நேரம்

Tuesday, April 14, 2009

பித்தனின் கிறுக்கல்கள் – 34

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல்
இந்தியாவின் 18 வது பிரதமரைத் தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் இன்னும் இரு தினங்களில் துவங்க இருக்கிறது. 6 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் கடைசியாக மே 13ம் தேதி தேர்தலும் அதைத் தொடர்ந்து மே 16ம் தேதி வாக்கு எண்ணும் பணி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வந்தால் அதன் பிரதமராக மன்மோகன் சிங்கும், பா.ஜ.கா ஆட்சிக்கு வந்தால் அத்வானி பிரதமராகவும் இருப்பார்கள் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதில் மன்மோகன் சிங், மறைந்த ராஜீவின் மகன் ராகுல் பிரதமராகும் எல்லாத் தகுதியும் உள்ள ஒருவர் என்று மேடைக்கு மேடை பிதற்றியபடி இருக்கிறார். பிரதமராக என்ன தகுதி என்று யாரும் கேட்க முடியாது, ஒரு இந்திரா, ஒரு தேவ கவுடா, சந்தர்ப்பவாதிகள் சரண்சிங் மற்றும் வி.பி.சிங் பிரதமராகலாம் என்றால், ஊழல்வாதி ப்ரதீபா பாடில் இந்தியாவின் முப்படைத் தளபதியான குடியரசுத் தலைவராகலாம் என்றால், ராகுல் கண்டிப்பாக பிரதமராகலாம். இவருடைய இளமைப் பருவம் (இன்னமும் இவர் இளைஞர்தான்) ஒன்றும் கேட்பதற்கு நல்லதாக இல்லை. அதை நான் சொன்னால் நீ ரொம்ப ஒழுங்கா என்று பலர் கத்தியைத் தீட்டிக் கொண்டு வருவார்கள்.

இவருக்கு போட்டி என்றால் இவருடைய சித்தப்பா மகன் வருண். வருண் பா.ஜ.கா வின் வேட்பாளராக களம் இறங்குகிறார், இவர் ராகுலுக்கு கண்டிப்பாக போட்டியாக இருப்பார் என்பது தெரிந்ததும், இவர் பேசிய பேச்சு மத வெறியைத் தூண்டியுள்ளது என்றும் இவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இவர் பேசியதை முழுவதும் நான் கேட்கவில்லை ஆனால் இவர் பேசியது மத வெறியைத் தூண்டும் ஒன்று என்பதை பல ஊடகங்கள் மூலம் தெரிய வருகிறது. ஆனால் அவர் பேசியது தவறு என்று கூறும் ‘மதசார்பில்லாத’ இந்திய அறிவுஜீவி ஊடகங்கள் வருணை ரோடு ரோலரை விட்டு ஏற்றி கொல்ல வேண்டும் என்று சொன்ன லாலு ப்ரசாத் யாதவை ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருப்பது என்ன லாஜிக். வருண் சொன்னவைகள் சரியா தவறா என்பது ஒரு புறம் இருக்க, அதே நேரம் இந்து மதத்தை நாள் தோறும் இழிவு படுத்தும் தமிழக முதல்வரையும் பலப் பல அராஜகங்கள் செய்யும் அவருடைய குடும்பத்தினரையும் கண்டிக்கக் கூட தயங்கும் இதே ஊடகங்களின் கேவலமான இரட்டை வேடத்தை என்ன சொல்வது. இதன் முத்தாய்ப்பாக, இந்தியாவின் நிழல் பிரதமர் சோனியா இந்தியர்களுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் தீவிரவாதிகளை விட உள்நாட்டிலிருக்கும் மதவாதிகளால்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று வழக்கம் போல் உளறியிருக்கிறார்.

தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியும், தி.மு.க கூட்டணியும் 40க்கு 40 தாங்கள்தான் என்று கற்பனை கண்டு கொண்டிருக்கின்றனர். மரம் வெட்டி பா.ம.க வழக்கம் போல் இந்த முறையும் கூட்டணி மாறியிருக்கிறது. இதற்கு ஒரு சால்ஜாப்பு வேறு சொல்கிறார் அதன் தலைவர். இவரைப் பார்க்கும் போதெல்லாம் நாமெல்லாம், வெக்கம் மானம் ரோஷம் என்ற கவைக்கு உதவாத விஷயங்களைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதில்லை என்பது விளங்குகிறது.

விஜயகாந்த் வழக்கம் போல தனியாக போட்டியிடுகிறார். அவர் அப்படி செய்வதே அதிமுகவின் ஓட்டை பிரிப்பதற்காகத்தான் என்று பரவலான கருத்து வெளியாகியிருக்கிறது.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்.

1 comments:

Anonymous said...

Hey! This is my 1st comment here so I just wanted to give a quick shout out and tell you I really enjoy reading through your blog posts.

Can you recommend any other blogs/websites/forums that go over the same subjects?
Appreciate it!