நேரம்

Saturday, February 16, 2008

ரிச்மண்டில் பொங்கல் விழா

பல பல்சுவை நிகழ்ச்சிகளோடு 2/16/2008 அன்று ரிச்மண்டில் நடந்த விழாவைப் பற்றிய என் பார்வை.

காட்டுக்குள்ளே ஸ்போர்ட்ஸ் டே
நாடகம் ஆரம்பித்து முடியும் தருவாயில், தோன்றியது. இத்தனை குழந்தைகளை ஒருங்கிணைத்து இப்படி ஒரு அருமையான நாடகத்தை தர முதலில் தேவை தைரியம், அடுத்த தேவை பொறுமை. ஒரு சிறிய வேண்டுகோள், நாடகத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்க வேண்டும். பாவம், 30-40 நிமிடங்கள் புலி, சிங்கம், யானை, முயல் என வேடமிட்டிருந்த குழந்தைகள் அனைவரும் அதை கலைக்காமல் பொறுமையாக இருந்தது ஆச்சர்யம் ஆனால், நாடகத்தின் நீளம் பார்வையாளர்களை கட்டிப் போட முடியாமல் கொஞ்சம் தடுமாறியது உண்மை. நாடகத்தின் சிறப்பான அம்சம், வசனங்களை முன்கூட்டியே பதிவு செய்து அதை ஒலிபரப்பி அதனூடே நாடகத்தை நடத்தி சென்றது. கடுமையான பயிற்சியில்லாமல் குழந்தைகளால் அதை சாதித்திருக்க முடியாது. இதை சாதித்த குழந்தைகள் அனைவருக்கும், கலக்கிய தாய்மார்களுக்கும், இயக்குனருக்கும், ஒரு பெரிய ஜே.

சார்லோட்ஸ்வில்லில் இருந்து ஒரு புதிய நட்சத்திரம்
சார்லோட்ஸ்வில்லில் இருந்து வந்த சம்யுக்தாவின் நடனமும், பின்னர் அவர் பாடல் பாடியதும் நன்றாக இருந்தது. இவரைப் போல பல திறமைகள் கொண்டவர்கள் ரிச்மண்டின் தமிழ் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிக் கொணர முயல்வது மிக மகிழ்ச்சியூட்டும் விஷயம்.

நாட்டியாஞ்சலி

உமா செட்டி அவர்களின், அப்ஸராஸ் ஆர்ட்ஸ் குழுவின் மாணவிகள் ஐவரின் பரதநாட்டியம் மிக அருமை. கடும் பயிற்சி செய்திருந்தாலும், அவர்களின் ஒருங்கிணைந்த நடனம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நாகு சொன்னது போல், இந்த குழந்தைகள் இந்த வயதிலேயே இப்படி அருமையாக நடனம் ஆடினால் இன்னும் சில வருடங்கள் கடந்த பிறகு எப்படி ஆடப்போகிறார்கள் என்பதை பார்க்க எமக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது. .

அசல் பொங்கல்
புஷ்பவனம் குப்புசாமியின் பாடலுக்கு, சின்னஞ் சிறார்களின் அற்புத நடனம். ஒரு உரல், அதில் இடிக்க உலக்கை, பளபளக்கும் முறம், பொங்கி வரும் பொங்கல் பானை என அருமையான பொங்கலை நடத்தி பரசவப் படுத்தினார்கள் குழந்தைகள்.

கும்மாங் குத்து
குத்துன்னா குத்து கும்மாங்குத்து குத்தி விட்டார் ஸ்வேதா. பதவிசாக வெளிப்பார்வைக்கு தெரியும் இவர் நடனமாடத் தொடங்கி விட்டால் பின்னி பெடலெடுத்து விடுகிறார்.

ஹாரிபார்ட்டர் க்விஸ்
மொத்தம் 21 பேர் கலந்து கொண்டு, தேர்வுச் சுற்றிற்கு பிறகு 7 பேர் கலந்து கொண்டு கலக்கின ஒரு நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. கதையை எழுதிய ஜே.கே. ரோவ்ளிங்கே இந்த அளவு அவருடைய கதைகளை நினைவில் வைத்திருப்பாரா என்பது சந்தேகம். கலந்து கொண்டு பதிலலித்த சிறுவர், சிறுமியரின் திறமையை மெச்சு வதைத் தவிர வேறு தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் அரங்கத்தில் இருந்த பல சிறுவர் சிறுமிகளையும் இந்த க்விஸ் கட்டிப் போட்டது மட்டும் நிஜம். என்ன ஒரு குறை என்றால், எனக்கு கேட்ட கேள்வியே புரியவில்லை. புரிந்து கொள்ள முதலில் அந்த புத்தகங்களைப் படியுங்கள் என்கிறார் அரவிந்தன். அட போங்கப்பா, படிக்கரதுன்னா இன்னேரம் படிச்சிருக்க மாட்டோம். நமக்கு புரியரமாதிரி பீ.டி. சாமிக்கு அப்பரம் யாரும் தமிழ்ல மர்மக்கதை எழுதரதா தெரியலை.

பெரியவர்கள் க்விஸ்
15 பேர்களை 5 குழுக்களாகப் பிரித்து வைத்து ஒரு அருமையான சினிமா க்விஸ் நடத்தி விட்டார் ரவி திருவேங்கடத்தான். பரதேசி: அவர் நடுவில் ஒரு சுற்று புத்தகங்களை பற்றி கேட்டது மறக்க வில்லை அதனால், உடனே கண்டித்து பின்னூட்டம் போட்டு விடாதீர்கள. ஆடியோ ரவுண்ட் எப்போதும் கொஞ்சம் காலை நொண்டும், அதுபோல இல்லாமல் சரியாக செய்யப்பட்டது பாராட்டப் பட வேண்டிய ஒன்று.

இனி எனது பொதுவான சில கருத்துக்கள்.

நிகழ்ச்சியை சரியான நேரத்தில் ஆரம்பிப்பதை இந்த முறையும் செய்தது பாரட்டப் பட வேண்டிய ஒன்று.
ஹாரி பார்ட்டர் க்விஸ் எத்தனை பேருக்கு புரிந்தது என்று தெரியவில்லை. அந்தக் கதை படித்தவர்களுக்கு கண்டிப்பாக புரிந்திருக்கும், மற்றவர்களுக்கு? அது வேண்டாம் என்று சொல்லவில்லை, அதை ஒரு சுற்றாக மட்டும் வைத்து விட்டு, இந்த க்விஸ்ஸை பொது அறிவுக்கான ஒன்றாக செய்திருக்கலாம். புத்தகத்தை கரைத்து குடித்து விட்டு கேட்ட கேள்விகளுக்கு பளிச் பளிசென்று பதிலலித்த விதம் அசத்தலாக இருந்தாலும், ஹாரி பார்ட்டர் புத்தகங்கள் மட்டுமே வாழ்க்கையில்லை. இதைச் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
ரவி ஒரு செய்திக் கிடங்கு, அவரிடம் எந்த விஷங்களைப் பற்றியும் எப்பொழுது வேண்டுமானாலும் பேச முடியும், நகைச்சுவை அவருடைய மிகப் பெரிய சொத்து. அவர் ஏன் இன்னமும் தமிழில் standup comedy செய்யவில்லை என்று தெரியவில்லை.
சங்கத்திற்கு உடனடித் தேவை ஒரு தேர்ந்த தொகுப்பாளர். CCI-ல் நடந்த சில நிகழ்ச்சிகளில் பார்த்தது, அவர்களுடைய நிகழ்ச்சிகளை ஓரிருவர் மட்டுமே தொகுத்தளிக்கின்றார்கள், அது போல நிரந்தரமாக ஏன் ஒருவரை தொகுத்தளிக்க ஏற்பாடு செய்யக்கூடாது? செல்வம் சகஜமாக தமிழில பேசினாலும், நாகு ஆங்கிலம் தமிழ் கலந்து கட்டி அடிச்சாலும், மக்களை மகிழ்விக்க ஏதோ ஒன்று குறைவது போலவே இருக்கிறது.
முன்பே சொன்னது போல் சங்கத்து விழாக்களை ஒளிப்பதிவு செய்து குறுந்தகட்டில் பதிவு செய்து வெளியிடுவதை தொடர்ந்து செய்ய சங்கம் ஏற்பாடு செய்யலாம். தந்தையர்கள் குலமே வாழ்த்தும்.
அடுத்த கிறுக்கலில் சந்திக்கின்றேன்.
பித்தன்.
piththanp@gmail.com

0 comments: