் மதியம் தயிர் சாதம் சாப்பிடவில்லை, மின்ரயிலில் பயணம் செய்யவில்லை, மனைவியுடன் செர்ந்து வாழவில்லை என சரளமாக அடுக்க ஆரம்பிக்க, வேறு வழியில்லாமல் எனது தோல்வியை நண்பரிடம் ஒப்புக் கொண்டு விட்டேன். மாதவன் நன்கு நடித்திருக்கிறார். கடைசி காட்சியில் அவரை கைது செய்ய வரும் போலீஸிடம் சாவகாசமாக, ரெயிலில் ஜன்னலோர சீட் கிடைப்பது ரொம்ப கஷ்டம் என்று சொல்லிவிட்டு வாஞ்சையுடன் ஜன்னல் பக்க சீட்டை தடவியபடி இருப்பதும், அந்த ஒரு காட்சியில் இந்தியாவின் நடுத்தர வர்க மக்களின் அன்றாட அபூர்வங்களை கோடிட்டு கட்டியிருப்பதும் மிக மிக அருமை. கொஞ்சம் கமலின் சாயல் அவருடைய நடிப்பில் தெரிகிறது. இந்தப் படத்தை தயாரிக்க இவருக்கு இருந்த துணிச்சலைக் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அதற்காக ஒரு முறை பார்க்கலாம்.

3. I am legend
புற்று நோய்க்கு மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து சில ஆயிரம் நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கின்றனர், அதன் பின் விளைவில் அமெரிக்கா மட்டும் இல்லாமல், உலகமே பாதிக்கப்பட்டு பல கோடி மக்கள் உயிர் இழ்ந்து, சில கோடி மக்கள் இரவில் மட்டும் வெளிவந்து ரத்தத்திற்கும், உணவிற்கும் அலையும் பிசாசு கூட்டமாய் அலைகின்றனர். நியூயார்க் நகரில் தன் நாயுடன் தன்னந்தனியனாக இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு தினம் தினம் சாவுடன் போரிடும் கதாபாத்திரத்தில் வில் ஸ்மித் நடித்திருக்கிறார். கதையில் இருக்கும் பல ஓட்டைகளை விட்டு விட்டு படம் பார்த்தால் ரசிக்கலாம். நியூயார்க் நகரத்தில் மனிதர்களே இல்லாமல் க்ராஃபிக்ஸ் மூலம் எடுத்திருந்தாலும், மான்ஹாட்டன் நகரத்தில் கூட்டமாக மான்கள் ஒடுவதையும், நடுவில் சிங்கம் குடும்பத்தோடு வந்து வேட்டையாடுவதையும் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

2. Mr. Brooks

கெவின் காஸ்னர், டெமி மூர், வில்லியம் ஹர்ட் நடித்து சமீபத்தில் குறுந்தகட்டில் வெளிவந்திருக்கும் இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்து அதிர்ந்து விட்டேன். கதை: கொலை செய்வதை ஒரு பழக்கமாக வைத்திருக்கும் கெவின் காஸ்னர் (Mr. Brooks) சந்தர்ப்ப வசத்தால் ஒரு அமெச்சூர் புகைப்படக் கலைஞரிடம் மாட்டிக் கொள்ள, ஆரம்பிக்கிறது சுவாரஸ்யமான கதை. இணைய தளத்தில் இந்தப் படத்தில் எங்கெல்லாம் தவறுகள் இருக்கிறது என்று விலாவாரியாக எழுதியிருக்கிறார்கள் அதையும் மீறி, இந்தப்படத்தில் கெவின் காஸ்னரின் நடிப்பு படத்தை மெருகூட்டியிருக்கிறது. கதை சொன்ன விதம், பல விஷயங்களை பார்வையாளர்களின் ஊகத்திற்கு விட்ட விதம் என பல விஷயங்களைச் சொல்லலாம். கண்டிப்பாக 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் பார்க்கக்கூடாத படம்.

1. தாரே ஸமீன் பர் - இந்திப் படம் (மண்ணில்(அ) பூமியில் ஒரு நட்சத்திரம்).
வீட்டில் உள்ள அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒரு படம். கதை : பள்ளியில் படிப்பில் பின் தங்கியிருக்கும் ஒரு 8 வயது மாணவனை அவனுடைய பெற்றோர், தொலைவில் இருக்கும் தங்கும் வசதியுடன் கூடிய பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டுவிட படிப்பின் அவஸ்தையுடன், பெற்றோரைப் பிரிந்து இருக்கும் அவஸ்தையுடன் இருக்கும் அந்த சிறுவனின் வாழ்கையில் தென்றலாக வீசி அவனுடைய திறமைகளை அவனுக்கே அடையாளம் காட்டும் அருமையான பாத்திரத்தில் நடித்து, இந்தப் படத்தை தயாரித்து, இயக்கியிருக்கிறார் ஆமீர் கான். இந்தப் படத்தை அனுபவிக்க இந்தி தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை, வழக்கமான இந்திப் படங்களில் வரும் எந்தக் கெட்ட வார்த்தையும் இல்லை, சண்டை இல்லை, ரத்தம் இல்லை, துப்பாக்கி சப்தம் இல்லை, வீராவேசமான வசனங்கள் இல்லை, அசிங்கமான நடனங்கள் இல்லை, முக்கியமாக கதாநாயகி என்று யாரும் இல்லை, வெறும் யதார்த்தம், யதார்த்தம் என்று மிக மிக அற்புதமாக கதை சொல்லி மயக்கியிருக்கிறார் ஆமீர் கான். இப்படிப் பட்ட கதைகளை இங்கு ஹாலிவுட்டில் படமாக்கிப் பார்த்திருக்கிறேன், ஒரு இந்தியப் படம் இப்படி எடுக்கப் பட்டிருப்பதை முதல் முறை பார்ப்பதால் ஆச்சர்யம் தாங்கவில்லை. சிறுவனாக நடிக்கும் தர்ஷீல் சஃப்பாரி நடிப்பில் பிய்த்து உதறுகிறான், நடிக்கிறானா இல்லை அவனது இயல்பே அப்படியா என்று யோசிக்கும் வகையில் இருக்கிறது அவனது நடிப்பு. ஆமீர் கான் மிகத் தேர்ந்த நடிகர், தான் ஒரு மிக தேர்ந்த இயக்குனர் என்பதை இந்தப் படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.


புத்தக விமர்சனம்
கடிகை - பாலகுமாரன்.
கதை - இராஜராஜச் சோழனின் தந்தை உத்தமச் சோழரின் காலத்தில் சேர நாட்டில் இருந்த ஒரு போர் பயிற்சி பள்ளியைப் பற்றிய ஒரு கதை. இப்படிப் பட்ட பள்ளிகளை கடிகை என்று அழைக்கிறார்கள். இவர்கள் சேர நாட்டிலிருந்து பிரிந்து வந்து ஒரு தனிக் கடிகை நிறுவி வாழ்ந்து வரும் போது, தாய்க் கடிகையின் தலைவரால் துன்புறுத்தப் பட்டு, பாண்டியனிடம் அடைக்கலம் பெற்று, அவனையும் அவனது படையையும் தயார் செய்து, இராஜராஜச் சோழனின் தமையன் ஆதித்தக் கரிகாலனிடம் தோற்று, பாண்டியனையும் பலி கொடுத்து, அதன் பின் இவர்கள் என்ன ஆனார்கள் என்று விளக்கமாக சொல்லியிருப்பது இந்தக் கதை. கதை கரு மிக மிக அருமையான ஒன்று அதை இன்னமும் மெறுகேற்றியிருக்க வேண்டும்.

பாலகுமாரன் - இவருடைய கதை சொல்லும் பாணி சமூக நாவலாக இருந்தாலும் சரி, சரித்திர நாவலாக இருந்தாலும் சரி ஒரே மாதிரியாகவே இருக்கிறது. இது இவருடைய ஒரு குறை. தான் படித்த, கேட்ட, அறிந்த பல விஷயங்களை அனைவருக்கும் சொல்லியே தீரவேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து இவர் முதலில் வெளியே வர வேண்டும். உங்களில் பலர் கல்கியின் பல சரித்திர நாவல்களை படித்திருப்பீர்கள். அதில் எதிலும் கல்கி என்ற கதாசிரியரை பார்த்திருக்க முடியாது. அதற்கு அவர் கதையை முடிந்தவரை மிகைப் படுத்தாமல் எடுத்தாண்டது என்பது என் எண்ணம்.


பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....

0 comments: