என்னைக் கவர்ந்த கவிஞர்கள்
ஞானக்கூத்தன்
நான் முதன் முதலில் படித்த கவிதைத் தொகுப்பு இவருடைய 'அன்று வேறு கிழமை' தான். படித்து சுமார் ஒரு 20 வருடங்கள் இருக்கும். சமீபத்தில் மீண்டும் ஒரு முறை படித்த போது, காலங்களை கடந்த அவருடைய பார்வை ப்ரமிக்க வைக்கிறது. இவருடைய இந்த கவிதைத் தொகுப்பை பற்றி சுஜாதா தனது கணையாழியின் கடைசிப் பக்கங்களில் (அக்டோபர் 1973) இவ்வாறு எழுதியிருக்கிறார்.
"அழகாகப் பதிப்பிக்கப்பட்ட 'அன்று வேறு கிழமை'யில் ஞானக்கூத்தனின் திறமையை முழுமையாக பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது.
ஞானக்கூத்தனின் கவிதைகள் யாப்புடன் அமைந்தவை. (மேலாகப் பார்த்தால் இது தெரியாது) எண்சீர், அறுசீர் கலிவிருத்தங்களில் அமைந்தவை. இஷ்டத்திற்குச் சில வேளைகளில், விஷயம் தெரிந்த ஒருவரின் பெயர் நிலையிலிருந்து, சந்தங்களைக் கலக்கிறார். கிடைப்பது ஞானக்கூத்தனுக்கே உரித்தான ஒரு அமைப்பு. ஆனால் யாப்புடன் இன்றைய தின நவீன விஷயங்களைச் சொல்ல முடியும் என்பதை மறுபடி மறுபடி நிரூபித்திருக்கிறார். இதன் மூலம் யாப்பை மீறிப் புதுக் கவிதை எழுதும் முதல் தகுதியை இவர் சுலபமாகப் பெறுகிறார். இது இவர் துருப்புச்சீட்டு, வைத்திருக்கிறார் இன்னும் உபயோகிக்கவில்லை.
'கால வழு அமைதி' என்கிற கவிதையைத் தொகுப்பில் சிறந்த கவிதையாக நான் சொல்வேன். இந்தக் கவிதையை துல்யமான எண்சீர் விருத்தமாகப் படிக்கலாம். அதைவிட ஒலி பெருக்கி அலறும் பொதுக் கூட்ட இரைச்சலின் பின்னணியில் ஒரு அரசியல்வாதியின் கயமை நிறைந்த கட்டைக் குரலில் படிக்கலாம். படிக்க வேண்டும்.
ஞானக்கூத்தனின் உவமைகளில் ஆச்சர்யங்கள் இருக்கின்றன. எது எதற்கு உவமையாகப் போகிறது என்கிற ஆச்சர்யம்.
உதாரணங்கள்
மணி அறியாப் பள்ளிகளில் மணியாக உதவும் தண்டவாளத் துண்டு - பாரதி இல்லாத நாட்டில் லோக்கல் கவிஞன்
எழுதக் குவிந்த கை - குன்று,
தையற்காரன் புறக்கணித்த துணித் துண்டுகள் - பூக்கள்,
ஸ்டேஷன் மாஸ்டர் கொடி - நிலம்
.....
.....
.....
ஞானக்கூத்தனைப் பாகுபடுத்துவது கஷ்டம். அவர் வரிகளை ரசிப்பதும், அவைகளில் நம்மையே கண்டுபிடிப்பதும் சுலபம்.
சுஜாதாவின் அணிந்துரையைக் கடந்து 'அன்று வேறு கிழமை' கவிதைத் தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த சில கவிதைகள்.....
கால வழு அமைதி (ஜூலை 1969)
"தலைவரார்களேங்.......
தமிழ்ப் பெருமக்களேங் ... வணக்கொம்
தொண்ணூறாம் வாட்டத்தில் வாழும் வாய்ப்பய்த்
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தினம்
கண்ணீரில் பசிதொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்"
'வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ'
"வளமான தாமிழர்கள் வாடலாமா?
கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?
தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள் பொணக்குவியல் காண்போ மின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்
தலைவரார்களேங்
பொதுமக்களேங் நானின்னும்
யிருகூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகறேன் வண்க்கொம்"
இன்னுமிரு வர்பேச இருக்கிறார்கள்
அமைதி ... அமைதி ...
நாய் (அக்டோபர், 1969)
காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலத் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?
ஸ்ரீலஸ்ரீ (ஏப்ரல் 1971)
யாரோ முனிவன் தவமிருந்தான்
வரங்கள் பெற்றான் அதன் முடிவில்
நீர்மேல் நடக்க தீபட்டால்
எரியாதிருக்க என்றிரண்டு
ஆற்றின் மேலே அவன் நடந்தான்
கொடுக்குத் தீயைச் சந்தனம் போல்
உடம்பில் பூசிச் சோதித்தான்
மக்கள் அறிந்தார் கும்பிட்டார்
மறுநாள் காலை நீராட
முனிவன் போனான் ஆற்றுக்கு
நீருக்குள்ளே கால்வைக்க
முடியாதவனாய்த் திடுக்கிட்டான்
கண்ணால் கண்டால் பேராறு
காலைப் போட்டால் நடைபாதை
சிரித்துக் கொண்டு கண்ணெதிரே
ஆறு போச்சு தந்திரமாய்
காலைக் குளியல் போயிற்றா
கிரியை எல்லாம் போயிற்று
வேர்த்துப் போனான். அத்துளிகள்
உடம்பை பொத்து வரக்கண்டான்
யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்
செத்துப் போக ஒரு நாளில்
தீயிலிட்டார், அது சற்றும்
வேகாதிருக்கக் கைவிட்டார்
நீரின் மேலே நடப்பதற்கும்
தீயாலழியா திருப்பதற்கும்
வரங்கள் பெற்ற மாமுனிவன்
மக்கிப் போக நாளாச்சு.
இவருடைய கவிதைகளில் யாப்பு அணி எண்சீர் என்று சுஜாதா சொல்வது எனக்கு விளங்கவில்லை. ஆனால் அதில் இருக்கும் நிஜம் முகத்தில் அறைவது அருமை. உதாரணத்திற்கு சில கீழே, இவர் எழுதியிருப்பது 70களில் என்றாலும் அவை இன்றைய கால கட்டத்திற்கும் பொருந்துவது சிறப்புதான்.
(1)
வெளியில் வந்தான் நடுநிசியில்
ஒன்றுக் கிருந்தான்
மரத்தடியில்
நெற்றுத் தேங்காய்
அவன் தலையில்
வீழ்ச்சியுற்று
உயிர் துறந்தான்
ரத்தக் களங்கம்
இல்லாமல்
விழுந்த நோவும்
தெரியாமல்
தேங்காய் கிடக்கு
போய்ப்பாரும்
(2)
எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர்மேல் அதைவிட மாட்டேன்.
(3)
சூளைச் செங்கல் குவியலில்
தனிக்கல் ஒன்று சரிகிறது
(4)
சமூகம் கெட்டுப் போய்விட்டதாடா
சரி
சோடாப் புட்டிகள் உடைக்கலாம் வாடா
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்......
நேரம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
முதல் கவிதைத் தொகுப்பிலேயே, யாப்பு, எண்சீர், அறுசீர் கலிவிருத்தம் எல்லாம் ஆரம்பிச்சிருக்கீங்களே. அட்டகாசம் தான் போங்க. இதுல நம்மள கவிதை (எங்க கிறுக்கல்களை) சொல்லித் தரச் சொன்னா எப்படி பித்தன் ?!! :)) நமக்கும், மேலே சொன்ன இலக்கணங்களும் ரொம்ப தூரம் ....
Post a Comment