நேரம்

Friday, February 05, 2010

பித்தனின் கிறுக்கல்கள் – 37

ஐயா பிச்சை, அம்மா பிச்சை பிச்சையோ பிச்சை

பிச்சை எடுப்பவர்கள்கூட இப்படி கூழைக்கும்பிடு போடுவார்களா என்பது தெரியவில்லை. பிச்சை எடுப்பவர்களுக்கும் கொஞ்சம் கூச்சம் என்பது இருக்கும் என்று நினைக்கிறேன். பாரதி தனது ஒரு பாடலில்

பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று பாடுகிறார் அதிலிருந்து பிச்சை எடுப்பது எவ்வளவு கேவலமானது என்பது தெரிகிறது. ஆனால் இது தமிழக முதல்வரின் ‘ஜால்ரா’ கவிஞர் வாலிக்கு தெரியாது என்பது ஆச்சர்யமில்லை, ஆனால், கமல், ரஜனி போன்றவர்களுக்கும் தெரியவில்லை என்பது மிகப் பெரிய ஆச்சர்யம். நாளை சென்னையில் நடக்க இருக்கும் ஒரு பெரிய பாராட்டு விழாவில் முதல்வரை பாராட்டி திரையுலகைச் சார்ந்தோர் அடிக்கப் போகும் ஜால்ராவில் வாலியின் பாடலை கமல் ரஜனி இருவரும் மேலும் பல நடிகர்களுடன் சேர்ந்து ஒரு துதிப் பாடலைப் பாட இருக்கிறார்கள். வழக்கம் போல சூப்பர் டூப்பர் துதி வார்த்தைகளோடு இருக்கும் இந்தப் திராபைப் பாடலை எழுதியிருப்பவர் வாலி. ஹூம், இதைப் பார்த்தால், இத்தனை வருடங்கள் எப்படி இவர்களால் தமிழர்களை ஏமாற்ற முடிகிறது என்பது தெரியவில்லை. ஒன்று தமிழர்கள் ஆட்டு மந்தை மாட்டு மந்தை போல ஆகியிருக்க வேண்டும், அல்லது, ‘நரி இடம் போனா என்ன வலம் போனா என்ன, மேல விழுந்து பிடுங்காம இருந்தா சரி’ என்று இருக்கும் மனப்போக்கு வந்திருக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் குத்தாட்டம் போடாத நடிக நடிகர்களுக்கு சங்கத்திலிருந்து மிரட்டல் வேறு வந்திருக்கிறது. இதையெல்லாம் பார்த்தால், முதல்வரின் வேலை ரொம்ப ஜாலி போல இருக்கிறது. எத்தனை ப்ரச்சனை இருந்தாலும் தேவைப்படும் போதெல்லாம், இப்படி ஒரு விழா, அதில் பல கவர்ச்சி நடனங்கள், பல ஆயிரம் பேர்களின் கால விரயம் என்று சற்றும் பொறுப்பில்லாத்தனம் தான் தெரிகிறது.

கந்தபுராணத்தில் முருகன் வயோதிகராக வள்ளியை சுற்றிச் சுற்றி வந்து தொல்லை செய்யும் போது, வள்ளி சொல்கிறார், ‘எத்துக்கு மூத்தீர்’ என்று. என்னைவிட அதிகம் தமிழ் படித்த முதல்வருக்கு இது தெரியவில்லை என்பது ஆச்சர்யமில்லை. முன்பெல்லாம் காவல்துறை யாராவது ரெகார்ட் டான்ஸ் பார்த்தாலோ அதை ஏற்பாடு செய்தாலோ உடனே கைது செய்வார்கள் ‘அக்னி நட்சத்திரம்’ படத்திலும் இது ஒரு காட்சியாக வரும். இன்று அதே செயலை, பல ஆயிரம் வெட்டி தமிழர்கள் சேர்ந்து, தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு செய்து ஓரிரு பெண்களுக்கு பதில் 20-25 நடிகைகள் குறைவான உடையில் குத்தாட்டம் போட்டாலும் போலீஸும் சரி சட்டமும் சரி ஒன்றும் செய்யப் போவதில்லை. மக்களும் மண்புழுக்களைப் போல இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் மீண்டும் மீண்டும் இதே கழிசடை கட்சிக்கு எப்படி ஓட்டு போடுகிறார்கள் என்பது புரியவில்லை.

அபத்த விளம்பரங்கள்

இந்தியத் தொலைக்காட்சிகளில் தாங்க முடியாத அளவுக்கு எரிச்சலூட்டும் விளம்பரங்கள் (இதை சன் டீவியில் புதுப் படம் போடுகிறோம் என்று ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்து இழுத்து அறிவிப்பு செய்வாரே ஒருவர் அவருடைய கட்டைக் குரலில் படியுங்கள்) சமீபத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் பல சானல்கள் (சன், கலைஞர், ஜெயா, பேர் வெச்சது, பேர் வெக்காதது) வருகிறது என்று சொல்ல போய் கொஞ்ச நேரம் பார்த்ததில் பலப் பல அபத்த விளம்பரங்கள் இருப்பது தெரிந்தது.

விவல் சோப்.

இந்த விளம்பரம் அபத்தம் என்பதைத் தாண்டி பெரிய எரிச்சல் என்பது என் கருத்து. முதல் எரிச்சல் இந்த சோப்பு கம்பெனி ஆதரவு தரும் நிகழ்ச்சிகளில் இதனுடைய விளம்பரம் ஒவ்வொரு விளம்பர இடைவெளியிலும் ஒரு முறை வந்தால் பரவாயில்லை 3-4 முறை என்றால் ஒரேயடியாக குமட்டுகிறது. இரண்டாவது எரிச்சல் இதில் நடிகை திரிஷாவும் வந்து இஷ்டம் போல அட்வைஸ்களை அள்ளி விடுகிறார். மூன்றாவது எரிச்சல் இதில் வரும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பட்டப் பெயர். குண்டு மல்லிகா, குட்டை கோமளா, பளிச் பானு, நெட்டை மேகலா, டல் திவ்யா. இதில் பளிச் பானு யாருன்னு தெரிஞ்சிருக்கும் தெரியலைனா நீங்க தமிழ்நாட்டில் ஒரு வருடம் இருக்க வேண்டியது அவசியம். நான்காவது எரிச்சல் இவர்கள் எல்லோரும் மருத்துவம் படிக்கும் மாணவ மாணவிகளாம். குண்டு மல்லிகா என்றவுடன் வகுப்பே கன்னத்தை உப்பிக் கொண்டு, கைகளை விரித்து ஒரு பெரிய யானை நடப்பது போல நடக்கிறார்கள், குட்டை மல்லிகா என்றவுடன் ஒருவர் குனிந்த படி ஒரு பெண்ணிடம் தனது உயரத்தை சரி பார்த்த படி நடக்கிறார், இந்த அபத்தங்களை வெத்து மகளீர் சங்கங்கள் பார்த்துவிட்டு என்ன பண்றாங்கன்னு தெரியலை. இந்த சோப் கம்பெனி மேல ஒரு கேஸ் போட்டா நல்லா காசு பார்க்கலாம். நான் சங்கை ஊதி விட்டேன்.

அலைவ் காபி

ஒரு குடும்பப் பெண்மணி காபி என்று ஒரு டபரா டம்ளரில் சுடு தண்ணீர் தருகிறார் பின்னனியில் ‘சுடு தண்ணி சுடு தண்ணி ஆஹா, பில்டர் காபின்னு சொல்லி குடிப்போம் சுடுதண்ணீ’ என்று பாடல் ஓடுகிறது. அடுத்த காட்சியில் 4-5 மாமிகள் காபி சாப்பிடுவது போல பாவனை காட்ட பின்னனியில் அதே பாட்டு. மூன்றாவது காட்சியில் ஒரு தொலைக்காட்சி நடிகை காபி சாப்பிட உட்கார பின்னனியில் ‘உங்கள் பில்டர் காபியும் சுடுதண்ணிதானா?” என்று ஒருவர் கேட்க நடிகை கேமிராவைப் பார்த்து பேந்த பேந்த விழிக்கிறார். உடன் அலைவ் காபி பவுடரை வாங்கும் படி ஒருவர் சொல்கிறார். அதுவும் ஒரு காபி பவுடர்தான் அது மட்டும் எப்படி ஒசத்தி என்று கேட்பவர்களுக்காக, ‘தனித் தனியாக வறுக்கப் பட்ட காபி கொட்டையிலிருந்து தயாரிக்கப் பட்ட காபி பவுடர்’ என்று ஒருவர் பின்னனியில் விளக்குகிறார். எப்படி ஒவ்வொரு காபி கொட்டையையும் தனித் தனியாக வறுக்க முடியும் என்பது தெரியவில்லை.

இதற்கு மேல் தாங்காமல் நான் விடு ஜூட்.

தமிழ்திரைப்படங்கள்

சமீபத்தில் நான் பார்த்த சில தமிழ்படங்கள் பற்றிய சிறு விமர்சனம்.

வேட்டைக்காரன்

புரட்சித் தலைவர் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படத்தின் பெயரை மட்டும் எடுத்துக் கொண்டு, திருப்பாச்சி படத்தின் இரண்டாம் பாகம் போல இல்லாத ஒரு கதையோடு களம் இறங்கியிருக்கிறார்கள். ஒரு நண்பர் ஒரு ப்ளாகில் ‘விஜய் நீ அடிச்சா கூட தாங்கிடுவோம், நடிச்சாத்தான் தாங்க முடியலை’ என்று எழுதியிருந்ததாகச் சொன்னார். அது 100 சதவீதம் தவறு. விஜய் நடிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை இந்த படத்தில் என்றில்லை இதுவரை எந்தப் படத்திலும் அவர் நடிக்க முயற்சிக்கவே இல்லை. நடிகர் திலகத்துடன் நடித்த படத்திலேயே அப்படித்தான் என்றால் மற்றப் படங்கள் எம்மாத்திரம் . நாயகி அனுஷ்கா, பாவம் ரொம்ப ஏஏஏழை உடையில், நடிப்பில். விஜய் படங்களுக்கு வசனம் எழுதுவது ரொம்ப ஈசி.

“ஏய்’

“ஏய்”

“ஹூம்”

“என்னடா ஹூம்’

“போடா”

“நீ போடா”

“வாடாஆஆஆ வாஆஆஆஆஆஆஆஆஆ”

எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் ஷாயாஜி ஷிண்டே, டெல்லி கணேஷ் மற்றும் சலீம் கவுஸ் மூவரும் ஊறுகாய் போல பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இந்தப் படம் பார்ப்பது கண்டிப்பாக பெரிய தலைவலிதான்.

இதில் விஜய்க்கு சமீபத்தில் டாக்டர் பட்டம் வேறு கொடுத்திருக்கிறார்கள். இவரது அடுத்தப் படம் ‘சுறா’. அதை கேள்விப் பட்டதிலிருந்து மீன்கள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொள்வதாக ஒரு வேடிக்கை மின்னஞ்சல் வளைதளத்தில் உலா வருவது உங்களுக்குத் தெரியுமா?

ஆதவன்

வடிவேலு பின்னி பெடலெடுத்திருக்கும் படம். நமக்கே சற்று சந்தேகம் வருகிறது இது வடிவேலுவின் படமா அல்லது சூர்யாவின் படமா என்று. சூர்யாவும் வேடத்திற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார். நயன்தாரா வழக்கம் போல வெத்து, இவர் என்றில்லை ஏறக்குறைய மற்ற அனைவருமே அப்படித்தான். அடியாளாக வருகிற ஆனந்த் பாபு (மறைந்த நடிகர் நாகேஷின் மகன்), கொஞ்சி கொஞ்சி பேசி அது இந்தக் காலத்திலும் நம் அனைவருக்கும் பிடிக்கும் என்று கழுத்தறுக்கிற சரோஜா தேவி, முன்னால் இயக்குனர் மனோபாலா என்று ஒரு கூட்டமே அலைகிறது. அருமையான நடிகர்கள் ஷாயாஜி ஷிண்டே மற்றும் மறைந்த மலையாள நடிகர் முரளி இருவரையும் ரொம்பவே வீணாக்கியிருக்கிறார்கள். ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.

நாடோடிகள்

சுப்ரமணியபுரம் இயக்குனர் தயாரிப்பாளர் சசிக்குமாரின் படம். என்ன கதை சொல்ல வருகிறார்கள் என்று யாராவது சொன்னால் நன்றாக இருக்கும். இதில் ஒரு குத்தாட்ட பாட்டுக்கு சசிக்குமாரும் ஆடி படுத்தியிருக்கிறார். ஓசியில் கிடைத்தால் பார்க்கலாம்.

சர்வம்

காதலி அருகாமையில் இருந்தால் காதில் இளையராஜவின் பின்னனி இசை கேட்பதாக ஜல்லியடிக்கும் பாத்திரத்தில் ஆர்யாவும் அவருடைய காதலியாக த்ரிஷாவும் நடிக்கும் படம். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கும் சமயத்தில் படக்கென்று த்ரிஷா இறந்து விட கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல பல உப கதைகளை உலவ விட்டிருக்கிறார்கள். ஒருமுறை பார்க்கலாம்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

Tuesday, October 13, 2009

பித்தனின் கிறுக்கல்கள் – 36

பித்தனின் கிறுக்கல்கள் 36

நோபல் பரிசு

சமீபத்தில் உலக சமாதான நோபல் பரிசு வழங்கியதில் என்ன லாஜிக்? அவருக்கு அதைப் பெறுவதற்கு தகுதி உண்டா? அவர் என்ன சாதித்து அதைப் பெற்றார்? என்றெல்லாம் கவைக்குதவாத கேள்விகளைக் கேட்டு எதற்கு எல்லோரும் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. நோபல் பரிசு தனிப்பட்ட ஒரு நிருவனத்தால் தரப்படுவது. சமாதானத்திற்கு எப்போது அவர்கள் அண்ணல் மாகாத்மாவை 5 முறை தகுதியற்றவர் என்று நிராகரிக்க முடிந்ததோ அப்போதே அவர்கள் தரும் விருதைப் பெறாதவர்கள் ஒன்றும் சோடை போனவர்கள் இல்லை என்பது தெளிவாகிறது.

ஆனால் இந்த விருதை சமீபத்தில் அறிவித்த உடன் எனக்கு நினைவுக்கு வந்தது சென்னை அண்ணா மேம்பாலம் அருகே இரு புறமும் இரண்டு குதிரைகளை இருவர் இழுத்து பிடித்தது போல இருக்கும் இரு சிலைகள்தான். அதில் ஒரு வாசகம் எழுதியிருக்கும் தமிழக அரசு குதிரைப் பந்தயத்தை நிறுத்துவதாக முடிவு செய்ததை ஒட்டி இந்த சிலைகளை முதல்வர் ..... திறந்து வைக்கிறார் என்று, அந்த சிலைகளைத் திறந்து வைத்த பிறகு சாதாரணமாக இருந்த குதிரைப் பந்தயம் ஜாம் ஜாம் என்று இன்றளவும் நடந்து வருகிறது. அந்த கேலிக்கூத்துக்கும் இதற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.

இந்த பரிசு அறிவிப்பு தவறு என்றால், அண்ணாத்துரை என்ற ஒரு 3ம் தர பேச்சாளர் எப்படி கழிசடை கழகங்களால் பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்பட்டாரே அது சரியா? சாதாரண கல்லூரி ஆசிரியர் அன்பழகன் எப்படி பேராசிரியர் ஆனாரே அது சரியா? இந்தியப் படங்களில் மட்டுமே நடிக்கும் கமலஹாசன் உலகநாயகன் என்று பட்டம் பெற்றாரே அது சரியா? விரல் சொடுக்கும் சிம்பு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று சின்னபுள்ளத் தனமா ஆனாரே அது சரியா?, தமிழில் காமத்துப் பாலை மட்டும் கரைத்துக் குடித்த கருணாநிதி முத்தமிழ் வித்தகராக ஆனாரே அது சரியா? நடிப்பு என்றால் சிவாஜி, சிவாஜி என்றால் நடிப்பு என்று இருந்தாலும் அவருக்கு இந்தியாவிலேயே விருது தர மனமில்லாத கேடு கெட்ட அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக ரிக்ஸாகாரன் என்ற திராபைபடத்தில் மகா திராபையாக நடித்து சண்டை காட்சிகளில் மட்டும் தூள் கிளப்பிய எம்.ஜி.ஆருக்கு பாரத் பட்டம் கொடுத்தது சரியா?

இதெல்லாம் சரி என்றால் இந்த வருட சமாதான நோபல் விருது இவருக்கு வழங்கப் படுவதும் சரிதான்.

சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்த போது அவர், ஜிம்மி கார்டருக்கு தந்தார்கள், அல் கோருக்கு தந்தார்கள் அதைப் பற்றியும் எழுது என்று கேட்டார், ஜிம்மி கார்ட்டருக்கு நம்மூர் மேல்சபை பதவியை தருவது போல தந்தார்கள், அல் கோருக்கு வழங்கியது அவர் சார்ந்த கட்சி இணைய தளத்தை கண்டு பிடித்ததை நமக்கு தெரிவித்ததற்காக தந்திருக்கலாம் அது இதயம் இனித்தது, கண்கள் பனித்தது டைலாகிற்கு சமம் என்றேன். அப்படியா சரி, யாசர் அராபத் போன்ற தீவிரவாதிக்கு எப்படி தந்தார்கள் என்று கேட்டார் அதற்கு என்னிடத்தில் பதில் இல்லை, உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

இலங்கையில் இந்திய (தமிழக) நாடாளுமன்ற உறுப்பினர்களின் விஜயம்.

இது என்ன் லாஜிக் என்று எனக்குத் தெரியவில்லை. இதனால் இந்திய அரசியலின் லாஜிக் எனக்கு விளங்கி, தமிழக அரசியலின் லாஜிக் மட்டும் விளங்கவில்லை என்று சொல்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். ரெண்டு லாஜிக்கும் குப்பை என்பது எம் கருத்து.

ஒரு புறம் ஆயுத உதவி, மறு புறம் அப்படி எதுவும் இல்லை என்ற டைலாக். மத்திய அரசில் பங்கு வகிக்கும் தமிழக முக்கிய கட்சியான தி.மு.க தனக்கு எதுவும் தெரியாது என்ற ரீதியில் ஒரு டைலாக் ஒரு நாள், 50 வருடங்களாக எனக்கு தூக்கமே இல்லை என்று ஒரு டைலாக் மறுநாள், என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லையே, என்ன செய்வது என்று யாராவது சொல்லுங்களேன் என்று கண்ணீர் மல்க டைலாக் அடுத்தநாள், இவர் ஒரு தமிழினத் தலைவர், இவர் ஒரு முத்தமிழ் காவலர், நவீன சாணக்கியர், பலம் பொருந்திய ராஜ தந்திரி என்று தினமும் இவருக்கு அள்ளக்கைகளின் பாராட்டுகள். சீசீ நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு என்று ஒரு ஏழைக்கவிஞன் பாடியது இவர் போன்றவர்களைப் பற்றித்தான் என்று நீங்கள் நினைத்தால் அது என் தவறல்ல.

இனி தொடங்கிய தலைப்புக்கு வருவோம். இந்த குழு சொல்லி வைத்து சென்றதனால், அங்குள்ள தமிழர் முகாம்களில் பல ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்க முடியும், இருந்தாலும் இலங்கை அரசாங்கம் இவர்கள் வருகையை தடைசெய்யாததே பெரிய விஷயம். அங்கு சென்ற அனைவரின் ஒருங்கிணைந்த ஒரு செய்தியோ அல்லது வெள்ளை அறிக்கையோ வெளிவருவதற்குள், காங்கிரஸ் எம்.பி, சுதர்சன நாச்சியப்பன் முந்திக்கொண்டு வவுனியா ஆட்சியாளரை பாராட்டி ஒரு பெரிய பாராட்டு பத்திரம் வாசித்ததே, ஏதோ ஒன்று சரியில்லையே என்று எண்ணத் தோன்றுகிறது. அங்கு சென்ற திமுக எம்.பிகள் டி.ஆர்.பாலு, கனிமொழி போன்றோர் வழக்கம் போல உளறி விட்டு வந்திருக்கிறார்கள். நல்லவேலை தொல். திருமாவளவன் ஏதும் பேசாமல் வந்திருக்கிறார். அவரை பேச விடவில்லை என்றும், அவர் தமிழர்களை சந்திக்கவும் சிங்கள ராணுவம் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், அது சரியானதே. இல்லையெனில இலங்கை வாழ் தமிழர்களுக்கு பால், தேன் எல்லாம் ஆறாக வரப்போகிறது என்ற அளவில் ஏதாவது டைலாக் விட்டிருப்பார், அது தவிர்க்கப் பட்டது நல்லதே.

எப்படி இவர்களால் அசராமல், சளைக்காமல் உளற முடிகிறது, கேட்பவர்கள் கேணையர்கள் என்று எப்படி இவர்களால் தானாகவே ஊகம் செய்து கொள்ள முடிகிறது என்பது எனக்கு புரியாத ஒன்று.

சீன எதிர்ப்பு.

இந்திய ப்ரதமர் இந்தியாவின் மாநிலமான அருணாச்சல் ப்ரதேசம் சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கான சீனத் தூதரை இன்று அழைத்த வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கண்டனத்தைத் தெரிவித்தது.

இந்தியாவின் ஒரு பாகமான அருணாச்சல் ப்ரதேசத்தின் கலாச்சாரம் சீன கலாச்சாரத்தின் சாயலுடன் இருப்பதால், அது அவர்கள் நாட்டுக்குச் சொந்தம் என்பது சீனாவின் வாதம். எங்கள் வீட்டுக்கு அருகே ஒரு சிறிய வீட்டில் நேபாள நாட்டு கூர்க் குடும்பம் வசித்தார்கள். அவர்கள் இன்றுவரை இரவு காப்பாளர்களாக எங்கள் ஊரில் ரோந்துக்கு செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் பார்ப்பதற்கு சீனர்கள் போலவே இருப்பார்கள், அதனால், நாமும் சீனர்களை நம் ஊருக்கு வந்து இரவு ரோந்துக்கு செல்லும்படி சொல்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் சீனாவுக்கு நமது அருணாச்சல ப்ரதேசத்தின் மீது இருக்கும் உரிமை.

மன்மோகன் சிங்கின் அருணாசசல ப்ரதேச விஜயத்தை கண்டிக்கும் சீனாவின் போக்கு எவ்வளவு அபத்தம் மற்றும் தவறான செயல் என்பதை சீனா கண்டிப்பாக உணரப்போவதில்லை. அவர்களுக்கு அதை உணர்த்த இந்தியாவும் முயலப்போவதில்லை. ஆனால் இந்தியா சீனாவுக்கு இதை உணர்த்த இரண்டு செயல்களைச் செய்தால் போதும், ஒன்று, அவர்கள் நாட்டு தூதுவரை திரும்ப செல்லுமாறு பணித்தல், இரண்டு, அவர்கள் நாட்டு இறக்குமதிகளை காலவரையின்றி நிறுத்தி வைத்தல். அது நமது நாட்டு வியாபாரிகளின் முதலீட்டுக்கு ஆபத்து எனில், இனி சீனாவுடன் செயல்படுத்தப்படும் எந்த முதலீடுகளும் இந்திய அரசாங்கத்தின் பரிசீலனைக்குப் பின்பே நடைபெறவேண்டும், இதை இந்திய அரசாங்கம் வழக்கம் போல கால தாமதமாகச் செய்ய செய்ய, இந்திய வியாபாரிகள் வேறு நாட்டோடு இறக்குமதிக்கு ஏற்பாடுகளைச் செய்வார்கள், அது சீனாவுக்கு சரியான அடியாக இருக்கும்.

சீனாவின் இந்த விதமான அட்டூழிங்களைப் பார்க்கும் போது, இரண்டாம் உலகப்போரில் உலகத்தையே கண்களில் விரல் விட்டு ஆட்டிய ஜப்பானியர்கள் அதற்கு முன் சீனாவின் பெரும் பகுதியை தன் கட்டுக்குள் வைத்திருந்து ஆட்டிப் படைத்ததை மறந்து விட்டார்கள் போலிருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் அமெரிக்கா/இங்கிலாந்துடன் போரில் இறங்கியதை நாமும் மறந்து சீனாவை சற்று கதறடியுங்கள் என்று சற்று சுதந்திரமாக விட்டால் போதும், சீனாவின் அட்டூழியங்களுக்கு ஒரு முடிவு கட்டி விடுவார்கள்.

கடைசியாக தமிழகத்தில் சமீபத்தில் பெரும் சர்ச்சைகுள்ளான ஒரு நடிகையின் வாக்குமூலம் பற்றிய செய்தி ஒரு தினசரி பத்திரிகையில் வந்த சம்பவம் பற்றி என்னை ஒரு நண்பர் எழுதச் சொன்னார், அது பல தமிழ் பத்திரிகைகளில் அடிக்கடி வரும் ஒரு செய்திதான் அது இந்த தினசரியில் வந்ததுதான் தவறே தவிர, செய்தி அல்ல. இதற்கு மேல் இந்த செய்தியை பற்றி விவாதிப்பது என் தரத்துக்கு உகந்தது அல்ல.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

Thursday, May 28, 2009

பித்தனின் கிறுக்கல்கள் – 35

நட்சத்திர வாரம்.
தமிழ்மணத்தின் நட்சத்திர வாரத்தின் முக்கியமான மூன்று விஷயங்கள் ஒன்று நாகு தொடர்ந்து பல விஷயங்களை ஒரே வாரத்தில் எழுதியது, இரண்டு, மீனா சங்கரன் அவர்களின் எழுத்து அறிமுகம். சற்று சிரமப்பட்டால் அவர் சிறந்த நகைச்சுவை எழுத்தாளராக மாறி நம்மையெல்லாம் கலங்கடிக்கக் கூடிய திறமை அவரிடம் இருக்கிறது. மூன்று, நாராயணன் அவர்கள் தமிழில் பின்னூட்டமிட்டது. முதல் முதலாக அவர் என்னுடைய ஒரு பதிவிற்கு ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்டார், இப்போது அழகு தமிழில் பின்னூட்டமிட்டுள்ளார். அவர் எழுதியதும், நாகு எழுதியதும் பல எனக்கு புரியவில்லை எனவே அதைப் பற்றி நான் ஏதும் சொல்லப் போவதில்லை. நாராயண்ன் தான் உட்பட பலருக்கும் ‘தான் ஒரு சுப்புடு” என்ற எண்ணம் இருக்கிறது என்றது சற்று விவாதத்திற்கு ஏதுவானது.

நாகு, நான் மீனா அவர்களின் முதல் படைப்புக்கு பின்னூட்டமிட்டதும் என்னை வர வைத்ததற்காக மீனாவை பாராட்டியது கொஞ்சம் ஓவர். நான் யார் எழுதினாலும் எழுதாவிட்டாலும் தவறாமல் நமது வலைப்பூவை தினமும் தரிசித்து விடுவேன் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். நான் நமது வலைப்பூவில் எழுதாவிட்டாலும் முடிந்த வரை எனது வலைப்பூவில் அவ்வபோது சில பதிவுகளை பதிந்தே வந்திருக்கிறேன்.

இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல்கள்
இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல்கள் முடிந்து முடிவுகள் அமெரிக்க தேர்தல் முடிவைப் போலவே எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது. 60000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல், கொலையாளி என்று தீர்ப்பளிக்கப் பட்ட சிபுசோரன் போன்றோரும், ஊழல் என்றால் உடன் நினைவுக்கு வரும் லாலு போன்றோரை வைத்து ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களோடு வெற்றியைத் தந்து தனது தலையில் தானே சேற்றை வாறி இறைத்துக் கொண்டுள்ளது இந்திய ஜனநாயகம். இதில் சென்னையில் எந்த வேட்பாளருக்கு ஒட்டை பதிவிட்டாலும் அது தி.மு.க வேட்பாளர் பெயரில் லைட் அடிக்கிறது என்ற புகாரைத் தொடர்ந்து 18 இடங்களில் மறு வாக்கு பதிவு நடந்தது. இந்த ஓட்டுப் பதிவு எந்திரங்கள் ஊழல்களுக்கு அப்பாற் பட்டவை என்று சில வருடங்களுக்கு முன்பு தனது தலைமேல் அடித்து சத்தியம் செய்தார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா.

இந்த பதிவு வெளிவரும் நேரம் மு.க. அழகிரி, ராஜா, தயாநிதி மாறன், நெப்போலின (நடிகர்) போன்றோர் மத்திய அமைச்சர்களாகியிருப்பார்கள். இது தேசத்தின் அடுத்த துரதிஷ்டம். இந்த கூட்டத்திற்குத் தலைவர் மன்மோகன் சிங். இதைப் பார்க்கும் போது எனக்கு அலிபாபாவும் 40 திருடர்கள் படம்தான் நினைவுக்கு வருகிறது. ஒரு அலிபாபா அவனுக்கு எதிராக 40 திருடர்களா என்று வியந்தது அந்தக் காலம், இப்போது ஒரு பொது ஜனம் அவனுக்கு எதிராக 59 திருடர்கள் சர்வ சாதாரணமாக அமைச்சர்களாக வலம் வரப் போகிறார்கள்.

இது இப்படி இருக்க தோற்றதற்குக் காரணம் சரியான கூட்டணி இல்லாதது என்பதைப் பற்றி யோசிக்காமல், வருண் காந்தி பேசியதால் ஓட்டு போய் விட்டது, மோடி அடுத்த முறை பிரதமராக வருவார் என்று இப்போதே ஆருடம் சொன்னது என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள் பா.ஜா.காவினர். அதற்கு பதில் இந்துத்வா மீது நம்பிக்கை அதீதமாக இருக்கிறதால் இனி பா.ஜா.கா வினர் அனைவரும் வேட்டி சட்டைக்கு பதில் கோமணம் மட்டும் கட்டிக் கொண்டு கையில் ஒரு கமண்டலம் எடுத்துக் கொண்டு, தலையில் ஒரு மொட்டை, கழுத்தில் ஒரு உருத்திராட்சக் கொட்டை, நெற்றியில் ஒரு பெரிய பட்டை என்று 5 வருடம் பார்லிமெண்ட்டை இடம் வலமாக அங்கப் ப்ரதட்சணம் செய்து வந்தால் ஓட்டு கிடைக்கலாம் என்று யோசிக்கலாம். ஒரு தலைவன் எப்போது தோற்கிறானோ அப்போதுதான் வெற்றியின் மீது அதீத பற்று கொள்கிறான் என்று படித்திருக்கிறேன். அது பொய் என்று பா.ஜா.கா வினர் காட்டியிருக்கின்றனர். 70 களில் இந்திரா காந்தி ஜனதா கட்சியிடம் தோற்ற பிறகு, படிப்படியாக அவர்களைப் பிரித்து சரண்சிங்கை ஆதரிப்பதாகச் சொல்லி ஜனதாவை உடைத்து அவரையும் கவிழ்த்து மீண்டும் ஆட்சிக்கு வந்து இந்தியாவை சாகும் வரையில் ஆண்டது இப்படி காரணம் தேடிப் பிடித்தல்ல. எப்போது ஒருவன் தனது தோல்வியை மற்றவர் மீது சுமத்த முற்படுகிறானோ அப்போதே அவன் மீண்டும் தோற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு விட்டான் என்று அர்த்தம். இதை புரிந்து கொண்டால் பா.ஜா.க சீக்கிரம் ஆட்சிக்கு வந்து விடலாம்.

ஜகஜ்ஜால சாமியார்.
இந்தியாவில் பகுத்தறிவு இல்லை அதனால் போலிச் சாமியார்களிடம் மாட்டிக் கொண்டு இந்த சமுதாயம் கெட்டு குட்டிச் சுவராகியிருக்கிறது என்று இனி யாரும் சொல்ல முடியாது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சமுதாயம் தனது அறிவை மூலதனமாக வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது எனவே இவர்கள் ஒரு போலிச் சாமியாரிடம் (ஆசாமி) ஏமாந்து போயிருக்கிறார்கள் என்பது முதல் வெக்கக் கேடு, இந்த சாமியார் ஒரு டுபாக்கூர் என்பது இவருடைய சொற்பொழிவுகள் சிலவற்றை யூ.ட்யூப்பில் பார்த்தவுடன் தெரிந்து விடுகிறது இருந்தும் இவரால் பல அறிவாளிகளை ஏமாற்ற முடிந்திருக்கிறது என்பது இரண்டாவது வெக்கக்கேடு. இத்தனை செய்தும் இவரால் இன்னமும் அமெரிக்காவில் தலை மறைவாக இருக்க முடிகிறது என்பது மூன்றாவது வெக்கக்கேடு.

“என்னய்யா, சும்மா வழ வழன்னு இழுக்கறே, அந்தச் சாமியார் யாருன்னு சொல்லு” என்று நீங்கள் அடிக்க வருவதற்குள் சொல்லி விடுகிறேன். ஜார்ஜியா மாகாணத்தில் இந்துக் கோவில் ஒன்றை நிர்வகிக்கும் செல்வம் அண்ணாமலை தான் அந்த ஜகஜ்ஜால சாமியார்.
இவரது
கோவிலைப் பற்றிய பத்திரிகை ‘சித்தி’ பிரதியை நமது ரிச்மண்ட் கோவிலில் இருந்து எடுத்து வந்து பார்த்த போது இவரைப் பற்றி தெரியவந்த்தது. அதில் இவர் ஒரு சித்தர் என்பது போல சித்தரிக்கப் பட்டிருக்கிறார்.
சமீபத்தில்
ஜார்ஜியா மாகாணம் வழியாக ரிச்மண்ட் வரும் வாய்ப்பு வந்த போதே இந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும், எப்படி நம்மை போல இருக்கும் ஒருவர் தன்னை ஒரு சித்தர் என்று கூறிக் கொள்கிறார் என்பதை நேரில் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன், அது முடியாமல் போகவே அந்த கோவிலைப் பற்றியும் அதன் நிர்வாகியான இவரைப் பற்றியும் வளைதளத்தில் சோதித்ததில் தன்னைத் தானே சித்தர் என்றும் மருத்துவர் என்றும் அழைத்துக்கொள்ளும் இவரைப் பற்றி பலப் பல மோசடி குற்றச்சாட்டுக்களும், பாலியல் குற்றச்சாட்டுக்களும் இணைய தளத்தில் குவிந்திருக்கின்றன என்பது தெரிய வந்தது.

யூட்யூபில் இருக்கும் இவரது இந்த ஒளிப்பதிவை பார்த்தால் இவர் எப்படிப் பட்டவர் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பேசுகிற 10 நிமிடத்தில் இவர் சொல்ல வருவது ஒன்றும் இல்லை, இதற்கு எதற்காக இவர் இத்தனை பேசுகிறார் என்பது தெரியவில்லை.

இவர் மீது பலரும் சொல்லும் குற்றச்சாட்டு, தான் ஒரு சித்தர் என்று சொல்லி மக்களை ஏமாற்றியது, பலரது க்ரெடிட் கார்டுகளை அவர்கள் அனுமதியின்று உபயோகப் படுத்தியது, பணம், பணம் மற்றும் பணம், மேலும் பணம் என்று அலைந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும் விவரங்கள் வேண்டுவோர் இந்த தொடர்பை க்ளிக்கினால் தெரிந்து கொள்ளலாம். http://www.soulcast.com/post/show/201873/%22Doctor-Commander%22-Selvam-Sitter-is-a-fraud,-felon,-womanizer,-child-molester
இவரைப்
பற்றி அட்லாண்டா மாநகரத்தின் ஃபாக்ஸ் (FOX) தொலைக்காட்சியில் பல பகுதிகளாக ஆராய்ந்திருக்கிறார்கள். அவைகள்: பகுதி – 1 பகுதி – 2 பகுதி – 3 பகுதி – 4 பகுதி - 5
இணைய
தளத்தில் இருக்கும் ஒளிப்பதிவை பார்க்கையில் இவர் கொஞ்சம் நடிகர் விஜயகாந்தின் சாயலில் இருக்கிறார். இவரிடம் ஏமாந்ததாக ஒரு சிலரே வெளிவந்து புகார் சொல்கின்றனர், மற்றவர்கள் ஏன் செய்யவில்லை என்பது தெரியவில்லை. இந்தக் கோயிலில் இருக்கும் திருமணம் மற்றும் பல விசேஷங்களுக்கான மண்டபத்தில் யாரும் எதையும் கொண்டுவந்து உண்ணலாம். இதில் எதையும் என்பது குறிப்பிடத்தக்கது. புலால் உண்ணலாம், மது அருந்தலாம், புகை பிடிக்கலாம். இதை இவரே தொலைக்காட்சி நிருபரிடம் சொல்ல அதை ஒரு மறைவான காமிரா மூலம் பதிந்திருக்கிறார்கள்.
சிவன்
சொத்து குலநாசம் என்பார்கள் பெரியோர். இவர் செய்யும் அத்தனை செயல்களும், ஒரு சிவன் கோவிலில் இருந்து என்பது பெரிய வெக்கக்கேடான விஷயம்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்.

Tuesday, April 14, 2009

பித்தனின் கிறுக்கல்கள் – 34

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல்
இந்தியாவின் 18 வது பிரதமரைத் தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் இன்னும் இரு தினங்களில் துவங்க இருக்கிறது. 6 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் கடைசியாக மே 13ம் தேதி தேர்தலும் அதைத் தொடர்ந்து மே 16ம் தேதி வாக்கு எண்ணும் பணி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வந்தால் அதன் பிரதமராக மன்மோகன் சிங்கும், பா.ஜ.கா ஆட்சிக்கு வந்தால் அத்வானி பிரதமராகவும் இருப்பார்கள் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதில் மன்மோகன் சிங், மறைந்த ராஜீவின் மகன் ராகுல் பிரதமராகும் எல்லாத் தகுதியும் உள்ள ஒருவர் என்று மேடைக்கு மேடை பிதற்றியபடி இருக்கிறார். பிரதமராக என்ன தகுதி என்று யாரும் கேட்க முடியாது, ஒரு இந்திரா, ஒரு தேவ கவுடா, சந்தர்ப்பவாதிகள் சரண்சிங் மற்றும் வி.பி.சிங் பிரதமராகலாம் என்றால், ஊழல்வாதி ப்ரதீபா பாடில் இந்தியாவின் முப்படைத் தளபதியான குடியரசுத் தலைவராகலாம் என்றால், ராகுல் கண்டிப்பாக பிரதமராகலாம். இவருடைய இளமைப் பருவம் (இன்னமும் இவர் இளைஞர்தான்) ஒன்றும் கேட்பதற்கு நல்லதாக இல்லை. அதை நான் சொன்னால் நீ ரொம்ப ஒழுங்கா என்று பலர் கத்தியைத் தீட்டிக் கொண்டு வருவார்கள்.

இவருக்கு போட்டி என்றால் இவருடைய சித்தப்பா மகன் வருண். வருண் பா.ஜ.கா வின் வேட்பாளராக களம் இறங்குகிறார், இவர் ராகுலுக்கு கண்டிப்பாக போட்டியாக இருப்பார் என்பது தெரிந்ததும், இவர் பேசிய பேச்சு மத வெறியைத் தூண்டியுள்ளது என்றும் இவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இவர் பேசியதை முழுவதும் நான் கேட்கவில்லை ஆனால் இவர் பேசியது மத வெறியைத் தூண்டும் ஒன்று என்பதை பல ஊடகங்கள் மூலம் தெரிய வருகிறது. ஆனால் அவர் பேசியது தவறு என்று கூறும் ‘மதசார்பில்லாத’ இந்திய அறிவுஜீவி ஊடகங்கள் வருணை ரோடு ரோலரை விட்டு ஏற்றி கொல்ல வேண்டும் என்று சொன்ன லாலு ப்ரசாத் யாதவை ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருப்பது என்ன லாஜிக். வருண் சொன்னவைகள் சரியா தவறா என்பது ஒரு புறம் இருக்க, அதே நேரம் இந்து மதத்தை நாள் தோறும் இழிவு படுத்தும் தமிழக முதல்வரையும் பலப் பல அராஜகங்கள் செய்யும் அவருடைய குடும்பத்தினரையும் கண்டிக்கக் கூட தயங்கும் இதே ஊடகங்களின் கேவலமான இரட்டை வேடத்தை என்ன சொல்வது. இதன் முத்தாய்ப்பாக, இந்தியாவின் நிழல் பிரதமர் சோனியா இந்தியர்களுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் தீவிரவாதிகளை விட உள்நாட்டிலிருக்கும் மதவாதிகளால்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று வழக்கம் போல் உளறியிருக்கிறார்.

தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியும், தி.மு.க கூட்டணியும் 40க்கு 40 தாங்கள்தான் என்று கற்பனை கண்டு கொண்டிருக்கின்றனர். மரம் வெட்டி பா.ம.க வழக்கம் போல் இந்த முறையும் கூட்டணி மாறியிருக்கிறது. இதற்கு ஒரு சால்ஜாப்பு வேறு சொல்கிறார் அதன் தலைவர். இவரைப் பார்க்கும் போதெல்லாம் நாமெல்லாம், வெக்கம் மானம் ரோஷம் என்ற கவைக்கு உதவாத விஷயங்களைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதில்லை என்பது விளங்குகிறது.

விஜயகாந்த் வழக்கம் போல தனியாக போட்டியிடுகிறார். அவர் அப்படி செய்வதே அதிமுகவின் ஓட்டை பிரிப்பதற்காகத்தான் என்று பரவலான கருத்து வெளியாகியிருக்கிறது.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்.

Friday, March 06, 2009

பித்தனின் கிறுக்கல்கள் – 33

ரிச்மண்ட் தமிழ் சங்கத்தில் பொங்கல்/குடியரசு தின விழா
கடந்த வாரம் ரிச்மண்ட் தமிழ் சங்கத்தில் பொங்கல்/குடியரசு தின விழா விமர்சையாகக் கொண்டாடப் பட்டது. முன்பு சொன்னது போல் அந் நிகழ்ச்சியைப் பற்றி எந்த வித விமர்சனமும் செய்யப் போவதில்லை. அந்த நிகழ்ச்சியை முதலில் இருந்து கடைசி வரை நன்கு ரசித்தேன். பிட்ஸா தீர்ந்து போய் விழா அமைப்பாளர்கள் கையை பிசைந்தது நல்ல ஒரு விஷயம், காரணம் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் எப்போழுதும் நல்லதுதானே.

பிராமணர்களுக்கு 7% இட ஒதுக்கீடு
தமிழகத்தில் இருக்கும் 90 சதவீத பிராமணர்கள் வறுமையால் வாடுகின்றனர். எனவே அவர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்த தென்னிந்திய பிராமணர் சங்க கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அதிமுக எம்எல்ஏ எஸ்வி சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அங்கு அவர் பேசியதில் முக்கிய தகவல்.

1. தமிழகத்தில் பிராமணர்களின் எண்ணிக்கை – 40 லட்சம்
2. அதில் வறுமையில் வாடுவோர் – 90 சதவீதம்.(விழுக்காடு)
3. தமிழகத்தில் தற்போதைய இட ஒதுக்கீடு – 69 சதவீதம்.(விழுக்காடு)
மேலும்
, தமிழகம் சமூக நீதி கண்ட மாநிலம் என்று முதல்வர் கூறியுள்ளார். இன்றைய சூழ்நிலையில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால்தான் சமூக நீதி என்பது முழுமையடையும். பிராமணர்களின் இன்றைய நிலையை ஆய்வு செய்ய உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும். எங்கள் அமைப்பை பொறுத்தவரை மற்றவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதை தவறு என்று கூற வில்லை. எங்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். எனவே தமிழ்நாட்டில் உள்ள பிராமணர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். பிராமணர் சங்க கூட்டமைப்பு அரசியல் சார்ந்த அமைப்பு இல்லை என்று கூறியுள்ளர் எஸ்வி சேகர்.
இதைக்
கண்டித்து, சொல்லக் கூடாத தரத்தில் (3ம் தரம் என்பது தேய்ந்து போய் 4, 5 தர வரிசைக்கு வந்து ரொம்ப நாளாச்சு) பலர் வலைதளத்தில் கண்டித்திருக்கிறார்கள். இவர்கள் கண்டனத்திற்கும் தமிழக முதலவரின் பிராமணர்கள் பற்றிய எல்லா விமர்சனங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’.
பொருளாதார
அடிப்படையில் சில காலங்களுக்கு சலுகைகள் தரப்படுவது என்பது ஒப்புக் கொள்ள முடிகிறது. சமுதாய அடிப்படையில் வாய்ப்புகள் பெற்றவர்களுடைய கொள்ளுப் பேரன் பேத்திகளும் வாய்ப்புகளையும், வசதிகளையும் பெருக்கிக் கொண்டே செல்வது அசல் பிச்சைக்காரத்தனம் அவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும், வழிப்பறிக் கொள்ளைக்காரர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
எஸ்
.வி.சேகரின் பேச்சை கண்டித்து எழுதியிருக்கின்றவர்களின் வார்த்தை ப்ரயோகங்களைப் பார்க்கின்ற போது பல வருடங்களுக்கு முன் பார்த்த ஒரு கேலிச்சித்திரம் நினைவுக்கு வருகிறது. அதில் இரண்டு நாய்கள் சூரியனைப் பார்தத படி நிற்கின்றன. ஒர் நாய் இன்னொன்றிடம் கேட்கிறது ஏன் அந்த வெளிச்சத்தைப் பார்த்து குரைத்தாய் என்று. அதற்கு இரண்டாவது நாய் சொல்கிறது வேறொன்றுமில்லை, நான் குரைத்த சிறிது நேரத்தில் ஏதோ ஒரு முகமூடி போல ஒன்றை வைத்து (மேகம்) தன்னை மறைத்துக் கொள்கிறது, அதிலிருந்தே தெரிகிறதா, அந்த வெளிச்சம் என்னைக் கண்டு பயப்படுகிறது என்று. முன்பு ஒருமுறை சொன்னது போல், பாரதியார் பாடிய நெஞ்சு பொறுக்குதில்லையே பாடலில் ஒரு சரணம்:
கஞ்சி
குடிப்பதற்கிலார், அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்,
பஞ்சமோ பஞ்சமென்றே, நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்து,
துஞ்சி மடிகின்றாரே இவர்
துயர்களைப் தீர்க்கவோர் வழியிலையே


எனக்கு புரியாத ஒரு விஷயம்: இந்த பிராமண எதிர்பாளர்களுக்கு வீட்டில் ஒரு விசேஷம்/பூஜை/ஹோமம் என்றால் அதற்கு தேவை புரோகிதம் தெரிந்த ஒரு பிராமணர். கடை திறப்பா, கடையில் ஆயுத பூஜையா, வீட்டில் ஒரு இறப்பா, அமாவாசை தர்பணமா, கூப்பிடு புரோகிதம் தெரிந்த ஒரு பிராமணரை. உடம்பு சுகமில்லையா, நல்ல முறையில் வைத்தியம் பார்க்க வேண்டுமா, கூப்பிடு மருத்துவம் படித்த பிராமணரை (நரம்பியல் நிபுணர் Dr.B. ராமமூர்த்தி – இவர் மறைந்து விட்டார், அவருடைய மகன் Dr.ரவி, மற்றும் லட்சகணக்கானவர்கள்), வீட்டில் கணக்கு வராமல் மக்காக மகனோ மகளோ இருக்கிறார்களா, அவர்களுக்கு கணிதம் கற்றுத் தர வேண்டுமா, கடையில், பிஸினசில் கணக்கு வழக்கு பார்க்க வேண்டுமா, கூப்பிடு படித்த பிராமணரை(குருமூர்த்தி போல பலர்). அரசியல் தெளிவுடன் நடக்க இருப்பதையும் சொல்ல வேண்டுமா? தேவை ஒரு பிராமணர் (சோ மற்றும் சிலர்).
அட
இவ்வளவு ஏன் சினிமாவில் ஒரு ஹீரோ ஹீரோயினோடு குத்தாட்டம் போட்டு டூயட் பாட வேண்டுமா உடனே அவரைச் சுற்றி ஒரு 10-15 பெண்கள் பிராமண பெண்மணிகள் போல மடிசார் கட்டிக் கோண்டு நடு ரோட்டில் பட்டையை கிளப்ப வேண்டும், ஹீரோ பூணூல் போல ஒன்றை மாட்டிக் கொண்டு, பஞ்சகச்சம் போல ஒன்றை சுற்றிக் கொண்டு ஒரு புத்தம் புது ரன்னிங் ஷூ போட்டுக் கொண்டு பார்க்கவே மீனம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுக்கும் குஷ்ட ரோகி போல இருப்பார் முகத்தில் பெரிய நாமம் போட்டுக் கொண்டு கழுத்தில் ஒரு உருத்திராட்சம் தொங்க, காதில் கொஞ்சம் துளசியும் வைத்துக் கொண்டு அவர் சைவரா அல்லது ஸ்ரீவைஷ்ணவரா என்று தெரியாமல் (அவருக்கும் தெரியாது, அவருக்கு இந்த வேஷம் போட்டவருக்கும் தெரியாது என்பது வேறு விஷயம்) வருவார்கள். இது சாதா தகர ஸ்டார் ஹீரோவிலிருந்து, சூப்பர் ஸ்டார் வரை இருக்கும் ஒரே பார்முலாதான். இப்படி பட்ட சீன் வைக்கப் படும் படங்களின் பூஜையை நடத்துவதும் புரோகிதம் தெரிந்த ஒரு பிராமணர். எப்போது பகுத்தறிவு என்பது பகுத்து அறிதல் எனபதிலிருந்து பிழன்று பிராமண எதிர்ப்பு என்று ஈரோட்டில் ஒருவரால் துவக்கப் பட்டதோ அன்றிலிருந்து இந்த அபத்தங்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
இதைவிட
ஒரு கொடுமை, 80 களின் துவக்கத்தில் எனது வகுப்பில் எனது சக மாணவன் கணிதத்தில் புலி, 100க்கு 140, 150 எல்லாம் எடுத்தவன், கேள்வித்தாளில் சாய்ஸ் தந்திருப்பார்கள் 10 கேள்வியில் 8 கேள்விகளுக்கு பதில் எழுதவும் என்று. அவன் 10 க்கும் பதில் எழுதுவான், ஏழை என்று சொல்ல முடியாது, பரம ஏழை என்றும் சொல்ல முடியாது, வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோதான் ஒரு வாய் சாப்பாடு கிடைக்கும் என்ற நிலையில் இருந்த மகா மகா ஏழை அவன். அவனுடைய தந்தை அருகில் இருந்த கோவிலில் லக்ஷ்மி ந்ருசிம்ஹருக்கு பூஜை செய்யும் தொண்டை செய்து வந்தவர். இவனுக்கு படிக்க ஊக்கத் தொகை (ஸ்காலர்ஷிப்) வருடா வருடம் மறுக்கப் பட்டது. ஆனால், இதே வகுப்பில் படித்த (பள்ளிக்கு வந்து போன) ஒருவன் மற்றும் அவனது அக்கா (அவனை விட 2 வயது மூத்தவர், பெயிலாகி பெயிலாகி எங்களோடு படிக்க வந்தார்) வருடா வருடம் இருவருக்கும் தலா ரூ.500.00 ஊக்கத் தொகை தந்தார்கள். இவர்கள் இருவரும் பள்ளிக்கு வந்து போவது மின்னும் ஒரு பச்சை நிற அம்பாசிடர் வண்டியில். இருவரும் தாழ்த்தப் பட்ட பழங்குடி என்ற சான்றிதழ் வைத்திருந்தார்கள். அவர்கள் தந்தை அரசாங்கத்தில் ஒரு பெரிய உத்யோகத்தில் இருந்தார். இது சமூக அவலம் இல்லை என்றால் எது சமூக அவலம்? அந்த இருவரும் பிறகு 45% பார்டரில் படித்து முடித்து விட்டு நேரடியாக இஞ்ஜினியரிங் காலேஜ் படிக்க போய்விட்டார்கள், 94% எடுத்த என் நண்பன் கணிதம் படித்து விட்டு இன்னமும் ஒரு பள்ளியில் தாற்காலிக கணித ஆசிரியராக இருக்கிறான். சில வருடங்களுக்கு முன்பு பார்த்த போது ஒரு டி.வி.எஸ் 50 வாங்கியிருந்தான், காலையிலும், மாலையிலும் அவன் அப்பா செய்து வந்த கோயில் கைங்கரியம் இவன் செய்கிறான். இதுதான் வாழ்க்கையில் உயர்வு என்றால் என்ன சொல்வது.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்
சமீபத்தில் ப்ரபலமாக பேசப்பட்ட விஷயம் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்கார் வெற்றி. நேரடி ஒலிபரப்பை பார்த்துக் கொண்டிருந்த என்னால் இந்த மகிழ்ச்சியை தாங்க முடியாமல் துள்ளி குதித்ததை எண்ணி எண்ணி மகிழ்கிறேன். இதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. ஒரு தமிழ் நாட்டுக்காரர், ஹிந்தியை வீட்டுக்கு வெளியே எதிர்க்கும் அத்தனை கேடு கெட்ட அரசியல் வாதிகளையும் இவருக்கு ஒரு ஹிந்தி படத்திற்கு அருமையான இசையமைடத்தமைக்காக கிடைத்திருக்கும் முதல் ஆஸ்கார் விருதிற்கும், அதே படத்தில் இவர் எழுதிய ஹிந்தி பாடலுக்காக கிடைத்த இரண்டாவது ஆஸ்கார் விருதிற்கும் வாயார பாராட்ட வைத்திருக்கிறார். இதற்கு இவருக்கு தமிழகத்தில் நடக்க இருக்கும் விழாவிற்கு தலைமை தாங்கப் போவது தமிழர்களை ஹிந்தி படிக்க விடாமல் கடந்த 40 வருடங்களாக ‘கவனமாக’ பார்த்து வரும் கலைஞர்.
ரஹ்மானின்
இசை ஒரு ரகம், ஆனால் எனக்கு அவருடைய இசையில் இருக்கும் ஆரவாரத்தை விட இளையராஜாவின் இசையில் இருக்கும் மென்மையும், விஸ்வநாதன் – ராமமூர்த்தி சேர்ந்திசையில் இருந்த எளிமையும் அதிகம் பிடிக்கும். ரஹ்மானின் பல பாடல்களின் இசை நாடி நரம்புகளை சுண்டி இழுக்கக் கூடியது, உதாரணம் ‘தாள்’ ஹிந்திப் படத்தில் அனைத்துப் பாடல்களும்.

இவருடைய பலவீனம் என்று நான் கருதுவது இசையமைக்க வந்த கொஞ்ச நாட்களிலேயே அவருடைய பழைய பாடல்களின் மெட்டை மீண்டும் மீண்டும் உபயோகப் படுத்துவது. ஆனால் இளையராஜா எப்படி எம்.எஸ்.வி யை மெல்ல முதலிடத்திலிருது நகர்த்தினாரோ, அதை விட 1000 மடங்கு வேகத்தில் இவர் இளையராஜாவை நகர்த்திவிட்டு அங்கு அமர்ந்து விட்டார்.

இன்னும் ஒரு 40-50 வருடங்களுக்கு இவருடைய இசை ஆதிக்கம் திரையுலகத்தில் இருக்கத்தான் போகிறது அதை மறுப்பதற்கில்லை.

துக்ளக்கின் 39ம் ஆண்டு விழா
இந்த வருடமும் சோ அவர்களின் துக்ளக் ஆண்டு விழா ப்ரசங்கம் அனைவரும் எதிர் பார்த்த விதம் கூட்டம் அலைமோத சிறப்பாக நடந்தேறியிருக்கிறது. இவரை பல நேரங்களில் பலருக்கும் பிடிக்காமல் இருந்தாலும், இவரிடம் இருக்கிற நேர்மையை நாட்டுப் பற்றை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டியிருக்கிறது. கலைஞரை எவ்வளவு கடுமையாக விமர்சித்தாலும், அவருடைய உழைப்பை பாராட்டத் தயங்குவதில்லை. ஜெயலலிதாவையோ அல்லது எந்த அரசியல் தலைவரையோ இவர் விமர்சித்தாலும் அவர்களின் நல்ல செயல்களை பாகுபாடின்றி சொல்ல இவர் தயங்குவதே இல்லை.

ஆனால் இவர் விமர்சனங்களை கேட்கக் கேட்க இவர் சொல்வது எதுவும் எந்த தமிழருக்கும் காதில் விழுவதே இல்லையோ என்று என்க்குத் தோன்றுகிறது.

இலங்கைத் தமிழர்களின் அவதி
எனது இந்த பதிவு வெளியாகும் வரை (வெளியாகி பல வருடங்கள் ஆகியும் கூட) இலங்கை வாழ் தமிழர்களின் அவதிகளுக்கு ஒரு முடிவு வருமா என்பது பெரிய கேள்விக்குறிதான்.

தமிழக முதல்வர் தெளிவாக இருக்கிறார், அவர் சார்ந்திருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அடுத்து பதவிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை அதனால் இருக்கிறவரை சுரண்டுவதை விட முடியாது இதில் இலங்கை ப்ரச்சனை அந்தப் ப்ரச்சனை இந்தப் ப்ரச்சனை எதையும் பார்க்க முடியாது என்று. நான் முன்பு ஒரு முறை சொன்னது போல் எல்லா எம்.பி களின் ராஜீனாமாவை இவர் வாங்கி வைத்துக் கொண்டு ஒரு ஸ்டண்ட் அடித்தார், பிறகு ராஜீனாமா செய்து விட்டால் ப்ரச்சனை முடிந்து விடுமா என்றார், பதவியிலிருந்து விலகாதீர்கள் என்று இலங்கையிலிருந்து பல தமிழ் தலைவர்கள் போன் மூலம் இவரிடம் சொன்னதால் இன்னமும் பதவியில் இருக்கிறேன் என்றார், (அப்படி சொன்னவர்கள் யார் என்று பிரபாகரனிடம் போட்டும் கொடுத்து விட்டார், அதில் எத்தனை பேருக்கு பிரபாகரன் வேட்டு வைக்கப் போகிறாரோ தெரியவில்லை) பதவியில் இருப்பதால் தான் இவ்வளவாவது செய்ய முடிகிறது என்றார், எனக்கு தூக்கமே வருவதில்லை என்றார், 50 வருடங்களாக எவ்வளவு செய்திருக்கிறேன் என்று ஒரு பெரிய பட்டியல் படித்தார், அந்த பட்டியலில் எல்லா விஷயங்களும் கடையடைப்பு, கருப்பு துணி காட்டுவதுதான், இவையெல்லாம் செய்தால் இலங்கை தமிழர்களுக்கு நல்ல வாழ்வு கிடைத்து விடுமா? நமது ஊரில் கடையடைப்பு செய்தால் இலங்கைக்கு என்ன, நஷ்டம் நம் ஊர் அரசியல்வாதிக்கா என்றால் அதுவும் இல்லை, நஷ்டம் முழுவதும் சிறு வியாபாரிகளுக்கும், கை வண்டிக்காரர்கள், பொது ஜனம் இவர்களுக்குத்தான். இதற்குப் பிறகும் இவரைப் போன்ற பல அரசியல்வாதிகளும் இப்படி ஸ்டண்ட் அடிப்பது எப்படி என்று புரியவில்லை.

இந்த வேடிக்கையில் தமிழ்த் திரையுலக பிரமுகர்கள் பலரும் சேர்ந்திருக்கிறார்கள். தொப்புள் கொடி உறவுகள் இலங்கையில் தவிக்கின்றன என முதலைக் கண்ணீர் விடுகின்றனர். இதோ இருக்கிற இராமேசுவரத்திற்கு போய் ஒரு பொதுக்கூட்டம் போட்டு விட்டு வந்து விட்டார்கள், இவர்கள் எத்தனை முறை இராமேசுவரத்தில் இருக்கும் அகதிகள் முகாமில் இருக்கும் தமிழர்களுக்கு உதவியிருக்கிறார்கள். ஏன் இராமேசுவரத்தில் இருப்பவர்கள் தொப்புள் கொடி உறவுகள் இல்லையா. போர் நிறுத்தம் வேண்டும் என்பவர்கள் ஏன் புலிகள் அப்பாவி தமிழர்களை கேடயமாக பயன் படுத்துவதை நிறுத்துங்கள் என்று குரல் கொடுப்பதில்லை. பயமா அல்லது பணமா? புலிகளைத் தாக்க வரும் ராணுவம் நியாயம் தர்மம் பார்த்து போர் செய்யவில்லை சரி, புலிகளுக்குத் தெரியுமே நியாயமும், தர்மமும், அவர்கள் அப்பாவித் தமிழர்களை பத்திரமாக அனுப்பி விட்டு போர் செய்யலாமே? ஏன் அவர்கள் பின்னாலிருந்து போர் செய்ய வேண்டும்? ஏன் இலங்கை ராணுவ முகாமில் அகதிகளாகத் தமிழர்கள் இருக்கும் பக்கம் ஒரு 15 வயது பெண் புலி தற்கொலைப் படையாளி வெடி குண்டை வெடித்து பல அப்பாவித் தமிழர்களையும் கொன்று தானும் வெடித்துச் சிதறி இறந்து போனாள்? இதையெல்லாம் கேட்கக் கூடாது கேட்டால் நாம் தமிழ் இனத் துரோகி. அட போங்கப்பா.

இந்த ஜூரம் இப்போது படித்த படிக்காத பல தமிழ்நாட்டு இளைஞர்களையும் ஆட்டிப் படைத்து, அவர்கள் கூட்டம் கூட்டமாக தற்கொலைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இது என்ன காலாச்சாரம், இதை வீரம் என்று எப்படி புகழ்கிறார்கள் என்று தெரியவில்லை. இது தவறு, இதைச் செய்பவர் ஒரு வடிகட்டின கோழை, சமூகத்தில் ஒரு கரும்புள்ளி என்று சொல்ல எந்த அரசியல்வாதிக்கும் தைரியம் இல்லை. எப்படி ரஜனி, விஜய் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் என்பது கேவலமோ, அதைவிட 1000 மடங்கு கேவலம் ஒரு தனிமனிதன் இப்படி தற்கொலை செய்து கொள்வது. இப்படி இறந்த ஒருவருடைய நினைவு விழாவில் (இது இன்னொரு பித்துக்குளித்தனம்) இயக்குனர் சீமான், என்னை பாரதிராஜாவும் பலரும் சேர்ந்து தடுத்து விட்டார்கள் இல்லையென்றால் நானும் இப்படி தீக்குளிக்க முடிவு செய்திருந்தேன் என்று டைலாக் வேறு விட்டிருக்கிறார்.

இலங்கைத் தமிழர்களே, உங்களை வைத்து இப்படி பலர் வியாபாரம் செய்வதை ஏன் நீங்கள் கண்டிப்பதில்லை? தமிழ் தமிழ் என்று ஜல்லியடித்து எப்படி தமிழ் நாட்டை 1967 லிருந்து கழிசடை கழகங்கள் பாழ் படுத்துகின்றன என்று உங்களுக்குத் தெரியும், அவர்கள் இருக்கும் தமிழ் நாட்டையே சரியாக பராமரிக்கத் தெரியாத இவர்களையா நீங்கள் நம்புகிறீர்கள்! எனக்கு பல இலங்கை தமிழர்கள் நல்ல நண்பர்கள் அவர்களின் தொழில் நுட்ப அறிவு வியக்கத்தக்க ஒன்று, அசராத உழைப்பாளிகள், கலைகளில் விற்பன்னர்கள் இப்படிப் பட்ட அருமையான சமூகம் ஒன்று இப்படி அவதியுறுவது மிகுந்த வேதனையைத் தருகிறது. உங்களுக்கு ஒரு நல்ல வாழ்வும் நல்ல வழியையும் எல்லாம் வல்ல இறைவன் கூடிய விரைவில் தரட்டும்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com

Saturday, December 13, 2008

பித்தனின் கிறுக்கல்கள் – 32

இந்தியாவில் பாக் தீவிரவாதிகளின் தாக்குதல்
சமீபகாலத்தில் அதிகம் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம், இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல், இந்திய அரசு நிலை குலைந்தது, மும்பாய் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது, மராத்தியர்களைக் காப்போம் என்ற சிவசேனாத் தலைவர்கள் எங்கே, மும்பாய் போலீஸ் தாக்குதலைக் கண்டு தடுமாறியது இத்யாதி இத்யாதி என்று சொல்லி சொல்லி அனைவரும் ஒரு 10 நாட்களைக் கடத்தி விட்டனர். இந்தியப் பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் அத்வானி எல்லோரும் தீவிரவாதத்தை தடுப்போம், அதை இந்தியா அனுமதிக்காது என்று பேசிவிட்டு போய் விட்டனர். நம் எல்லோருக்கும் பொழுது போகவேண்டாமா இந்தத் தாக்குதல் தொடங்கியதும் குப்பன் சுப்பன், பித்தன், பொடலங்காய், சுண்டைக்காய், வெண்டைக்காய் என பலரும் கருத்து கநதசாமியாகி கருத்து மழையையெல்லாம் தாண்டி கருத்துச் சுனாமியாக வெடித்து விட்டார்கள். இந்த டமாஸ் சமாச்சாரத்தை கிஞ்சித்தும் ரசிக்கத் தெரியாத ‘சோ’ போன்ற பத்தாம் பசலிகள் என்னமோ எழுதியே இந்தியாவையும், இந்திய அரசியல் வாதிகளையும் மாற்றிவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வருவதற்கு சௌகர்யமாக இருக்கட்டும் என்று இரயில் மற்றும் பஸ் விட்டால் மட்டும் போதுமா, அது அவர்கள் சொந்த ஊரிலிருந்து வருவதற்கு சௌகரியமாக இருக்கிறதா, இரயில் பஸ் நிலையங்கள் அவர்கள் வீட்டிற்கு அருகாமையிலா என்றெல்லாம் யோசிக்காமல் இந்திய அரசாங்கம் எப்படி முடிவு எடுக்கலாம், சிலருக்கு கடல்தான் பக்கம், அதனால் கப்பல் போக்குவரத்து ஏற்பாடு செய்ய எப்படி சொல்வது, வெறும வாய்வார்த்தையாகச் சொன்னால் இந்திய அரசாங்கம் கேட்குமா, பார்த்தார்கள், இந்த முறை கடல் வழியாக வந்து தாக்கினால் ஒரு கப்பல் சேவையை அடுத்த மாதம் துவக்கி விட மாட்டார்களா? அப்படி ஏதாவது ஒன்றை இந்திய பித்துக்குளி அரசாங்கம் செய்தாலும் ஆச்சர்யப்ப் படக்கூடாது. எப்படி இப்படி ஒரு பைத்தியக்கார சேவையை துவக்கலாம் என்று யாராவது கேள்வி கேட்டால், கப்பல் சேவையை குஜராத் பக்கம் திருப்பி விட்டு விட்டால் வருகின்ற தீவிரவாதிகளின் தொல்லையை மொத்தமாக குஜராத்திற்கு அனுப்பி மோடி அரசாங்கத்திற்கு பைத்தியம் பிடிக்க வைக்கலாம், அவர் குஜராத்திற்கு இனி வேறு எந்த நல்லதும் செய்ய முடியாமல் போய் அவரது ஆட்சியும் கவிழ்ந்தால் இன்னமும் உத்தமம். அதையும் விட அந்தச் சேவைக்கு அண்ணல் அம்பேத்கார் பெயரை வைத்துவிட்டால் போதும் இந்தியாவே ஜன்னி வந்து ஆடும். இதில் இந்திய மக்கள் எக்கேடு கெட்டால் இவர்களுக்கு என்ன, இவர்கள் ஓட்டு வங்கி (அது என்ன எழவு வங்கியோ) பாதிக்கப் படக்கூடாது. அதுவல்லவோ முக்கியம். இந்தியாவில் மைனாரிடி முஸ்லீம்களின் ஓட்டு இல்லாமல் யாரும் ஜெயிக்க முடியாது என்று எந்த காலத்திலும் நிரூபிக்கப் படவில்லை. அப்படி இருக்க அவர்களுடைய ஓட்டுக்காக ஏன் இந்த அரசியல்வாதிகள் (மோடியைத் தவிர) இப்படி அடித்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

இந்தச் சம்பவத்தில் 6 அமெரிக்கர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் அநியாயமாக உயிரிழந்திருக்கிறார்கள். அது நம்மைப் போல சாதாரணர்களுக்கு தாங்க முடியாத சோகத்தையும் கையாலாகாத இந்திய அரசியல்வாதிகளின் செயலைக் கண்டு அதிர்ச்சியையும் தரும் அதே நேரத்தில் இந்திய அரசியல்வாதிகள் இன்னமும் என்ன செய்து மீதம் இருக்கிற 6 மாத ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று ரூம் போட்டு யோசித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்போதுதான் தீவிரவாதிகள் பயன் படுத்திய செல்போன் சிம் கார்ட் வாங்கிக் கொடுத்தவர், விற்றவர், என்று ரூபாய்க்கு தம்பிடி ப்ரயோசனமில்லாதவர்களைப் பிடித்து நடந்த சோகத்திற்கு முடிவு காணப்படுவது போல் ஒரு முயற்சி நடக்க ஆரம்பித்திருக்கிறது. அதை விடுத்து, உளவுத்துறையினர், அதன் தலைவர்கள், தீவிரவாதிகளில் பலருக்கு உதவிய அரசியல்வாதிகள், அவர்களுடைய உதவியாளர்கள், அரசாங்க அதிகாரிகள், காவல் துறையில் இருக்கும் எட்டப்பன்கள் இவர்களை களையெடுக்க எந்த முயற்சியும் செய்யாமல் இது என்ன நடவடிக்கை என்று தெரியவில்லை. நடந்திருப்பது எல்லை தாண்டிய பயங்கரவாதம், எல்லை மீறல் முயற்சி, நாட்டை தாக்கும் போர் முயற்சி, அதைப் போர்கால விதிகளைக் கொண்டு தீர்க்காமல் வெறும பேசித் தீர்ப்போம் என மீண்டும் இந்த அரசு முயலுமேயானால, அதைவிட ஒரு கேவலம் நமக்கு வேண்டியதில்லை. இப்படி பட்ட அரசாங்கங்கள் இருக்கும் வரை, இந்தியா 2020 ல் என்ன 20020 இல் கூட வல்லரசாக முடியாது.

இந்த தாக்குதலில் சில நன்மைகள் இருப்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. கடந்த முறை நடந்த கார்கில் ஆக்கிரமிப்பு, நாடாளுமன்ற தாக்குதல், மும்பாய் இரயில்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் இந்தியர்கள். இந்த முறை பல வெளிநாட்டினர் உயிரிழந்திருக்கிறார்கள். அமெரிக்கா, பாகிஸ்தான் மீது கொஞ்சம் கோபப்படுவது போல நடிக்கவாவது செய்கிறது, தீவிரவாத தாக்குதல்களை நம்மைப் போல அனுதினமும் அனுபவிக்கும் இஸ்ரேல் இந்தியாவிற்கு உதவ மீண்டும் ஒரு முறை நேசக் கரம் நீட்டியிருக்கிறது, ஓட்டு பொறுக்கிகளின் உதவியினால் அந்த நல்ல முயற்சி மீண்டும் ஒரு முறை தவற விடப்பட்டிருக்கிறது. வெளிநாட்டினர் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் இருந்திருந்தால், இந்தத் தாக்குதலும் இந்தியாவில் நடக்கும் மற்ற தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்பட்டு மறுதினமே மறக்கப் பட்டிருக்கும்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com

பித்தனின் கிறுக்கல்கள் - 31

நம்பியார்

உலகத் தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருந்த ‘வில்லன்களின் வில்லன்’ எம்.என்.நம்பியார் மறைந்து விட்டார். இவர் நடிக்காத 60, 70, 80 களில் வந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நடிகர் திலகமும், மக்கள் திலகமும் நடித்த படங்களில் அவர்களைத் தாண்டி ஒரு நடிகர் ப்ரசித்தி பெறுவது என்பது கிஞ்சித்தும் யோசிக்கக்கூட முடியாத விஷயம். அதை சர்வ சாதாரணமாக செய்து காட்டியவர் இவர். தனக்கென ஒரு தனி பாணி அமைத்து, படத்தில் பல வில்லன்கள் இருந்தாலும், அவர்களிலிருந்து தன்னைத் தனித்து வெளிப் படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்தவர். எம்.ஜி.ஆருடன் இவர் செய்யும் சண்டைக்காட்சிகள் என்னைப் போன்ற பல ரசிகர்களை புலகாங்கிதமடையச் செய்துள்ளது. உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆருடன் இவர் செய்த சீன முறை சுமோ சண்டை இனி மீண்டும் ஒருவர் செய்ய முடியாது என்பது என் கருத்து. என் சிறு வயதில் நான் பார்த்த படத்தில் இவர் சாட்டையால் அடித்ததில் எம்.ஜி.ஆருக்கு வலித்ததோ இல்லையோ எனக்கு வலித்து நான் அழுதது நினைவிருக்கிறது. அசாத்திய வில்லன் நடிப்பு இடையே திடீரென நல்லவனாகவும் நடித்து (ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பின்பகுதி, தூறல் நின்னு போச்சு) நம்மை ஆச்சர்யப் பட வைத்தவர். எம்.ஜி.ஆர் தேர்தலுக்கு ப்ரசாரம் செய்யப் போகும் போது மக்கள் அவரை வழி “மறித்து நல்லா இரு ராசா” என்று வாழ்த்திய அதே நேரம் “இந்த நம்பியார் கிட்ட கொஞ்சம் ஜாக்ரதையா இரு ராசா, கெட்ட பய உன்னைய ஏதும் செய்துரப் போறான்” என்று வாஞ்சையோடு சொன்னது இவருடைய நடிப்புக் கிடைத்த மிகப் பெரிய பரிசு.

ஒரு நல்ல கலைஞன் எப்போது மற்ற கலைஞர்கள் போல நல்ல கதாபாத்திரங்கள் தனக்கு கிடைக்க வில்லையே என்று ஏங்குகிறானோ அப்போதுதான் முழுமையடைகிறான் என்பது என் கருத்து. ரஜனியின் தளபதி படத்தில் அம்ரிஷ் பூரியின் ‘கலிவர்தன்’ கதாபாத்திரம் தனக்கு கிடைக்கவில்லையே என்று சொல்லி அவர் அதன் முத்தாய்ப்பாக எனக்கு தலையில் இப்போது முடியே இல்லை மொட்டை போடும் செலவு கூட இல்லை இருந்தாலும் மணிரத்தினம் என்னை தேர்வு செய்ய வில்லையே என்று வருத்தப் பட்டதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி என்ற இரு இமயங்களோடு நடித்தவருக்கு ரஜனி, மம்முட்டி இரு சிறு மடுக்களோடு நடிப்பதில் பெரிய சவால் இல்லை ஆயின் அந்த சிறிய பாத்திரம் இவரை பாதிக்கிறது என்று சொன்னால் இவருடைய கலையார்வத்தை கண்டு தலை வணங்கத்தான் வேண்டும்.

திரையில் இவர் ஒரு நயவஞ்சகன், பெண் பித்தன், திருடன், ஏமாற்றுப் பேர்வழி, கொள்ளைக்காரன், கொடுங்கோலன், ராஜத்துரோகி, பணத்தாசை பிடித்த பிசாசு, இரக்கமில்லாதவன். ஆனால் நிஜ வாழ்வில் இவர் ஒரு இனிமையான மனிதர், அல்லும் பகலும் ஐயப்பனின் நாமத்தை ஜெபித்த, 60-65 வருடங்களுக்கு மேலாக சபரிமலை (வருடத்திற்கு 4-5 முறை) சென்று வந்த பக்தர். புகை, மது, மாது என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லாத தூய்மையானவர். நடிப்பது, எனது தவம், வாழ்க்கை, எனக்கு ஆண்டவன் இட்ட பிச்சை என்று வாழ்ந்த உத்தமர்.

1991-ல் நான் முதன் முதலாக சபரிமலைக்குச் சென்றபோது 18 படியை தழுவி, ஐய்யனை தரிசித்து விட்டு எங்கள் குடிலுக்கு சென்று ஓரிரு மணி நேரத்திற்குப் பிறகு வெளியில் ஒரே பரபரப்பு, என்ன என்று கேட்டதற்கு, குருசாமி வந்துவிட்டார் என்றார்கள். எனக்கு ஒரே திகைப்பு, எங்கள் குழுவின் குருசாமி எங்களோடுதான் மலையில் நடந்து வந்தார், எனக்கு ஒரு 100-200 பேர்களுக்கு முன்புதான் 18 படி கடந்து வந்தார், அப்படி இருக்க இவர்கள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லையே என்று எங்கள் குருசாமியின் மகனிடம் கேட்டதற்கு அவர் சொன்னார், என் தந்தை நம் குழுவிற்கு குருசாமி, ஆனால் நம்பியார் சாமிதான் நம் எல்லா ஐய்யப்பன்மார்களுக்கும் குருசாமி என்றார். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடுமபத்திற்கும், மற்றவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

எம்.என். நம்பியாரைப் போலவே தமிழ் சினிமாவில் ப்ரபலமான மற்றொரு நம்பியார் ஆர்.என். நம்பியார் இவர் ப்ரபல சண்டை பயிற்சியாளர், எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு இவர்தான் சண்டைப் பயிற்சி தந்தவர். இவர்தான் அண்மைக் காலத்தில் மறைந்த ப்ரபல சினிமா சண்டைப் பயிற்சியாளர் ‘விகரம்’ தர்மாவின் தந்தை என்பது மற்றொரு சிறப்பு.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.

Sunday, November 02, 2008

பித்தனின் கிறுக்கல்கள் – 30

தனம் திரைப்பட விமர்சனம்
நண்பி ஒருவர் இந்தப் படத்தைப் பற்றி விமர்சனம் செய்யச் சொன்னார். உடனே தலையில் கொம்பு முளைத்தது போல ஒரு உணர்வு தொற்றிக் கொண்டது. தெரிந்த கடைகளில் போன் போட்டு விசாரிக்க ஆரம்பித்தேன். வீட்டுல “ஏங்க ஒரு வாரமா சொல்லிகிட்டு இருக்கேன், புல் வெட்டனும்னு அதச் செய்ய துப்பில்லை, ஒரு தமிழ் படத்தை தேடிக்கிட்டு கடை கடையா அலையரீங்களே” ன்னு கடமைகளை “அன்புடன்” நினைவு படுத்த, அதையெல்லாம் கவனிக்கரவரங்களா நாம, கடமை முக்கியமில்லையா. எந்தக் கடைகளிலிலும் கிடைக்கவே இல்லைன்னு இருக்கும் போது நண்பர் ஒருவர் அந்தப் படமா, என்கிட்ட இருக்கு என்று சொல்ல ஓடிப் போய் வாங்கி வந்து இந்தப் படத்தை பார்த்தேன்.

முதலில் இந்தப் படம் வீட்டில் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய படமேயில்லை. கதையில் அங்கங்கே ஓட்டைகள் என்று எதுவும் சொல்ல முடியாது, ஓட்டைகளுக்கு நடுவே கதை என்று ஒன்று இருக்கிறதா என்று தேட வேண்டியிருக்கிறது.

படம் ஹைதராபாத்தில் போலீஸால் தனம் என்ற ஒரு தாசியைத் தேடுவதில் ஆரம்பிக்கிறது. தனம் ஒரு குற்றவாளி என்று போலீஸ் குற்றம் சாட்ட, அவர் குற்றவாளியில்லை என்று ஒரு கூட்டமே சொல்லி ப்ளாஷ்பாக்கில் படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். இதற்கு மேல் இந்தப் படத்தின் கதையை நாசுக்காக சொல்ல என்னால் ஆகாது. தமிழ் பட கதாநாயகன் ரவுடியாக இருந்து ஒரு கூட்டத்திற்கே சாப்பாடு போடுவான் அதையே என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. இந்தப் படத்தில் கதாநாயகி தாசியாக இருந்து ஒரு கூட்டத்தையே காப்பாற்றுகிறார் ஆனால் அது என்ன விதமான லாஜிக் என்று எனக்குத் தெரியவில்லை.

திரைப் பட விமர்சனங்கள் எழுதும் போது நானாக விருப்பப் பட்டு பார்க்கும் படங்களைத்தான் விமர்சனம் செய்து வந்தேன், அந்தப் படங்களை நான் பார்க்க யாரும் என்னைத் தூண்டவில்லை, ஆனால் இந்தப் படம் கண்டிப்பாக எனது பட்டியலில் இடம் பெற வாய்ப்பே இல்லாத ஒரு டப்பா படம்.

The Happening
மனோஜ் நைட் ஷ்யாமளனின் சமீபத்திய படம். நியூயார்க்கின் செண்ட்ரல் பார்க்கில் திடீரென எல்லோரும் தற்கொலை செய்து கொண்டு இறக்க, அதிலிருந்து தப்பிக்க பலர் ரெயில் ஏறி பிலடெல்பியா நோக்கி செல்ல வழியில் பலரும் இறக்க ஏன் அவர்கள் அப்படி செய்து கொள்கிறார்கள் என்று ஹீரோ கண்டு பிடிப்பதுதான் கதை. ஹீரோ மார்க் வாஹல்பெர்க். இவர் மிக மிக புத்திசாலி போல இந்தப் படத்தில் சித்தரிக்கப் படுகிறார். அது ஒரு மிகப் பெரிய டுபாகூர் தியரி. இவருக்கு மொத்தமே இரண்டு அல்லது மூன்று விதமான முகபாவங்கள்தான் வருகிறது. அதை மட்டுமே பார்ப்பது 10-15 நிமிடங்களுக்குப் பிறகு போர் அடித்து விடுகிறது. அது என்ன ஆக்டிங் எக்ஸ்ப்ரஷனா அல்லது கான்ஸ்டிபேஷனா என்று தெரியாத ஒரு அவஸ்தை நமக்கு. அடுத்து ஹீரோயினாக வருபவருக்கு இந்தப் படத்திற்கு பிறகு நடிக்க சந்தர்ப்பம் கிடைப்பது துர்லபம். தமிழ் சினிமாவில் கூட்டமாக வரும் 100 துணை நடிகைகளில் கட்டங்கடைசியாக இருப்பவர் கூட இவரை விட 1000 மடங்கு நன்றாக நடிப்பார். இது போல ஒரு சம்பவம் நடக்க சாத்தியமுண்டா, ஏன் இப்படி லாஜிக் இல்லாத திரைக்கதை என்று கேட்காமல் படத்தைப் பார்த்தால் படத்தை ரசிக்க முடியலாம்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்.

Tuesday, October 28, 2008

பித்தனின் கிறுக்கல்கள் – 29

அமெரிக்க அதிபர் தேர்தல்.
ஒரு வழியாக தேர்தல் வந்தே விட்டது. வெற்றி பெறப்போவது நாங்கள்தான் என்று உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது என்பதாக ரிபப்ளிகன் கட்சியும், டெமாக்ரெட் கட்சியும் ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிஜமா என்று யாராவது விளக்கினால் நல்லது. நடுநிலையாக விளக்க யாரும் இல்லாவிட்டால் நான் விளக்கலாம் என்று இருந்தேன். “ஜொஞ்சம் வாய மூடிகிட்டு இருக்கியா” என்று என் நண்பர் ஒருவர் சொன்னதால் சரி நமக்கேன் வம்பு என்று விட்டு விடுகிறேன். முடிவு எப்படியும் நவம்பர் 5ம் தேதி தெரிந்து விடப் போகிறது அது வரை காத்திருக்க மாட்டோமா?

ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் நிர்வாக குழுவின் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கும் அதே நேரம் நிர்வாகக் குழுவின் தேர்தலையும் நடத்திவிடலாம் என்று ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் தற்போதைய நிர்வாகக் குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள். அடுத்து வரப்போகிற குழுவில் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருக்கும் பலரில் நானும் ஒருவன். அதோடு புதிய குழு வழக்கமான வருடத்திற்கு 3 கலை நிகழ்ச்சி, ஒரு பிக்னிக்கைத் தாண்டி வேறு என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரிந்தால் சூப்பராக இருக்கும்.

இலங்கையில் போர்
இது சற்று சென்சிடிவான விஷயம். இலங்கை ராணுவத்தின் இந்த போரில், பாதிக்கப் பட்டுள்ள தமிழர்களுக்கு ஆதரவாக இராமேஸ்வரத்தில் கூடிய சினிமா ப்ரபலங்களுக்கு நடுவே சற்று காரசாரமாக பேசிய இயக்குனர்கள் அமீர் (மெளனம் பேசியதே, பருத்தி வீரன்), சீமான் (தம்பி), பாரதிராஜா, ராமநாராயணன் நால்வரில் அமீர் மற்றும் சீமான் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர்களில் சீமானின் பேச்சை அவரது இணைய தளத்தில் கேட்டேன். மிக வேகமான சொற்பொழிவு. பலருடைய உணர்வுகளை தூண்டி வெறியேற்றக் கூடிய பேச்சு. கைது செய்யாமல் விடப்பட்ட மற்ற இருவரோடு திருமாவளவனையும் கைது செய்ய வேண்டும் என்று பல கட்சிகள் கூறி வருகின்றன. இதே நேரம் வைகோ மற்றும் அவர் கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதில் யார் சொல்வது சரி யார் சொல்வது தவறு என்று பார்க்க வேண்டிய அதே நேரத்தில் அனைவரும் பல அப்பாவி மக்களை அவதிக்குள்ளாக்குவது வன்மையாகக் கண்டிக்கதக்கது. இவ்வளவு நடக்கும் சமயம் தமிழக முதல்வர் தன் பங்கிற்கு தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ராஜிநாமாவை வாங்கி வைத்திருக்கிறார். மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் ராஜிநாமா செய்வோம் என்று பத்திரிகைகளுக்கு செய்தி சொல்லியிருக்கிறார். இதில் இலங்கையில் அவதிப் படும் அப்பாவி பொதுமக்களுக்கு என்ன பயன் என்று தெரியவில்லை. இது ஒரு சினிமாவின் திரைக்கதை மாதிரிதான் எனக்குத் தோன்றுகிறது. ஒன்று ராஜிநாமா செய்வதாக இருந்தால் அதை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும் அல்லது பிரதமரிடம் தர வேண்டும் இரண்டும் இல்லாமல் தான் வாங்கி வைத்துக் கொண்டு, சும்மா பயம் காட்டுவது என்ன மனிதாபிமான நடவடிக்கை என்று தெரியவில்லை. இதில் அப்பாவி மக்களின் நிலையை நினைத்து தனக்கு தூக்கம் வரவில்லை என்று உருகி உருகி ஒரு டைலாக் வேறு.

இந்திய ஆஸ்திரேலியா கிரிக்கெட் மாட்ச்
இந்தியா இரெண்டாவது டெஸ்ட் மாட்சில் 320 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை போட்டு துவைத்து எடுத்து வெற்றி பெற்று இந்த 4 டெஸ்ட் போட்டியில் 1-0 என்று முன்னனியில் இருக்கிறது. இன்னும் இரண்டு டெஸ்ட் மாட்ச் இருக்கிறது. ஆஸ்திரேலியா இதை விட தீவிரமாக அடுத்த இரண்டு டெஸ்ட் மாட்ச்சுகளையும் எதிர் கொள்ளும். அப்போது அவர்களை சமாளிக்க சச்சினின் ஆட்டம் மிக மிக முக்கியம். என்ன செய்யப் போகிறார்கள் இந்திய அணியினர் என்று சற்று படபடப்பாகத்தான் இருக்கிறது.
ரிச்மண்டில் கிரிக்கெட்
ரிச்மண்டில் கிரிக்கெட் அமோகமாக நடப்பது சமீபத்தில் ஒரு நண்பர் மூலம் தெரியவந்தது. அவர் சொன்ன இந்த வெப்சைட்டில் விளையாடும் பலரை பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.
www.greaterrichmondcricketclub.com. இதைப் போல வேறு அணியின் வெப்சைட்டின் தகவல் தெரிவித்தால் நன்றாக இருக்கும். ஆமாம், RTS –ம் ஒரு அணியை தயார் செய்து கிரிக்கெட் விளையாடலாமே?

டிவிங்கிள் டிவிங்கிள் பாட்டு.
யூ டுயூப்பில் சுட்டு பதிவு நானும் போடுவேனே!
இந்த பாட்டைக் கேளுங்கள், சூப்பரா இருக்கு.



பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்.

Tuesday, August 12, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 28

சினிமா விமர்சனம் எழுதி ரொம்ப நாள் ஆயிடுச்சு அதனால இந்த வாரம் சில படங்களைப் பாத்தி கட்டி வகுந்திடலாம்னு இருக்கேன். முதலில், தசாவதாரம் பத்தி நான் எதுவும் சொல்லப் போறதில்லை, சொன்னால், "ஏன்யா அதுதான் ஒருத்தர் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாரே அதுகூட உனக்கு பொறுக்கலையா"ன்னு யார் யாரெல்லாம் என்னை கட்டம் கட்டி திட்டுவார்களோ தெரியவில்லை அதனால் Me NO Comments on தசாவதாரம்.

10000 BC

கதை அரத பழசு. நம் வாத்தியார் நடித்த ஆயிரத்தில் ஒருவன் கதை. என்ன இதில் நம்பியார், ராமதாஸ் வில்லன்கள் இல்லை, ஜெயலலிதாவின் காதல் கதை இல்லை, எம்.ஜி.ஆரின் கத்தி சண்டை இல்லை, நாகேஷின் காமெடி இல்லை, மற்றபடி கதை அதே அடிமைகள் கதை, ஜெயலலிதாவின் கன்னித்தீவுக்கு பதிலாக நைல் நதி ஓரத்தில் எகிப்தியர்களின் ப்ரமீட் கட்ட அடிமைகளை பிடித்துக் கொண்டு செல்கிறார்கள். நடுவே டைனோசர் குடும்பத்தைச் சார்ந்த சில பறவைகள் (டெரொடாக்டைல் வகை), பெரிய பல்லுடன் கூடிய புலி (சாபர் வகை), பெரிய யானைகள் (மாமொத்) எல்லாவற்றையும் சேர்த்து கலந்து கட்டி ஒரு படம் பண்ணியிருக்கிறார்கள். கதையில் வரும் பலர் காட்டுவாசிகள். நல்ல வேலை இயக்குனர் பாரதிராஜா இல்லை, இருந்திருந்தால் கதாநாயகிக்கு கவர்ச்சியாக ஒரு உடை கொடுத்து, பார்க்கும் அருவியெல்லாவற்றிலும் முக்கி எடுத்திருப்பார். இந்த இயக்குனர் அப்படி எந்த அபத்தமும் செய்யாமல் கதாநாயகியை ரொம்ப நயமாக காண்பித்திருக்கிறார். கதாநாயகன் ஊர் விட்டு ஊர் வந்து என்னமோ செய்து கதாநாயகியைக் காப்பாற்றுகிறானா இல்லையா என்பதுதான் கதை. ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம். ஆனால் குழந்தைகளோடு பார்க்காதீர்கள், வன்முறை நிறைய இடங்களில் பளீரென தாக்குகிறது கண்டிப்பாக பயப்படுவார்கள்.

பாட்மேனின் டார்க் நைட்

இது முதலில் குழந்தைகள் படமில்லை. குழந்தைகளோடு பார்க்கலாம் என்று இருப்பவர்கள் தயவு செய்து அதைத் தவிர்க்கவும். ஹீத் லெட்ஜர் அருமையாக நடித்திருக்கிறார். இவருடைய அகால மறைவு இந்தப் படத்தின் வெற்றிக்கும் ஒரு காரணம் என்று பேச்சு. ஆனால் இவர் திரையில் என்ன செய்தாலும் விசில் பறக்கிறது. எது நடந்தாலும் இவருக்கு ஒன்றும் ஆவதில்லை, பெரிய ட்ரக் தலைகீழாக விழுகிறது அதிலிருந்து பல்லி அல்லது பாச்சை குட்டி போல தொபேல் என்று விழுகிறார் ஒன்றும் ஆகவில்லை, போலீஸ் ஸ்டேஷனில் பாட்மேன் அவரை அடித்து நொறுக்குகிறார் ஒன்றும் ஆகவில்லை. இப்படி என்ன ஆனாலும் அவர் ஒரு சின்ன கீறல் கூட இல்லாமல் தப்பி வந்து கிக் கிக் என்று சிரிக்கிறார். நம்மூர் ரஜனி, சரத்குமார், விஜயகாந்த் சண்டைகளைப் பற்றி இனி யாராவது எதாவது சொல்லுங்க அப்பால இருக்கு வேடிக்கை. பாட்மேனாக நடிக்கும் கிரிஸ்டன் பேல் ரொம்பவே சுமாராகத்தான் நடித்திருக்கிறார். இதற்கு முந்தைய பாட்மேனில் அவர் இதைவிட நன்றாக நடித்திருந்தாக நினைவு. கதையை ஒரு 40 நிமிடங்கள் அதிகமாக இழுத்து அதை ஜவ்வு ஜவ்வுன்னு ஜவ்வி "யோவ் படத்தை முடிங்கைய்யா, வீட்டுக்கு போகனும்" னு எல்லோரும் அவஸ்தைப் பட வைத்து விட்டார்கள். இதில் இந்தப் படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறது என்று சமீபத்தில் செய்தி வந்திருக்கிறது. என்னத்தை சொல்றது இதை கேள்வி பட்ட போது என்னை மாதிரி பல பேர் போய் ஏமாந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. மேலும் இந்த மாதிரி படங்களில் மார்கன் ப்ரீமேனையும், மைக்கேல் கெய்னையும் வீணாக்கியிருப்பதை தவிர்க்க ஒரு சட்டமே வர வேண்டும். எனக்கு வர வர பாட்மேனையும் ஸ்பைடர் மேனையும் சூப்பர் மேனையும் பிடிப்பதில்லை இவர்கள் கதைகள், குழந்தைகளுடன் படிக்க கூடிய காமிக் புத்தகங்கள் ஆனால் திரையில் வரும்போது தாங்க முடியாத வயலன்ஸ் திணிக்கப் பட்டு குடும்பத்தோடு பார்க்க முடியாதபடி செய்து விடுகிறார்கள்.

Apocalypto

இது மெல் கிப்ஸனின் படம் என்பதைத் தவிர வேறு எந்த ஒரு நல்ல விஷயமும் இல்லாத படம். பார்த்தால் குமட்டலே வரும் அளவுக்கு வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. ஒரு நிலையில் "யோவ் என்னய்யா படம் எடுக்கறாங்க " என்று கோபமே வருகிறது. இதையெல்லாம் காசு கொடுத்து வாங்கி வந்து பார்க்கின்ற என்னைப் போல ஆளுங்கள என்ன சொல்றது. இந்தப் படத்தைப் பார்க்காமல் தவிர்த்தால் தப்பேயில்லை.

சீனி கம் (ஹிந்திப் படம்)

இப்படி படம் எடுக்க ரொம்ப தைரியம் வேண்டும். அது இந்த இயக்குனருக்கு இருக்கிறது. ஒரு 60 வயது பெரியவர் (அமிதாப்) 30 வயது பெண் (தபு) இருவருக்கும் வரும் சின்ன மோதல் பின் காதல் இதை அனுமதிக்க மறுக்கும் தபுவின் தந்தை (பரேஷ் ராவல்), அமிதாபின் வயதான தாய், பக்கத்து வீட்டு குட்டிப் பெண் அவளுடைய அப்பா என சின்னஞ்சிறு குழுவை வைத்து ஒரு படம். கதையின் முன்பகுதி லண்டனில் நடக்கிறது பின் பகுதி டெல்லியில் என்று கலந்து கட்டி தந்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் அமிதாப் சண்டை போட ஒரு சந்தர்ப்பம் வந்ததும் சரிதான் இதுவும் சராசரி மசாலா லாஜிக்கில் மாட்டிகிட்டு முழிக்குதேன்னு நினைத்த போது அதை சாமர்த்தியமாக சமாளித்து விட்டு டிக்கி சாப்பிட போய்விடுகிறார் அமிதாப். முடிவு கொஞ்சம் மெலோ ட்ரமாடிக்காக இருந்தாலும், பரவாயில்லை ரசிக்கலாம் டைப் தான். இப்படிப் பட்ட படங்களில் வரும் குழந்தைகளுக்கு கடுமையான நோய் என்று காட்டுவதை தடுக்க யுனிசெஃப்பில் ஒரு புகார் கொடுக்கலாமா என்று இருக்கிறேன்.

இனி கொஞ்சம் தமிழ்நாட்டு அரசியல்.

''பாஜக மீண்டும் அம்மாவுடன் (ஜெயலலிதா) கூட்டணி சேருமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அம்மா, அய்யா (கருணாநிதி) இரண்டு பேருமே ஒன்று தான். அரசியலில் எங்களுக்கு எதிரிகளே கிடையாது''(வெங்கையா நாயுடு)

இதுக்கு பதிலா எங்களுக்கு வெக்கம் மானம் ரோஷம் எதுவும் கிடையாதுன்னு சொல்லியிருக்கலாம்.

******************************************************************************************

''தனது பிறந்த நாளில், தமிழக முன்னேற்றத்துக்கு இதுவரை எந்த கட்சியும் அறிவிக்காத மிகப்பெரிய திட்டத்தை விஜயகாந்த் அறிவிப்பார். திட்டமிட்டபடி 'கேப்டன் டிவி' துவக்கப்படும்'' (தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா)

அது என்ன திட்டம் அரசியல் சினமாவில இருந்து விலகி டிவி ஒளிபரப்பு துவக்கி நீங்களே எல்லா தொடர்களிலும் நடிக்கரதா. சூப்பர்!!!

******************************************************************************************

''என் வீட்டில் 10 நிமிடம் கரண்ட் இல்லை என்றாலும் கூட என் மனைவி என்னங்க மின்சார அமைச்சராக இருந்து கொண்டு என்ன செய்கிறீர்கள் என்று கேட்கிறார். இதனால் கஷ்டப்பட்டு அவரை காசிக்கு அனுப்பி வைத்தேன். அங்கு போய் விட்டு வந்த பின்னர் அவர், நம்ம ஊர் சொர்க்கம், அந்த இடம்தான் நரகம் போல இருக்கிறது என்கிறார்.''(ஆற்காடு வீராசாமி)

என்னங்க இது பகுத்தறிவு பாசறையில படிச்சவங்கன்னு வாய் கிழிய பேசட்டு, காசிக்கா போவாங்க கோபாலபுரம்தானே போயிருக்கனும். ஆமா என்ன ஆட்சி கவிழப் போகுதா சொர்க்கம் நரகம் எல்லாம் பேச ஆரம்பிச்சிடீங்க

******************************************************************************************

''12 சமாஜ்வாடி எம்.பிக்கள் அரசை எதிர்த்து வாக்களிப்பார்கள். நானும் வாக்களிப்பேன். இதையடுத்து கட்சியிலிருந்து வெளியேற்றுவார்கள். பின்னர் நான் மாயாவதி முன்னிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து விடுவேன்'' (அதிருப்தி சமாஜ்வாடி எம்.பி. முனவர் ஹசன்)

ஹைய்யா கட்சி விட்டு கட்சி தாவறதுக்கு இப்படி ஒரு சாக்கா?

******************************************************************************************

''மழை பெய்தால் தமிழக மக்கள் நல்ல சகுனம் என்பார்கள். என் கணவர் போகும் இடமெல்லாம் மழை பெய்கிறது. இது நாட்டுக்கு நல்ல சகுனம்''(சரத்குமாரின் மனைவி ராதிகா)

பார்த்துங்க மழை கொஞ்சம் அதிகமாயிட்டாலும் எல்லாருக்கும் கஷ்டம்தான். அப்புறம் சகுனத்தடையாயிடப் போறாரு.

******************************************************************************************

''அணுசக்தி ஒப்பந்தம் குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்களவையில் நடந்த முழு விவாதத்தையும் நான் கவனித்தேன். ஆனாலும் கூட எனக்கு தலையும் புரியலை, வாலும் புரியலை''(சமாஜ்வாடி எம்பி அதீக் அகமத்)


என்னங்க காமடி பண்றீங்க, நீங்கள்ளாம் தேர்தல் சமயத்தில பேசரது, அதுக்க் அப்புறம் பேசரது எதாவது எங்களுக்குப் புரியுதா, நாங்க அதைப் பத்தி என்னிக்காவது வருத்தப் பட்டிருக்கோமா?

******************************************************************************************

''அத்வானியை அவரது ஜோதிடர்கள் தவறாக வழி நடத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன். நாட்டின் நலனுக்காக அவர் முதலில் தனது ஜோதிடரை மாற்றிக் கொள்வது நல்லது'' (பிரதமர் மன்மோகன் சிங்)

அதேபோல அவரும் நீங்கள் உங்கள் ஆலோசகரையும், உங்கள் கட்சித் தலைவரையும் மாற்றிக் கொள்ளச் சொன்னால் கேட்பீர்களா?

******************************************************************************************

''கம்ப ராமாயணத்தில் சேது பாலத்தின் புனிதத்தன்மை குறித்து குறிப்பிடும் ராமர், 'இந்தப் பாலத்தை பார்த்தால் அனைத்து தீமைகளும் விலகும்' என்கிறார். பாலம் இல்லாவிட்டால் இது எப்படி சாத்தியமாகும்?''(விஸ்வ இந்து பரிஷத் சர்வதேச தலைவர் வேதாந்தம்)

என்னங்க இது சின்னப் புள்ளத் தனமா இருக்கு, வால்மீகி ராமாயணமே புருடான்னு சொல்றவங்க கிட்ட சூப்பர் டூப்பர் கதை கம்பராமாயணத்தைப் பத்தி சொல்றீங்க.

******************************************************************************************

''பாமக குழி பறிக்கிறது, குழி பறிக்கிறது என்கிறார்கள். நேற்று கூட மரம் நடுவதற்காக குழி பறித்தோம்''(பாமக நிறுவனர் ராமதாஸ்)

பேசரவங்க பேசட்டுங்க அவங்கள விட்டுத் தள்ளுங்க, இப்ப நட்ட மரங்களை எப்போ வெட்டித் தள்ளப் போறீங்கன்னு சொல்லுங்க?

******************************************************************************************


''
இளைஞர்கள் விலகி போகிறார்கள் என்று அதிமுக இளைஞர் பாசறையை தொடங்கியுள்ளது. அதில் கட்சிக்கு ஆள் சேர்ப்பதற்காக லேப்டாப் தருகிறோம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர்''(திமுக எம்பி கனிமொழி)

அவங்க கட்சி படிச்சவங்களை குறி வெச்சி காய் நகத்துராங்க, நீங்க பாவம் இன்னும் புடவை, வேட்டி, சட்டை, பல்பொடி, செருப்பு தரேன்னு சொல்லி எப்படி ஆள் சேர்க்க முடியும், பேசாம கட்சியில சேர்ந்தா கார் தருவோம்ன்னு சொல்லிப் பாருங்க.

******************************************************************************************

''அரசியல் மிகவும் கெட்டுபோய் விட்டது. அரசியலை சரி செய்ய இன்னொரு மகாத்மா காந்தி வர வேண்டும்''(கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி)

இன்னொரு மகாத்மா வந்து அரசியலை சரிசெய்யரதுக்கு பதிலா உங்களைப்போன்ற எல்லா அரசியல்வாதிகளும் அரசியலை விட்டு விலகிட்டாலே போதும் நாடு உருப்பட்டுவிடும்.

******************************************************************************************

''ஓகேனக்கல் பிரச்சனையில் முதலமைச்சர் கருணாநிதி, கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பிறகு பேசலாம் என்று அறிவித்திருந்தார். தேர்தல் முடிந்து, புதிய ஆட்சி அமைத்து பல மாதங்கள் ஆகியும் இது குறித்து கருணாநிதி வாய் திறவாமல் மௌனம் சாதிப்பது ஏன்?'' (இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன்)

அவர் எந்த வருடத்தியத் தேர்தல்ன்னு சொல்லலையே!!!

******************************************************************************************

''பிரதமர் பதவியில் என்னை அமர வைப்பதற்கான இயக்கம் தொடங்கிவிட்டது. மக்களின் இந்த கனவும் நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும். நான் பிரதமராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.'' (உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி)

மக்களின் கனவா, கண்டிப்பா பொது மக்களா இருக்க முடியாது, வேற எந்த மக்கள், ஓ உங்க சொந்தக்கார மக்களா, சரி சரி.

******************************************************************************************

''சமூக விரோதிகளுக்கு அரசியல்வாதிகள் பாதுகாப்பு அளிக்கக் கூடாது. கட்சியிலும் இடமளிக்கக் கூடாது''(இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன்)

இப்படி பொத்தாம் பொதுவா சொன்னா எப்படி புரியும், எந்தக் கட்சின்னு பளிச்சுனு சொல்லிடுங்க.


பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....