நேரம்

Tuesday, April 22, 2008

பித்தனின் கிறுக்கல்கள்

அனைவருக்கும் என் உளம் கனிந்த சர்வதாரி வருட நல்வாழ்த்துக்கள்.

தமிழ் புத்தாண்டு
இனி தை மாதம்தான் தமிழ் புத்தாண்டு என்று ஒரு தீர்மானம் தமிழ சட்ட சபையில் கொண்டு வரப்பட்டதே அதை நீ மதிக்க வேண்டாமா என்று என்னை திட்ட யோசிப்பவர்கள், அடுத்த இரண்டு பத்தியை தாண்டி மூன்றாவது பத்தியிலிருந்து படிக்கவும்.

ஒரு பழமையான வழக்கத்தை, ஒரு சில அதி மேதாவிகள் தங்களின் ஆணவத்தினால் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மாற்றியது சரி என்றால், அதைப் பின்பற்ற வேண்டாம் என்கிற எனது தீர்மானமும் சரி. ஆமாம், இனி ஜனவரி முதல் தேதிதான் ஆங்கில வருடத்தின் முதல் தேதி என்பதை ஏப்ரல் முதல் தேதி என்று வைத்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும், வருட முதல் தேதியை கொண்டாடும் அதே நேரம் முட்டாள்கள் தினம் கொண்டாடியது போலவும் இருக்கும்.

பாரதி தனது யோக சித்தி பாடலில் பாடுகிறார்.

தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக்கிரையெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

இதில் கடைசி வரியைத் தவிர மற்ற அனைத்து வரிகளும் இன்றைய தமிழக அரசியல்வாதிகளை பார்த்து பாரதி எழுதியதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!


இனி ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சிகள்
வழக்கம் போல நிகழ்ச்சி ஆரம்பித்து முதல் 3 நிகழ்ச்சிகள் முடிந்த பிறகுதான் கலந்து கொண்டேன். அதற்கு முழு காரணம் மொத்த காரணமும் அடியேன் தான். 'அடியேன்'னு சொன்ன உடனே அடிக்க வராதீங்க.

முதலில் வந்த தமிழ்த் தாய் வாழ்த்து, காவடியாட்டம், மற்றும் கண்ணன் குழலோசை நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியவில்லை. மொத்த நிகழ்ச்சியையும் சங்கத்தின் சார்பாக ஒளிப்பதிவு செய்வதாக அறிவித்தார் நண்பர் கார்த்திகேயன், அது வெளிவரும் போது பார்த்து விட்டு எழுதுகிறேன். ஆமா அவர் என்ன பின்னனிக் குரல் மட்டும் தருவதாக ஒப்புக் கொண்டாரா? அறிவிப்பாளர்கள் வெளியில் வந்து பேசினால்தான் கொஞ்சமாவது யாராவது கேட்பார்கள், பூனை மாதிரி திரைக்கு பின்புறமே இருந்தால் அதற்கு எதற்கு அறிவிப்பாளர்? கார்த்திகேயன் எனது நல்ல நண்பர் (இந்த பதிவு வரும் வரையில், இதைப் படித்த பிறகு அனேகமாக என்னை வழியில் பார்த்தால் அடி தான் என நினைக்கிறேன்).


பாரத விலாஸ் பாடல்
என் இள வயதில் இந்தப் பாடலுக்கு பல முறை வீட்டில் ஆடியிருக்கிறேன். 'இந்திய நாடு என் வீடு' என்று பாடுவதற்கு ஒரு கவிஞருக்கு நிஜமாகவே மிகப் பெரிய மனது வேண்டும். இந்தப் பாடலை எழுதியது வாலி என்று நினைக்கிறேன். இந்தப் பாடலுக்கு சின்னஞ்சிறு குழந்தைகள் என்று சொல்லக் கூடாது, சிறு மொட்டுகள் என்றுதான் சொல்ல வேண்டும். அனைவரும் அழாமல், அருமையாக வந்து நடந்ததே ஒரு நடனம்தான். இந்தக் குழந்தைகளை தயார் செய்த தாய்மார்களின் உழைப்புக்கு ஒரு ஜே போட வேண்டும். அதோடு இப்படி அழகு நடை நடந்த குழந்தைகள் அனைவருக்கும் ஒர் சூப்பர் ஜே போட வேண்டும்.


மாமா மாமா பாடல்/ குறத்தி நடனம்
MR ராதா நடித்து நடனம் ஆடுவது போல பாவ்லா காட்டி டூயட் பாடுய ஒரு (ஒரே) பாடல் இதுதான் என்று நினைக்கிறேன். படம் பெயர் நினைவில் இல்லை. ஆனால், அந்தப் பாடலின் எளிமை, பின்னனி இசையின் இனிமை காலத்தால் அழியாத ஒன்று. அதற்கு நடமாடிய குழந்தைகள் பின்னி விட்டார்கள். பல குட்டி குறத்திகளின் நடுவே ஒரே ஒரு குட்டிக் குறவன் வந்து கலக்கிய நிகழ்ச்சி குறத்தி நடனம். அவர்கள் உடை, அவர்களின் நடனம், அவர்களின் சிரிப்பு என்று எதை எடுத்தாலும் அழகு மிளிர்ந்தது இந்த நிகழ்ச்சியில். தற்சமயம் தமிழ் சங்க நிகழ்ச்சிகளில் நாட்டியமாடும் பலருக்கு வெகு விரைவில் மேடையில் இடம் கிடைக்காமல் செய்ய போகிறார்கள் இந்த சிறுமிகள்.

பையன்களின் நடனம்
பையன்களின் நடனங்களில் முதல் நடன நிகழ்ச்சி ஒயிலாட்டம். ஆடிய அனைவரும் தாளத்துக்கு ஏற்ப ஆடினாலும், மனோஜ் சிரித்தபடியே ஆடி கலக்கி விட்டார். அடுத்த நடனம் எல்லாம் வல்ல இறைவா பாடலுக்கு இன்னும் நாலு பேர் ஆடி பின்னினார்கள்.

பரத நாட்டியம் / சின்னக் குயில் நடனம்
நான்கு சிறுமிகள் அவர்களே நடன ஒருங்கிணைப்பு செய்து கொண்டு அசத்தினார்கள். அடுத்து 5 சிறுமிகள் சின்ன சின்ன வண்ணக்குயில் பாடலுக்கு நடனமாடி பின்னினார்கள்.

புதுவருடம் சேர்ந்திசை
மிக நன்றாக இருந்த மீனாவின் பாடலை பலரும் சேர்ந்து பாடிய இந்த நிகழ்ச்சி ஒரு புதிய முயற்சி. பல வருடங்களுக்கு முன்பு சென்னைத் தொலைக்காட்சியில் M.B. ஸ்ரீனிவாசன் என்று ஒருவர் இப்படி ஒரு சேர்ந்திசை நிகழ்ச்சியை நடத்துவார். அப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்த உணர்வு கிட்டியது. சங்கீதம் பவுண்ட் என்ன விலை என்றுகூடத் தெரியாத எனக்கு சேர்ந்திசைக்கு பதில் ஏன் ஒருவரோ அல்லது இருவரோ பாடியிருக்கக் கூடாது என்று தோன்றியது. பலர் சேர்ந்து பாடும் போது, கும்பலில் யார் பாடுகிறார் யார் பாடவில்லை என்பது தெரியாமல் போய் கும்பலில் கோவிந்தா மாதிரி ஆகிவிடுகிறது. அடுத்த முறை நானும் பாடலாம் போல இருக்கிறது. யாரும் கல் எடுத்து என்னை அடிக்க முடியாது, கேட்டால், நான் நல்லா தான் பாடினேன், பக்கத்தில இருக்கரவங்கதான் சுருதி தப்பி பாடினாங்கன்னு சொல்லி தப்பிச்சுக்கலாம், நானும் மேடையேறியது போலவும் இருக்கும், நாகு, அடுத்த கலை நிகழ்ச்சியில் எனக்கும் ஒரு இடம் ப்ளீஸ்.....

குச்சுப்புடி நடனம்

பவனரூபா என்பவர் கண்ணனின் லீலைகளை ரசிக்கும் படியாக ஆடினார். குச்சுப்புடி நடனத்தை தகுந்த நடன ஆடைக்கு பதிலாக சாதாரண சூடிதார் அணிந்து ஆடியதால் சற்று ஒட்டாமல் இருந்தது.

திரை இசை நிகழ்ச்சி
நிவிதா சரவணனின் பாடல்: இவர் ரிச்மண்டிற்கு புதியவரா என்பது தெரியவில்லை. சற்றும் தயக்கமின்றி ஷலாலா பாடலைப் பாடினார். பாடலை பின்னனி இசையின்றி பாடுவது ஒரு வகை, மேடையில் பின்னனி இசையோடு பாடுவது மற்றொரு வகை, அதிலும் பின்னனி இசையை கரியோக்கி முறையில் ஒலிபரப்பி அதனூடே பாடுவது மூன்றாவது வகை. அதற்கு தகுந்த பயிற்சி அவசியம். இவர் அந்த மூன்றாவது வகையில் பாடல் பாடினார், சொல்லப் போனால், குறையொன்றும் இல்லை பாடிய ப்ரியங்காவைத் தவிர பாடிய அஷ்வின் நாராயணன், ஹரிணி, அரவிந்த், சூர்யா, ஜனனி, அங்கிதா மற்றும் நாராயணன் அனைவரும் இதே முறையில்தான் பாடினர். அரவிந்தனும், நாராயணனும் பண்பட்ட பாடகர்கள் ஆகையால் அவர்கள் பாடியது வழக்கம் போல அசத்தலாக இருந்தது. அதிலும் அவர்கள் சற்று ராக ஆலாபனை போல செய்து விட்டு பொன் ஒன்று கண்டேன் பாடியது கலக்கல். சில காலங்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து 'நாளை நமதே' பாடினார்கள், இப்போது 'பொன் ஒன்று கண்டேன்' பாடியிருக்கிறார்கள். அடுத்து என்ன பாடுவார்கள் என்று யோசித்தால் "காட்டுக் குயிலு மனசுக்குள்ள" பாடுவார்கள் என்று நினைக்கிறேன், அதற்கு பிறகு "என்னம்மா கண்ணு" பாடுவார்களோ? இந்த வரிசையில் வேறு என்ன பாட்டு இருக்கிறது என்று யாராவது பின்னூட்டமிடலாம்.

ஜனனி, மொழி படத்திலிருந்து 'காற்றின் மொழி' பாடி அசத்தினார். மிக அனுபவித்து பாடி சக்கை போடு போட்டார். அஷ்வின், கஜனி படத்திலிருந்து 'ஒரு மாலை இளவெயில் நேரம்' பாடினார், சில இடங்களில் மைக் தொந்தரவு செய்தாலும், இவர் சர்வ சாதாரணமாக பாடி அசத்தினார். டிங் டாங் கோயில் மணி பாடிய ஹரிணி சற்று பயந்தது போலவே பாடினாலும் மிக நன்றாகவே பாடினார். சூர்யா பாட, கார்த்திக் ஆடினார், அங்கீதாவும் நாராயணனும் பாட, ஜனனியும் ஸ்வேதாவும் ஆட புதிய முறையில் பாடல் நிகழ்ச்சியைத் தந்தார்கள். ஆர்த்தி ஜூன் போனால் ஜூலை காற்றே பாடலை க்ளாரினெடில் வாசித்தார்.
மகளிர் நடனம்

இந்த முறை பல பெண்மணிகள் குத்துன்னா குத்து எங்க வீட்டு குத்தா, உங்க வீட்டு குத்தா என்று தெரியாத வகையில் இரண்டு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அசத்தினார்கள். சிறு பெண்கள் சினிமா பாடலுக்கு ஆடுவது அவ்வளவு வித்தியாசமாகத் தெரியவில்லை, ஆனால் பெண்மணிகள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடாமல், நம் சங்கத்தின் முந்தைய ஒரு விழாவில் சிலர் ஒரு தொலைக்காட்சித் தொடரின் Title Song-க்கு நடனம் ஆடியது போலவோ அல்லது ஒரு கும்மியாட்டம், கோலாட்டம் போலவோ செய்தால் நன்றாக இருக்கும். சினிமாவில் வரும் குத்தாட்டம் 'D' சென்டர் ரசிகர்களை மகிழ்விக்கவும், Movie Distributor-களையும் மகிழ்விக்க இருக்கும் ஒரு உத்தி, அந்தப் பாடல்களின் வரிகளும் அபத்தம், இசை அபத்தமோ அபத்தம் என்பது என் கருத்து. அது, நமது சங்கத்தின் லட்சோப லட்சம் உறுப்பினர்களின் கருத்துக்கு எதிர் என்றும் எனக்குத் தெரியும், இந்த விமர்சனத்திற்காக என்னை சற்று கட்டம் கட்டி திட்டப் போகிறார்கள் என்பதும் தெரியும்.


சுஜாதா
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு அஞ்சலி மறக்காமல் வந்து பார்க்கும் படி நாகு சொல்லியிருந்தார். அதை ரவியும் முரளியும் சேர்ந்து அளித்த முறை நன்றாக இருந்தது. அதில் நேரமின்மையோ என்னவோ தெரியவில்லை, பல விஷயங்களைச் சொல்லாமல் விட்டு விட்டார்கள். அவருடைய கணையாழியின் கடைசிப் பக்கங்கள், அதிலும் அவருடைய நாடக உலக மாற்றங்கள் கண்டிப்பாக சொல்ல வேண்டிய ஒன்று. அவர் நாடகங்களில் மாறுதல்களை கொண்டு வந்த போது, சமூக நாடகங்கள் (கோமல் ஸ்வாமிநாதன், விசு,கல்தூண் திலக் போன்றோர்), சரித்திர நாடகங்கள் (R.S. மனோகர், ஹெரான் ராமசாமி), நகைச்சுவை நாடகங்கள் (S.V. சேகர், க்ரேஸி மோகன்) என்று மூன்று வகையான நாடகங்கள்தான் வெளிவந்து கொண்டிருந்தன, இவருடைய, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு வந்த பிறகு நாடக உலகமே ஆட்டம் கண்டது, பிறகு வந்த ஊஞ்சல், அன்புள்ள அப்பா, வந்தவன் போன்ற நாடகங்கள் ஒரு வட்டத்துக்குள் நாடகம் நடித்தவர்களை புரட்டிப் போட்டது.

அவர் ஸ்ரீகாந்தின் முதல் டெஸ்ட் மாட்சை பற்றி ஒரு விமர்சனம் எழுதியிருந்தார், அதில் ஸ்ரீகாந்த் எதற்கும் பொறுமையில்லாமல், டாஸ் போட்ட உடனே விளாசத் தயாராகி விடுகிறார் அது சரியில்லை என்பது என் கருத்து. முதல் டெஸ்ட்டில் பந்தை டிஃபன்ஸ் செய்து விட்டு ரொம்ப வேர்கிறதே என்று க்ரீஸுக்கு வெளியே கொஞ்சம் காத்து வாங்கப் போனார், படக் கென்று ஸ்டெம்பை முறித்து ரன் அவுட் என்று வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் என்று எழுதியிருந்தார். இந்த அஞ்சலி நிகழ்ச்சியையும் சட்டென்று முடித்தது இதைப் போலத்தான் இருந்தது.

நிகழ்ச்சி நிரல் தயாரித்தவர்கள் அருமையான ஒரு ஏற்பாடு செய்திருந்தனர். முதலில் சின்னஞ் சிறார்களின் நிகழ்ச்சி, அடுத்து சற்று பெரிய குழந்தைகளின் நிகழ்ச்சி, என்று படிப் படியாக உயர்ந்து கடைசியில் பெண்மணிகளின் நடனம் என்று முடித்த விதத்தினால் கடைசி வரை எல்லோரும் இருந்து நிகழ்ச்சியைப் பார்க்க வைத்தனர். அதே போல் நிகழ்ச்சிகளில் பங்கு பெறாத குழந்தைகளின் குடும்பங்களை எப்படி இது போன்ற விழாவிற்கு வர வைப்பது என்று யாராவது கண்டு பிடிக்க வேண்டும். போன முறை விழாவிற்கு வந்த குடும்பங்கள், நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற குடும்பங்கள் பல இந்த முறை வரவில்லை. ஒரே சமயத்தில் அத்தனை பேருக்கும் அவ்வளவு முக்கியமான வேலை இருந்திருக்குமோ?

கடைசியாக ஒரு செய்தி - சங்கத்தின் விழாவில் கலந்து கொள்ளுபவர்களின் எண்ணிக்கை அதிகமாவதோடு, அவர்களின் ஒப்பனைகள் மிக மிக அற்புதமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக குறவன் - குறத்தி உடை மற்றும் சின்னச் சின்ன வண்ணக் குயில் பாடலுக்கு ஆடியவர்களின் உடை அபாரம்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

0 comments: