ரிச்மண்ட் தமிழ் சங்கத்தில் பொங்கல்/குடியரசு தின விழா
கடந்த வாரம் ரிச்மண்ட் தமிழ் சங்கத்தில் பொங்கல்/குடியரசு தின விழா விமர்சையாகக் கொண்டாடப் பட்டது. முன்பு சொன்னது போல் அந் நிகழ்ச்சியைப் பற்றி எந்த வித விமர்சனமும் செய்யப் போவதில்லை. அந்த நிகழ்ச்சியை முதலில் இருந்து கடைசி வரை நன்கு ரசித்தேன். பிட்ஸா தீர்ந்து போய் விழா அமைப்பாளர்கள் கையை பிசைந்தது நல்ல ஒரு விஷயம், காரணம் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் எப்போழுதும் நல்லதுதானே.
பிராமணர்களுக்கு 7% இட ஒதுக்கீடு
தமிழகத்தில் இருக்கும் 90 சதவீத பிராமணர்கள் வறுமையால் வாடுகின்றனர். எனவே அவர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்த தென்னிந்திய பிராமணர் சங்க கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அதிமுக எம்எல்ஏ எஸ்வி சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அங்கு அவர் பேசியதில் முக்கிய தகவல்.
2. அதில் வறுமையில் வாடுவோர் – 90 சதவீதம்.(விழுக்காடு)
3. தமிழகத்தில் தற்போதைய இட ஒதுக்கீடு – 69 சதவீதம்.(விழுக்காடு)
மேலும், தமிழகம் சமூக நீதி கண்ட மாநிலம் என்று முதல்வர் கூறியுள்ளார். இன்றைய சூழ்நிலையில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால்தான் சமூக நீதி என்பது முழுமையடையும். பிராமணர்களின் இன்றைய நிலையை ஆய்வு செய்ய உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும். எங்கள் அமைப்பை பொறுத்தவரை மற்றவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதை தவறு என்று கூற வில்லை. எங்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். எனவே தமிழ்நாட்டில் உள்ள பிராமணர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். பிராமணர் சங்க கூட்டமைப்பு அரசியல் சார்ந்த அமைப்பு இல்லை என்று கூறியுள்ளர் எஸ்வி சேகர்.
இதைக் கண்டித்து, சொல்லக் கூடாத தரத்தில் (3ம் தரம் என்பது தேய்ந்து போய் 4, 5 தர வரிசைக்கு வந்து ரொம்ப நாளாச்சு) பலர் வலைதளத்தில் கண்டித்திருக்கிறார்கள். இவர்கள் கண்டனத்திற்கும் தமிழக முதலவரின் பிராமணர்கள் பற்றிய எல்லா விமர்சனங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’.
பொருளாதார அடிப்படையில் சில காலங்களுக்கு சலுகைகள் தரப்படுவது என்பது ஒப்புக் கொள்ள முடிகிறது. சமுதாய அடிப்படையில் வாய்ப்புகள் பெற்றவர்களுடைய கொள்ளுப் பேரன் பேத்திகளும் வாய்ப்புகளையும், வசதிகளையும் பெருக்கிக் கொண்டே செல்வது அசல் பிச்சைக்காரத்தனம் அவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும், வழிப்பறிக் கொள்ளைக்காரர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
எஸ்.வி.சேகரின் பேச்சை கண்டித்து எழுதியிருக்கின்றவர்களின் வார்த்தை ப்ரயோகங்களைப் பார்க்கின்ற போது பல வருடங்களுக்கு முன் பார்த்த ஒரு கேலிச்சித்திரம் நினைவுக்கு வருகிறது. அதில் இரண்டு நாய்கள் சூரியனைப் பார்தத படி நிற்கின்றன. ஒர் நாய் இன்னொன்றிடம் கேட்கிறது ஏன் அந்த வெளிச்சத்தைப் பார்த்து குரைத்தாய் என்று. அதற்கு இரண்டாவது நாய் சொல்கிறது வேறொன்றுமில்லை, நான் குரைத்த சிறிது நேரத்தில் ஏதோ ஒரு முகமூடி போல ஒன்றை வைத்து (மேகம்) தன்னை மறைத்துக் கொள்கிறது, அதிலிருந்தே தெரிகிறதா, அந்த வெளிச்சம் என்னைக் கண்டு பயப்படுகிறது என்று. முன்பு ஒருமுறை சொன்னது போல், பாரதியார் பாடிய நெஞ்சு பொறுக்குதில்லையே பாடலில் ஒரு சரணம்:
கஞ்சி குடிப்பதற்கிலார், அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்,
பஞ்சமோ பஞ்சமென்றே, நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்து,
துஞ்சி மடிகின்றாரே இவர்
துயர்களைப் தீர்க்கவோர் வழியிலையே
எனக்கு புரியாத ஒரு விஷயம்: இந்த பிராமண எதிர்பாளர்களுக்கு வீட்டில் ஒரு விசேஷம்/பூஜை/ஹோமம் என்றால் அதற்கு தேவை புரோகிதம் தெரிந்த ஒரு பிராமணர். கடை திறப்பா, கடையில் ஆயுத பூஜையா, வீட்டில் ஒரு இறப்பா, அமாவாசை தர்பணமா, கூப்பிடு புரோகிதம் தெரிந்த ஒரு பிராமணரை. உடம்பு சுகமில்லையா, நல்ல முறையில் வைத்தியம் பார்க்க வேண்டுமா, கூப்பிடு மருத்துவம் படித்த பிராமணரை (நரம்பியல் நிபுணர் Dr.B. ராமமூர்த்தி – இவர் மறைந்து விட்டார், அவருடைய மகன் Dr.ரவி, மற்றும் லட்சகணக்கானவர்கள்), வீட்டில் கணக்கு வராமல் மக்காக மகனோ மகளோ இருக்கிறார்களா, அவர்களுக்கு கணிதம் கற்றுத் தர வேண்டுமா, கடையில், பிஸினசில் கணக்கு வழக்கு பார்க்க வேண்டுமா, கூப்பிடு படித்த பிராமணரை(குருமூர்த்தி போல பலர்). அரசியல் தெளிவுடன் நடக்க இருப்பதையும் சொல்ல வேண்டுமா? தேவை ஒரு பிராமணர் (சோ மற்றும் சிலர்).
அட இவ்வளவு ஏன் சினிமாவில் ஒரு ஹீரோ ஹீரோயினோடு குத்தாட்டம் போட்டு டூயட் பாட வேண்டுமா உடனே அவரைச் சுற்றி ஒரு 10-15 பெண்கள் பிராமண பெண்மணிகள் போல மடிசார் கட்டிக் கோண்டு நடு ரோட்டில் பட்டையை கிளப்ப வேண்டும், ஹீரோ பூணூல் போல ஒன்றை மாட்டிக் கொண்டு, பஞ்சகச்சம் போல ஒன்றை சுற்றிக் கொண்டு ஒரு புத்தம் புது ரன்னிங் ஷூ போட்டுக் கொண்டு பார்க்கவே மீனம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுக்கும் குஷ்ட ரோகி போல இருப்பார் முகத்தில் பெரிய நாமம் போட்டுக் கொண்டு கழுத்தில் ஒரு உருத்திராட்சம் தொங்க, காதில் கொஞ்சம் துளசியும் வைத்துக் கொண்டு அவர் சைவரா அல்லது ஸ்ரீவைஷ்ணவரா என்று தெரியாமல் (அவருக்கும் தெரியாது, அவருக்கு இந்த வேஷம் போட்டவருக்கும் தெரியாது என்பது வேறு விஷயம்) வருவார்கள். இது சாதா தகர ஸ்டார் ஹீரோவிலிருந்து, சூப்பர் ஸ்டார் வரை இருக்கும் ஒரே பார்முலாதான். இப்படி பட்ட சீன் வைக்கப் படும் படங்களின் பூஜையை நடத்துவதும் புரோகிதம் தெரிந்த ஒரு பிராமணர். எப்போது பகுத்தறிவு என்பது பகுத்து அறிதல் எனபதிலிருந்து பிழன்று பிராமண எதிர்ப்பு என்று ஈரோட்டில் ஒருவரால் துவக்கப் பட்டதோ அன்றிலிருந்து இந்த அபத்தங்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
இதைவிட ஒரு கொடுமை, 80 களின் துவக்கத்தில் எனது வகுப்பில் எனது சக மாணவன் கணிதத்தில் புலி, 100க்கு 140, 150 எல்லாம் எடுத்தவன், கேள்வித்தாளில் சாய்ஸ் தந்திருப்பார்கள் 10 கேள்வியில் 8 கேள்விகளுக்கு பதில் எழுதவும் என்று. அவன் 10 க்கும் பதில் எழுதுவான், ஏழை என்று சொல்ல முடியாது, பரம ஏழை என்றும் சொல்ல முடியாது, வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோதான் ஒரு வாய் சாப்பாடு கிடைக்கும் என்ற நிலையில் இருந்த மகா மகா ஏழை அவன். அவனுடைய தந்தை அருகில் இருந்த கோவிலில் லக்ஷ்மி ந்ருசிம்ஹருக்கு பூஜை செய்யும் தொண்டை செய்து வந்தவர். இவனுக்கு படிக்க ஊக்கத் தொகை (ஸ்காலர்ஷிப்) வருடா வருடம் மறுக்கப் பட்டது. ஆனால், இதே வகுப்பில் படித்த (பள்ளிக்கு வந்து போன) ஒருவன் மற்றும் அவனது அக்கா (அவனை விட 2 வயது மூத்தவர், பெயிலாகி பெயிலாகி எங்களோடு படிக்க வந்தார்) வருடா வருடம் இருவருக்கும் தலா ரூ.500.00 ஊக்கத் தொகை தந்தார்கள். இவர்கள் இருவரும் பள்ளிக்கு வந்து போவது மின்னும் ஒரு பச்சை நிற அம்பாசிடர் வண்டியில். இருவரும் தாழ்த்தப் பட்ட பழங்குடி என்ற சான்றிதழ் வைத்திருந்தார்கள். அவர்கள் தந்தை அரசாங்கத்தில் ஒரு பெரிய உத்யோகத்தில் இருந்தார். இது சமூக அவலம் இல்லை என்றால் எது சமூக அவலம்? அந்த இருவரும் பிறகு 45% பார்டரில் படித்து முடித்து விட்டு நேரடியாக இஞ்ஜினியரிங் காலேஜ் படிக்க போய்விட்டார்கள், 94% எடுத்த என் நண்பன் கணிதம் படித்து விட்டு இன்னமும் ஒரு பள்ளியில் தாற்காலிக கணித ஆசிரியராக இருக்கிறான். சில வருடங்களுக்கு முன்பு பார்த்த போது ஒரு டி.வி.எஸ் 50 வாங்கியிருந்தான், காலையிலும், மாலையிலும் அவன் அப்பா செய்து வந்த கோயில் கைங்கரியம் இவன் செய்கிறான். இதுதான் வாழ்க்கையில் உயர்வு என்றால் என்ன சொல்வது.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்
சமீபத்தில் ப்ரபலமாக பேசப்பட்ட விஷயம் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்கார் வெற்றி. நேரடி ஒலிபரப்பை பார்த்துக் கொண்டிருந்த என்னால் இந்த மகிழ்ச்சியை தாங்க முடியாமல் துள்ளி குதித்ததை எண்ணி எண்ணி மகிழ்கிறேன். இதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. ஒரு தமிழ் நாட்டுக்காரர், ஹிந்தியை வீட்டுக்கு வெளியே எதிர்க்கும் அத்தனை கேடு கெட்ட அரசியல் வாதிகளையும் இவருக்கு ஒரு ஹிந்தி படத்திற்கு அருமையான இசையமைடத்தமைக்காக கிடைத்திருக்கும் முதல் ஆஸ்கார் விருதிற்கும், அதே படத்தில் இவர் எழுதிய ஹிந்தி பாடலுக்காக கிடைத்த இரண்டாவது ஆஸ்கார் விருதிற்கும் வாயார பாராட்ட வைத்திருக்கிறார். இதற்கு இவருக்கு தமிழகத்தில் நடக்க இருக்கும் விழாவிற்கு தலைமை தாங்கப் போவது தமிழர்களை ஹிந்தி படிக்க விடாமல் கடந்த 40 வருடங்களாக ‘கவனமாக’ பார்த்து வரும் கலைஞர்.
ரஹ்மானின் இசை ஒரு ரகம், ஆனால் எனக்கு அவருடைய இசையில் இருக்கும் ஆரவாரத்தை விட இளையராஜாவின் இசையில் இருக்கும் மென்மையும், விஸ்வநாதன் – ராமமூர்த்தி சேர்ந்திசையில் இருந்த எளிமையும் அதிகம் பிடிக்கும். ரஹ்மானின் பல பாடல்களின் இசை நாடி நரம்புகளை சுண்டி இழுக்கக் கூடியது, உதாரணம் ‘தாள்’ ஹிந்திப் படத்தில் அனைத்துப் பாடல்களும்.
இவருடைய
பலவீனம் என்று நான் கருதுவது இசையமைக்க வந்த கொஞ்ச நாட்களிலேயே அவருடைய பழைய பாடல்களின் மெட்டை மீண்டும் மீண்டும் உபயோகப் படுத்துவது. ஆனால் இளையராஜா எப்படி எம்.எஸ்.வி யை மெல்ல முதலிடத்திலிருது நகர்த்தினாரோ, அதை விட 1000 மடங்கு வேகத்தில் இவர் இளையராஜாவை நகர்த்திவிட்டு அங்கு அமர்ந்து விட்டார்.இன்னும் ஒரு 40-50 வருடங்களுக்கு இவருடைய இசை ஆதிக்கம் திரையுலகத்தில் இருக்கத்தான் போகிறது அதை மறுப்பதற்கில்லை.
துக்ளக்கின் 39ம் ஆண்டு விழா
இந்த வருடமும் சோ அவர்களின் துக்ளக் ஆண்டு விழா ப்ரசங்கம் அனைவரும் எதிர் பார்த்த விதம் கூட்டம் அலைமோத சிறப்பாக நடந்தேறியிருக்கிறது. இவரை பல நேரங்களில் பலருக்கும் பிடிக்காமல் இருந்தாலும், இவரிடம் இருக்கிற நேர்மையை நாட்டுப் பற்றை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டியிருக்கிறது. கலைஞரை எவ்வளவு கடுமையாக விமர்சித்தாலும், அவருடைய உழைப்பை பாராட்டத் தயங்குவதில்லை. ஜெயலலிதாவையோ அல்லது எந்த அரசியல் தலைவரையோ இவர் விமர்சித்தாலும் அவர்களின் நல்ல செயல்களை பாகுபாடின்றி சொல்ல இவர் தயங்குவதே இல்லை.
ஆனால் இவர் விமர்சனங்களை கேட்கக் கேட்க இவர் சொல்வது எதுவும் எந்த தமிழருக்கும் காதில் விழுவதே இல்லையோ என்று என்க்குத் தோன்றுகிறது.
இலங்கைத் தமிழர்களின் அவதி
எனது இந்த பதிவு வெளியாகும் வரை (வெளியாகி பல வருடங்கள் ஆகியும் கூட) இலங்கை வாழ் தமிழர்களின் அவதிகளுக்கு ஒரு முடிவு வருமா என்பது பெரிய கேள்விக்குறிதான்.
தமிழக முதல்வர் தெளிவாக இருக்கிறார், அவர் சார்ந்திருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அடுத்து பதவிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை அதனால் இருக்கிறவரை சுரண்டுவதை விட முடியாது இதில் இலங்கை ப்ரச்சனை அந்தப் ப்ரச்சனை இந்தப் ப்ரச்சனை எதையும் பார்க்க முடியாது என்று. நான் முன்பு ஒரு முறை சொன்னது போல் எல்லா எம்.பி களின் ராஜீனாமாவை இவர் வாங்கி வைத்துக் கொண்டு ஒரு ஸ்டண்ட் அடித்தார், பிறகு ராஜீனாமா செய்து விட்டால் ப்ரச்சனை முடிந்து விடுமா என்றார், பதவியிலிருந்து விலகாதீர்கள் என்று இலங்கையிலிருந்து பல தமிழ் தலைவர்கள் போன் மூலம் இவரிடம் சொன்னதால் இன்னமும் பதவியில் இருக்கிறேன் என்றார், (அப்படி சொன்னவர்கள் யார் என்று பிரபாகரனிடம் போட்டும் கொடுத்து விட்டார், அதில் எத்தனை பேருக்கு பிரபாகரன் வேட்டு வைக்கப் போகிறாரோ தெரியவில்லை) பதவியில் இருப்பதால் தான் இவ்வளவாவது செய்ய முடிகிறது என்றார், எனக்கு தூக்கமே வருவதில்லை என்றார், 50 வருடங்களாக எவ்வளவு செய்திருக்கிறேன் என்று ஒரு பெரிய பட்டியல் படித்தார், அந்த பட்டியலில் எல்லா விஷயங்களும் கடையடைப்பு, கருப்பு துணி காட்டுவதுதான், இவையெல்லாம் செய்தால் இலங்கை தமிழர்களுக்கு நல்ல வாழ்வு கிடைத்து விடுமா? நமது ஊரில் கடையடைப்பு செய்தால் இலங்கைக்கு என்ன, நஷ்டம் நம் ஊர் அரசியல்வாதிக்கா என்றால் அதுவும் இல்லை, நஷ்டம் முழுவதும் சிறு வியாபாரிகளுக்கும், கை வண்டிக்காரர்கள், பொது ஜனம் இவர்களுக்குத்தான். இதற்குப் பிறகும் இவரைப் போன்ற பல அரசியல்வாதிகளும் இப்படி ஸ்டண்ட் அடிப்பது எப்படி என்று புரியவில்லை.
இந்த வேடிக்கையில் தமிழ்த் திரையுலக பிரமுகர்கள் பலரும் சேர்ந்திருக்கிறார்கள். தொப்புள் கொடி உறவுகள் இலங்கையில் தவிக்கின்றன என முதலைக் கண்ணீர் விடுகின்றனர். இதோ இருக்கிற இராமேசுவரத்திற்கு போய் ஒரு பொதுக்கூட்டம் போட்டு விட்டு வந்து விட்டார்கள், இவர்கள் எத்தனை முறை இராமேசுவரத்தில் இருக்கும் அகதிகள் முகாமில் இருக்கும் தமிழர்களுக்கு உதவியிருக்கிறார்கள். ஏன் இராமேசுவரத்தில் இருப்பவர்கள் தொப்புள் கொடி உறவுகள் இல்லையா. போர் நிறுத்தம் வேண்டும் என்பவர்கள் ஏன் புலிகள் அப்பாவி தமிழர்களை கேடயமாக பயன் படுத்துவதை நிறுத்துங்கள் என்று குரல் கொடுப்பதில்லை. பயமா அல்லது பணமா? புலிகளைத் தாக்க வரும் ராணுவம் நியாயம் தர்மம் பார்த்து போர் செய்யவில்லை சரி, புலிகளுக்குத் தெரியுமே நியாயமும், தர்மமும், அவர்கள் அப்பாவித் தமிழர்களை பத்திரமாக அனுப்பி விட்டு போர் செய்யலாமே? ஏன் அவர்கள் பின்னாலிருந்து போர் செய்ய வேண்டும்? ஏன் இலங்கை ராணுவ முகாமில் அகதிகளாகத் தமிழர்கள் இருக்கும் பக்கம் ஒரு 15 வயது பெண் புலி தற்கொலைப் படையாளி வெடி குண்டை வெடித்து பல அப்பாவித் தமிழர்களையும் கொன்று தானும் வெடித்துச் சிதறி இறந்து போனாள்? இதையெல்லாம் கேட்கக் கூடாது கேட்டால் நாம் தமிழ் இனத் துரோகி. அட போங்கப்பா.
இந்த ஜூரம் இப்போது படித்த படிக்காத பல தமிழ்நாட்டு இளைஞர்களையும் ஆட்டிப் படைத்து, அவர்கள் கூட்டம் கூட்டமாக தற்கொலைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இது என்ன காலாச்சாரம், இதை வீரம் என்று எப்படி புகழ்கிறார்கள் என்று தெரியவில்லை. இது தவறு, இதைச் செய்பவர் ஒரு வடிகட்டின கோழை, சமூகத்தில் ஒரு கரும்புள்ளி என்று சொல்ல எந்த அரசியல்வாதிக்கும் தைரியம் இல்லை. எப்படி ரஜனி, விஜய் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் என்பது கேவலமோ, அதைவிட 1000 மடங்கு கேவலம் ஒரு தனிமனிதன் இப்படி தற்கொலை செய்து கொள்வது. இப்படி இறந்த ஒருவருடைய நினைவு விழாவில் (இது இன்னொரு பித்துக்குளித்தனம்) இயக்குனர் சீமான், என்னை பாரதிராஜாவும் பலரும் சேர்ந்து தடுத்து விட்டார்கள் இல்லையென்றால் நானும் இப்படி தீக்குளிக்க முடிவு செய்திருந்தேன் என்று டைலாக் வேறு விட்டிருக்கிறார்.
இலங்கைத் தமிழர்களே, உங்களை வைத்து இப்படி பலர் வியாபாரம் செய்வதை ஏன் நீங்கள் கண்டிப்பதில்லை? தமிழ் தமிழ் என்று ஜல்லியடித்து எப்படி தமிழ் நாட்டை 1967 லிருந்து கழிசடை கழகங்கள் பாழ் படுத்துகின்றன என்று உங்களுக்குத் தெரியும், அவர்கள் இருக்கும் தமிழ் நாட்டையே சரியாக பராமரிக்கத் தெரியாத இவர்களையா நீங்கள் நம்புகிறீர்கள்! எனக்கு பல இலங்கை தமிழர்கள் நல்ல நண்பர்கள் அவர்களின் தொழில் நுட்ப அறிவு வியக்கத்தக்க ஒன்று, அசராத உழைப்பாளிகள், கலைகளில் விற்பன்னர்கள் இப்படிப் பட்ட அருமையான சமூகம் ஒன்று இப்படி அவதியுறுவது மிகுந்த வேதனையைத் தருகிறது. உங்களுக்கு ஒரு நல்ல வாழ்வும் நல்ல வழியையும் எல்லாம் வல்ல இறைவன் கூடிய விரைவில் தரட்டும்.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
0 comments:
Post a Comment