நேரம்

Sunday, March 30, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 21

ஷாருக்கான் வாரம்
இந்த வாரம் ஷாருக்கானின் மூன்று படங்கள் பார்த்தேன். இவர் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்று சொன்னால் அது உலக மகா பொய்யாக இருக்கும் இவருடைய நடிப்பு சற்று சிவாஜி காலத்து மிகை நடிப்பு வகையைச் சார்ந்தது. ஆனால் இவருடைய படங்களில் ஒரு ஒற்றுமை, எந்தத் திராபை படமானாலும் அதைத் தனது தோளில் தூக்கி சென்று காப்பாற்ற ரொம்ப பாடு படுகிறார்.
முதலில் கல் ஹோ நா ஹோ (நாளை இருக்குமோ இருக்காதோ- இது சரியான அர்த்தமா என்று தெரியவில்லை) 2003-ல் வெளிவந்து சக்கை போடு போட்ட படம் (இது சக்கை போடு போட்டத் தகவல் தந்தது எனது அலுவலக நண்பர், அது சரியில்லை என்றால் சொல்லுங்கள் அவரை 'சரியாக' கவனிக்கிறேன்) கதை கோடம்பாக்கத்தில் சந்துக்கு சந்து எல்லோரிடமும் இருக்கிற ஒரு கதை. இது பாலைவனச் சோலையின் கதைதான். என்ன சுஹாசினிக்கு பதில் ஷாருக்கான். 5 தண்டச் சோறு தடிமாடுகளுக்கு பதில் அழகான ப்ரீத்தி ஜின்டாவும், சயிஃப் அலிகானும். அவர்கள் நடிப்பிலும் ஒன்றும் சோடையில்லை. யாருக்காவது ஏதாவது தேவையா, ஷாருக்கான் உதவுவார், வியாபாரம் டல்லா, ஷாருக்கான் உதவுவார், டேட்டிங்கில் ப்ரச்சனையா, ஷாருக்கான் உதவுவார், பாட்டிகளுக்கு மன உளைச்சலா கவலை வேண்டாம், ஷாருக்கான் உதவுவார். என்ன, வீடு, மனை வாங்க விற்க அணுகவும் என்று ஒரு போர்ட் போட்டுக் கொண்டு அவர் அலையாததுதான் பாக்கி. பாடல்கள் பலவும் சூப்பர். அதிலும், ப்ரெட்டி உமன் பாட்டு சங்கர் மகாதேவன் பின்னியிருந்தாலும் சரியான குத்து மெட்டு. எனக்கு பிடித்தது, சோனு நிகம் பாடியுள்ள டைடில் பாடல் 'ஹர் கடி பதல் ரஹி ஹை ரூப் ஜிந்தகி' பாடல்தான். ஆச்சர்யமான ஒரு விஷயம் ஷாருக்கானின் மிகை நடிப்பைத் தாண்டி அவரை இந்தப் படத்தில் மிகவும் ரசிக்க முடிகிறது. படம் முடியும் தருவாயில் மனதை சற்று அழுத்துகிறது ஷாருக்கானின் சில வசனங்கள்.
இரண்டாவது ஓம் சாந்தி ஓம்.
2007-ல் வெளிவந்து பாலிவுட்டில் பலரையும் ஆட்டம் காண வைத்த படம். இது சென்னையில் ரிலீஸான போது அதற்கு பெரிய கட்டவுட் வைத்து கொண்டாடினார்களாம். இந்தக் கதையும் ஒரு அடாசு கதைதான், ஹிந்தியில் ரிஷி கபூர் நடித்த கர்ஸ், தமிழில் கமல் நடித்து எனக்குள் ஒருவன் என்று வெளிவந்த அதே டப்பா கதைதான். கமல் கூட பரவாயில்லை கொஞ்சம் நஞ்சம் டான்ஸ் ஆடத் தெரியும், வெறும் சாணி மிதிக்கிற ரிஷி கபூர் நடித்த ஹிந்தி படம் தாங்க முடியாத குப்பை. இதை கலந்து கட்டி ஒரு அருமையான பொழுது போக்குப் படமாக தந்திருக்கிற ஷாருக்கானின் தைரியம், அதைவிட அதைத் தயாரித்த அவருடைய துணைவியார் கௌரி கானின் துணிச்சல் அசாத்தியம். படத்தில் எம்.ஜி.ஆர். போல காட்சிக்குக் காட்சி ஷாருக்கான் வருகிறார். கதாநாயகி புதுமுகம் தீபிகா படுகோனே. ஆம் முன்னாள் இந்திய பாட்மிட்டன் சாம்பியன் ப்ரகாஷ் படுகோனேயின் மகள்தான் இவர். ஆனால் பாவம் இவர், துணி பஞ்சத்தில் அடிபட்ட மாதிரி படத்தில் பல காட்சிகளில் வருகிறார். மற்றபடி பேர் சொல்லும்படி ஒருவரும் இல்லாத இந்தப் படத்தில் ஷாருக்கான் மற்றும் ஷாருக்கான் (ஒன்று முன் ஜென்மம், அடுத்தது புனர்ஜென்மம்) மட்டுமே ப்ரதானமாகத் தெரிகிறார்கள். படத்தில் எனக்கு பிடித்த காட்சி, ஷாருக் தனது நண்பனுக்கு கைத் தொலை பேசியில் பேசும் போது தனது அம்மா தயாரா என்று கேட்க அதற்கு அவர், தயார்தான் ஆனால் ரொம்ப ஓவர் ஆக்ட் பண்ணி காரியத்தை கெடுத்து விடுவார்கள் போல இருக்கு என்று சொல்ல, அதற்கு ஷாருக்கான், அதை ஒன்னும் பண்ண முடியாது அது எங்க குடும்பத்துப் ப்ராப்ளம் என்று சொல்லும் இடம் க்ளாஸ். இந்தப் படத்திலும் ஷாருக்கான் மட்டுமே இந்தப் ப்ரமாண்டமான படத்தை நகர்த்திச் செல்கிறார்.
மூன்றாவது - சக் தே இந்தியா (Go for it, India)
2007-ல் வெளிவந்த மற்றொரு படம். உலக கோப்பை ஹாக்கியில் பாகிஸ்தானுடன் போராடி தோற்ற இந்திய அணியின் கேப்டன் கபீர் கான் வேடத்தில் ஷாருக்கான் நிஜமாகவே நடித்துள்ள ஒரு படம். 7 வருடம் அஞ்சாத வாசம் வாழ்ந்து விட்டு, பிறகு இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு கோச்சாக வருகிறார். அவர்களை கசக்கி பிழிந்து, ஒரு புள்ளியை நோக்கி நகர்த்தி, அந்தப் புள்ளி டீம் ஸ்பிரிட் என்று காட்டி அவர்களை உலகக் கோப்பை வெற்றி பெறச் செய்கிறார். முடிவில் இவரை 7 வருடம் தூற்றியவர்கள் அனைவரும் வாய் ஓயாமல் பாராட்டச் செய்கிறார்.
படத்தில் 16 இளம் பெண்கள் இருந்தும் ஒரு விகல்பம் கிடையாது, ஒரு அசிங்கமான நடனம், அசிங்கமான அங்க அசைவு கிடையாது, படம் முழுவதும் ஒரு 3-4 நாள் தாடியுடன் ஷாருக்கான் வருகிறார். ஒரு சில காட்சிகளில் ரொம்ப சாதுவாக இருக்கும் அவர், மற்ற காட்சிகளில் தன்னை மிஞ்சி ஒரு ஹாக்கி வீரர் இல்லை என்பது போல வளைய வருகிறார். பயிற்சியின் போது ஒரு பெண் பந்தை யாருக்கும் தராமல் தானே எடுத்து சென்று கோல் போட்டு விட்டு குதிக்கும் போது, அவரை அழைத்து என்னது அது என்று ஒரு வார்த்தையில் மடக்கி அவர் செய்த பிழை என்ன என்று தெரியும் வரை வெளியே நிற்க வைப்பது கலக்கல்.
இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு பாடல் கிடையாது, கதாநாயகி யாரும் கிடையாது. வெத்து டைலாக் கிடையாது, முக்கியமாக, பஞ்ச் டைலாக் கிடையாது. இது போல ஒரு படம் செய்ய ஆமீர் கானைப் போல எனக்கும் தைரியம் உண்டு என்று நிரூபித்து இருக்கிறார். இந்த படத்திற்கு அவர் Filmfare சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார் அது மிகப் பொருத்தமானதுதான்.
53-வது Filmfare விருது வழங்கும் விழா
இதில் சிறப்பு அம்சம், ஷாருக்கானும், சயிஃப் அலிகானும் இணைந்து வழங்கிய நிகழ்ச்சி. ஆரம்பிக்கும் போதே சயிஃப் சொல்லி விடுகிறார், இது ஒரு கடுமையான நிகழ்ச்சி, இது மற்றவர்களைப் புண்படுத்துவதற்காகத்தான், எனவே தவறாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று. இப்போது தெரிந்திருக்கும் அவர்கள் எப்படி அநியாயம் செய்திருப்பார்கள் என்று. அவர்கள் பேச்சு கொஞ்சம் வரம்பு மீறியிருந்தாலும், எனக்கு பிடித்தது இருவருடைய அபாரமான மேடைப் பேச்சின் ஒருங்கிணைப்பு. இது போல ஒரு ஜனரஞ்சகமாக ஒரு நிகழ்ச்சியை தமிழில் தர ஒருவரும் இல்லை என்பது என் வருத்தம். சமீபத்தில் இதே போல தமிழில் ஒரு நிகழ்ச்சி மலேஷியாவில் நடந்தது அதில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தலைமையில் ஒரு நாடகம் இடையிடையே நடத்தினார்கள் அதில் ராதா ரவியும் இருந்தார். சிரிப்பை வரவழைக்க எல்லோருக்கும் கிச்சு கிச்சு மூட்டிவிட வேண்டியிருந்தது, அவ்வளவு அடாசு ரகம். இதில் கமல் ரஜனி பங்கேற்கவில்லை, காரணம் அவர்கள் அவ்வளவு பிஸி. தமிழ் நடிகர்கள் ஏன் இவ்வளவு போலியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
காந்தி
காந்தியடிகள் பற்றிய கட்டுரையை நாகுவின் பதிவில் படித்ததும் சமீபத்தில் எனது நண்பர்களுடன் நடந்த ஒரு சிறிய உரையாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளளாம் என்று இருக்கிறேன்.
உரையாடலில் எப்படி குஜராத்திகள் தாங்கள் ஆரம்பிக்கும் எந்த தொழிலையும் திறமையாக செய்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. அவர்களின், கடின உழைப்பு, விடா முயற்சி, எந்தத் தொழிலும் கேவலம் இல்லை என்ற மன நிலை, அவர்களின் 'Kill Power' என்று நான் வாதாடினேன், 'Kill Power' பற்றி விளக்கச் சொன்ன போது நான் சொன்னேன், ஒருவன் தனது மனதில், இவரால் இது முடியும், அவரால் அது முடியும் என்றால் அது என்னாலும் முடியும் என்ற ஒரு வெறி ஒவ்வொரு குஜராத்தியின் மனதிலும் ஆழ வேறூன்றி இருக்கிறது, அது 'Will Power' என்பார்கள், நான் அதை 'Kill Power' என்பேன், காரணம், அவர்களின் அந்த வெறி அத்துணை பலம் வாய்ந்தது. ஒரு சாதாரண வக்கீல், அன்னிய மண்ணில் ஒரு முறை ஒரு நிற வெறியனால், ரயிலில் இருந்து தூக்கியெறியப்பட்டதற்கு பழிக்கு பழியாக அவர்களை தனது சொந்த மண்ணிலிருந்து தானாக வெளியில் செல்ல வைக்கிறார். அதற்கு அவர் பின்னால் அவருடைய சொந்த நாடே அணி திரண்டு செல்கிறது. அந்த குஜராத்தியர் இன்றும் நமது தேசத்தின் தந்தை என்று போற்றப் படுகிறார். இன்றும் மகாத்மா என்றால் அவர் நினைவுக்கு வருகிறாரே என்றேன்.
மீண்டும் தொடங்கிய விவாதத்திற்கு வருகிறேன். பொதுவாக நம்பப் படும் கருத்துக்களுக்கு மாறாக ஒரு கருத்தை அளிக்க வேண்டும் என்றால், எத்தனையோ கருத்துக்களை எடுத்து எழுதியிருக்கலாம். இங்கு அரசியலில் அனைவரும் சுத்தம் என்று எழுதியிருக்கலாம், அதிலும் இந்நாட்டின் தலைவரே பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான பின்பு, அனைவரும் சுத்தம் என்ற வகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தால், ஆசிரியர்கள் அதிர்ந்து போய் A+ கூட தந்திருப்பார்கள். அல்லது சீனா ஒரு ஜனநாயகக் குடியரசு என்றோ, மத்திய கிழக்கு ஆசியா நாடுகள் சமய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று கூடி வசிக்கும் இடம் என்றோ எழுதியிருக்கலாம். என்ன ஒரு சிக்கல் அப்படி எழுதியிருந்தால், அப்படி எழுதிய மாணவர் (அ) மாணவி யார் என்று 'யாராவது' விசாரிக்க ஆரம்பித்திருப்பார்கள். காந்தியைப் பற்றி எழுதினால், யார் என்ன செய்யப் போகிறார்கள். அதோடு காந்தியை பற்றி அதிகம் தெரிந்தவர்கள், அவருடைய அஹிம்சா வழிகளைப் பற்றியும் தெரிந்தவர்கள் எனவே கண்டிப்பாக எதிர்க்க மாட்டார்கள் என்றும் தெரிந்திருக்கும்.
50% ஓட்டுக்கள் பெற்றால்தான் வெற்றி
சட்டசபைத் தேர்தல்களில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமானால், அவர் பதிவாகும் ஓட்டுக்களில் குறைந்தது 50 சதவீத ஓட்டுக்களைப் பெற வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாசாமி யோசனை தெரிவித்துள்ளார். இருவர் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற சட்டம் இல்லாத போது, அதிலும் அதிக பட்ச வேட்பாளர்கள் எத்தனை பேர் போட்டியிடலாம் என்ற விதி முறையும் இல்லாத போது இது எப்படி சாத்தியம் என்று எனக்குத் தெரியவில்லை. கள்ள ஓட்டைத் தவிர்க்க பொது விதி இல்லை, மேலும் பதிவாகும் ஓட்டுகள் அதிக பட்சம் 65% என்னும் போது இது எப்படி சாத்தியம். இந்தக் கருத்தை என்னைப் போன்ற அரசியல் அறிவு கிஞ்சித்தும் இல்லாத ஒருவர் சொன்னால், சரி, ஏதோ அறியாமையில் பிதற்றுகிறார் என்று விட்டு விடலாம், இந்தியாவின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஒரு உயரிய பதவியில் இருக்கும் ஒருவர், அதிகம் படித்த ஒருவர் இப்படி பேசியிருக்கிறார். இது ஒரு வேளை அவருடைய மன உளைச்சலை வெளிக்கொட்டி சொன்னதோ என்னவோ, எனக்குத் தெரியவில்லை.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....

0 comments: