நேரம்

Monday, May 23, 2011

பித்தனின் கிறுக்கல்கள் – 41

சூரிய அஸ்தமனம்

சமீபத்தில் நமது வலைப்பூவில் வந்த ஒரு பதிவில் சூரிய அஸ்தமனம் என்று ஒரு படம் வெளியிட்டிருந்தார்கள். அது தமிழகத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியிருக்கிறது. தி.மு.க கூட்டணியின் தோல்வி என்பது சமீபத்தில் ஜப்பானைத் தாக்கிய சுனாமியாக வந்து தாக்கி கதறக் கதற அடித்திருக்கிறது.

தோல்விக்கு பிறகு தி.மு.க விலிருந்து எதிர் அணிக்கு பறக்க இருக்கும் வல்லூறுகளை என்ன செய்வது என்று தெரியவில்லை, மகளை எப்படி காப்பாற்றப் போகிறோம் என்று, ஜால்ரா அடிக்கும் யாரும் கணிக்கக்கூட முடியவில்லை, தமிழகத்தில் நாதி இல்லாமல், மத்தியில் காங்கிரஸை முறைத்துக் கொள்ளவும் பயமாக இருக்கிறது, ஜெ எந்த கூட்டில் கை வைத்து எப்படி இவரது ஓட்டை விழுந்த ராஜாங்கத்தை முற்றும் சிதைக்கப் போகிறார் என்று கலக்கமாக இருக்கிறது. மனைவி, துணைவி, அது, இது என்று போகிற போக்கில சேர்த்துக் கொண்ட பலதும் சேர்ந்து இந்தத் தள்ளாத வயதில் தன்னை தாளிக்க ஆரம்பித்திருப்பதை தடுக்கவும் முடியவில்லை, வளர்த்து விட்ட மாறன் சகோதர பேரன்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்றும் தெரியவில்லை. தயாநிதியும் 2ஜியில் கைதாக வாய்ப்பிருப்பதாக செய்திகள் கசிகின்ற அதே நேரம், அவர் எப்போது எதை எவரிடம் சொல்லி யாருக்கு என்ன ஆபத்து வரப்போகிறதோ என்ற மனக் கவலையை சொல்லியழ மூளை இல்லாத உடன்பிறப்பு எதுவும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை.

பாவம், தாத்தாவின் நிலைமை. இதற்குப் பிறகும் திருந்துவதாக இல்லாமல், த்ராபையான ஒரு கடிதத்தை இன்று ஒரு பெரிய கட்டுரையாக எழுதி வழக்கத்துக்கும் மிக அதிகமாக உளறியிருக்கிறார். உடன்பிறப்பிற்கு கடிதம் எழுதி அதை அவர்கள் நம்புவார்கள் என்று இவர் நம்புவது இவருடைய இஷ்டம். ஆனால், அவர்கள் நம்பினால் இவரும் இவருடைய கழிசடை கூட்டங்களும் செய்த கொள்ளையில் இருந்து இவர்களை நீதி மன்றம் விடுதலை செய்து வெளியில் விட்டுவிடும் என்று நினைத்து எழுதினாரோ, அல்லது இதை யாராவது மொழி பெயர்த்து காங்கிரஸ் தலைமைக்கு சொல்லி அவர்கள் ஏதாவது செய்வார்கள் என்று எழுதினாரோ தெரியவில்லை.

இவ்வளவு உளறியவருக்கு முதலில் 2 வருடங்களுக்கு முன்பு இவருடைய பேரன்களோடு நடந்த மோதல் முடிவுக்கு வந்து “கண்கள் பனித்தது, இதயம் இனித்தது” டைலாக் சொன்ன கையோடு 2G பற்றி ஒரு பத்திரிகைக்காரர் கேட்டதற்கு “அது முடிந்து போன விஷயம்” என்று தைரியமாக ஒரு உச்சநீதி மன்ற நீதிபதி போல தீர்ப்பு சொல்லி முழு பூசணிக்காயை பானைச் சோற்றில் இல்லை, ஒரு சோற்றுப் பருக்கையில் மறைக்க முயற்சித்ததை சாமர்த்தியமாக மறந்து விட்டார், மக்களும் சரி, கோர்ட்டும் சரி மறக்கவில்லை என்பது தெரியும் போது தடுமாறுகிறார்.

சமீபத்தில் ராஜா கைதான போது, ராஜா தலித் அதனால் ஆரியர்களும் பலரும் சேர்ந்து அவரை அழிக்க முயலுகிறார்கள் என்று சொன்ன டைலாக் மறந்து போன கையோடு, கனிமொழியைக் காப்பாற்ற “எல்லா தவறுகளையும் செய்தது ராசா தான்” என்று ராம்ஜெத்மலானியை வைத்து சொல்லச் செய்ததையும் மறந்து போய்விட்டார்.

ராஜா செய்த செயலால்தான் தமிழகத்தில் அனைவருக்கும் குறைந்த செலவில் செல் பேசியில் பேச வாய்ப்பு கிட்டியிருக்கிறது என்று இவரும் இவரது மகன் ஸ்டாலின் மற்றும் பலரும் உளறியிருந்தது மறந்து போய் “எல்லா தவறும் செய்தது ராசாதான்” என்று இப்போது சொல்ல முயலும் போது அன்று தான் சொன்னதுதான் தவறு என்று இன்றும் புரிந்து கொள்ளாமல், தான் சொல்வதையெல்லாம் கேட்க மூளையில்லாத உடன்பிறப்புகள் இருக்கிறது என்று எந்த தைரியத்தில் நம்பிக்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.

இவர் சிறைச்சாலையில் மகளையும், மகளோடு சரத்குமார் மற்றும் ராசாவைச் சந்திக்க நாளை டெல்லி பயணமாகிறார். அவர்களை சிறையில் சந்திப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் நீதி மன்றத்திலும் கொஞ்சிக் குலாவி அது நீதிபதிக்கு உறுத்தி “சரி சரி இவரையும் சக்கர நாற்காலியோடு உருட்டிக் கொண்டு போய் திஹார் ஜெயில் போடுங்கள், அங்கே கொஞ்சிக் குலாவட்டும்” என்று உத்தரவு பிறப்பித்தால் சூப்பராக இருக்கும்.

ரஜனி

ரஜனிக்கு உடல் நிலை சரியில்லை என்று நாளுக்கு ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. எது எப்படியிருந்தாலும் அவர் சீக்கிரம் குணமடையவும், அதே நேரம் அவருடைய தீவிர ரசிகர்கள் கழக உடன் பிறப்புகள் போல பைத்தியக்காரத்தனமாக தற்கொலை என்ற முடிவிலிருந்து தள்ளி நிற்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

சிறந்த நடிகர் தனுஷ்

ஆடுகளம் என்றத் திரைப்படத்திற்கு தனுஷுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. இவருக்கு இது அதிகம், இது ரஜனிக்கு சென்றிருக்க வேண்டிய விருது என்றெல்லாம் பலர் கூச்சலிட ஆரம்பித்திருக்கும் வேளையில், நாம் மறந்து விட்ட ஒரு விஷயத்தை ஞாபகப் படுத்த விரும்புகிறேன். ரஜனியின் எந்திரன் படம் மிக மிக அதிக சிரத்தையோடு அவர் நடித்த ஒரு படம் அதில் அவருடைய நடிப்பு என்பது அந்த சிட்டி ரோபோ ஒரு வில்லனாக ஆனபிறகு அங்கங்கே பல இடங்களில் தெரிகிறது, ஆடுகளம் (இன்னமும் முழுவதும் பார்க்கவில்லை ஒரு 30 நிமிட படம் பார்க்கவேண்டியிருக்கிறது) அப்படி இல்லை, ஒரு பழைய லுங்கி, சட்டை, சண்டைச் சேவல், ஓட்டை சைக்கிள், கேவலமான தாடி, ஒரு சின்ன ஓட்டு வீடு என்று எந்த ஆரவாரமும் இல்லாமல் இருக்கும் ஒரு படம். இதில் படத்தை நகர்த்திக் கொண்டு செல்வது தனுஷ், கதை, திரைக்கதை, இயக்குனர், இசை மட்டுமே. மேலும் மறுபடி மறுபடி சிவாஜிக்கு தரப் படாத விருது என்பதால், அதை யாருக்கும் தரக்கூடாது என்ற வாதமும் ஏற்க்கக்கூடியதில்லை. அப்படிப் பார்த்தால், சுஹாசினி என்ற சராசரிக்கும் கீழான நடிப்பாற்றல் உள்ள நடிகைக்கு எப்படி கொடுத்தார்கள் என்று இன்றும் என்னால் வாதிடமுடியும்.

புத்தக விமர்சனம்

வின்ஸ் ஃப்ளின் எழுதிய அமெரிக்கன் அஸாஸின். இவர் எழுத்து அமெரிக்காவில் மிகப் ப்ரசித்தம் என்று சமீபத்தில் ஒருவர் எனக்கு அறிமுகம் செய்து வைக்க, இந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.

கதை சி.ஐ.ஏ.யின் சார்பில் தீவிரவாதத்தையும், தீவிர வாதிகளையும் அழிக்க இந்த கதையின் நாயகன் மிட்ச் ராப் போன்ற பலரை தயார் செய்வதையும், அவர்களின் பயிற்சி, அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை, அவர்களின் பயிற்ச்சியாளரின் திறமை போன்ற பலதை நமக்கு நம் கண் முன்னே கொண்டு வந்து காட்ட முயற்சிக்கிறார்

நல்ல நடை, நல்ல கதையமைப்பு எல்லாம் இருந்தும் ராஜேஷ் குமாரின் கதையைப் படிப்பது போல ஒரு உணர்வு எனக்கு தோன்றுவதை மாற்ற முடியவில்லை.

திரைப் பட விமர்சனம்.

மெக்கானிக்

லாஜிக் என்ற ஒன்றைப் பற்றிக் கவலைப் படாவிட்டால் இந்தப் படத்தை கண்டிப்பாக ரசிக்கலாம். குறிப்பாக இதன் கதாநாயகன் ஜேசன் ஸ்டதம் (ட்ரான்ஸ்போர்டர் புகழ்) வழக்கம் போல் அலட்டிக் கொள்ளாமல் நடிக்கிறார்.

விருவிருப்புக்கு குறைவில்லாத படம். இவருடன் ஹாஸ்டேஜ் என்ற ப்ரூஸ் வில்லீஸின் படத்தில் வில்லனாக வந்து கலக்கிய பென் ஃபாஸ்டர் மற்றும் டொனால்ட் சுத்தர்லாண்ட் நடித்திருக்கிறார்கள். குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமில்லை.

லேயர் கேக்

ஜேம்ஸ்பாண்டாக நடிக்கும் டானியல் க்ரெய்க் நடிக்கும் ஒரு அருமையான படம். பலப் பல முடிச்சுகளை போட்டு அதையெல்லாம் கதாநாயகனான டானியல் முறியடிக்கிறாராரா இல்லையா என்று நம்மை சீட்டின் முனைக்கு நகர்த்தி தள்ளாட வைத்திருக்கும் ஒரு படம். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். கண்டிப்பாக குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமில்லை.

பயணம்

ப்ரகாஷ்ராஜ் தயாரிப்பில், ராதா மோகனின் இயக்கத்தில் நாகார்ஜுன் நடித்து வெளிவந்துள்ள படம். கதை பி.ஜே.பி ஆட்சிக் காலத்தில் நடந்த காண்டஹார் விமானக் கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்டுள்ள அருமையான திரைப்படம். நகைச்சுவைக்கும் குறைவில்லாமல் மிக மிக நன்றாக எடுக்கப் பட்டுள்ள ஒரு படம். பல நல்ல புது நகைச்சுவை நடிகர்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் அதே தருணத்தில் கதையின் போக்கு, விரு விருப்பு குறையாமல் வைத்திருக்கும் அந்தத் திறமை ராதாமோகனிடம் தெரிகிறது. குடும்பத்துடன் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கப் படவேண்டிய படம்.

யுத்தம் செய்

வழக்கம் போல அசட்டுச் சிரிப்புடன் வளைய வரும் சேரனைப் பார்த்து பார்த்து நொந்தவர்களுக்கு வித்தியாசமான ஒரு சேரனை நமக்கு அறிமுகம் செய்கிறார் மிஷ்கின். முதல் காட்சியில் ஆட்டோவில் தடுமாறி நிற்கும் ஒரு பெண்ணை பார்த்து அவளுக்கு உதவச் செல்லும் ஒரு பெண், அவளைத் தெறித்துப் பார்க்கும் ஆட்டோ ட்ரைவர் என்று ஆரம்பிக்கும் கதையில் தொய்வு என்று தேடினால்தான் கிடைக்கிறது. ஒய்.ஜி. மகேந்திரன் அவருடைய மனைவியாக வரும் லஷ்மி ராமகிருஷ்ணன், பிணவறையில் அடோப்ஸி செய்யும் டாக்டர் ஜுடாஸாக வரும் ஜெயப்ரகாஷ் என்று அனைவரும் கலக்குகிறார்கள். சில சில இடங்களில் திரைக்கதை (கதையும் கூட) தொய்கிறது, அதை விளக்கினால், கதையை முழுவதும் சொன்னது போல ஆகிவிடும். கண்டிப்பாக குழந்தைகளைத் தவிர்த்து விட்டு பார்ப்பது உத்தமம்.

3 இடியட்ஸ்

பல முறை பலரும் சொல்லியும் இந்தப் படத்தை இதுவரை பார்க்காமல், எனது நண்பன் சமீபத்தில் பார்த்து விட்டு ரொம்ப சிலாகித்து பேசி என்னைப் பார்க்கத் தூண்டியதனால் பார்த்தேன். இதை தமிழில் சங்கர் இயக்கி விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் மூவரும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அது எப்படி இருக்குமோ தெரியாது ஆனால், ஆமீர்கானையும், மாதவனையும், ஷர்மான் ஜோஷியையும் தாண்டி தமிழில் இம் மூவரும் நடிப்பில் மிஞ்சுவது ரொம்ப கஷ்டம். பொமன் இரானியின் நடிப்புக்கு இணை அவரேதான். படத்தில் தேவையில்லாத ஒரு பாத்திரம் என்றால் அது பொமன் இரானியின் இரண்டாவது மகள் பியாவாக வரும் கரீனா கபூர் தான். அதை கண்டிப்பாக மறந்து விட்டு பார்க்கலாம்.

கதை என்ன, காட்சி என்ன என்று கேட்காமல் இந்தப் படத்தை கண்டிப்பாக குடுபத்தோடு பல முறை பார்க்க்க் கூடிய ஒரு படம்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

1 comments:

said...

ஜெ முதலில் கை வைப்பது மதுரைக்கூட்டில்தான். டெல்லியில் நடப்பதெல்லாம் சொந்த செலவில் சூன்யம். பார்ப்போம் எப்படி போகிறது என்று. அடுத்ததாக தயாநிதி மற்றும் மூன்று அமைச்சர்களாம். பின்னே - கொஞ்ச நஞ்சமாகவா கொள்ளையடித்தார்கள். ஆயிரம் கோடி என்றால் சும்மாவா... யாரும் இதுக்காக தண்டனையும் அனுபவிக்கப் போவது இல்லை, ஒரு நயா பைசாவும் திரும்ப வரப்போவதில்லை.

த்ரீ இடியட்ஸ் நான் குடும்பத்துடன் உள்ளூர் தியேட்டரில் கண்டு களித்த படம். என் பையன்களுக்கும் ரொம்ப பிடித்த படம். இன்றும் அந்தப் படத்தின் டயலாக்குகளையும் ஜோக்குகளையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தைப் போல கல்லூரி வாழ்க்கையை வேறு எந்த படத்திலும் பார்த்ததில்லை. எனக்குப் பிடித்த வரிகள். கூட சுற்றும் நண்பன் பெயிலானால் நமக்கு சோகமாக இருக்கும். ஆனால் அதைவிட சோகம் அவன் நம்மைவிட அதிக மார்க்கு வாங்கினால்... :-)

நீர் என்ன விஷயம் தெரியாத ஆளாயிருக்கிறீர். சும்மா மெக்கானிக்கல் வேலை மட்டும் காமித்தால், நீரும் நானும்(?)தான் பார்க்கவேண்டும். அனைவரும் பார்ப்பதற்கு கொஞ்சம் ரிம்ஜிம் வேண்டாமா? :-)