டெல்லியில் தி.மு.க.
திஹார் ஜெயிலில் கனிமொழி அடைக்கப் பட்டாரோ இல்லையோ, எமக்கு சில நண்பர்கள் நேரிலும், தொலைப் பேசியிலும் “என்ன இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய், இதைப் பற்றி கொஞ்சம் விலாவரியாக எழுதக்கூடாதா” என்று கேட்டு நான் என்னவோ சட்ட வல்லுனர்போலவும், நாம் சொல்வதை நம் வீட்டிலேயே யாரும் சீரியசாக எடுத்துக் கொள்வதும் இல்லை என்ற உண்மை கிஞ்சித்தும் தெரியாமல், நாம் சொல்வது சரி என்று பாவம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை ஏமாற்றாமல் இதோ நம் பக்க கருத்து.
கனிமொழியைப் பற்றி நாம் எழுத நேரிடும் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஹூம் தலையெழுத்து.
அதற்கு முன்னால், என்னுடைய முந்தைய பதிவை படித்த (அல்லது எமது வலைபூவை பார்க்க வந்த) 58 பேருக்கும், பின்னூட்டமிட்ட நாகுவிற்கும் நன்றி.
முதலில் சில விஷயங்கள், கனிமொழி ஒரு பெண், ஒரு தாய், ஒரு ப்ராந்தியக் கட்சித் தலைவரின் மகள், ஒரு கண்ணியமான ராஜ்யசபா எம்.பி. போன்ற கருத்துக்கள் இருப்பவர்கள் தயவு செய்து அடுத்த செய்திக்கு செல்வது உத்தமம். இந்த உதவாக்கரை வாதங்கள் எமக்கு எந்த காலத்திலும் ஏற்புடையதில்லை.
ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் மொத்த மதிப்பு சில கோடிகள் இருக்க, அதில் பங்குதாரராக இருக்க ஒரு நிறுவனம் அதன் மதிப்பை விட 20 மடங்கு பணம் தந்ததாகவும், அதை அந்த நிறுவனம் நிராகரித்ததால் அந்தப் பணத்தை அவர்கள் கடனாகத் தந்ததாகவும், அந்த நிறுவனத்தில் தனது தந்தை கையெழுத்துப் போடச்சொல்லி 20% பங்குதாரராக ஆக்கியதால் ஆனதாகவும், அதைத் தவிர தான் அதன் எந்த தினப்படி நிர்வாகத்திலும் பங்கு பெறவில்லை என்றும் கதை சொல்லும் கனிமொழி, எப்படி இந்தப் பணவிஷயம் பற்றி இவ்வளவு விலாவரியாக சொல்ல முடிந்தது. இவர்தான் அந்த நிறுவனத்தின் எந்த செயல்பாட்டிலும் தலையிடாமல் இருந்தவராயிற்றே? ஒரு பேச்சுக்கு இந்த கதையை இப்படி அணுகிப் பார்க்கலாம், நான் ஒரு கம்பெனி இங்கு ஆரம்பித்து அதன் மதிப்பு 1000$ என்று வைத்துக் கொள்ளுங்கள், அதை ஒரு பெரிய பணக்கார கம்பெனி ஒன்று 20000$ முதலீட்டில் சில பங்குகள் வாங்க முயற்சித்தால் அதை யாராவது நம்புவார்களா? எங்க ஊரில் ஒன்று சொல்வார்கள், “கேக்கரவன் கேணையான இருந்தா கேப்பையில் நெய் வழியுதுன்னு சொன்னா நம்புவான்” ன்னு அதைப் போல இப்படி ஒரு கதை சொல்லி பிறகு அதை கடன் என்று சொல்லி, பிறகு அதை அவர்கள் திருப்பித் தந்தமாதிரி செய்து, அந்தப் பணம் அஞ்சுகம் பிக்சர்ஸ் உதவியால் திருப்பியதாக செய்து அதற்கு ஆவணங்கள் தயாரிக்கப் பட்டு, இத்தனை தில்லு முல்லுகளையும், ராஜா கைதுக்குப் பிறகு செய்து அதை திறம்பட செய்து முடித்தப் பிறகு சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளை கொண்டு ஒரு விசாரணை என்ற பேரில் ஒரு கண் துடைப்பு போலச் செய்து பிறகு உச்ச நீதி மன்றம் இந்த வழக்கை தனது சுய பொறுப்பில் எடுத்துக் கொண்ட பிறகு இந்தக் கைது நடை பெற்றுள்ளது.
சி.பி.ஐயின் சில செயல்பாடுகளும் சந்தேகத்துக்குரியவைதான், 20% பங்குதாரர்கள் கனிமொழி மற்றும் சரத்குமார் கைது சரி, 60% பங்குதாரர் தயாளு அம்மா ஏன் கைதாகவில்லை, அவருக்கு வயதாகிவிட்டது, அவருக்குத் தமிழைத்தவிர வேறு மொழி தெரியாது என்று விட்டு விட்டோம் என்று சி.பி.ஐ சப்பை கட்டு கட்டியிருக்கிறது. ஆக இந்தியாவில் வயதானவர்கள் நல்லவர்கள், அதுவும் ஆங்கிலம் தெரியாமல் தாய் மொழி மட்டும் தெரிந்தவர்கள் கைதுக்கு அப்பாற்பட்டவர்கள், நல்ல லாஜிக், அப்படின்னா 71 வயது முலயம் சிங் யாதவும், 63 வயது லாலு ப்ரசாத் யாதவும் எந்தத் தில்லு முல்லு செய்தாலும் தண்டனையில்லை. சூப்பர், இப்படி ஒரு புலனாய்வு நிறுவனம் அதற்குத் தலைமை தன்னிகரில்லாத உலகத் தலைவர்களிலேயே அதிகம் படித்தத் தலைவர் மன்மோகன் சிங். வாழ்க ஜனநாயகம், வளர்க அவர்கள் அறியாமை.
சரி தொடங்கியப் ப்ரச்சனைக்கு வருவோம். வாங்கிய 214 கோடியை வட்டியுடன் திருப்பித் தந்தீர்கள், இவைகள் ஏன் எழுத்துப் பூர்வமாக இல்லை? வட்டி எவ்வளவு என்று ஏன் ஒருவரும் கேட்கவில்லை? வாங்கிய பணத்தை என்ன செய்தீர்கள்? வாங்கிய பணத்தில் எந்த தேச விரோத செயலும் செய்யவில்லை என்று யார் உத்தரவாதம் தந்தார்கள்? சாதாரணமாக ஒரு இந்திய வங்கியில் 50000 ரூபாய்கள் எடுக்கவோ அல்லது கணக்கில் வரவு வைக்கவோ முக்கியத் தேவை பான் கார்டு நம்பர், இது நம்மைப் போன்ற பொது ஜனங்களுக்கு ஒரு நிறுவனம் சட்டென்று 214 கோடியை வாங்க முடிகிறது, அதை சட்டென்று வட்டியுடன் திரும்பத் தர முடிகிறது எப்படி? இந்தப் பணப் பட்டுவாடாவில் தொடர்புடைய வங்கிகள் யார்? அவர்கள் எப்படிப் பட்ட ஆவணங்களை தயார் செய்து இந்த பட்டுவாடாவை செய்தார்கள். இதெல்லாம் இந்த விசாரணையில் வெளிவரும் என்று எமக்கு நம்பிக்கையில்லை.
கனிமொழி ஒரு பெண்:
ஜெயலலிதாவும் ஒரு பெண், தாத்தாவின் ஆட்சிக்காலத்தில் அவர் சட்டசபையிலேயே அவமானப் படுத்தப் பட்டது மறந்து விட்டதா, மேலும் அவரைப் பற்றி சேரிகளில் தினமும் தமிழில் சொல்ல முடியாத வார்த்தைகளில் போவோரையும் வருவோரையும் குடித்து விட்டு ஏசும் பல கழிசடைகளைப் போல சமீபத்திய தேர்தலில் ப்ரசாரத்திலும் பேசிய முத்தமிழ் வித்தகருக்கு ஜெயலலிதா ஒரு பெண் என்பது மறந்து விட்டதா? பெண் என்று பார்த்துத்தான் ஜெயலலிதா ஜெயிலில் மற்றக் கைதிகளைப் போல வைக்கப் பட்டாரா? சோ சொன்னது போல ஜெயலலிதா ஒரு ஆணைப் போலத்தான் தனக்கு நேர்ந்த அவமானங்களையும் கஷ்டங்களையும் சகித்துக் கொண்டார், தாத்தாவைப் போல சாதாரண ஒரு கைதுக்கு “ஐய்யோ கொல்ராங்களே” என்று அழுது அடம்பிடித்து அதையே திரும்பத் திரும்ப தொலைக்காட்சியில் காண்பித்து போன முறை ஆட்சியைப் பிடித்தாரே அதைப் போல செய்யாமால் தன் திறமை, தனது ஆட்சியின் கண்டிப்பு, தேர்ந்த நிர்வாகத் திறமை இவைகளைச் சொல்லி மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்.
கனிமொழி ஒரு தாய்:
ராப்ரி தேவியும் ஒரு தாய்தான், அவர் செய்யாத குற்றமா? இந்தியா இத்தனை குட்டிசுவரானதுக்குக் காரணமான இந்திராவும் ஒரு தாய் அவர் செய்யாத குற்றமா? இது என்ன லாஜிக், இதைக் கேட்டு தாய்மார்கள் கண்ணீர் சிந்தி மக்களின் அனுதாபம் இவர்கள் பக்கம் வந்துவிடும் என்று எண்ண ஆரம்பித்தால் இவர்கள் பைத்தியக்காரர்களா அல்லது இவர்கள் இப்படி நினைக்கலாம் என்று இவர்களை விட்டு வைத்திருக்கும் மக்கள் பைத்தியக்காரர்களா?
இவர் ஒரு ப்ராந்தியக் கட்சித் தலைவரின் மகள்:
அதாவது ஒரு கட்சித் தலைவரின் மகள் (நேர்மையான வாரிசோ அல்லதோ அது நமக்குத் தேவையில்லாத விஷயம்), கைதுக்கு அப்பாற்பட்டவர், ஹும் “நல்லாத்தான் கதை எழுதராங்க”.
ராஜ்யசபா எம்.பி என்பது பலருக்கு ஒரு குறுக்கு வழி எம்.பி பதவி (பாமக – அன்புமணி, மன்மோகன் சிங் என்று பட்டியல் நீளும்) அதே சமயம் பல நல்லவர்களும் இந்தியாவின் பாராளுமன்றத்தின் சட்ட திட்டங்களின் தீர்மானங்களில் பங்கு பெற்று தங்களின் கருத்தை வெளிப்படுத்தி பல நல்ல செயல்களைச் செய்ய முடியும் (சோ, செழியன், டாக்டர் ராஜா ராமன்னா மற்றும் பலர்), ஆக ராஜ்யசபா எம்.பி என்பதால் இவர் கைதுக்கு அப்பாற்பட்டவர் என்பது ஏற்க முடியாத ஒன்று.
இந்தப் பதிவு வெளிவரும் நேரம் தயாநிதி மாறன் சோனியா காந்தியைச் சந்தித்து பேசியிருப்பதாக தகவல்கள் வருகிறது, சமீபத்தில் டெல்லி சென்று கனிமொழியை சிறையில் பார்த்து கதறி அழுத தாத்தாவும், சோனியாவை பார்க்கவில்லை பார்த்தால் யாராவது ஏதாவது சொல்வார்கள் என்று பார்க்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். அதாவது இந்தியாவில் எது நடக்க வேண்டும் என்றாலும் யாரும் ப்ரதமரைப் பார்த்து சொல்ல வேண்டும் என்று சொல்வதில்லை, சோனியாவைப் பார்த்தால் போதும் என்று தீர்மானமே செய்திருக்கிறார்கள். இப்படி ஒரு ப்ரதமர், இவர் வடிவேலு படத்தில் வருவது போல “ரொம்ப நல்லவரு” என்று யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தானே சொல்லிக் கொள்வார். ஹூம் பாரதி சொன்னான், “சீச்சீ நாயும் பிழைக்கும் இப் பிழைப்பு” இது இவருக்குத்தான் போல இருக்கிறது.
இந்த வழக்கின் போக்கு எப்படி இருக்கும் என்று எம்மிடம் ஆரூடம் கேட்டவர்கள் சிலர் அவர்களுக்காக எம் கருத்து இரு வழிகளில் ஒன்று சி.பி.ஐ சரியாக தங்கள் கடமைகளைச் செய்தால், இரண்டு அராஜகம் தலைவிரித்தாடினால். இதில் இரண்டாவது நடக்காமல் இருந்தால் எம்மைவிட அதிக சந்தோஷம் அடையப் போவது யாரும் இல்லை.
முதலில் சி.பி.ஐ ஒழுங்காக தங்கள் கடமையைச் செய்தால்:
1. சரத்குமார் அப்ரூவர் ஆகலாம், ஆனால் உயிரோடு இருப்பாரா என்பது சந்தேகம். ஒரு வேளை அப்படி அவருக்கு ஏதும் நடக்காமல் இருந்தால் கனிமொழியோடு தயாளுவும் உள்ளே போக நேரிடும்.
2. சரத் அப்ரூவராகாமலேயே, உச்ச நீதி மன்றம், தயாளுவை ஏன் கைது செய்யவில்லை என்று சி.பி.ஐயை குடாய்ந்தால் அவர் உள்ளே செல்ல நேரிடும்.
3. சோ சொன்னது போல இந்திய கிரிமினல் சட்டத்தில் “ஒருவரின் மனைவி, மகள் ஏன் அவருடைய வேலைக்காரனே தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தால் அதற்கும் அவருக்கும் தொடர்புள்ளது என்று அவரையும் விசாரணைக்கு உட்படுத்தப் படவேண்டும்” என்பது இருந்தால் தாத்தாவும் சக்கர நாற்காலியோடு உள்ளே போய் களி திங்க வேண்டியதுதான்.
4. தயாநிதி மாறன் தனது தொலைத் தொடர்பு அமைச்சர் காலத்தில் செய்த அட்டூழியங்களுக்காக கைது செய்யப் படும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வரத் தொடங்கியிருக்கிறது, அதைத தவிர்க அவர் அப்ரூவராக ஆனால், இன்னும் எத்தனை தலைகள் திஹாருக்கு போக வேண்டுமோ.
5. தாத்தா இனி தாங்காதுடா சாமின்னு மண்டையைப் போட்டால், நடைபெறும் அடிதடியில் கனியுடன் ராசாத்தியும் உள்ளே போக, தயாளு தப்பித்து சொந்த ஊருக்கு பயணப்படலாம்.
அராஜகம் தலைவிரித்தாடினால்:
1. ராஜாவோ அல்லது வேறு யாரோ, யார் பெயர் உங்கள் மனதில் வருகிறதோ அவர் பெயரை எழுதிக் கொள்ளுங்கள். அவர் சோனியாவிடமோ அல்லது யாராவது ஒருவரிடம், என்னிடம் ராஜாவை யார் இப்படி நடந்து கொள்ளச் சொல்லி சொன்னார் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது என்றால், இந்த வழக்கின் திசை மாறி கனிமொழி, ராஜா இருவரும் வெளியே வந்து விடுவார்கள், கைதான மற்ற பணக்காரர்கள் காலப் போக்கில் வழக்கின் குழப்பங்களைக் கொண்டு வெளிவந்து சில பல கோடிகளை இழந்து விட்டு மற்ற வேலைகளைச் செய்யப் போய்விடுவார்கள்.
2. இப்படி ஒரு ஊழல் நடந்தது என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல் எப்படி சர்காரியா கமிஷனின் அறிக்கையில் தான் விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்வதில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்று தீர்ப்பு பெற்ற போதும் இதுவரை அதற்காகக் கைதாகாமல் இன்றுவரை தைரியமாக சக்ரநாற்காலியிலாவது உலாவர முடியுமென்றால் இது என்ன பெரிய விஷயம் என்று அந்தக் குடும்பம் இன்னும் வீறுகொண்டெழுந்து ஆடும்.
3. இந்த கேசை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு ஏதாவது நடந்து அவருக்கு பதிலாக வேறு ஒருவர் “அடியைப் பிடிடா பாரதப் பட்டா” என்று இந்தக் கேசை முதலில் இருந்து ஆரம்பித்து நடத்த வேண்டும், அதுவரை இவர்கள் நீதி மன்றக் காவலில் இருக்காமல், வாரம் ஒருமுறை நீதி மன்றம் வந்து கையெழுத்திட்டால் போதும் என்று சொன்னால் போதும் இவர்கள் வீட்டிற்கு வந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக யாரை எப்படி ‘கவனிப்பது’ என்ற வேலையில் ஈடுபட ஆரம்பித்து விடுவார்கள்.
2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்திருப்பது மிகப் பெரிய ஊழல் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் எம்மைப் பொறுத்த வரையில், இது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது இன்னும் கண்டு பிடிக்கப் படாதது எவ்வளவோ என்ற மலைப்பு எமக்கு இன்னும் தீரவில்லை. இஸ்ரோவின் ஊழல் இதைவிட பல மடங்கு அதிகம் என்றும் அது பலமுறை நமது ‘சுத்தமான’ ப்ரதமருக்கு எடுத்துச் சொல்லப் பட்டும் அவர் அதை நடத்த அனுமதி தந்ததும் பிறகு விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததும் அந்த காண்ட்ராக்ட் நிறுத்தப் பட்டதும் சமீபத்தில் நடந்தது. அலைக்கற்றையில் ராஜா எனது பரிந்துரை எதையும் கேட்கவில்லை நான் நல்லவன் என்று ப்ரதமரே சொல்லிவிட்டார், சரி தகவல் தொடர்பு ப்ரதமரின் கீழ் இல்லாத இலாகா, ராஜாவின் கீழ் இருந்தது ஒப்புக் கொள்கிறோம், இஸ்ரோ ப்ரதமரின் கீழ் இன்றும் இயங்கும் இலாகாவாயிற்றே, அதில் எப்படி இப்படி ஒரு ஊழல், இவர் இவரே சொல்கிற படி நல்லவரென்றால், இவருக்குப் பின் இருந்து இப்படி பல ஊழல்களைச் செய்யும் அந்தக் கெட்டவர் யார்?
இதையெல்லாம், சி.பி.ஐயும் கேட்கப் போவதில்லை, உச்ச நீதி மன்றமும் கேட்கப் போவதில்லை, நம் நாட்டு மக்களும் கேட்கப் போவத்தில்லை.
“ஸாரே ஜஹான் ஸே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா”
மரியம் பிச்சை மரணம்.
தமிழகத்தின் சுற்றுச் சூழல் அமைச்சர் திரு. மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணமடைந்தார். இதில் ஏதோ மர்மமிருக்கிறது என்று ஜெயலலிதா வழக்கை சி.பி.சி.ஐ.டி குழுமத்திற்கு மாற்றியிருக்கிறார். இவர் போட்டியிட்டு தோற்கடித்த கே.என். நேரு திருச்சியில் அநேக இடங்களை கையகப்படுத்தியிருப்பவர், “என்னய்யா, திருச்சி மலைக் கோட்டையைத் தவிர எல்லா இடத்தையும் வாங்கிட்ட போல இருக்கே” என்று தாத்தாவால் பாராட்டப் பட்டவர், இதில் இவருடைய சம்பந்தம் இருக்கலாம் என்று தகவல்கள் கசிகிறது. இந்த விபத்தில் பல நெருடல்கள்:
1. இவருக்கு போலீஸ் பாதுகாப்பில்லை, காரணம் “இவர் வேண்டாம்ன்னு சொல்லிட்டார் அதனால நாங்க போயிட்டோம்” என்று போலீஸ் சால்ஜாப்பு சொல்கிறது. இது தாத்தாவின் கனவில் அண்ணா, பெரியார், காயிதே மில்லத் எல்லோரும் இவரைப் பாராட்டி பேசுவது போல இருக்கிறது.
2. இவருடைய ட்ரைவரிடம் ஒரு செல்ஃபோன் கூட இல்லை
3. இவர்களை இடித்த லாரி (லாரியா, டிப்பர் லாரியா, பெரிய கண்டெயினர் லாரியா என்றும் தெரியவில்லை), எங்கே என்றும் தெரியவில்லை
4. இவருடைய ட்ரைவருக்கு ஒரு கீறல் கூட இல்லாமல் தப்பி விட்டார் ஆனால், இவருக்கு அருகில் இருந்த அமைச்சர் நசுங்கி இறந்து விட்டார்.
எங்கேயோ யாருக்கோ கெட்ட காலம் ஜாம் ஜாம் என்று ஆரம்பித்து விட்டது என்பதற்கு இது அறிகுறி. இதற்கு நடுவில் தி.மு.க. இவருக்காக இரங்கல் கூட்டம் நடத்தி நடந்ததற்கு நாங்கள் பொறுபில்லை என்று காட்ட முயற்சித்திருக்கிறார்கள்.
ஐ.பி.எல் போட்டிகள்:
இந்தப் போட்டிகள் தேவையா, இல்லையா என்பது போய், இனி இந்த போட்டிகளை எப்படி முறைப் படுத்தலாம் என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதை முதலில் அறிமுகம் செய்த கபில் தேவ்வை கட்டம் கட்டி ஒதுக்கியது பி.சி.சி.ஐ என்று நினைவு, அந்த எம் கருத்து தவறானால் தெரியப் படுத்தவும். எமக்கு இந்தப் போட்டிகளின் அவசியம் புரியவில்லை, எனவே இதைப் பற்றி பேசாமலிருப்பதே உசிதம். இந்தப் போட்டிகளில் அரை குறை ஆடைகளில் “சீர் லீடர்” நடனங்கள் வேறு, சமயத்தில் இவர்கள் பரத நாட்டிய உடைகளிலும் வந்து நாட்டியம் ஆடுகிறார்கள் என்று கேள்வி, அது சரி என்றால், குஷ்பு இந்தியப் பெண்களைப் பற்றிப் பேசியதையும், அவர் காலில் செருப்புடன் ஒரு மேடையில் அமர்ந்திருந்ததையும் கேள்வி கேட்க யாருக்கும் அருகதையில்லை.
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்
2 comments:
நல்ல அலசல். நல்ல நடை. பாராட்டுகள் பித்தா, பிறைசூடி.
டாக்டர் கந்தசாமி,
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி.
பித்தன்.
Post a Comment