நேரம்

Friday, October 01, 2010

பித்தனின் கிறுக்கல்கள் – 39

சாமியார் உஷார்:
சில காலங்களுக்கு முன்பு செல்வம் சித்தர் என்ற டுபாக்கூர் சாமியாரைப் பற்றி கிறுக்கியது நினைவிருக்கலாம்
சமீபத்தில்
இவரைப் பற்றி எனது நண்பன் சொல்லி இவர் மீண்டும் வெளியே தலைகாட்ட ஆரம்பித்து விட்டாரே இப்போ என்ன செய்வாய் என்று கிண்டலடிக்க, இந்தியாவை விட்டு இங்கு புலம் பெயர்ந்து நான்கு கால் ப்ராணியை விட கேவலமாக நடத்தப் பட்டும் (வீட்டில் இல்லை, அலுவலகத்தில்) இங்கு விடாப்பிடியாக வாழும் எம்மைப் பார்த்து இப்படி சொல்லிவிட்டானே என்று கவலைப் படலாமா என்று யோசிக்கலாமா என்று பூவா தலையா போட்டுப் பார்க்கலாம் என்று நினைக்கலாம் என்று இருக்கும் போது, கை வசம் ஒரு டாலர் செப்புக் காசு (அது செப்பா இல்லை வேறு ஏதாவதா, நாகு பதில் ப்ளீஸ்) இல்லாததால் தள்ளிப் போட்டு விட்டேன். அப்பா! எப்படியெல்லாம் ஜல்லியடிக்க வேண்டியிருக்கிறது.

சரி மறுபடியும் டுபாக்கூர் சாமியார் பற்றி, இவர் வேறு பத்திரிகை துவக்கி மீண்டும் கை தூக்கியபடி நான் சாமியார் இல்லை ஒரு சித்தர், அதர்வண வேதம் பற்றி உங்களுக்கு சொல்ல என்னை விட்டால் யாரும் இல்லை, என்ற ரேஞ்சில் கதைவிட்டிருக்கிறார். இதை என் நண்பன் சமீபத்தில் எனக்கு அனுப்பி முடிந்தால் மீண்டும் எழுது என்று பணித்திருக்கிறான். சித்தி என்ற பத்திரிகையை விட்டு விட்டு இப்போது கர்மா என்ற பத்திரிகையை நட்த்தி வருகிறார், இப்போது இவர் இருக்கும் இடம் ஓஹாயோ என்றிருக்கிறது. இங்கும் ஒரு கோவிலை பிடித்து (பிடித்தோ அல்லது கையகப் படுத்தியோ) அதிலிருந்து இயங்குவதாக சொல்கிறது இந்தப் பத்திரிகை. இதில் ஒரு கட்டுரை அது இவர் முன்பு சார்ந்திருந்த (இதை தானே கட்டி மக்களுக்கு அர்பணித்ததாக இவரே உரையாற்றி அது யூ ட்யூபில் இருக்கிறாது) அட்லாண்டா கோவில் மீதும் மற்றோரு நிருவனத்தின் மீதும் இவர் ஒரு மானநஷ்ட வழக்கு தொடர்ந்து, அதன் நிர்வாகிகளைப் பற்றி தாறுமாறாக விமர்சித்து அதை ஒருவர் கோயம்புத்தூரிலிருந்து எழுதுவதாக காட்டி வெளியிட்டிருக்கிறார்கள். அதைப் படித்த போது எப்படி ஒரு தரமற்ற முறையில் எழுதப் பட்டிருக்கும் கட்டுரையை தனது பத்திரிகையில் வெளியிட்டு தான் ஒரு மகான் என்றும், அகத்திய சித்தர் பீடம் என்று உளற முடிகிறது. நம்மூர் நித்திக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. இதில் மிகப் பெரிய ஜோக் என்னவெனில், இந்த பத்திரிகையின் கடைசி பக்கத்தில் வந்திருக்கும் ஒரு தகவல்: நீங்கள் ஒரு இந்து கோவிலை கட்டி, நடத்த வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள் இந்த டுபாக்கூர் சாமியாரை. நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவரோ ஒரு இந்து கோவிலை துவக்க வேண்டுமா உடனே தொடர்பு கொள்ளுங்கள், இந்த டுபாக்கூர் சாமியார் ஒரு 51 மில்லியன் அமெரிக்க டாலர் கள் இந்தப் பணிக்கென்று தருவதாக வாக்களித்திருக்கிறார்.
இந்துக் கோவில் கட்டுவது நடத்துவது என்ன ஒரு தொழிலா, கோவில் என்பது எவ்வளவு உன்னதமான ஒரு செயல அதை கழிசடையான இவர்கள் இப்படி கீழ்கண்ட முறையில் விளம்பரம் செய்திருக்கிறார்கள் – Open your own Shiva Vishnu Hindu Temple - We will help you open, run and operate the wonderful Hindu temple.
சிவன்
சொத்து குல நாசம் என்பார்கள். இவரிடம் எப்படி 51 மில்லியன் டாலர்கள் வந்த்து என்று ஒரு பொதுநல வழக்குத் தொடரலாமா?
அமெரிக்க
அரசாங்கத்தால் தேடப்பட்ட குற்றவாளி பட்டியலில் இருக்கும் இவர் எப்படி இப்படி தன்னிச்சையாகச் செயல் பட முடிகிறது என்பது தெரியவில்லை. இதற்கு எப்படி இத்தனை படித்த இந்தியர்கள் ஜால்ரா அடிக்கிறார்கள். அவர்கள் பின்னனியும் சந்தேகத்துக்குரியதுதானா?

எந்திரன்:
தமிழ் சங்கத்தின் ஆதரவுடன் (அவர்களும் இதில் பங்குதாரர் என்று கேள்வி) ரிச்மண்டில் வெளியிடுகிறார்கள். அதன் விமர்சனம் படம் பார்த்த பிறகு (பார்த்தால்) தெரிவிக்கிறேன்.

இந்தப் படத்திற்கு கிட்டத்தட்ட 183 கோடி ரூபாய் செலவு என்று ஒரு வதந்தி. அதாவது சுமார் 45 மில்லியன் டாலர் செலவு. இது இந்தியப் படத்திற்கு மிக மிக அதிகம் என்று சொல்லப் படுகிறது. மணிரத்தினத்தின் ராவண் படம் ஏறக்குறைய 150 கோடி என்றும் ஒரு வதந்தி. இப்படி அதிக செலவில் எடுக்கப் படும் படங்களினால் என்ன பலன் என்று ஒரு பட்டி மன்றம நடத்தும் அளவிற்கு எனக்கும் என் நண்பர்களுக்கும் ஒரு விவாதம் கடந்தவாரம் நடந்தது.

கருத்து 1: பெருவாரியான கருத்து, இது தமிழ்த் திரைப்பட உலகத்திற்கு மிக நல்லது.
வழக்கம் போல நான் இந்தக் கருத்திலிருந்து மாறுபடுகிறேன். இதனால் சில குட்டிப் பணக்காரர்கள் பெரிய பணக்காரர்கள் வரிசையில் சேரப் போகிறார்கள். அவ்வளவுதான், அதைத் தாண்டி எந்த பலனும் இல்லை. சன் டீவி தங்கள் வசமுள்ள ஊடகங்களின் துணையாலும், தங்களின் வியாபாரத் திறமையாலும் இந்தப் படத்தை வைத்து 8 முதல் 10 மடங்கு அதிக லாபம் பார்க்கப் போகிறார்கள். அது அவர்களுக்கு கலைஞருக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்க உதவப் போகிறது.
கருத்து
2
: இந்தப் படத்தின் மூலம் பல விநியோகஸ்தர்கள் பணக்காரர்களாகி அவர்கள் அதிக அளவில் படங்களை வாங்கி வெளியிடுவார்கள்:
இது கண்டிப்பாக ஒரு ஊகம்தான். திரைப்பட விநியோகம் என்பது ஒரு சூதாட்டம் போல. சூதாட்டத்தில் ஜெயிப்பவன், வெளியே மழை பெய்கிறதா என்று பார்க்கிறேன், எச்சில் துப்ப வேண்டும் என்று சொல்லி வெளியே ஓடி விடுவான் ஆனால் தோற்பவன் மட்டும்தான் விட்டதைப் பிடிக்கிறேன் என்று சொல்லி வெறும விட்டத்தைப் பார்த்தபடி இருப்பான் என்று ஒரு முறை சுகி சிவம் அவர்களின் சொற்போழிவில் கேட்ட்து இப்போது நினைவுக்கு வருகிறது. மேலும் ரஜனி, சங்கர், ஏ.ஆர். ரகுமான் கூட்டனியிருப்பதால்தான் படம் எடுக்க யாரும் முன் வருகிறார்கள். ஏன், நம் தமிழ் சங்கம் கூட அப்படி யோசித்துத்தான் இதில் இறங்கியிருப்பார்கள். இது தவறு என்று சொல்லவில்லை, இதுதான் நிஜம், இதை ஏற்க மறுப்பது அவரவர் உரிமை. ஆனால் அவர்களே, ஏன் நம் சங்கம், களவாணி, பசங்க போன்ற தரமான, குறைந்த செலவில் வெளிவந்த படங்களை இங்கு வெளியிடவில்லை என்று யோசித்தால் அதற்கான காரணம் விளங்கி விடும்.
கருத்து
3: இதன் மூலம் ரஜனி ஒரு அருமையான நடிகர் என்பது விளங்கிவிடும்.
இதுவும் தவறான கருத்து, ரஜனி நிஜமாகவே நல்ல கலைஞர்தான். இவருடைய முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை, புவனா ஒரு கேள்விக்குறி, 16 வயதினிலே, எங்கேயோ கேட்ட குரல், மூன்று முகம், மூன்று முடிச்சு, அவர்கள், நெற்றிக் கண், தில்லு முல்லு, ஸ்ரீ ராகவேந்திரர் போன்ற படங்கள் மூலம் தான் ஒரு பண்பட்ட நடிகர் என்பதை அவர் மீண்டும் மீண்டும் நிரூப்பித்தே வந்திருக்கிறார், இருந்தும் இவரை ஒரு ஸ்டார் என்றே பார்க்கிறோம், ஒரு நல்ல நடிகர் என்று பார்ப்பதில்லை.

இராஜராஜச் சோழன் விழா:
இராஜராஜச் சோழன் பதவியேற்று 1000 மவது ஆண்டு விழா கொண்டாடப் பட்டிருக்கிறது. இராஜராஜச் சோழனும் அவருடைய மகனும் சிறந்த வீரனுமான இராஜேந்திரச் சோழனும் ஒரே நேரத்தில் ஆண்டார்கள் என்று சொல்லி தானும் தன் மகனும் ஒரே நேரத்தில் ஆள்வது சரிதான் என்ற ரேஞ்சில் கலைஞர் கதை விட்டிருக்கிறார். இவருடைய பேச்சை பத்திரிகையில் படித்த போது இவருக்கு இருப்பது வாயா அல்லது வண்ணான் ஜாடியா என்ற சந்தேகம் வருகிறதல்லவா, சந்தேகமே வேண்டாம் அது வண்ணான் ஜாடிதான். சோழன் ஆண்டபோது அது மன்னர் ஆட்சி, அங்கு அவரும் அவர் மகனும் ஒரே நேரத்திலோ அல்லது அடுத்தடுத்தோ ஆள்வது சரி. இன்றைய காலம் அப்படி அல்லவே, இது ஒரு மக்களாட்சி, இதில் இவர் என்னவோ ஒரு மன்னர் போல தனது குடும்பத்தினருக்கு இப்படி பதவிக்கு மேல் பதவியாக தருவது என்ன முறையோ தெரியவில்லை. இதைக் கேட்கக்கூடத் தோன்றாமல் எந்திரன் எப்போ வருகிறது என்று தமிழ் கூறும் நல்லுலகம் காத்துகிடக்கிறதே அதை என்ன சொல்வது. இதிலும் ஒரு தமாஷ் செய்திருக்கிறார், செம்மை நெல் என்ற நெல்லை இராஜராஜன் 1000 என்று பெயர்சூட்டி மகிழ்ந்திருக்கிறார். இது போன்ற தமாஷ்களால் இராஜ்ராஜனுக்கு பெருமை என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. ஒரு சித்தர் தன் பாடலில் சொன்னது போல ‘சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவையை அறியுமோ’?

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com

4 comments:

said...

51 மில்லியன் நெசமாவே கொடுத்துருவாரா? நியூசியில் எங்க ஊரில் ஒரு கோவில் கட்டணும்.

said...

இந்தியாவுல கட்ட காசு தருவாங்களா,
டாலருல..

Mukundan said...

பணம் பாதாளம் வரை பாயும்
டாலரில் தருவதானால்
எத்தனை பேர்...
கோவிலும் அரசியலும் வியாபாரம் ஆகிபோச்சு

said...

வியாபார தந்திரன்
மெகா பட்ஜெட் படம்
சாதாரணம் ஆகிவிட்டது
பாமரன் படம் எடுக்க முடியாது
படம் பார்க்க மட்டுமே முடியும்
என்திரன் போல தந்திரம்: எல்லா திரை அரங்குகளையும்
மடக்கி போட்டு
வேறு படமே பார்க்க முடியாது
இந்த யுக்தியை பிற மாநிலங்களும்
பின் பற்ற
இனி மெகா மகம் தான்!