நேரம்

Saturday, May 10, 2008

பித்தனின் கிறுக்கல்கள்

+2 ரிசல்ட்ஸ்
சென்னையில் +2 ரிசல்ட்ஸ் வந்தாச்சு. வழக்கம்போல மாணவிகள் அதிக சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த மாணவர்கள் ரொம்ப பாவம். சன் டிவி, பேர் வெச்ச டிவி, பேர் வெக்காத டி.வி எல்லாவற்றிலும் வரும் நடன நிகழ்ச்சிகள், ஸ்டார் ஷோஸ், எல்லாம் ஜொள் விட்டு பார்த்துட்டு, ரஜனி, விஜய், சிம்பு, அஜித் எல்லார் படங்களுக்கும் பாலபிஷேகம், பீர் அபிஷேகம் எல்லாம் பண்ணிட்டு அவங்க எப்ப பள்ளிக்கூடம் போகரது, எப்ப பாடம் படிக்கரது. மாலை வீட்டுக்கு வந்ததும், கல்லி கிரிக்கேட், மாடில கிரிக்கேட், வாசல்ல கிரிக்கேட், டிவி-ல 20-20 மாட்ச் எல்லாத்தையும் முடிச்சுட்டு படிக்கலாம்னு உக்காந்தா, 2 ரிவிஷன் எக்ஸாம் முடிந்து 3 வது ரிவிஷன் ஆரம்பிக்கர நாள் வந்துடரது, இதுக்கு பிறகு அவங்க புத்தகத்தை தேடி, படிச்சு, எப்படி அதிக சதவிகிதத்தில பாஸ் பண்றது. இதுக்கும் மேல எழுதினால் என் பதிவை படிக்கிர என் அம்மா அப்பா " பரிட்சை நேரத்துல இவன் ஆடாத கிரிக்கெட்டா, செய்யாத அக்கரமமா இப்ப என்னவோ இவன் ரொம்ப ஒழுங்கு மாதிரி எழுதரான் பார், இதுதான் கலி"ன்னு திட்ட ஆரம்பிக்கரதுக்கு முன்னாடி முடிச்சுக்கறேன்.

தங்கம் விற்பனை
தங்கம் என்னவோ அரிசி ரேட்டுக்கு வித்தாலும், வாங்கர கூட்டம் என்னவோ குறையவே இல்லை. அட்சய திரிதியையொட்டி கடந்த 2 நாட்களில் 70 டன் தங்க நகைகள் விற்பனையாகியிருக்கு. ஒரு க்ராம் விலை ரூ.1090/-. அதாவது 7,630 கோடி ரூபாய்க்கு விற்பனை ரெண்டு நாளில தமிழ்நாட்டில் மட்டும் நடந்திருக்கு. இதில் இந்தியா ஏழை நாடு என்று இன்னமும் சொலிக்கொண்டு, மூன்றாம் உலக நாடுகளில் இந்தியா ஒன்று என்று கிண்டல் வேறு செய்து கொண்டிருக்கிறார்கள்.

'வெத்து' அன்புமணிக்கு உச்ச நீதி மன்றம் கண்டனம்.
எய்ம்ஸ் முன்னால் இயக்குனர் வேணுகோபாலை பதிவியிலிருந்து நீக்க வகை செய்யும் சட்ட திருத்தம் செல்லாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து மீண்டும் ஒரு முறை இந்தியாவில் சட்டத் துறையின் மாட்சிமையை காட்டியிருக்கிறது.


ரகுவரனுக்கு ஓர் அஞ்சலி
இது ஒரு காலங்கடந்த அஞ்சலி. எரிமலைகள் வெடிக்கும் போது சில ரோஜாக்கள் கருகுவது சாதாரணம் என்று சொல்லி கேட்டிருக்கிறேன். இதைச் சொன்னதற்காக ஒரு முறை வெட்டிப் பயலோடு சின்ன வாக்குவாதமும் செய்தேன். இப்போது ரகுவரனின் இந்த அஞ்சலியை எழுத முற்படும் போது, இந்த வரிகள் என் காதுகளில் ரீங்காரமிட்டது தற்செயல் என்று தள்ள முடியவில்லை.

ரகுவரன் ஒரு சிறந்த நடிகர் என்பது மறுக்க முடியாத உண்மை. அவருடைய சிறந்த படங்கள் என்று கணக்கிலடங்காத பல படங்களைச் சொல்லலாம். ஏழாவது மனிதனின் சாதாரண ஒரு கதாபாத்திரத்தில் பரிமளித்தவர். என்னடா இந்த ஆள் இப்படி நெடு நெடுவென உயரமாக இருக்கிறாரே, இன்னொரு அமிதாப் பச்சனா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தது அந்த கால கட்டத்தில். அதற்குப் பிறகு அவருடைய காதாநாயகன் அந்தஸ்து கொஞ்சம் கீழே போன பிறகு சடாரென்று வில்லன் ரோல் செய்ய ஆரம்பித்து, சிரித்தபடியே கதாநாயகர்களை சித்தரவதை செய்து அதிலும் தனது தனித் தன்மையை நிரூபித்தார். 'I Know' என்ற ஒரு வார்த்தையின் மூலமாக தான் எப்படி பட்ட குரூரமான மனநோயாளி என்பதை விளக்கியவர். சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் படத்தில் அவருடைய அக்காவின் கணவராக வந்து அவருக்கும் விஜய்க்கும் பாலமாக நடித்ததும் எனக்கு நிரம்ப பிடித்த ஒன்று. அந்தப் படத்தில் அவருடைய நடிப்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம்.

முதல்வன் படத்தின் ஆணிவேர் என்றால் அது ரகுவரன் என்பது என் கருத்து. அர்ஜுன் ஒரு சராசரி நடிகர் அந்த நடிப்பு முதல்வன் படத்திற்கு போதாது என்பதைத் தெரிந்து கொண்டு ரகுவரனின் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்து அந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ததில் ரகுவரனின் பங்கு மிகப் பெரியது. சிவப்பதிகாரம் படத்தில் ஒரு IAS அதிகாரியாக இருந்து பின்னர் ஒரு தேர்ந்த கல்லூரி பேராசிரியராக மாறி மாணவர் ஒருவரை வழிநடத்தி கேடு கெட்ட அரசியல் வாதிகளை பழிவாங்குவார். அவர் கைது செய்யப் பட்டு நீதி மன்றம் செல்லும் போது அவரிடம் ஒரு நிருபர் "இப்படி செய்ய நீங்கள் வெக்கப் படலையா" என்பார், அதற்கு அவர் ஒரு சிறிய சிரிப்போடு கடந்து செல்வார் அது நூறு வார்த்தைகளுக்கு சமம்.

இவருடைய மறைவு தமிழ் திரைஉலகிற்கு மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னட திரை உலகிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதிலிருந்து இவருடைய முக்கியத்துவம் தெரிகிறது. அவருடைய மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், திரைஉலகத்திற்கும் எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமெரிக்க அதிபர் தேர்தல்
Democrats கட்சியில் தேர்தல் முஸ்தீபுகள் பரபரப்பாக இருந்தாலும், யார் அதிபர் தேர்தலில் நிற்கப் போகிறார்கள் என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது. ஒபாமாவும், ஹில்லேரியும் இன்னமும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டிருக்கிறார்கள். இதே நேரம் Republican கட்சி மெக்கெய்னை தேர்ந்தெடுத்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கி விட்டது. தற்சமயம் ஒபாமா முன்னனியில் இருப்பதாக தெரிந்தாலும், ஹில்லேரி எப்படியும் முன்னால் வந்துவிடுவார் என்று என் அலுவலகத்தில் வேலை செய்யும் சிலர் ஆரூடம் சொல்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் அவர்கள் சொன்னாலும் மிக முக்கியமாக அவருடைய மற்றும் பில் க்ளிண்டனின் அரசியல் செல்வாக்கு என்பது அவர்களுடைய கருத்து. இருந்தாலும் இந்த தேர்தல் முறை சற்று வியப்பாகத்தான் இருக்கிறது.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்......

0 comments: