நேரம்
Sunday, November 02, 2008
பித்தனின் கிறுக்கல்கள் – 30
நண்பி ஒருவர் இந்தப் படத்தைப் பற்றி விமர்சனம் செய்யச் சொன்னார். உடனே தலையில் கொம்பு முளைத்தது போல ஒரு உணர்வு தொற்றிக் கொண்டது. தெரிந்த கடைகளில் போன் போட்டு விசாரிக்க ஆரம்பித்தேன். வீட்டுல “ஏங்க ஒரு வாரமா சொல்லிகிட்டு இருக்கேன், புல் வெட்டனும்னு அதச் செய்ய துப்பில்லை, ஒரு தமிழ் படத்தை தேடிக்கிட்டு கடை கடையா அலையரீங்களே” ன்னு கடமைகளை “அன்புடன்” நினைவு படுத்த, அதையெல்லாம் கவனிக்கரவரங்களா நாம, கடமை முக்கியமில்லையா. எந்தக் கடைகளிலிலும் கிடைக்கவே இல்லைன்னு இருக்கும் போது நண்பர் ஒருவர் அந்தப் படமா, என்கிட்ட இருக்கு என்று சொல்ல ஓடிப் போய் வாங்கி வந்து இந்தப் படத்தை பார்த்தேன்.
முதலில் இந்தப் படம் வீட்டில் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய படமேயில்லை. கதையில் அங்கங்கே ஓட்டைகள் என்று எதுவும் சொல்ல முடியாது, ஓட்டைகளுக்கு நடுவே கதை என்று ஒன்று இருக்கிறதா என்று தேட வேண்டியிருக்கிறது.
படம் ஹைதராபாத்தில் போலீஸால் தனம் என்ற ஒரு தாசியைத் தேடுவதில் ஆரம்பிக்கிறது. தனம் ஒரு குற்றவாளி என்று போலீஸ் குற்றம் சாட்ட, அவர் குற்றவாளியில்லை என்று ஒரு கூட்டமே சொல்லி ப்ளாஷ்பாக்கில் படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். இதற்கு மேல் இந்தப் படத்தின் கதையை நாசுக்காக சொல்ல என்னால் ஆகாது. தமிழ் பட கதாநாயகன் ரவுடியாக இருந்து ஒரு கூட்டத்திற்கே சாப்பாடு போடுவான் அதையே என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. இந்தப் படத்தில் கதாநாயகி தாசியாக இருந்து ஒரு கூட்டத்தையே காப்பாற்றுகிறார் ஆனால் அது என்ன விதமான லாஜிக் என்று எனக்குத் தெரியவில்லை.
திரைப் பட விமர்சனங்கள் எழுதும் போது நானாக விருப்பப் பட்டு பார்க்கும் படங்களைத்தான் விமர்சனம் செய்து வந்தேன், அந்தப் படங்களை நான் பார்க்க யாரும் என்னைத் தூண்டவில்லை, ஆனால் இந்தப் படம் கண்டிப்பாக எனது பட்டியலில் இடம் பெற வாய்ப்பே இல்லாத ஒரு டப்பா படம்.
The Happening
மனோஜ் நைட் ஷ்யாமளனின் சமீபத்திய படம். நியூயார்க்கின் செண்ட்ரல் பார்க்கில் திடீரென எல்லோரும் தற்கொலை செய்து கொண்டு இறக்க, அதிலிருந்து தப்பிக்க பலர் ரெயில் ஏறி பிலடெல்பியா நோக்கி செல்ல வழியில் பலரும் இறக்க ஏன் அவர்கள் அப்படி செய்து கொள்கிறார்கள் என்று ஹீரோ கண்டு பிடிப்பதுதான் கதை. ஹீரோ மார்க் வாஹல்பெர்க். இவர் மிக மிக புத்திசாலி போல இந்தப் படத்தில் சித்தரிக்கப் படுகிறார். அது ஒரு மிகப் பெரிய டுபாகூர் தியரி. இவருக்கு மொத்தமே இரண்டு அல்லது மூன்று விதமான முகபாவங்கள்தான் வருகிறது. அதை மட்டுமே பார்ப்பது 10-15 நிமிடங்களுக்குப் பிறகு போர் அடித்து விடுகிறது. அது என்ன ஆக்டிங் எக்ஸ்ப்ரஷனா அல்லது கான்ஸ்டிபேஷனா என்று தெரியாத ஒரு அவஸ்தை நமக்கு. அடுத்து ஹீரோயினாக வருபவருக்கு இந்தப் படத்திற்கு பிறகு நடிக்க சந்தர்ப்பம் கிடைப்பது துர்லபம். தமிழ் சினிமாவில் கூட்டமாக வரும் 100 துணை நடிகைகளில் கட்டங்கடைசியாக இருப்பவர் கூட இவரை விட 1000 மடங்கு நன்றாக நடிப்பார். இது போல ஒரு சம்பவம் நடக்க சாத்தியமுண்டா, ஏன் இப்படி லாஜிக் இல்லாத திரைக்கதை என்று கேட்காமல் படத்தைப் பார்த்தால் படத்தை ரசிக்க முடியலாம்.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்..... piththanp@gmail.com
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்.
Tuesday, October 28, 2008
பித்தனின் கிறுக்கல்கள் – 29
ஒரு வழியாக தேர்தல் வந்தே விட்டது. வெற்றி பெறப்போவது நாங்கள்தான் என்று உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது என்பதாக ரிபப்ளிகன் கட்சியும், டெமாக்ரெட் கட்சியும் ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிஜமா என்று யாராவது விளக்கினால் நல்லது. நடுநிலையாக விளக்க யாரும் இல்லாவிட்டால் நான் விளக்கலாம் என்று இருந்தேன். “ஜொஞ்சம் வாய மூடிகிட்டு இருக்கியா” என்று என் நண்பர் ஒருவர் சொன்னதால் சரி நமக்கேன் வம்பு என்று விட்டு விடுகிறேன். முடிவு எப்படியும் நவம்பர் 5ம் தேதி தெரிந்து விடப் போகிறது அது வரை காத்திருக்க மாட்டோமா?
ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் நிர்வாக குழுவின் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கும் அதே நேரம் நிர்வாகக் குழுவின் தேர்தலையும் நடத்திவிடலாம் என்று ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் தற்போதைய நிர்வாகக் குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள். அடுத்து வரப்போகிற குழுவில் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருக்கும் பலரில் நானும் ஒருவன். அதோடு புதிய குழு வழக்கமான வருடத்திற்கு 3 கலை நிகழ்ச்சி, ஒரு பிக்னிக்கைத் தாண்டி வேறு என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரிந்தால் சூப்பராக இருக்கும்.
இலங்கையில் போர்
இது சற்று சென்சிடிவான விஷயம். இலங்கை ராணுவத்தின் இந்த போரில், பாதிக்கப் பட்டுள்ள தமிழர்களுக்கு ஆதரவாக இராமேஸ்வரத்தில் கூடிய சினிமா ப்ரபலங்களுக்கு நடுவே சற்று காரசாரமாக பேசிய இயக்குனர்கள் அமீர் (மெளனம் பேசியதே, பருத்தி வீரன்), சீமான் (தம்பி), பாரதிராஜா, ராமநாராயணன் நால்வரில் அமீர் மற்றும் சீமான் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர்களில் சீமானின் பேச்சை அவரது இணைய தளத்தில் கேட்டேன். மிக வேகமான சொற்பொழிவு. பலருடைய உணர்வுகளை தூண்டி வெறியேற்றக் கூடிய பேச்சு. கைது செய்யாமல் விடப்பட்ட மற்ற இருவரோடு திருமாவளவனையும் கைது செய்ய வேண்டும் என்று பல கட்சிகள் கூறி வருகின்றன. இதே நேரம் வைகோ மற்றும் அவர் கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதில் யார் சொல்வது சரி யார் சொல்வது தவறு என்று பார்க்க வேண்டிய அதே நேரத்தில் அனைவரும் பல அப்பாவி மக்களை அவதிக்குள்ளாக்குவது வன்மையாகக் கண்டிக்கதக்கது. இவ்வளவு நடக்கும் சமயம் தமிழக முதல்வர் தன் பங்கிற்கு தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ராஜிநாமாவை வாங்கி வைத்திருக்கிறார். மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் ராஜிநாமா செய்வோம் என்று பத்திரிகைகளுக்கு செய்தி சொல்லியிருக்கிறார். இதில் இலங்கையில் அவதிப் படும் அப்பாவி பொதுமக்களுக்கு என்ன பயன் என்று தெரியவில்லை. இது ஒரு சினிமாவின் திரைக்கதை மாதிரிதான் எனக்குத் தோன்றுகிறது. ஒன்று ராஜிநாமா செய்வதாக இருந்தால் அதை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும் அல்லது பிரதமரிடம் தர வேண்டும் இரண்டும் இல்லாமல் தான் வாங்கி வைத்துக் கொண்டு, சும்மா பயம் காட்டுவது என்ன மனிதாபிமான நடவடிக்கை என்று தெரியவில்லை. இதில் அப்பாவி மக்களின் நிலையை நினைத்து தனக்கு தூக்கம் வரவில்லை என்று உருகி உருகி ஒரு டைலாக் வேறு.
இந்திய ஆஸ்திரேலியா கிரிக்கெட் மாட்ச்
இந்தியா இரெண்டாவது டெஸ்ட் மாட்சில் 320 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை போட்டு துவைத்து எடுத்து வெற்றி பெற்று இந்த 4 டெஸ்ட் போட்டியில் 1-0 என்று முன்னனியில் இருக்கிறது. இன்னும் இரண்டு டெஸ்ட் மாட்ச் இருக்கிறது. ஆஸ்திரேலியா இதை விட தீவிரமாக அடுத்த இரண்டு டெஸ்ட் மாட்ச்சுகளையும் எதிர் கொள்ளும். அப்போது அவர்களை சமாளிக்க சச்சினின் ஆட்டம் மிக மிக முக்கியம். என்ன செய்யப் போகிறார்கள் இந்திய அணியினர் என்று சற்று படபடப்பாகத்தான் இருக்கிறது.
ரிச்மண்டில் கிரிக்கெட்
ரிச்மண்டில் கிரிக்கெட் அமோகமாக நடப்பது சமீபத்தில் ஒரு நண்பர் மூலம் தெரியவந்தது. அவர் சொன்ன இந்த வெப்சைட்டில் விளையாடும் பலரை பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது. www.greaterrichmondcricketclub.com. இதைப் போல வேறு அணியின் வெப்சைட்டின் தகவல் தெரிவித்தால் நன்றாக இருக்கும். ஆமாம், RTS –ம் ஒரு அணியை தயார் செய்து கிரிக்கெட் விளையாடலாமே?
டிவிங்கிள் டிவிங்கிள் பாட்டு.
யூ டுயூப்பில் சுட்டு பதிவு நானும் போடுவேனே!
இந்த பாட்டைக் கேளுங்கள், சூப்பரா இருக்கு.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்..... piththanp@gmail.com
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்.
Tuesday, August 12, 2008
பித்தனின் கிறுக்கல்கள் - 28
சினிமா விமர்சனம் எழுதி ரொம்ப நாள் ஆயிடுச்சு அதனால இந்த வாரம் சில படங்களைப் பாத்தி கட்டி வகுந்திடலாம்னு இருக்கேன். முதலில், தசாவதாரம் பத்தி நான் எதுவும் சொல்லப் போறதில்லை, சொன்னால், "ஏன்யா அதுதான் ஒருத்தர் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாரே அதுகூட உனக்கு பொறுக்கலையா"ன்னு யார் யாரெல்லாம் என்னை கட்டம் கட்டி திட்டுவார்களோ தெரியவில்லை அதனால் Me NO Comments on தசாவதாரம்.
10000 BC
கதை அரத பழசு. நம் வாத்தியார் நடித்த ஆயிரத்தில் ஒருவன் கதை. என்ன இதில் நம்பியார், ராமதாஸ் வில்லன்கள் இல்லை, ஜெயலலிதாவின் காதல் கதை இல்லை, எம்.ஜி.ஆரின் கத்தி சண்டை இல்லை, நாகேஷின் காமெடி இல்லை, மற்றபடி கதை அதே அடிமைகள் கதை, ஜெயலலிதாவின் கன்னித்தீவுக்கு பதிலாக நைல் நதி ஓரத்தில் எகிப்தியர்களின் ப்ரமீட் கட்ட அடிமைகளை பிடித்துக் கொண்டு செல்கிறார்கள். நடுவே டைனோசர் குடும்பத்தைச் சார்ந்த சில பறவைகள் (டெரொடாக்டைல் வகை), பெரிய பல்லுடன் கூடிய புலி (சாபர் வகை), பெரிய யானைகள் (மாமொத்) எல்லாவற்றையும் சேர்த்து கலந்து கட்டி ஒரு படம் பண்ணியிருக்கிறார்கள். கதையில் வரும் பலர் காட்டுவாசிகள். நல்ல வேலை இயக்குனர் பாரதிராஜா இல்லை, இருந்திருந்தால் கதாநாயகிக்கு கவர்ச்சியாக ஒரு உடை கொடுத்து, பார்க்கும் அருவியெல்லாவற்றிலும் முக்கி எடுத்திருப்பார். இந்த இயக்குனர் அப்படி எந்த அபத்தமும் செய்யாமல் கதாநாயகியை ரொம்ப நயமாக காண்பித்திருக்கிறார். கதாநாயகன் ஊர் விட்டு ஊர் வந்து என்னமோ செய்து கதாநாயகியைக் காப்பாற்றுகிறானா இல்லையா என்பதுதான் கதை. ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம். ஆனால் குழந்தைகளோடு பார்க்காதீர்கள், வன்முறை நிறைய இடங்களில் பளீரென தாக்குகிறது கண்டிப்பாக பயப்படுவார்கள்.
இது முதலில் குழந்தைகள் படமில்லை. குழந்தைகளோடு பார்க்கலாம் என்று இருப்பவர்கள் தயவு செய்து அதைத் தவிர்க்கவும். ஹீத் லெட்ஜர் அருமையாக நடித்திருக்கிறார். இவருடைய அகால மறைவு இந்தப் படத்தின் வெற்றிக்கும் ஒரு காரணம் என்று பேச்சு. ஆனால் இவர் திரையில் என்ன செய்தாலும் விசில் பறக்கிறது. எது நடந்தாலும் இவருக்கு ஒன்றும் ஆவதில்லை, பெரிய ட்ரக் தலைகீழாக விழுகிறது அதிலிருந்து பல்லி அல்லது பாச்சை குட்டி போல தொபேல் என்று விழுகிறார் ஒன்றும் ஆகவில்லை, போலீஸ் ஸ்டேஷனில் பாட்மேன் அவரை அடித்து நொறுக்குகிறார் ஒன்றும் ஆகவில்லை. இப்படி என்ன ஆனாலும் அவர் ஒரு சின்ன கீறல் கூட இல்லாமல் தப்பி வந்து கிக் கிக் என்று சிரிக்கிறார். நம்மூர் ரஜனி, சரத்குமார், விஜயகாந்த் சண்டைகளைப் பற்றி இனி யாராவது எதாவது சொல்லுங்க அப்பால இருக்கு வேடிக்கை. பாட்மேனாக நடிக்கும் கிரிஸ்டன் பேல் ரொம்பவே சுமாராகத்தான் நடித்திருக்கிறார். இதற்கு முந்தைய பாட்மேனில் அவர் இதைவிட நன்றாக நடித்திருந்தாக நினைவு. கதையை ஒரு 40 நிமிடங்கள் அதிகமாக இழுத்து அதை ஜவ்வு ஜவ்வுன்னு ஜவ்வி "யோவ் படத்தை முடிங்கைய்யா, வீட்டுக்கு போகனும்" னு எல்லோரும் அவஸ்தைப் பட வைத்து விட்டார்கள். இதில் இந்தப் படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறது என்று சமீபத்தில் செய்தி வந்திருக்கிறது. என்னத்தை சொல்றது இதை கேள்வி பட்ட போது என்னை மாதிரி பல பேர் போய் ஏமாந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. மேலும் இந்த மாதிரி படங்களில் மார்கன் ப்ரீமேனையும், மைக்கேல் கெய்னையும் வீணாக்கியிருப்பதை தவிர்க்க ஒரு சட்டமே வர வேண்டும். எனக்கு வர வர பாட்மேனையும் ஸ்பைடர் மேனையும் சூப்பர் மேனையும் பிடிப்பதில்லை இவர்கள் கதைகள், குழந்தைகளுடன் படிக்க கூடிய காமிக் புத்தகங்கள் ஆனால் திரையில் வரும்போது தாங்க முடியாத வயலன்ஸ் திணிக்கப் பட்டு குடும்பத்தோடு பார்க்க முடியாதபடி செய்து விடுகிறார்கள்.
இது மெல் கிப்ஸனின் படம் என்பதைத் தவிர வேறு எந்த ஒரு நல்ல விஷயமும் இல்லாத படம். பார்த்தால் குமட்டலே வரும் அளவுக்கு வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. ஒரு நிலையில் "யோவ் என்னய்யா படம் எடுக்கறாங்க " என்று கோபமே வருகிறது. இதையெல்லாம் காசு கொடுத்து வாங்கி வந்து பார்க்கின்ற என்னைப் போல ஆளுங்கள என்ன சொல்றது. இந்தப் படத்தைப் பார்க்காமல் தவிர்த்தால் தப்பேயில்லை.
இப்படி படம் எடுக்க ரொம்ப தைரியம் வேண்டும். அது இந்த இயக்குனருக்கு இருக்கிறது. ஒரு 60 வயது பெரியவர் (அமிதாப்) 30 வயது பெண் (தபு) இருவருக்கும் வரும் சின்ன மோதல் பின் காதல் இதை அனுமதிக்க மறுக்கும் தபுவின் தந்தை (பரேஷ் ராவல்), அமிதாபின் வயதான தாய், பக்கத்து வீட்டு குட்டிப் பெண் அவளுடைய அப்பா என சின்னஞ்சிறு குழுவை வைத்து ஒரு படம். கதையின் முன்பகுதி லண்டனில் நடக்கிறது பின் பகுதி டெல்லியில் என்று கலந்து கட்டி தந்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் அமிதாப் சண்டை போட ஒரு சந்தர்ப்பம் வந்ததும் சரிதான் இதுவும் சராசரி மசாலா லாஜிக்கில் மாட்டிகிட்டு முழிக்குதேன்னு நினைத்த போது அதை சாமர்த்தியமாக சமாளித்து விட்டு டிக்கி சாப்பிட போய்விடுகிறார் அமிதாப். முடிவு கொஞ்சம் மெலோ ட்ரமாடிக்காக இருந்தாலும், பரவாயில்லை ரசிக்கலாம் டைப் தான். இப்படிப் பட்ட படங்களில் வரும் குழந்தைகளுக்கு கடுமையான நோய் என்று காட்டுவதை தடுக்க யுனிசெஃப்பில் ஒரு புகார் கொடுக்கலாமா என்று இருக்கிறேன்.
''பாஜக மீண்டும் அம்மாவுடன் (ஜெயலலிதா) கூட்டணி சேருமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அம்மா, அய்யா (கருணாநிதி) இரண்டு பேருமே ஒன்று தான். அரசியலில் எங்களுக்கு எதிரிகளே கிடையாது''(வெங்கையா நாயுடு)
இதுக்கு பதிலா எங்களுக்கு வெக்கம் மானம் ரோஷம் எதுவும் கிடையாதுன்னு சொல்லியிருக்கலாம்.
''தனது பிறந்த நாளில், தமிழக முன்னேற்றத்துக்கு இதுவரை எந்த கட்சியும் அறிவிக்காத மிகப்பெரிய திட்டத்தை விஜயகாந்த் அறிவிப்பார். திட்டமிட்டபடி 'கேப்டன் டிவி' துவக்கப்படும்'' (தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா)
அது என்ன திட்டம் அரசியல் சினமாவில இருந்து விலகி டிவி ஒளிபரப்பு துவக்கி நீங்களே எல்லா தொடர்களிலும் நடிக்கரதா. சூப்பர்!!!
''என் வீட்டில் 10 நிமிடம் கரண்ட் இல்லை என்றாலும் கூட என் மனைவி என்னங்க மின்சார அமைச்சராக இருந்து கொண்டு என்ன செய்கிறீர்கள் என்று கேட்கிறார். இதனால் கஷ்டப்பட்டு அவரை காசிக்கு அனுப்பி வைத்தேன். அங்கு போய் விட்டு வந்த பின்னர் அவர், நம்ம ஊர் சொர்க்கம், அந்த இடம்தான் நரகம் போல இருக்கிறது என்கிறார்.''(ஆற்காடு வீராசாமி)
என்னங்க இது பகுத்தறிவு பாசறையில படிச்சவங்கன்னு வாய் கிழிய பேசட்டு, காசிக்கா போவாங்க கோபாலபுரம்தானே போயிருக்கனும். ஆமா என்ன ஆட்சி கவிழப் போகுதா சொர்க்கம் நரகம் எல்லாம் பேச ஆரம்பிச்சிடீங்க
******************************************************************************************
''12 சமாஜ்வாடி எம்.பிக்கள் அரசை எதிர்த்து வாக்களிப்பார்கள். நானும் வாக்களிப்பேன். இதையடுத்து கட்சியிலிருந்து வெளியேற்றுவார்கள். பின்னர் நான் மாயாவதி முன்னிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து விடுவேன்'' (அதிருப்தி சமாஜ்வாடி எம்.பி. முனவர் ஹசன்)
ஹைய்யா கட்சி விட்டு கட்சி தாவறதுக்கு இப்படி ஒரு சாக்கா?
''மழை பெய்தால் தமிழக மக்கள் நல்ல சகுனம் என்பார்கள். என் கணவர் போகும் இடமெல்லாம் மழை பெய்கிறது. இது நாட்டுக்கு நல்ல சகுனம்''(சரத்குமாரின் மனைவி ராதிகா)
பார்த்துங்க மழை கொஞ்சம் அதிகமாயிட்டாலும் எல்லாருக்கும் கஷ்டம்தான். அப்புறம் சகுனத்தடையாயிடப் போறாரு.
''அணுசக்தி ஒப்பந்தம் குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்களவையில் நடந்த முழு விவாதத்தையும் நான் கவனித்தேன். ஆனாலும் கூட எனக்கு தலையும் புரியலை, வாலும் புரியலை''(சமாஜ்வாடி எம்பி அதீக் அகமத்)
என்னங்க காமடி பண்றீங்க, நீங்கள்ளாம் தேர்தல் சமயத்தில பேசரது, அதுக்க் அப்புறம் பேசரது எதாவது எங்களுக்குப் புரியுதா, நாங்க அதைப் பத்தி என்னிக்காவது வருத்தப் பட்டிருக்கோமா?
******************************************************************************************
''அத்வானியை அவரது ஜோதிடர்கள் தவறாக வழி நடத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன். நாட்டின் நலனுக்காக அவர் முதலில் தனது ஜோதிடரை மாற்றிக் கொள்வது நல்லது'' (பிரதமர் மன்மோகன் சிங்)
அதேபோல அவரும் நீங்கள் உங்கள் ஆலோசகரையும், உங்கள் கட்சித் தலைவரையும் மாற்றிக் கொள்ளச் சொன்னால் கேட்பீர்களா?
''கம்ப ராமாயணத்தில் சேது பாலத்தின் புனிதத்தன்மை குறித்து குறிப்பிடும் ராமர், 'இந்தப் பாலத்தை பார்த்தால் அனைத்து தீமைகளும் விலகும்' என்கிறார். பாலம் இல்லாவிட்டால் இது எப்படி சாத்தியமாகும்?''(விஸ்வ இந்து பரிஷத் சர்வதேச தலைவர் வேதாந்தம்)
என்னங்க இது சின்னப் புள்ளத் தனமா இருக்கு, வால்மீகி ராமாயணமே புருடான்னு சொல்றவங்க கிட்ட சூப்பர் டூப்பர் கதை கம்பராமாயணத்தைப் பத்தி சொல்றீங்க.
******************************************************************************************
''பாமக குழி பறிக்கிறது, குழி பறிக்கிறது என்கிறார்கள். நேற்று கூட மரம் நடுவதற்காக குழி பறித்தோம்''(பாமக நிறுவனர் ராமதாஸ்)
பேசரவங்க பேசட்டுங்க அவங்கள விட்டுத் தள்ளுங்க, இப்ப நட்ட மரங்களை எப்போ வெட்டித் தள்ளப் போறீங்கன்னு சொல்லுங்க?
''இளைஞர்கள் விலகி போகிறார்கள் என்று அதிமுக இளைஞர் பாசறையை தொடங்கியுள்ளது. அதில் கட்சிக்கு ஆள் சேர்ப்பதற்காக லேப்டாப் தருகிறோம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர்''(திமுக எம்பி கனிமொழி)
அவங்க கட்சி படிச்சவங்களை குறி வெச்சி காய் நகத்துராங்க, நீங்க பாவம் இன்னும் புடவை, வேட்டி, சட்டை, பல்பொடி, செருப்பு தரேன்னு சொல்லி எப்படி ஆள் சேர்க்க முடியும், பேசாம கட்சியில சேர்ந்தா கார் தருவோம்ன்னு சொல்லிப் பாருங்க.
******************************************************************************************
''அரசியல் மிகவும் கெட்டுபோய் விட்டது. அரசியலை சரி செய்ய இன்னொரு மகாத்மா காந்தி வர வேண்டும்''(கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி)
இன்னொரு மகாத்மா வந்து அரசியலை சரிசெய்யரதுக்கு பதிலா உங்களைப்போன்ற எல்லா அரசியல்வாதிகளும் அரசியலை விட்டு விலகிட்டாலே போதும் நாடு உருப்பட்டுவிடும்.
''ஓகேனக்கல் பிரச்சனையில் முதலமைச்சர் கருணாநிதி, கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பிறகு பேசலாம் என்று அறிவித்திருந்தார். தேர்தல் முடிந்து, புதிய ஆட்சி அமைத்து பல மாதங்கள் ஆகியும் இது குறித்து கருணாநிதி வாய் திறவாமல் மௌனம் சாதிப்பது ஏன்?'' (இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன்)
அவர் எந்த வருடத்தியத் தேர்தல்ன்னு சொல்லலையே!!!
******************************************************************************************
''பிரதமர் பதவியில் என்னை அமர வைப்பதற்கான இயக்கம் தொடங்கிவிட்டது. மக்களின் இந்த கனவும் நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும். நான் பிரதமராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.'' (உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி)
மக்களின் கனவா, கண்டிப்பா பொது மக்களா இருக்க முடியாது, வேற எந்த மக்கள், ஓ உங்க சொந்தக்கார மக்களா, சரி சரி.
******************************************************************************************
''சமூக விரோதிகளுக்கு அரசியல்வாதிகள் பாதுகாப்பு அளிக்கக் கூடாது. கட்சியிலும் இடமளிக்கக் கூடாது''(இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன்)
இப்படி பொத்தாம் பொதுவா சொன்னா எப்படி புரியும், எந்தக் கட்சின்னு பளிச்சுனு சொல்லிடுங்க.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
Thursday, June 12, 2008
பித்தனின் கிறுக்கல்கள் - 27
இது ஒன்றும் என்னைப் பற்றிய சுய மதிப்பீடு இல்லை. எனவே பயப்படாமல் படிக்கவும்.
பித்தன் யார் என்ற கேள்வி இன்னமும் பலருடைய மனதைக் குடைந்து கொண்டிருப்பது நண்பர்கள் பலரோடு பேசிக் கொண்டிருந்ததிலிருந்து தெரிந்தது.
அன்பே சிவம் என்ற திரைப்படத்தில் ஒரு பாடல்
"நாட்டுக் கொரு சேதி சொல்ல நாகரீகக் கோமாளி வந்தேனுங்க ...."
அதில் முத்தாய்ப்பாக ஒரு சில வரிகள்
"கரைகள் தூங்க விரும்பினாலும், அலைகள் விடுவதில்லை,
இலைகள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை,
ஓடி ஓடி ஒளிந்த போதும் வாழ்க்கை விடுவதில்லை, விடுவதில்லை, விடுவதில்லை, விடுவதில்லை....."
இதைப் போல நான் விலகி போக எவ்வளவு முயன்றாலும் நான் யார் என்று தெரிந்து கொள்ள பலர் ஆவலாக இருக்கிறார்கள். நான் யார் என்பதை நானே தேடி கண்டு கொள்ள முடியாத போது, என்னை யார் என்று பகுத்து, ஒரு கூண்டுக்குள் அடைக்க பலரும் முயன்று கொண்டிருக்கிறார்கள். அது ஏன் என்று விளங்கவில்லை.
அதோடு சேர்த்து என் நண்பர்கள் பலரையும் அவர்கள்தான் 'பித்தன்' என்ற பெயரில் எழுதுவதாக நினைத்துக் கொண்டு சற்று கோபத்தோடு பார்ப்பதாகவும் தகவல்.
என் நண்பன் ஒரு ஞாயிறு மாலை (6/1) அவனுடைய நண்பர் வீட்டுக்கு போயிருக்கான், அப்போ அங்க இன்னொரு friend-அ பார்த்திருக்கான், அவர் என் freiend-ப் பாத்து "நீ தானே அந்த பித்தன், எனக்கு எல்லாம் தெரியும்ன்னு அவனை சதாய்ச்சுருக்கார். அதுக்கு என் friend என்ன சொல்றதுன்னு தெரியாமல், அசட்டுத்தனமாக சிரிச்சுட்டு, சரி இந்த விளையாட்டு எவ்வளவு தூரம் போறதுன்னு பார்த்திடலாம்ன்னு சகட்டு மேனிக்கு ரீல் சுத்திட்டு வீட்டுக்குப் போறதுக்குள்ள எனக்கு கால் பண்ணி;
"அய்யா, ஒரு வழியா உம்மை காப்பாத்திட்டேன், அநேகமாக இனிமே உங்கள யாரும் திட்ட மாட்டாங்க, தப்பிசீங்க"ன்னான்.
"ஏன், என்ன ஆச்சு, எதை வெச்சு அப்படி சொல்ற, யார் கிட்டயிருந்து என்னைக் காப்பத்தின, அதைச் சொல்லு"
"யார் கேட்டாங்க, எங்க வெச்சு கேட்டாங்கன்னு சொல்ல மாட்டேன், ஆனா நிறைய பேர் நாந்தான் பித்தன்னு கண்டு பிடிச்சுட்டாங்களாம், இன்னிக்கு ஒருத்தர் என் கிட்ட சொல்லி என் ரெஸ்பான்ஸ் என்னன்னு குறு குறுன்னு பார்த்தார், எனக்கும் அதைக் கேட்டதும் கொஞ்சம் காமெடியா இருந்தது, சரி இந்த சாக்குல எனக்கும் கொஞ்சம் பாபுலாரிட்டி கிடைக்கட்டுமேன்னு நான் ஒன்னும் பெரிசா ஆர்க்யூ பண்ணாம அப்படியா, அதை ஏன் இப்படி அப்பட்டமா கேக்கரீங்கன்னு கேட்டவர் கிட்ட சொல்லிட்டு அந்த மேட்டரை அப்படியே கொஞ்சம் ஊதி பெரிசாக்கி விட்டுட்டேன். கேள்வி கேட்டவர் எப்படியும் இன்னும் ஒரு வாரத்துக்குள்ள நிறைய பேர்கிட்ட சொல்லிடுவார், என்ன, இனிமே நான் எழுதர கதையை யாரும் படிக்க மாட்டாங்க, என்னை வெளியில வாசல்ல பார்த்தா, இதோ போறான் பித்தன்னு எல்லோர் எதிரிலும் சொல்லப் போராங்க, கோபமா முறைக்கப் போறாங்க, ஆனா, நீங்கதான் பித்தன்னு உங்களை யாரும் திட்ட மாட்டாங்க, இது எப்படி இருக்கு"ன்னான்.
"ஏன் இப்படி பண்ணினே, பேசாம, பித்தன் யாருன்னு சொல்லிடரதுதானே"ன்னு கேட்டேன்.
அதுக்கு அவன், "அட சும்மாயிருங்க, நான் எவ்வளவு கஷ்டப்பட்டு நீங்கதான் பித்தன்ங்கரத கண்டு பிடிச்சேன், அதை சட்டுன்னு அடுத்தவங்களுக்கு ஏன் சொல்லனும், அவங்களே கண்டு பிடிக்கட்டும். இப்போ இந்த விஷயம் பரவினா பலர் என்னை பாக்கர இடத்திலேயே அடிப்பாங்கன்னு நினைக்கிறேன், அப்படி அடிச்சா, வலி தாங்காம ஒரு வேளை நான் சொல்லிடுவேன் அப்ப பாத்துக்கலாம், அது வரைக்கும், உங்க ஐடெண்டிடிய மறைச்சே வையுங்க"ன்னான்.
"சரி நான் இதையே ஒரு போஸ்டிங்கா ப்ளாக்ல போட்டா, உன்னை கேள்வி கேட்டவர் இதைப் படிச்சுட்டு உன்னைத் தப்பா நினைச்சுட்டா"ன்னு கேட்டேன்.
அதுக்கு அவன், "மொதல்ல உங்க ப்ளாகை ரிச்மண்டில் யார் படிக்கராங்க, நான், நீங்க, இன்னும் ஒன்னு ரெண்டு பேர், அதனால ரொம்ப Film காட்டாதீங்க, இருந்தாலும் உங்களப் போய் காப்பாத்த நினைச்சேனே என் புத்திய எதால அடிக்கரது, என்னமோ பண்ணித் தொலைங்க"ன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டான்.
அதுக்குப் பிறகு, இந்த பதிவை எழுதலாமா, வேண்டாமான்னு ரொம்ப யோசிச்சேன், அப்புறம் எழுதினா என்ன ஆகும்னு யோசிச்சேன், என்ன என் friend கொஞ்சம் கோபப் படுவான், அவனை எப்படியாவது சமாளிச்சிடலாம்னு இதை எழுதிடறேன். அதோட என் மேல இருக்கர கோபத்தில அவனையும் அவனைப் போல கொஞ்ச நஞ்சம் எழுதர மற்ற பதிவர்களை எல்லாம் விரோதமா பாக்கரது நல்லா இருக்காதுங்கரதுனாலயும் இந்த பதிவை எழுதிட்டேன்.
நான் என் முதல் பதிவுல சொன்னது போல, என்னைக் கண்டு பிடிக்க முயல்வது ஒரு கால விரயம். என் கருத்துக்களை வைத்து பலரையும் 'பித்தன்' இந்த ஆளா, ஒரு வேளை அந்த ஆளோ? இல்லவே இல்லை இது அவந்தான், அட போங்கப்பா பித்தன் இவந்தான், என்று போட்டு தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம், ஒரு வேண்டுகோள் என் மீதுள்ள கோபத்தில் பல நல்ல பதிவர்களை இழந்து விடாதீர்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தல்
ஒரு வழியாக டெமாக்ரட் பார்ட்டியின் ஒபாமாதான் அதிபர் தேர்தலுக்கு போட்டியிடப் போகும் வேட்பாளர் என்று தீர்மானம் செய்திருக்கிறார்கள். இப்போது அவரும் ரிபப்ளிக்கன் பார்ட்டியின் மெக்கெய்னும் இனி களத்தில் நேரடியாக மோதப் போகிறார்கள். அலுவலகத்திலும், நண்பர்கள் வட்டாரத்திலும் வாயைக் கிண்டியதில் கிடைத்த சில தகவல்கள்:
போட்டி சற்றுக் கடுமையாக இருக்கும்.
இருவரில் இவர் ஒசத்தி இவர் மட்டம் என்று சொல்ல முடியாது, ஏன் என்று அவர்கள் சொன்னதை நானும் சொல்லப் போவதில்லை.
இருவரில் ஒபாமா நல்ல பேச்சாளி.
இருவரில் மெக்கெய்னுக்கு அரசியல் அனுபவம் அதிகம்
இருவரில் ஒபாமா இளையவர், அதுவே அவருடைய பலம் மற்றும் பலவீனம்.
இருவரும் வாய்ப் பந்தல் போடுவதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.
யார் வந்தாலும் போர் நிறுத்தம் (எங்கிருந்து என்று சொல்ல வேண்டியதில்லை) உடனடியாக இருக்காது
யார் வந்தாலும் பெட்ரோல் விலை குறையப் போவதில்லை
யார் வந்தாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையப் போவதில்லை.
யார் வந்தாலும் தனி மனித சம்பாத்தியம் உடனடியாக உயரப் போவதில்லை.
அது சரி இதெல்லாம் ஓட்டுரிமை இருந்து அந்தக் கடமையை செய்யரவங்களுக்கு, மற்றவர்கள்... வழக்கம் போல படிச்சுட்டு போய்கிட்டே இருக்கலாம்.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....
Sunday, May 25, 2008
பித்தனின் கிறுக்கல்கள் - 26
கவிக்கோ அப்துல் ரகுமான்
இவருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. பித்தன் என்ற பெயரில் நான் எழுத என்னுள் பல வருடங்களுக்கு முன்பே வித்திட்டவர் இவர். இவருடைய பித்தன் கவிதைத் தொகுப்பு குங்குமம் பத்திரிகையில் 90-ன் ஆரம்பத்தில் வெளியானது அதுதான் நான் முதன்முதலாக படித்த இவருடைய கவிதைகள். அதன் பிறகு இவருடைய பால்வீதி, நேயர் விருப்பம் தொகுப்புகளைத் தேடித் தேடி படித்தேன்.
பால்வீதித் தொகுப்பில் தீக்குளியல்(1974) என்ற கவிதை
ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக் கொண்டு
இருவரும் எரிவோம் மெதுவாக
நான் மெழுகுத்திரியாக
நீ ஊதுவத்தியாக
வேதனையை நான்
வெளிச்சப்படுத்துகிறேன்
நீ மணம் ஊட்டு
அணைந்ததும் என்னை
மறந்துவிடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிக் கொண்டிருக்கும்.
இவரது பித்தன் கவிதைத் தொகுப்பை பற்றி நதியலை என்ற வலைப்பூவிலிருந்து :-
கவிக்கோவின் முன்னுரை:
என் ‘ஆலாபனை’யின் பாடகன் ‘நேர்’களின் ரசிகன்.
பித்தன் ‘எதிர்’களின் உபாசகன்.
எந்த நதியானாலும் எதிர் நீச்சலே போடுபவன்.
காரணம், அவன் உண்மையின் பின் பக்கத்தைப் பார்த்துவிட்டவன்.
அதனால் அறிவுச் சிறையிலிருந்து விடுதலை அடைந்தவன்.
அவன் இருளால் ஒளி பெற்றவன்
மர்மங்களின் ரசிகன்.
அதனால் ‘இருளிலிருந்து ஒளிக்கு’ என்ற முழக்கத்திற்கு எதிராக
‘ஒளியிலிருந்து இருளுக்கு’ என்று முழங்குபவன்.
அவன் புறப்படுகிறவன் அல்ல; திரும்புகிறவன்.
எழுப்ப அல்ல உறங்கவைக்க வந்தவன்.
அத்தனை முகங்களுக்கும் முத்தம் தருபவன்.
- அப்துல் ரகுமான்.
"பித்தன், பித்தன்" என்ற கூச்சல்களையும்
கற்களையும் அவன் மேல் எறிந்து கொண்டிருந்தார்கள்.
அவன் சிரித்துக் கோண்டிருந்தான். அவன்
காயங்களும் சிரித்துக் கொண்டிருந்தன.
அப்படித்தான் அவனை முதன்முதல் கண்டேன்.
"நீ பித்தனா?" என்று கேட்டேன்.
"நீ கல்லா?" என்றான்.
நான் வலித்தேன்.
"நீ எப்படி பித்தன் ஆனாய்?" என்றேன்.
"ஒரு முறை தற்செயலாய் உண்மையைப்
பின்பக்கமாய்ப் பார்த்துவிட்டேன். முக்கால
இரவுகளுக்கும் ஆன சூர்யோதயம் நடந்தது.
எதிர்ப்பதங்கள் கை கோர்த்து நடனம் ஆடின.
அந்த தருணத்தில் அறிவுச் சிறையிலிருந்து
நான் விடுதலை ஆனேன்" என்றான்.
"அவர்கள் ஏன் உன்மேல் கல்லெறிகிறார்கள்?' என்றேன்.
நான் அவர்களுடைய அந்தரங்கத்தின்
கண்ணாடி. அதனால்தான் என்னை உடைக்கப் பார்க்கிறார்கள்" என்றான்.
"ஏன்?" என்றேன்.
"அவர்கள் வெளிப்படுவதற்கு பயப்படுகிறார்கள்.
வேஷங்களில் வசிப்பது அவர்களுக்கு
வசதியாக இருக்கிறது.
வேஷம் கலைந்தால் மேடை போய்விடும்.
நான் அவர்களுடைய அம்பலம். கவனி!
அம்பலம் என் மேடையல்ல, என்
நடனம். அதனால்தான் என்னைப்
பித்தன் என்கிறார்கள்" என்றான்.
நான் உடைந்தேன், யுகங்களின்
சீழ் வடிந்தது.
ஆடை
பித்தன் தன் சட்டையைக் கிழித்துக் கொண்டிருந்தான்
"ஏன் கிழிக்கிறாய்?" என்று கேட்டேன்.
"கடிதத்தை படிக்க வேண்டும் என்றால் உறையைக் கிழிக்கத்தானே வேண்டும்" என்றான்.
...
நீங்க்ள் ஆடைக்குள் காணாமல் போனீர்கள்.
உங்கள் முகவரி உங்கள் ஆடைகளில் இல்லை.
...
நீங்கள் நெருப்பாக இல்லை ஆனால் சாம்பலை அணிந்து கொள்கிறீர்கள்.
...
உங்கள் கண்ணில் துச்சாதனனும் இமையில் கண்ணனும் இருக்கிறார்கள்.
உங்கள் வண்ணான் குறிகளும் கறைதான் என்பதை
எப்போது உணரப் போகிறீர்கள்?
***********
நிகழ்
பித்தன் ஒரு காலைத் தூக்கியபடி நின்று கொண்டிருந்தான்.
"என்ன நடராஜ நடனமா? என்று கேட்டேன்.
அவன் சொன்னான் -
"இல்லை ஒரு காலையாவது நிகழ்காலத்தில் வைக்கப் பார்கிறேன். முடியவில்லை.
இட்ட அடி இறந்த காலத்தில், எடுத்த அடி எதிர்காலத்துக்கு, அந்த அடியிலும் இறந்த காலத்தின் புழுதி.
நிகழ்காலம் எங்கே இருக்கிறது?
'இருக்கிறேன்' என்று நீ சொல்லும் போதே
ஒவ்வோர் எழுத்தையும் இறந்த காலம் விழுங்கிக் கொண்டிருப்பதைப் பார்.
இறந்தகாலத்திலிருந்து எதிர்காலம் நோக்கிப் பறந்து கொண்டிருப்பதற்குப் பெயர்தான் வாழ்க்கை.
ஒய்ந்து அமரும் கிளைதான் மரணம்.
இறந்த காலம் கையை விட்டுப் போய்விட்டது. எதிர் காலம் கையில் வராதது. அதனால்தான் மனிதன் வெறுங் கையோடு நிற்கிறான்.
இறந்த காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் இடையில் கோடு கிழிக்க முயல்கிறாய். ஓடும் நீரில் கோடு எப்படி கிழிப்பாய்?
காலம் என்பதே ஒரு பொய்க் கணக்கு.
அதிலும் வரவு செலவு என்ற இரண்டுதான் உண்டு. நடுவில் ஒன்று இல்லை.
இறந்தகாலமும் எதிர்காலமும் காதலர்கள் நீங்கள் ஏன் பிரிவை உண்டாக்கப் பார்க்கிறீர்கள்.
காலண்டர்களும் முன்கூட்டியே அச்சடிக்கப்பட்டு விடுகின்றன. அதிலிருந்து கிழிக்கப்படும் தாள்களை வாங்கிக் கொள்ளச் சரித்திரம் காத்து நிற்கிறது.
நீங்கள் காலமாக விரும்புவதில்லை; அதனால்தான் காலமாகிவிடுகிறீர்கள்.
என்னைக் பாதித்த மற்ற சில வரிகள்:
*********
கூண்டுப் பறவை கூண்டின் கூரையையே வானம் என்றுவாதாடும்
ஓர் உரையை மட்டும் ஏற்பவன் உண்மையின் பல பரிமாணங்களைக் காணாமல் போய்விடுவான்
உங்களைக் குத்துவதற்காக முளைத்ததல்ல முள்.நீங்கள்தான் குத்திக்கொள்கிறீர்கள்.
அந்தச் சிறகு இல்லையென்றால் நீங்கள்
இந்த உயரங்களை அடைந்திருக்க மாட்டீர்கள்
Saturday, May 10, 2008
பித்தனின் கிறுக்கல்கள்
சென்னையில் +2 ரிசல்ட்ஸ் வந்தாச்சு. வழக்கம்போல மாணவிகள் அதிக சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த மாணவர்கள் ரொம்ப பாவம். சன் டிவி, பேர் வெச்ச டிவி, பேர் வெக்காத டி.வி எல்லாவற்றிலும் வரும் நடன நிகழ்ச்சிகள், ஸ்டார் ஷோஸ், எல்லாம் ஜொள் விட்டு பார்த்துட்டு, ரஜனி, விஜய், சிம்பு, அஜித் எல்லார் படங்களுக்கும் பாலபிஷேகம், பீர் அபிஷேகம் எல்லாம் பண்ணிட்டு அவங்க எப்ப பள்ளிக்கூடம் போகரது, எப்ப பாடம் படிக்கரது. மாலை வீட்டுக்கு வந்ததும், கல்லி கிரிக்கேட், மாடில கிரிக்கேட், வாசல்ல கிரிக்கேட், டிவி-ல 20-20 மாட்ச் எல்லாத்தையும் முடிச்சுட்டு படிக்கலாம்னு உக்காந்தா, 2 ரிவிஷன் எக்ஸாம் முடிந்து 3 வது ரிவிஷன் ஆரம்பிக்கர நாள் வந்துடரது, இதுக்கு பிறகு அவங்க புத்தகத்தை தேடி, படிச்சு, எப்படி அதிக சதவிகிதத்தில பாஸ் பண்றது. இதுக்கும் மேல எழுதினால் என் பதிவை படிக்கிர என் அம்மா அப்பா " பரிட்சை நேரத்துல இவன் ஆடாத கிரிக்கெட்டா, செய்யாத அக்கரமமா இப்ப என்னவோ இவன் ரொம்ப ஒழுங்கு மாதிரி எழுதரான் பார், இதுதான் கலி"ன்னு திட்ட ஆரம்பிக்கரதுக்கு முன்னாடி முடிச்சுக்கறேன்.
தங்கம் விற்பனை
தங்கம் என்னவோ அரிசி ரேட்டுக்கு வித்தாலும், வாங்கர கூட்டம் என்னவோ குறையவே இல்லை. அட்சய திரிதியையொட்டி கடந்த 2 நாட்களில் 70 டன் தங்க நகைகள் விற்பனையாகியிருக்கு. ஒரு க்ராம் விலை ரூ.1090/-. அதாவது 7,630 கோடி ரூபாய்க்கு விற்பனை ரெண்டு நாளில தமிழ்நாட்டில் மட்டும் நடந்திருக்கு. இதில் இந்தியா ஏழை நாடு என்று இன்னமும் சொலிக்கொண்டு, மூன்றாம் உலக நாடுகளில் இந்தியா ஒன்று என்று கிண்டல் வேறு செய்து கொண்டிருக்கிறார்கள்.
'வெத்து' அன்புமணிக்கு உச்ச நீதி மன்றம் கண்டனம்.
எய்ம்ஸ் முன்னால் இயக்குனர் வேணுகோபாலை பதிவியிலிருந்து நீக்க வகை செய்யும் சட்ட திருத்தம் செல்லாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து மீண்டும் ஒரு முறை இந்தியாவில் சட்டத் துறையின் மாட்சிமையை காட்டியிருக்கிறது.
ரகுவரனுக்கு ஓர் அஞ்சலி
இது ஒரு காலங்கடந்த அஞ்சலி. எரிமலைகள் வெடிக்கும் போது சில ரோஜாக்கள் கருகுவது சாதாரணம் என்று சொல்லி கேட்டிருக்கிறேன். இதைச் சொன்னதற்காக ஒரு முறை வெட்டிப் பயலோடு சின்ன வாக்குவாதமும் செய்தேன். இப்போது ரகுவரனின் இந்த அஞ்சலியை எழுத முற்படும் போது, இந்த வரிகள் என் காதுகளில் ரீங்காரமிட்டது தற்செயல் என்று தள்ள முடியவில்லை.
ரகுவரன் ஒரு சிறந்த நடிகர் என்பது மறுக்க முடியாத உண்மை. அவருடைய சிறந்த படங்கள் என்று கணக்கிலடங்காத பல படங்களைச் சொல்லலாம். ஏழாவது மனிதனின் சாதாரண ஒரு கதாபாத்திரத்தில் பரிமளித்தவர். என்னடா இந்த ஆள் இப்படி நெடு நெடுவென உயரமாக இருக்கிறாரே, இன்னொரு அமிதாப் பச்சனா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தது அந்த கால கட்டத்தில். அதற்குப் பிறகு அவருடைய காதாநாயகன் அந்தஸ்து கொஞ்சம் கீழே போன பிறகு சடாரென்று வில்லன் ரோல் செய்ய ஆரம்பித்து, சிரித்தபடியே கதாநாயகர்களை சித்தரவதை செய்து அதிலும் தனது தனித் தன்மையை நிரூபித்தார். 'I Know' என்ற ஒரு வார்த்தையின் மூலமாக தான் எப்படி பட்ட குரூரமான மனநோயாளி என்பதை விளக்கியவர். சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் படத்தில் அவருடைய அக்காவின் கணவராக வந்து அவருக்கும் விஜய்க்கும் பாலமாக நடித்ததும் எனக்கு நிரம்ப பிடித்த ஒன்று. அந்தப் படத்தில் அவருடைய நடிப்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம்.
முதல்வன் படத்தின் ஆணிவேர் என்றால் அது ரகுவரன் என்பது என் கருத்து. அர்ஜுன் ஒரு சராசரி நடிகர் அந்த நடிப்பு முதல்வன் படத்திற்கு போதாது என்பதைத் தெரிந்து கொண்டு ரகுவரனின் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்து அந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ததில் ரகுவரனின் பங்கு மிகப் பெரியது. சிவப்பதிகாரம் படத்தில் ஒரு IAS அதிகாரியாக இருந்து பின்னர் ஒரு தேர்ந்த கல்லூரி பேராசிரியராக மாறி மாணவர் ஒருவரை வழிநடத்தி கேடு கெட்ட அரசியல் வாதிகளை பழிவாங்குவார். அவர் கைது செய்யப் பட்டு நீதி மன்றம் செல்லும் போது அவரிடம் ஒரு நிருபர் "இப்படி செய்ய நீங்கள் வெக்கப் படலையா" என்பார், அதற்கு அவர் ஒரு சிறிய சிரிப்போடு கடந்து செல்வார் அது நூறு வார்த்தைகளுக்கு சமம்.
இவருடைய மறைவு தமிழ் திரைஉலகிற்கு மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னட திரை உலகிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதிலிருந்து இவருடைய முக்கியத்துவம் தெரிகிறது. அவருடைய மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், திரைஉலகத்திற்கும் எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமெரிக்க அதிபர் தேர்தல்
Democrats கட்சியில் தேர்தல் முஸ்தீபுகள் பரபரப்பாக இருந்தாலும், யார் அதிபர் தேர்தலில் நிற்கப் போகிறார்கள் என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது. ஒபாமாவும், ஹில்லேரியும் இன்னமும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டிருக்கிறார்கள். இதே நேரம் Republican கட்சி மெக்கெய்னை தேர்ந்தெடுத்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கி விட்டது. தற்சமயம் ஒபாமா முன்னனியில் இருப்பதாக தெரிந்தாலும், ஹில்லேரி எப்படியும் முன்னால் வந்துவிடுவார் என்று என் அலுவலகத்தில் வேலை செய்யும் சிலர் ஆரூடம் சொல்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் அவர்கள் சொன்னாலும் மிக முக்கியமாக அவருடைய மற்றும் பில் க்ளிண்டனின் அரசியல் செல்வாக்கு என்பது அவர்களுடைய கருத்து. இருந்தாலும் இந்த தேர்தல் முறை சற்று வியப்பாகத்தான் இருக்கிறது.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்......
Tuesday, April 29, 2008
பித்தனின் கிறுக்கல்கள் - 24
ஞானக்கூத்தன்
நான் முதன் முதலில் படித்த கவிதைத் தொகுப்பு இவருடைய 'அன்று வேறு கிழமை' தான். படித்து சுமார் ஒரு 20 வருடங்கள் இருக்கும். சமீபத்தில் மீண்டும் ஒரு முறை படித்த போது, காலங்களை கடந்த அவருடைய பார்வை ப்ரமிக்க வைக்கிறது. இவருடைய இந்த கவிதைத் தொகுப்பை பற்றி சுஜாதா தனது கணையாழியின் கடைசிப் பக்கங்களில் (அக்டோபர் 1973) இவ்வாறு எழுதியிருக்கிறார்.
"அழகாகப் பதிப்பிக்கப்பட்ட 'அன்று வேறு கிழமை'யில் ஞானக்கூத்தனின் திறமையை முழுமையாக பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது.
ஞானக்கூத்தனின் கவிதைகள் யாப்புடன் அமைந்தவை. (மேலாகப் பார்த்தால் இது தெரியாது) எண்சீர், அறுசீர் கலிவிருத்தங்களில் அமைந்தவை. இஷ்டத்திற்குச் சில வேளைகளில், விஷயம் தெரிந்த ஒருவரின் பெயர் நிலையிலிருந்து, சந்தங்களைக் கலக்கிறார். கிடைப்பது ஞானக்கூத்தனுக்கே உரித்தான ஒரு அமைப்பு. ஆனால் யாப்புடன் இன்றைய தின நவீன விஷயங்களைச் சொல்ல முடியும் என்பதை மறுபடி மறுபடி நிரூபித்திருக்கிறார். இதன் மூலம் யாப்பை மீறிப் புதுக் கவிதை எழுதும் முதல் தகுதியை இவர் சுலபமாகப் பெறுகிறார். இது இவர் துருப்புச்சீட்டு, வைத்திருக்கிறார் இன்னும் உபயோகிக்கவில்லை.
'கால வழு அமைதி' என்கிற கவிதையைத் தொகுப்பில் சிறந்த கவிதையாக நான் சொல்வேன். இந்தக் கவிதையை துல்யமான எண்சீர் விருத்தமாகப் படிக்கலாம். அதைவிட ஒலி பெருக்கி அலறும் பொதுக் கூட்ட இரைச்சலின் பின்னணியில் ஒரு அரசியல்வாதியின் கயமை நிறைந்த கட்டைக் குரலில் படிக்கலாம். படிக்க வேண்டும்.
ஞானக்கூத்தனின் உவமைகளில் ஆச்சர்யங்கள் இருக்கின்றன. எது எதற்கு உவமையாகப் போகிறது என்கிற ஆச்சர்யம்.
உதாரணங்கள்
மணி அறியாப் பள்ளிகளில் மணியாக உதவும் தண்டவாளத் துண்டு - பாரதி இல்லாத நாட்டில் லோக்கல் கவிஞன்
எழுதக் குவிந்த கை - குன்று,
தையற்காரன் புறக்கணித்த துணித் துண்டுகள் - பூக்கள்,
ஸ்டேஷன் மாஸ்டர் கொடி - நிலம்
.....
.....
.....
ஞானக்கூத்தனைப் பாகுபடுத்துவது கஷ்டம். அவர் வரிகளை ரசிப்பதும், அவைகளில் நம்மையே கண்டுபிடிப்பதும் சுலபம்.
சுஜாதாவின் அணிந்துரையைக் கடந்து 'அன்று வேறு கிழமை' கவிதைத் தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த சில கவிதைகள்.....
கால வழு அமைதி (ஜூலை 1969)
"தலைவரார்களேங்.......
தமிழ்ப் பெருமக்களேங் ... வணக்கொம்
தொண்ணூறாம் வாட்டத்தில் வாழும் வாய்ப்பய்த்
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தினம்
கண்ணீரில் பசிதொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்"
'வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ'
"வளமான தாமிழர்கள் வாடலாமா?
கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?
தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள் பொணக்குவியல் காண்போ மின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்
தலைவரார்களேங்
பொதுமக்களேங் நானின்னும்
யிருகூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகறேன் வண்க்கொம்"
இன்னுமிரு வர்பேச இருக்கிறார்கள்
அமைதி ... அமைதி ...
நாய் (அக்டோபர், 1969)
காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலத் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?
ஸ்ரீலஸ்ரீ (ஏப்ரல் 1971)
யாரோ முனிவன் தவமிருந்தான்
வரங்கள் பெற்றான் அதன் முடிவில்
நீர்மேல் நடக்க தீபட்டால்
எரியாதிருக்க என்றிரண்டு
ஆற்றின் மேலே அவன் நடந்தான்
கொடுக்குத் தீயைச் சந்தனம் போல்
உடம்பில் பூசிச் சோதித்தான்
மக்கள் அறிந்தார் கும்பிட்டார்
மறுநாள் காலை நீராட
முனிவன் போனான் ஆற்றுக்கு
நீருக்குள்ளே கால்வைக்க
முடியாதவனாய்த் திடுக்கிட்டான்
கண்ணால் கண்டால் பேராறு
காலைப் போட்டால் நடைபாதை
சிரித்துக் கொண்டு கண்ணெதிரே
ஆறு போச்சு தந்திரமாய்
காலைக் குளியல் போயிற்றா
கிரியை எல்லாம் போயிற்று
வேர்த்துப் போனான். அத்துளிகள்
உடம்பை பொத்து வரக்கண்டான்
யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்
செத்துப் போக ஒரு நாளில்
தீயிலிட்டார், அது சற்றும்
வேகாதிருக்கக் கைவிட்டார்
நீரின் மேலே நடப்பதற்கும்
தீயாலழியா திருப்பதற்கும்
வரங்கள் பெற்ற மாமுனிவன்
மக்கிப் போக நாளாச்சு.
இவருடைய கவிதைகளில் யாப்பு அணி எண்சீர் என்று சுஜாதா சொல்வது எனக்கு விளங்கவில்லை. ஆனால் அதில் இருக்கும் நிஜம் முகத்தில் அறைவது அருமை. உதாரணத்திற்கு சில கீழே, இவர் எழுதியிருப்பது 70களில் என்றாலும் அவை இன்றைய கால கட்டத்திற்கும் பொருந்துவது சிறப்புதான்.
(1)
வெளியில் வந்தான் நடுநிசியில்
ஒன்றுக் கிருந்தான்
மரத்தடியில்
நெற்றுத் தேங்காய்
அவன் தலையில்
வீழ்ச்சியுற்று
உயிர் துறந்தான்
ரத்தக் களங்கம்
இல்லாமல்
விழுந்த நோவும்
தெரியாமல்
தேங்காய் கிடக்கு
போய்ப்பாரும்
(2)
எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர்மேல் அதைவிட மாட்டேன்.
(3)
சூளைச் செங்கல் குவியலில்
தனிக்கல் ஒன்று சரிகிறது
(4)
சமூகம் கெட்டுப் போய்விட்டதாடா
சரி
சோடாப் புட்டிகள் உடைக்கலாம் வாடா
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்......
Tuesday, April 22, 2008
பித்தனின் கிறுக்கல்கள்
தமிழ் புத்தாண்டு
இனி தை மாதம்தான் தமிழ் புத்தாண்டு என்று ஒரு தீர்மானம் தமிழ சட்ட சபையில் கொண்டு வரப்பட்டதே அதை நீ மதிக்க வேண்டாமா என்று என்னை திட்ட யோசிப்பவர்கள், அடுத்த இரண்டு பத்தியை தாண்டி மூன்றாவது பத்தியிலிருந்து படிக்கவும்.
ஒரு பழமையான வழக்கத்தை, ஒரு சில அதி மேதாவிகள் தங்களின் ஆணவத்தினால் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மாற்றியது சரி என்றால், அதைப் பின்பற்ற வேண்டாம் என்கிற எனது தீர்மானமும் சரி. ஆமாம், இனி ஜனவரி முதல் தேதிதான் ஆங்கில வருடத்தின் முதல் தேதி என்பதை ஏப்ரல் முதல் தேதி என்று வைத்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும், வருட முதல் தேதியை கொண்டாடும் அதே நேரம் முட்டாள்கள் தினம் கொண்டாடியது போலவும் இருக்கும்.
பாரதி தனது யோக சித்தி பாடலில் பாடுகிறார்.
தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக்கிரையெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
இதில் கடைசி வரியைத் தவிர மற்ற அனைத்து வரிகளும் இன்றைய தமிழக அரசியல்வாதிகளை பார்த்து பாரதி எழுதியதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!
இனி ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சிகள்
வழக்கம் போல நிகழ்ச்சி ஆரம்பித்து முதல் 3 நிகழ்ச்சிகள் முடிந்த பிறகுதான் கலந்து கொண்டேன். அதற்கு முழு காரணம் மொத்த காரணமும் அடியேன் தான். 'அடியேன்'னு சொன்ன உடனே அடிக்க வராதீங்க.
முதலில் வந்த தமிழ்த் தாய் வாழ்த்து, காவடியாட்டம், மற்றும் கண்ணன் குழலோசை நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியவில்லை. மொத்த நிகழ்ச்சியையும் சங்கத்தின் சார்பாக ஒளிப்பதிவு செய்வதாக அறிவித்தார் நண்பர் கார்த்திகேயன், அது வெளிவரும் போது பார்த்து விட்டு எழுதுகிறேன். ஆமா அவர் என்ன பின்னனிக் குரல் மட்டும் தருவதாக ஒப்புக் கொண்டாரா? அறிவிப்பாளர்கள் வெளியில் வந்து பேசினால்தான் கொஞ்சமாவது யாராவது கேட்பார்கள், பூனை மாதிரி திரைக்கு பின்புறமே இருந்தால் அதற்கு எதற்கு அறிவிப்பாளர்? கார்த்திகேயன் எனது நல்ல நண்பர் (இந்த பதிவு வரும் வரையில், இதைப் படித்த பிறகு அனேகமாக என்னை வழியில் பார்த்தால் அடி தான் என நினைக்கிறேன்).
பாரத விலாஸ் பாடல்
என் இள வயதில் இந்தப் பாடலுக்கு பல முறை வீட்டில் ஆடியிருக்கிறேன். 'இந்திய நாடு என் வீடு' என்று பாடுவதற்கு ஒரு கவிஞருக்கு நிஜமாகவே மிகப் பெரிய மனது வேண்டும். இந்தப் பாடலை எழுதியது வாலி என்று நினைக்கிறேன். இந்தப் பாடலுக்கு சின்னஞ்சிறு குழந்தைகள் என்று சொல்லக் கூடாது, சிறு மொட்டுகள் என்றுதான் சொல்ல வேண்டும். அனைவரும் அழாமல், அருமையாக வந்து நடந்ததே ஒரு நடனம்தான். இந்தக் குழந்தைகளை தயார் செய்த தாய்மார்களின் உழைப்புக்கு ஒரு ஜே போட வேண்டும். அதோடு இப்படி அழகு நடை நடந்த குழந்தைகள் அனைவருக்கும் ஒர் சூப்பர் ஜே போட வேண்டும்.
மாமா மாமா பாடல்/ குறத்தி நடனம்
MR ராதா நடித்து நடனம் ஆடுவது போல பாவ்லா காட்டி டூயட் பாடுய ஒரு (ஒரே) பாடல் இதுதான் என்று நினைக்கிறேன். படம் பெயர் நினைவில் இல்லை. ஆனால், அந்தப் பாடலின் எளிமை, பின்னனி இசையின் இனிமை காலத்தால் அழியாத ஒன்று. அதற்கு நடமாடிய குழந்தைகள் பின்னி விட்டார்கள். பல குட்டி குறத்திகளின் நடுவே ஒரே ஒரு குட்டிக் குறவன் வந்து கலக்கிய நிகழ்ச்சி குறத்தி நடனம். அவர்கள் உடை, அவர்களின் நடனம், அவர்களின் சிரிப்பு என்று எதை எடுத்தாலும் அழகு மிளிர்ந்தது இந்த நிகழ்ச்சியில். தற்சமயம் தமிழ் சங்க நிகழ்ச்சிகளில் நாட்டியமாடும் பலருக்கு வெகு விரைவில் மேடையில் இடம் கிடைக்காமல் செய்ய போகிறார்கள் இந்த சிறுமிகள்.
பையன்களின் நடனம்
பையன்களின் நடனங்களில் முதல் நடன நிகழ்ச்சி ஒயிலாட்டம். ஆடிய அனைவரும் தாளத்துக்கு ஏற்ப ஆடினாலும், மனோஜ் சிரித்தபடியே ஆடி கலக்கி விட்டார். அடுத்த நடனம் எல்லாம் வல்ல இறைவா பாடலுக்கு இன்னும் நாலு பேர் ஆடி பின்னினார்கள்.
பரத நாட்டியம் / சின்னக் குயில் நடனம்
நான்கு சிறுமிகள் அவர்களே நடன ஒருங்கிணைப்பு செய்து கொண்டு அசத்தினார்கள். அடுத்து 5 சிறுமிகள் சின்ன சின்ன வண்ணக்குயில் பாடலுக்கு நடனமாடி பின்னினார்கள்.
புதுவருடம் சேர்ந்திசை
மிக நன்றாக இருந்த மீனாவின் பாடலை பலரும் சேர்ந்து பாடிய இந்த நிகழ்ச்சி ஒரு புதிய முயற்சி. பல வருடங்களுக்கு முன்பு சென்னைத் தொலைக்காட்சியில் M.B. ஸ்ரீனிவாசன் என்று ஒருவர் இப்படி ஒரு சேர்ந்திசை நிகழ்ச்சியை நடத்துவார். அப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்த உணர்வு கிட்டியது. சங்கீதம் பவுண்ட் என்ன விலை என்றுகூடத் தெரியாத எனக்கு சேர்ந்திசைக்கு பதில் ஏன் ஒருவரோ அல்லது இருவரோ பாடியிருக்கக் கூடாது என்று தோன்றியது. பலர் சேர்ந்து பாடும் போது, கும்பலில் யார் பாடுகிறார் யார் பாடவில்லை என்பது தெரியாமல் போய் கும்பலில் கோவிந்தா மாதிரி ஆகிவிடுகிறது. அடுத்த முறை நானும் பாடலாம் போல இருக்கிறது. யாரும் கல் எடுத்து என்னை அடிக்க முடியாது, கேட்டால், நான் நல்லா தான் பாடினேன், பக்கத்தில இருக்கரவங்கதான் சுருதி தப்பி பாடினாங்கன்னு சொல்லி தப்பிச்சுக்கலாம், நானும் மேடையேறியது போலவும் இருக்கும், நாகு, அடுத்த கலை நிகழ்ச்சியில் எனக்கும் ஒரு இடம் ப்ளீஸ்.....
குச்சுப்புடி நடனம்
பவனரூபா என்பவர் கண்ணனின் லீலைகளை ரசிக்கும் படியாக ஆடினார். குச்சுப்புடி நடனத்தை தகுந்த நடன ஆடைக்கு பதிலாக சாதாரண சூடிதார் அணிந்து ஆடியதால் சற்று ஒட்டாமல் இருந்தது.
திரை இசை நிகழ்ச்சி
நிவிதா சரவணனின் பாடல்: இவர் ரிச்மண்டிற்கு புதியவரா என்பது தெரியவில்லை. சற்றும் தயக்கமின்றி ஷலாலா பாடலைப் பாடினார். பாடலை பின்னனி இசையின்றி பாடுவது ஒரு வகை, மேடையில் பின்னனி இசையோடு பாடுவது மற்றொரு வகை, அதிலும் பின்னனி இசையை கரியோக்கி முறையில் ஒலிபரப்பி அதனூடே பாடுவது மூன்றாவது வகை. அதற்கு தகுந்த பயிற்சி அவசியம். இவர் அந்த மூன்றாவது வகையில் பாடல் பாடினார், சொல்லப் போனால், குறையொன்றும் இல்லை பாடிய ப்ரியங்காவைத் தவிர பாடிய அஷ்வின் நாராயணன், ஹரிணி, அரவிந்த், சூர்யா, ஜனனி, அங்கிதா மற்றும் நாராயணன் அனைவரும் இதே முறையில்தான் பாடினர். அரவிந்தனும், நாராயணனும் பண்பட்ட பாடகர்கள் ஆகையால் அவர்கள் பாடியது வழக்கம் போல அசத்தலாக இருந்தது. அதிலும் அவர்கள் சற்று ராக ஆலாபனை போல செய்து விட்டு பொன் ஒன்று கண்டேன் பாடியது கலக்கல். சில காலங்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து 'நாளை நமதே' பாடினார்கள், இப்போது 'பொன் ஒன்று கண்டேன்' பாடியிருக்கிறார்கள். அடுத்து என்ன பாடுவார்கள் என்று யோசித்தால் "காட்டுக் குயிலு மனசுக்குள்ள" பாடுவார்கள் என்று நினைக்கிறேன், அதற்கு பிறகு "என்னம்மா கண்ணு" பாடுவார்களோ? இந்த வரிசையில் வேறு என்ன பாட்டு இருக்கிறது என்று யாராவது பின்னூட்டமிடலாம்.
ஜனனி, மொழி படத்திலிருந்து 'காற்றின் மொழி' பாடி அசத்தினார். மிக அனுபவித்து பாடி சக்கை போடு போட்டார். அஷ்வின், கஜனி படத்திலிருந்து 'ஒரு மாலை இளவெயில் நேரம்' பாடினார், சில இடங்களில் மைக் தொந்தரவு செய்தாலும், இவர் சர்வ சாதாரணமாக பாடி அசத்தினார். டிங் டாங் கோயில் மணி பாடிய ஹரிணி சற்று பயந்தது போலவே பாடினாலும் மிக நன்றாகவே பாடினார். சூர்யா பாட, கார்த்திக் ஆடினார், அங்கீதாவும் நாராயணனும் பாட, ஜனனியும் ஸ்வேதாவும் ஆட புதிய முறையில் பாடல் நிகழ்ச்சியைத் தந்தார்கள். ஆர்த்தி ஜூன் போனால் ஜூலை காற்றே பாடலை க்ளாரினெடில் வாசித்தார்.
மகளிர் நடனம்
இந்த முறை பல பெண்மணிகள் குத்துன்னா குத்து எங்க வீட்டு குத்தா, உங்க வீட்டு குத்தா என்று தெரியாத வகையில் இரண்டு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அசத்தினார்கள். சிறு பெண்கள் சினிமா பாடலுக்கு ஆடுவது அவ்வளவு வித்தியாசமாகத் தெரியவில்லை, ஆனால் பெண்மணிகள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடாமல், நம் சங்கத்தின் முந்தைய ஒரு விழாவில் சிலர் ஒரு தொலைக்காட்சித் தொடரின் Title Song-க்கு நடனம் ஆடியது போலவோ அல்லது ஒரு கும்மியாட்டம், கோலாட்டம் போலவோ செய்தால் நன்றாக இருக்கும். சினிமாவில் வரும் குத்தாட்டம் 'D' சென்டர் ரசிகர்களை மகிழ்விக்கவும், Movie Distributor-களையும் மகிழ்விக்க இருக்கும் ஒரு உத்தி, அந்தப் பாடல்களின் வரிகளும் அபத்தம், இசை அபத்தமோ அபத்தம் என்பது என் கருத்து. அது, நமது சங்கத்தின் லட்சோப லட்சம் உறுப்பினர்களின் கருத்துக்கு எதிர் என்றும் எனக்குத் தெரியும், இந்த விமர்சனத்திற்காக என்னை சற்று கட்டம் கட்டி திட்டப் போகிறார்கள் என்பதும் தெரியும்.
சுஜாதா
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு அஞ்சலி மறக்காமல் வந்து பார்க்கும் படி நாகு சொல்லியிருந்தார். அதை ரவியும் முரளியும் சேர்ந்து அளித்த முறை நன்றாக இருந்தது. அதில் நேரமின்மையோ என்னவோ தெரியவில்லை, பல விஷயங்களைச் சொல்லாமல் விட்டு விட்டார்கள். அவருடைய கணையாழியின் கடைசிப் பக்கங்கள், அதிலும் அவருடைய நாடக உலக மாற்றங்கள் கண்டிப்பாக சொல்ல வேண்டிய ஒன்று. அவர் நாடகங்களில் மாறுதல்களை கொண்டு வந்த போது, சமூக நாடகங்கள் (கோமல் ஸ்வாமிநாதன், விசு,கல்தூண் திலக் போன்றோர்), சரித்திர நாடகங்கள் (R.S. மனோகர், ஹெரான் ராமசாமி), நகைச்சுவை நாடகங்கள் (S.V. சேகர், க்ரேஸி மோகன்) என்று மூன்று வகையான நாடகங்கள்தான் வெளிவந்து கொண்டிருந்தன, இவருடைய, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு வந்த பிறகு நாடக உலகமே ஆட்டம் கண்டது, பிறகு வந்த ஊஞ்சல், அன்புள்ள அப்பா, வந்தவன் போன்ற நாடகங்கள் ஒரு வட்டத்துக்குள் நாடகம் நடித்தவர்களை புரட்டிப் போட்டது.
அவர் ஸ்ரீகாந்தின் முதல் டெஸ்ட் மாட்சை பற்றி ஒரு விமர்சனம் எழுதியிருந்தார், அதில் ஸ்ரீகாந்த் எதற்கும் பொறுமையில்லாமல், டாஸ் போட்ட உடனே விளாசத் தயாராகி விடுகிறார் அது சரியில்லை என்பது என் கருத்து. முதல் டெஸ்ட்டில் பந்தை டிஃபன்ஸ் செய்து விட்டு ரொம்ப வேர்கிறதே என்று க்ரீஸுக்கு வெளியே கொஞ்சம் காத்து வாங்கப் போனார், படக் கென்று ஸ்டெம்பை முறித்து ரன் அவுட் என்று வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் என்று எழுதியிருந்தார். இந்த அஞ்சலி நிகழ்ச்சியையும் சட்டென்று முடித்தது இதைப் போலத்தான் இருந்தது.
நிகழ்ச்சி நிரல் தயாரித்தவர்கள் அருமையான ஒரு ஏற்பாடு செய்திருந்தனர். முதலில் சின்னஞ் சிறார்களின் நிகழ்ச்சி, அடுத்து சற்று பெரிய குழந்தைகளின் நிகழ்ச்சி, என்று படிப் படியாக உயர்ந்து கடைசியில் பெண்மணிகளின் நடனம் என்று முடித்த விதத்தினால் கடைசி வரை எல்லோரும் இருந்து நிகழ்ச்சியைப் பார்க்க வைத்தனர். அதே போல் நிகழ்ச்சிகளில் பங்கு பெறாத குழந்தைகளின் குடும்பங்களை எப்படி இது போன்ற விழாவிற்கு வர வைப்பது என்று யாராவது கண்டு பிடிக்க வேண்டும். போன முறை விழாவிற்கு வந்த குடும்பங்கள், நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற குடும்பங்கள் பல இந்த முறை வரவில்லை. ஒரே சமயத்தில் அத்தனை பேருக்கும் அவ்வளவு முக்கியமான வேலை இருந்திருக்குமோ?
கடைசியாக ஒரு செய்தி - சங்கத்தின் விழாவில் கலந்து கொள்ளுபவர்களின் எண்ணிக்கை அதிகமாவதோடு, அவர்களின் ஒப்பனைகள் மிக மிக அற்புதமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக குறவன் - குறத்தி உடை மற்றும் சின்னச் சின்ன வண்ணக் குயில் பாடலுக்கு ஆடியவர்களின் உடை அபாரம்.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்
Sunday, March 30, 2008
பித்தனின் கிறுக்கல்கள் - 21
Monday, March 17, 2008
பித்தனின் கிறுக்கல்கள் - 20
God Father
இந்த புத்தகத்தை சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு முறை படித்தேன். இது ஒரு சரித்திர ப்ரசித்தி பெற்ற கதை. வரிக்கு வரி (சில வரிகள் R ரகம் அவை தவிர மற்ற வரிகள்) எல்லாமே அருமையான வரிகள். நாயகன் கதை இந்தக் கதையின் உல்டா இல்லை, அது 80 களில் தாராவியில் வாழ்ந்த வரதராஜ முதலியார் கதையும் இல்லை என்று கமலும், மணிரத்தினமும் சூடம் அடித்து சத்தியம் செய்திருக்கிறார்கள். அதை நம்பி விடுங்கள். இந்தக் கதை பற்றியோ, அந்தத் திரைப் படம் பற்றியோ நான் எழுதப் போவதில்லை. ஒரு கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், ஒரு திரைக்கதையை எப்படி அமைக்க வேண்டும் என்பதற்கும் இந்த புத்தகம் ஒரு எடுத்துக்காட்டு. கதாபாத்திரங்களின் படைப்பு, அவர்களின் குணாதிசயங்கள், காட்சிகளின் தொகுப்பு என்று வரிக்கு வரி படிப்பவர்களை ஒரு கட்டுக்குள் வைத்திருத்தல் என்று கதாசிரியரின் சாமர்த்தியம் நம்மை ப்ரமிக்க வைக்கிறது.
Shall we tell the President
இந்த புத்தகத்தை பல வருடங்களுக்குப் பின்பு மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். அன்று இருந்த அதே விறுவிறுப்பு இன்றும் இருப்பது ஒரு மிகப் பெரிய ஆச்சர்யம். கதை: அமெரிக்க அதிபரை கொலை செய்ய நடக்கும் முயற்சியும் அதைத் தடுக்க முயலும் அதிகாரிகளும் பற்றிய கதை.
இதைப் படிக்க ஆரம்பித்ததும் நண்பரிடம், "கதை என்ன விறுவிறுப்பு தெரியுமா, அன்னிக்கு படிச்ச மாதிரியே இன்னிக்கும் இருக்கு" என்று பெருமையாக பீத்திக்கொண்டேன். அதற்கு அவர், "நீ, இதுக்கு முன்னாடி புத்தகமே படிச்சதில்லையா? குப்பை எழுத்தாளருக்கெல்லாம் இப்படி வக்காலத்து வாங்கரே? என்னவோ கிறுக்கரேன்னு சொல்லிட்டு, புத்தக விமர்சனம் சமீபத்தில பண்ணினியே, அந்த தமிழ் கதையாவது படிச்சுட்டு எழுதினியா, இல்லை கேட்டுட்டு எழுதினியா? என்றார். சொடேர் சொடேர் என்று யாரோ தலைமேல் போட்ட மாதிரி இருந்தது. நாம என்னவோ பெரிய பருப்பு மாதிரி விமர்சனம் எழுதறோம், ஆனா யாரும் இப்படி செவிட்டு இழுப்பு இழுக்கலையே ஏன் -ன்னு கொஞ்சம் யோசிச்சேன். பொழச்சுப் போறான் கொழந்தைப் பய-ன்னு விட்டுட்டாங்க போல இருக்கு சரி இனிமே கொஞ்சம் ஜாக்ரதையா எழுதனும்னு முடிவு பண்ணியிருக்கேன். முடிவு பண்ணினா மாதிரி, கதையை பொறுமையா படிச்சு முடிச்சேன். அதுல நண்பர் சொன்ன பல விஷயங்கள் புரிஞ்சுது.
முன்பு படித்ததற்கும் இப்போதைக்கும் பல வித்தியாசங்கள், ஒன்று - கதையில் இருக்கும் அதீத ஓட்டைகள், இரண்டு - அதை அடைக்க முயலாத கதாசிரியர், மூன்று - தேவையில்லாத கதைத் தொகுப்பு, நான்கு - பரமார்த்த குருவின் சீடர்கள் போல உள்ள மத்திய புலனாய்வுத் துறை. நம்மூரில் எஸ்.ஏ. ராஜ்குமார் என்று ஒரு மகானுபாவர் இருக்கிறார். ஒரு படத்துக்கு ஒரு பின்னனி இசைதான் போடுவார், அதையே படம் முழுக்க ஓட்டுவார். அது மாதிரி, இந்தக் கதையில் மாத்தி மாத்தி, "Sir Shall We tell the President" -ன்னு ஒருத்தர் கேட்டுகிட்டே இருக்கார், என்ன லாஜிக்கோ.
நண்பர் கூடவே, Desmond Bagley-ன் Running Blind படிச்சுட்டு சொல்லுன்னார். நூலகத்தில தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்துட்டேன். முதல் பக்கத்திலேயே போட்டு தாக்கியிருக்கார்.
"ஒரு ப்ரேதத்தை சுமந்து இருப்பது ரொம்ப அவஸ்தையான ஒரு விஷயம். அதிலும் இந்தப் ப்ரேதத்திற்கு ஒரு இறப்பு சான்றிதழ் கிடைக்கப் போவதில்லை என்றான பிறகு. எந்த மருத்துவரும், ஏன் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு சற்று முன் வந்த ஒரு மருத்துவரும்கூட இந்த இறப்பின் காரணத்தை சொல்லி விட முடியும். இந்த மனிதன் இருதயம் வேலை செய்யாததால் இறந்து விட்டான்.
இவனுடைய இருதயம் இரத்தத்தை மேலும் கீழும் செலுத்த முடியாதபடி ஒரு கூர்மையான உலோகத்தால் விலாவில் குத்தப்பட்டு, அது இருதயத்தைத் துளைத்து, இரத்தம் அதிகமாக வெளியேறி இருதயம் துடிப்பது நின்று போய் இறந்து விட்டான்.
நான் இவனுக்காக ஒரு மருத்துவரை தேடப்போவதில்லை, காரணம், இவனைக் குத்திய கத்தி என்னுடையது, அது அவனைக் குத்தும் போது, அந்தக் கத்தி எனது கையில்தான் இருந்தது. ....."
கமல் பாடின மாதிரி, துடிக்குது புஜம், தகிட தத்தீம் தத்தீம் ன்னு மண்டை இடி ஆரம்பிச்சுடுச்சு, இனி அடுத்த 3-4 நாட்கள் தூக்கம் போச்சு, வீட்டு வேலை எல்லாம் நின்னாச்சு, வீட்டுக்காரம்மா திட்டறதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சாச்சு. இருந்தாலும் படிக்கரத நம்மால நிறுத்த முடியாது. அதனால படிச்சு முடிச்சதும், கதைச் சுருக்கம் எழுதறேன்.
அரசியல் அசிங்கம்
இந்தப் பதிவு வெளியாகும் போது, நியூயார்க் மாநில ஆளுனரின் மீது கொண்டுவரப் பட்டுள்ள குற்றச்சாட்டை அனைவரும் படித்து சீ தூ என இகழ்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆமா ஜனநாயகக் கட்சில (நாகுதான் மொழிபெயர்த்து சொன்னார் - டெமாக்ரெட்டிக் கட்சின்னா ஜனநாயகக் கட்சின்னு, தப்புன்னா அவரை ரெண்டு தப்பு தப்புங்க) இப்படி கொஞ்சம் ஜொள்ளர்கள் அதிகம் இருக்கரமாதிரி இருக்கே என்ன காரணம். அங்க சில்லறை அதிகமோ? இப்படி ஊரே அந்தச் செயலைப் பற்றி பேசி, வருந்தும் போது, ரிச்மண்ட் டைம்ஸ் டிஸ்பாட்ச் தினசரியில் இது வரை அரசியலில் ப்ரபலமாக இருந்த யார் யாரெல்லாம் இது போல கெட்ட காரியம் செய்து மாட்டினார்கள் என்று விலாவரியாக எழுதி புண்ணியம் கட்டிக் கொண்டார்கள். தேவையா இது?
இதுவே நம்ம ஊராயிருந்தா என்ன ஆயிருக்கும், உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.
யாருக்கும் வெட்கமில்லை.
அ.தி.மு.க சார்ந்த ராஜ்யசபா உறுப்பினராக தன்னை மீண்டும் தேர்வு செய்யாததால், அக்கட்சியின் வழக்கறிஞர் திரு. ஜோதி கட்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார். அதைக் கண்டித்து செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில்
"கீழ்க் கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை பல்வேறு முக்கியமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வழக்குகளிலிருந்து விலகிக் கொள்வதாக ஜோதி தெரிவித்துள்ளார்.ஜோதியின் செயல் மிகவும் கண்ணியக்குறைவானதாகும். சட்டத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் யாரும் இப்படி நடந்து கொண்டதாக சரித்திரமே இல்லை. சட்டத்துறைக்கே அவர் களங்கம் ஏற்படுத்தி விட்டார்.அதிமுக தொடர்பாக 113 வழக்குகள் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் சொல்லாமல் கொள்ளாமல் ஜோதி விலகியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும்.கடந்த மார்ச் 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஒரு முக்கிய வழக்கில் ஆஜராகியிருந்த ஜோதி, தனக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும், வழக்கிலிருந்து பாதியிலேயே விலகி வெளியேறியுள்ளார். இது சட்டத் தொழிலை கொலை செய்வதற்கு சமம். மிகவும் தரக்குறைவான செயல். தான் சார்ந்த கட்சிக்கு அவர் துரோகம் செய்து விட்டார். கட்சி நலனுக்கு எதிராக அவர் செயல்பட்டுள்ளார். எனவே ஜோதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு முதல் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் அவருடன் எந்தவிதத் தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது"
என்று கூறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள நீதி மன்றங்களில் 113 வழக்கு இருக்கிறது என்பது என்ன விதமான நல்ல செய்தி என்று தெரியவில்லை, அதை ஒரு பெருமையாக சொல்லக் கூடிய நிலையில் இன்றைய அரசியல் இருக்கிறது. இதற்கு திரு. ஜோதி அவர்களின் பதில் சூப்பரோ சூப்பர். நான் எனது வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலகுவது இது ஒன்றும் முதல் தடவையில்லை. இதற்கு 10 மாதங்களுக்கு முன்பே ஒரு முறை சசிகலாவின் உறவினரின் ஆதிக்கம் அதிகமான போது, நான் எனது பொறுப்புகளையும், கட்சியிலிருந்து விலகுவது பற்றியும் மேலிடத்திற்கு தெரிவித்த பிறகு அவர்கள் என்னை சமாதானம் செய்ததால் மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டேன் என்று ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். நல்ல கட்சித் தலைமை, நல்ல வழக்கறிஞர். இதைப் படிக்கும் போது 'சோ'வின் "யாருக்கும் வெட்கமில்லை" நாடகத் தலைப்புதான் நினைவுக்கு வருகிறது.
பித்தனின் சங்கு
முதல் சங்கு:
சங்கத்து ப்ளாக் திடீரென மாம்பலம் ரங்கநாதன் தெரு மாதிரி ஆகிவிட்டது. உடனடியாக வேறு சில மாற்றங்கள் செய்து நெரிசலை சமாளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். யார் காதில் போடவேண்டும் என்று தெரியாததால், பொதுவாக சொல்லிவிட்டேன்.
இரண்டாவது சங்கு:
சங்கத்து ப்ளாகில் வரும் சதங்கா மற்றும் கவிநயாவின் கவிதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட யாராவது ஒரு முயற்சி செய்யலாமே.
மூன்றாவது சங்கு:
கவிநயா, சதங்கா இருவரும் சேர்ந்தோ அல்லது தனியாகவோ, கவிதை எழுதுவது எப்படி என்று ஒரு வகுப்பு எடுக்கச் சொல்லாமே, அதிலும் வெண்பா இலக்கணங்களையும் சொல்லிக் கொடுக்க செய்யலாம். எப்ப பார்த்தாலும் இவங்க ரெண்டு பேர் மட்டும் அழகழகா கவிதை எழுதி போட்டு தாக்கராங்க. நாங்க என்ன செய்யரது.
பொறுத்தது போதும் பொங்கி எழுன்னு நாங்க இப்படி ஒரு கவிதை எழுதிடுவோம்.
'நான் காத்து வாங்கப் போனேன்
ஒரு கழுதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனான்
அந்த வண்ணான் என்ன ஆனான்".
இது எப்படி இருக்கு. கவிதைன்னா சொந்தமா எழுதனும்னு என்ன சாத்திரமா? இப்படி எம்.ஜி.ஆர். பாட்டை ஒட்டி வெட்டி சுயமா ஒரு கவிதை எழுதிடுவோம், தெரியுமில்லை. சீக்கிரமா கவிதை க்ளாஸுக்கு அழைப்பு வரலைன்னா, வாரத்துக்கு ஒரு கவிதையா எழுதிடலாம்னு இருக்கேன். யோசிச்சு முடிவு பண்ணுங்க.
சமீபத்தில் வந்த சில அறிக்கைகள்:
அரசியல் கிரிக்கெட்-ஸ்டாலின் அபார பந்து வீச்சு!
தமிழக முதல்வர் லெவன் அணிக்கும், தெற்கு ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கும் இடையே சென்னையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முதல்வர் லெவன் அணி வெற்றி பெற்றது.உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்து, சிறந்த பவுலர் விருதையும் தட்டிச் சென்றார்.
பேசாம இவரை இந்திய அணியில சேத்து விட்டா, ஒர் நல்ல பவுலர் கிடைச்ச மாதிரியும் இருக்கும் அழகிரிக்கு முதல்வர் வாய்பு கொடுத்தா மாதிரியும் இருக்கும்? **************************************************************************************
நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் ரெடி-சரத்குமார்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம், நாங்கள் தேர்தலுக்கு தயாராக உள்ளோம்.என அ.இ.ச.ம. கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
அப்படியே எந்த வருஷத் தேர்தலுக்குன்னும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும். முக்கியமா டெபாசிட் திரும்ப கிடைக்காதுங்கரதையும் உங்க வேட்பாளர்கள் கிட்ட சொல்லிடீங்களா?
**************************************************************************************
ராஜ்யசபா தேர்தல்: அமைதி காத்தது ஏன்-விஜய்காந்த்
ராஜ்யசபா தேர்தலில் நான் யாருக்காவது ஆதரவு தெரிவித்து இருந்தால், அவர்களது கூட்டணியில் சேர்ந்துவிட்டதாகக் கூறி அரசியல் செய்திருப்பார்கள் அதனால்தான் அமைதி காத்தேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்
அட போங்கப்பா சும்மா காமெடி பண்ணிகிட்டு இருக்கீங்க. நமக்கு இருக்கர ஒரு ஓட்டை வெச்சுகிட்டு, ரொம்ப ஓவரா படம் காட்டரீங்க.
**************************************************************************************
அதிமுக இளைஞர் பாசறைகளில் சேர ஆளில்லை!
கரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட அதிமுக இளைஞர் பாசறையில் சேர போதிய எண்ணிக்கையில் இளைஞர்கள், இளைஞிகள் முன் வரவில்லை.
ஏங்க தி.மு.க மாதிரி ஒரு 55-57 வயசுக்கு யாரையாவது பாருங்க, அதை விட்டுட்டு சின்னப் பசங்களை சேத்து என்னத்த அரசியல் பண்ண முடியும்.
**************************************************************************************
உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் - மன்மோகன் சிங்
நாடாளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும். தேர்தலை மனதில் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ஐ, நிஜமாவா சொல்றீங்க. 60000 கோடி கடன் தள்ளுபடி சும்மாவா செய்திருக்கீங்க. ஆமா, அம்மையார் கிட்ட கேட்டுட்டுதானே சொல்றீங்க.
**************************************************************************************
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....