நேரம்

Saturday, February 02, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 18

அருமையான தமிழக கலாச்சாரம்
தென்னிந்திய அழகிப் போட்டி 2008
இப்படி ஒரு நிகழ்ச்சி போன வாரத்திலிருந்து சன் டீவியில் வர ஆரம்பித்திருக்கிறது. விளம்பரத்தில் ஒரு குரல் "23 தேவதைகள் கலந்து கொண்டனர், பரிசு பெரும் ஒரு அதிர்ஷ்ட தேவதை யார்" என்று சொல்லும் சமயம், குறைந்தபட்ச உடைகளோடு பல தேவதைகள் நடமாடினர். இது தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழ் கலாச்சாரம் என்று சொல்லி மாரடிக்கும் தமிழக கேடுகெட்ட அரசியல் வாதிகளுக்கு இது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை போலிருக்கிறது.
அழகிப் போட்டிகளினால் யாருக்கு என்ன உபயோகம்? அழகிப் போட்டியில் பங்கு பெறுவதற்கும் சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது?
நடிகை ஷ்ரியாவிற்கு கண்டனம்.
மேற் சொன்ன கூத்தை கண்டிப்பதற்கு தைரியம் இல்லாமல், தமிழக முதல்வர் இருந்த மேடையில் குறைந்த ஆடைகளுடன் இருந்தார் என்று ஷ்ரியாவிற்கு கண்டனம் செய்கின்றனர். என்னவோ அவர் நடிக்கும் எல்லாப் படங்களிலும் முழுதும் போர்த்தியபடி நடித்தது போலவும், இந்த விழாவில் மட்டும் இப்படி வந்து விட்டது போலவும் கூச்சலிடுகின்றனர். சிவாஜி படத்தில் வில்லன் ஆதி அடுத்து என்ன செய்யப் போகிறான் என்ற திகிலைவிட ஷ்ரியா அணிந்திருந்த ஆடை எப்போது முழுவதுமாக கழண்டு விழுந்துவிடுமோ என்ற திகில்தான் அதிகமாக இருந்தது.
நடிகை குஷ்புவிற்கு கண்டனம்

அடுத்து சாமி சிலைகள் இருந்த மேடையில் நடிகை குஷ்பு செருப்பு காலோடு கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் என்று ஒரு கண்டனம். பல மதத்தினரும் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சி மேடைகளில் எந்த அதி புத்திசாலி, சாமி சிலைகளை கொண்டு வந்து வைத்தார் என்று தெரியவில்லை. அவரை கண்டிக்காமல் இன்று குஷ்புவை, நாளை வேறு ஒருவரை என்று திட்டுவது என்ன கலாச்சாரமோ தெரியவில்லை.
திருமாவளவன் - குஷ்பு மோதல்.

திருமாவளவன் மேடைக்கு வரும் சமயம் மேடையிலிருந்த குஷ்பு எழுந்து மரியாதை செய்யவில்லை என்று அதே மேடையில் அவரை தாக்கி திருமாவளவன் பேச, அவரை மதிக்காதது தவறு என்று வேறு சிலரும் அதே மேடையில் குஷ்புவை தாக்கிப் பேசி தங்கள் அசிங்கங்களை பறை சாற்றி இருக்கின்றனர். இதே கும்பல்தான் சில மாதங்களுக்கு முன்பு குஷ்புவை தாக்கி அவர் தமிழகக் கலாச்சாரத்தை அவமதித்து விட்டார் என்று கத்தினார்கள். இன்று அவர் தங்களை மதிக்கவில்லை என்று கூச்சலிடுகிறார்கள்.
ஷாருக்கான், அமிதாபிற்கு 'வெத்து' அன்புமணி கோரிக்கை:
ரஜனியும், விஜயும் தனது கோரிக்கையை அடுத்து திரைப் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து ஷாருக்கானும், அமிதாப்பும் அவ்வாறு நடிக்க வேண்டும் என்று 'வெத்து' அன்புமணி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
பொது மக்களுக்கு இடையூறாக மரம் வெட்டலாம், பந்த் செய்யலாம், பொதுச் சொத்துக்களை நாசம் செய்யலாம், திரைப்படங்களை வெளியிட விடாமல் திரையரங்குகளை அடித்து நொறுக்கலாம், தமிழ்நாட்டில் யார் படப் பிடிப்பு நடத்தலாம் என்று கட்டை பஞ்சாயத்து செய்யலாம், அது மட்டும் இல்லாமல் இவர்கள் எதிர்க்கவில்லை என்றால், திரைப்படங்களில் எப்படி பட்ட காட்சி வேண்டுமானாலும் வரலாம். ஆனால் புகைபிடிக்கும் காட்சி மட்டும் வரக்கூடாது.
முன்பு எப்பொழுதோ கேட்ட வேடிக்கை கதை - ஒரு ஒற்றையடிப் பாதையில் இருவர் எதிர் எதிரே வருகின்றனர். யாராவது ஒருவர் ஒதுங்கி நின்றால்தான் மற்றவர் செல்ல முடியும் என்ற நிலையில், ஒருவர் "நான் முட்டாள்களுக்கு வழி விடுவதில்லை" என்று சொல்லி திமிரோடு நடக்க, மற்றவர், "நான் வழி விடுவேன்" என்று சொல்லி விட்டு ஒதுங்கிக் கொள்கிறார். ரஜனியும், விஜய்யும் பதில் பேசாமல் அன்புமணியின் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டதை கேட்டதும், எனக்கு இந்த கதைதான் நினைவுக்கு வந்தது.
திரைப்பட விமர்சனம்
பீமா:
இந்த விமர்சனம் வெளியாகும் போது அனேகமாக பலர் இதை திரையரங்கில் போய் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி பார்த்த துன்பப் பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். கதை: ப்ரகாஷ்ராஜை ஆதர்ஷ தலைவனாக கொண்டு அவருடைய நிழலாக வந்து, அடி, தடி செய்து, துப்பாக்கி எடுத்து யாரை வேண்டுமானாலும் 'போட்டு தள்ளி' கொஞ்சமும் நடிக்காமல் வெறும வந்து போயிருக்கிறார் விக்ரம். தொட்டுக்கொள்ள ஊறுகாயாக த்ரிஷா. இந்த டப்பா படத்தில் ரகுவரனும் வந்து கத்தியிருக்கிறார். லிங்குசாமி, முருகதாஸ் போன்ற இயக்குனர்கள் எல்லாம் முதல் படத்தோடு சரக்கு தீர்ந்து போய், நம்மையும் படுத்துவதை தடுக்க ஏதாவது சட்டம் கொண்டு வரவேண்டும்.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....

1 comments:

said...

//அழகிப் போட்டிகளினால் யாருக்கு என்ன உபயோகம்?//

யாருக்கு என்ன உபயோகமா? என்னய்யா புரியாத மனுஷனாய் இருக்கிறீர் :-)


அழகுப் பொருட்கள் விற்கும் நிறுவனங்களுக்குத்தான். அவர்கள் சொல்லித்தான் அவர்கள் எங்கெல்லாம் மார்க்கெட் பிடிக்க வேண்டுமோ அந்த நாடுகளில் போட்டி நடக்கும். அந்த ஊர் 'அழகிகள் ' வெற்றி பெறுவார்கள்.